“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

மார்ச் 01-15

ஜான் வில்சன் எழுதிய

“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

தமிழில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்டி.,


 

இந்தத் தத்துவத் துறைகளில் ஒன்றான – குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘பூர்வமீமான்சா’ (அல்லது பழைய மீமான்சா) என்பது வேதங்களைப் பற்றி, ‘பழமைவாத’ விளக்கங்களைத் தருவதற்கு முற்படுகின்றது. இதன் மூலமாக இவற்றைத் தொன்மை வாய்ந்த உயரதிகாரப் படைப்புக்களாக அது ஏற்றுக் கொள்கிறது. மீமான்சாவுக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த ‘உத்தர மீமான்சா’ (அல்லது பிந்தைய மீமான்சா) அல்லது ‘வேதாந்தா’ என்பது அவர்களின் முடிந்த முடிபான ‘தெய்வீக ஆற்றலின் பல்வேறு வடிவங்களை நிலை-நிறுத்துவதற்கு முற்படுகின்றது.

‘அஃதொன்றே உயர்ந்தது’ என்று இவை குறிப்பிடுகின்றன. வேதங்கள் தோன்றிய காலத்திலிருந்து ஊகக் (கற்பனைக்) கருத்துக்களில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இது காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தத் தத்துவத் துறைகள், உரைநடையில் எழுதப்பட்ட பிராமணங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. பிராமணங்கள் வேதங்களோடு தொடர்புடையவை; ஆனால் இவற்றின் நடை, சொல்லாட்சி, வேதங்களின் பாட்டடிகளை எடுத்தாள்கின்ற தன்மை ஆகியவற்றை வைத்து நோக்கும்போது இவை இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் வேதங்களுக்குப் பிற்பட்ட காலப்பகுதிகளில் வழங்கிவந்த பல்வேறுபட்ட பாடல் துணுக்குகளின் தொகுப்பே வேதங்கள் எனப்-படுகின்றன. இவை உருவாக்கப்பட்ட காலத்திற்கும் தொகுப்புக்களாக வடிவமைக்கப்-பட்ட காலத்திற்கும் பெரும் இடைவெளி இருந்திருக்க வேண்டும்; அதன் பின்னரே பல்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டன. அவை ‘சம்கிதாஸ்’ எனப்பட்டன.

‘வேதம்’ என்ற சொல்லுக்கு ‘அறிவின் ஊற்று’ என்று பொருள் கொள்ளலாம். இதனுடைய சமஸ்கிருத மூலச் சொல் ‘விட்’ (Vid) அல்லது ‘வித்’ (Vidh) என்பதாகும். கிரேக்க மொழியில் விதா (Vidha), (Vida) என்றும் லத்தீன் மொழியில் ‘விடோ’ (Vido),, விடியோ (Video) எனவும், ஆங்கிலத்தில் ‘விட்’ (Wit) எனவும், ‘வேதம்’ என்ற சொல்லின் மூலங்கள் காணக் கிடக்கின்றன. நான்கு வேதங்களிலும் ‘ரிக்’ வேதமே மிகவும் தொன்மை சான்றதாகும். ரிக் வேதம் 11,000 ரிக்குகள் அல்லது ஈரடிச் செய்யுள்களைக் கொண்டதாகும்.

‘ரிக்’ என்பதிலிருந்தே ‘ரிக் வேதம்’ எனும் பெயர் இதற்கு ஏற்பட்டது. இவற்றின் ஆசிரியர்களுக்கேற்ப இசைப்பாடல் வடிவில் இவை அமைக்கப்பட்டன. தத்தம் கடவுளரை எழுப்புவதற்காக இவை இவ்வாறு அமைக்கப்-பட்டன. ‘யஜுர் வேதா’வின் கண்ணிகள் ‘யாஜசனேயா’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட பாடற் கண்ணிகள் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும். ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையே இவை கூறுகின்றன. யஜுர் வேதத்தின் பாதி அளவுள்ள சாம வேதம், ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளை அப்படியே வழிமொழிகின்றது.  உயிர்ப்பலி கொடுப்பதற்குரிய பாடல்களை சாம வேதம் வரிசைப்படுத்திக் கூறுகின்றது. அதர்வண வேதம் காலத்தால் மேற்கூறிய மூன்று வேதங்களுக்கும் பிற்பட்டது. சாம வேதப் பாடல்களும் எதிரிகளை அழிப்பதைப் பற்றியே பேசுகின்றன.

இவை இவ்வாறு அமைந்திருக்க ஒரு நேர்மையான திறனாய்வின் வழி நாம் இவற்றின் காலத்தைக் கணக்கிட்டால் இவை  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக அதாவது ஏசு பிறப்பதற்கு முன்பு கி.மு.பதினைந்து அல்லது பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்ற முடிவிற்கு நாம் வரலாம். இந்திய வரலாற்றில் இந்தக் காலப் பகுதிதான் மிகுந்த சுவையுடையதாகும். இக்காலப் பகுதியில்தான் இந்திய நாட்டின் _இந்தியாவில் உருவான நிறுவனங்களின் கருமூலத்தை _ ஊற்றுக் கண்ணினைத் தோற்றுவாய்தனை நாம் காண்கிறோம். இந்தியாவோடு தொடர்பு இருந்தபோதிலும் மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் வாழ்ந்த மக்களுக்கு இதனைப் பற்றி நீண்ட காலம் முழுமையாகத் தெரியவில்லை.

வேதங்களை ஓதிக் கொண்டிருந்தாலும் பாடிக் கொண்டிருந்தாலும் இந்தியர்களுக்கு, இன்றுவரை அவர்களுக்கு உரிமை படைத்த வழிபாடுகளில் அவர்கள் இவ்வாறு ஓதிவந்த போதிலும், அவர்கள் தங்களின் முன்னோர்-களைப் பற்றியோ தங்கள் தாய்நாட்டைப் பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அறிவு அவர்களுக்கு இல்லை. மேலும் அவர்கள் போற்றி வணங்கிய புனிதமான வேதங்களோடு ஒத்துப் போக வேண்டிய தொன்றுதொட்டுவந்த மனத் தடுமாற்றமும், பிற்காலத்து எழுந்த சாத்திரங்களின் வல்லாண்மை அதிகார மிரட்டலும் அவர்களைப் பணிய வைத்த-தோடன்றி, அவர்களின் கடவுளாகிய பிரம்மாவின் நான்கு வாயில்களிலிருந்தும் (முகம், தோள், தொடை, கால்) அவர்கள் எல்லோரும் பிறந்ததாக அவர்கள் கருதினார்கள். மேலைநாட்டு அறிஞர்கள், இவற்றை அறிந்து ஆராய வேண்டும் என்னும் அறிவுக் கூர்மையோடு வரும்வரை இத்தகைய பழமைக் கருத்துக்களை அவர்கள் தங்களுட-னேயே வைத்திருந்தார்கள். அய்ரோப்பியப் பொற்காசுகளும் அவர்களின் விடாப்பிடியான வற்புறுத்தல்களும், நம்முடைய காலத்திலேயே, வேதங்களை அய்ரோப்பியரின் உடைமை-களாக்கி-விட்டன.
(ரிக் வேதத்தின் முதன்மைப்படி ஒன்று பல ஆண்டுகளாக என்னிடம் இருந்தது. பம்பாய் ஆட்சித்துறை உயர் அதிகாரியாக இருந்த ஜெ.எஸ்.லா என்பவருக்காக அதை நான் பெற்றுக் கொண்டுவந்தேன். அது கிறித்துவத்தின் வெற்றி நினைவுப் பரிசாகக் கிறித்துவ மதத்திற்கு மாறிய ஒரு பார்ப்பனரால் சமர்ப்பிக்கப்-பட்டதாகும்).

அய்ரோப்பியக் கல்வியும் அய்ரோப்பிய அறிவுடைமையும், இந்தியாவிலிருந்தவர்களின் உதவியும் அவர்களின் முன்னோர் எழுதி வைத்திருந்த குறிப்புக்களும் வேதங்களைப் பற்றிய விளக்கங்களுக்குக் காப்பிடமாக அமைந்துவிட்டன. பிரிட்டன், பிரெஞ்சு, ஜெர்மன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் இப்போது வேதங்களை வெளியிடுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். ‘கிழக்கிந்திய கம்பெனி’ இவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதோடு இவற்றை உலகுக்கு வெளிப்படுத்திக் காட்டும் பணியையும் அது செய்து வருகின்றது.

ரிக் வேதத்தின் மூன்று தொகுதிகள் திறனாய்வுக் குறிப்புகளுடன், ‘சாயன ஆச்சாரியா’ எழுதிய விளக்க உரையுடன் சமஸ்கிருதத்தில், ‘கிழக்கிந்திய கம்பெனியால்’ வெளியிடப்-பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்-கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மாக்சு முல்லர் இதனை வெளியிடுவதற்காகப் பத்து ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். இதனையடுத்துப் பேராசிரியர், வில்சன் (எனும் ஆங்கிலேயர்) ரிக் வேதத்தின் மூலத்தை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

(வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும் அவற்றை வெளியிடுவதற்கும் பரப்புவதற்கும் பார்ப்பனர்க்கு ஆங்கில அரசின் ‘கிழக்கிந்திய கம்பெனி’ பெருமளவில் நிதி உதவி செய்துள்ளது என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். மொ.பெ.ஆ.)

வேத நூல்களைத் திறந்து பார்க்கும்போது, அவை யாரைப் பற்றிப் பேசுகின்றன, யாருடைய மதச் செயல்களைப் பற்றிப் பேசுகின்றன என்றால், அவை ஆரியர்களைப் பற்றிப் பேசுகின்றன. வேதங்களுக்கு உரையெழுதிய பார்ப்பன உரையாசிரியர்களும், இவர்களைத் தொடர்ந்து எழுந்த இலக்கியப் படைப்புக்களும் ‘ஆரியர்’ என்னும் இந்தச் சொல்லுக்கு “மதிப்பிற்கு உரிய மனிதர்கள்’’ என்று பொருள் கூறுகின்றனர்.

எனினும், ஆரியர் என்ற சொற்பெயர் ஒரு பட்டப்பெயர் அல்ல என்றும் அது ஆரியர்களின் மூதாதையர் வழிவந்த ‘ஆரியர்’ இனத்தைக் குறிக்கும் சொல் என்றும் வேதங்கள் தெளிவாக நிறுவுகின்றன. ரிக் வேதத்தில் பல இடங்களில் ‘ஆரியா’ என்ற சொல் ‘மதிப்பிற்குரிய’, ‘மிக உயர்ந்த’, ‘மேலான’ என்ற பொருளிலேயே பயன்படுத்தப் பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

கீழ்த்திசை மொழிப் புலமையாளர்கள் இதனை ‘பார்சி’ மொழியில் வழங்கும் ‘அய்ரியா’ என்பதற்கு இணையானதாக ஒப்புக் கொள்வர். ‘வேண்டிடாட்’ எனுமிடத்திலும் வேறுசில பகுதிகளிலும் வழங்கி வந்த ‘தூய அய்ரியா’, கிரேக்கர்களின் ‘ஆரியானா’, ஈரானின் கிழக்குப் பகுதியில் பிற்காலத்தில் வழங்கிவந்த ‘ஆரியானா’ ஆகியவை இங்கே குறிப்பிடத் தக்கவையாகும். (‘யாட்ஸ்’ போன்ற பொது வழிபாட்டு முறை வாசகச் சுவடிகளில் உள்ளதைப் போன்று, அண்டை நாடான ‘தூரான்’ அல்லது ‘தூய்ரியா’ என்பதனுடன் இது மிக நெருக்கமாக இணைக்கப் பட்டிருக்கிறது) ‘பெகிஸ்டன்’ பட்டயத் தகடுகளில் உள்ள மறைபொருளைக் கண்டறிந்து, சர்.ராலின்சன், பேரா. வெஸ்டர்கார்ட், திரு.நாரிஸ் ஆகியோர் மொழிபெயர்த்து வெளிப்படுத்தி யுள்ளமையைப் போன்று இவற்றை விளக்க வேண்டும். முடிவாக, வேதங்களின் தாயகத்திற்கு ‘ஆரியா’ என்ற சொல்லின் முடிந்த முழு நீட்சியே பெயராக அமைந்துவிட்டது. சொராஸ்டிரியர்களின் ‘தூய’ அல்லது மூலவடிவ அய்ரியா’ இதனின்றும் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஈரானின் பழங்குடி மக்கள் சொராஸ்டிரியப் பகுதியிலிருந்து சிதறுண்டு போயினர்.

வேதகாலத்தில் ஆரியர்கள், நாகரிக முதிர்ச்சியற்ற அவர்களது நாட்டில் இருக்கவில்லை என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலமாகத் தெளிவாகின்றது என்று நான் கருதுகின்றேன். பனிக் காலங்களை வைத்து ஆரியர்கள் அவர்களது ஆண்டுகளைக் கணக்கிட்டுக் கொண்டனர். பனிக்காலம் ஒரு நாட்டில் குறிக்கப்படுவதைக் கொண்டு ஆரியர்கள் காலத்தைக் கணக்கிட்டனர். வடக்கில் வாழ்ந்த பாங்குடி மக்களைப் போல ஆரியர்கள் குதிரைகளை உயிர்ப்பலி கொடுத்து வேள்வி செய்வதில் (அசுவமேத யாகம்) அதிக ஆர்வமும் அக்கறையும் காட்டினர். ஆரியர்கள், அவர்களைச் சுற்றி வாழ்ந்தவர்களைக் காட்டிலும் வெண்ணிறமாகவும் அழகாகவும் இருந்தனர். அவர்கள் அக்காலத்தில் வந்தேறிய எல்லைப் பகதிகளில் முழுமையாக அமைதியை நாடுகிற வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. இங்கே நான் குறிப்பிடுகின்ற உண்மைச் செய்திகள் யாவும், ரிக் வேதத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மொழிபெயர்த்த அறிஞரான பேராசிரியர் பி.பி. வில்சன் அவர்களின் கருத்துக்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன. “அவர்கள் (தொல்பழங்-காலத்து இந்தியர்கள்) வடக்கத்திய இனமரபு வழியில் வந்தவர்கள் என்பது அவர்களின் பேச்சு முறையினால், கருத்து வெளிப்பாட்டு முறையினால் உறுதியாகின்றது. அவர்கள் வழிபாடு நடத்தும்போது, ‘நீண்ட நாள் வாழ வேண்டுவதும், நூறு பனிக் காலங்களைக் காண அருள்புரிய வேண்டுமெனக் கேட்பதும் வெப்பம் மிகுந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் விருப்பமாக இருக்க முடியாது. ஆரியர்கள் அழகுமிகுந்த தோற்றமுடையவர்கள்; இந்தியாவை முற்றுகையிட்ட வெளிநாட்டவர்-களில் இவர்கள் கவர்ச்சி மிகுந்த தோற்றம் கொண்டவர்களாக விளங்கினர்.

“மழைக் கடவுளான இந்திரன் இந்த நிலத்தின் தொல்குடி மக்களை, நாகரிகமற்ற காட்டுவிலங்காண்டிகளை அழித்துவிட்டு வளம் நிறைந்த வயல்வெளிகளையெல்லாம் வெண்ணிறமும் அழகிய தோற்றமும் கொண்ட தன் நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான்’’ என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு அழிக்கப்பட்ட மக்களை ‘தஸ்யூக்கள்’ என்று குறிப்பதனால் நமக்குச் சில அய்யப்பாடுகள் எழுகின்றன. ‘தஸ்யூ’ என்னும் சொல்லாட்சி அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ‘தஸ்யூ’க்கள் என்றழைக்கப்படும் இவர்கள், ‘மதச் சடங்குகளைச் செய்யாதவர்கள், அத்துடன் இவர்கள் மதச் சடங்குகள் செய்வோரை அவ்விடத்தினின்றும் விரட்டியிருக்கிறார்கள்’ என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றது. (ரிக் வேதத்தின் பல இடங்களில் இவ்வாறு கூறப்படுகின்றது. தொன்மைத் திராவிடர்கள் மதச் சடங்குகளுக்கு எதிரானவர்கள் எனும் வரலாற்றுண்மை இதனால் புலனாகின்றது _ மொ.பெ.ஆ.)

‘தஸ்யூக்கள்’ என்று இங்கே குறிப்பிடப்-படுவோர், பார்சி (‘மொழி’)யில் உள்ள புனித நூல்களில் குறிக்கப்பட்டுள்ள ‘டாக்யூஸ்’ எனும் இனத்தவரே என்பதில் அய்யமில்லை. ‘பெகிஸ்டன்’ பட்டயங்களில் ‘டாகியாஸ்’ என்று கூறப்படுபவர்களும் இவர்களே. இதற்கு ‘நாடுகள்’ என்றும், ‘மாநிலங்கள்’ என்றும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இவர்கள், யூதரல்லாத ‘கோயிம்’, அல்லது ‘ஜென்டைல்ஸ்’ (‘யூதருக்குப் புறம்பானவர்கள்’) என்னும் உயர்நிலையிலிருந்த மக்கள் என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது. சுருங்கச் சொன்னால் இவர்கள் காட்டு விலங்காண்டிகளல்லர். தனிச்சிறப்பு வாய்ந்த நகரங்களையும் நிறுவனங்களையும் இவர்கள் அமைத்துக் கொண்டு நாகரிகமான வாழ்க்கை நடத்தி வந்தனர். இதன் பின்னர் ஆரியர்கள் பல்வேறு தட்ப வெப்பம் உடைய நிலப்பரப்பைக் கடந்து தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர். எனினும் அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களுக்கு வலிமை வாய்ந்த எதிரிகளாகவே தென்பட்டனர்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *