திராவிட நாடும், திராவிட சமுதாயமும் இந்திய நாடு, இந்திய சமுதாயம் என்பது போன்ற ஒரு கற்பனை நாடும், கற்பனைச் சமுதாயமும் அல்ல; கற்பனைச் சொற்களும் அல்ல. வேத – புராண – இதிகாசங்களுக்கு முன்பிருந்தே திராவிட நாடும், திராவிட சமுதாயமும், திராவிடத் தனி ஆட்சியும் இருந்து வந்திருக்கிறது. வேதத்தில் மீனக் கொடியைப் பற்றியும், இராமாயண இதிகாசங்களிலும் மீனக் கொடியைப் பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.
ஆகவே, சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே வெகு காலமாக இருந்து வந்ததான நம் நாடும், சமுதாயமும், ஆட்சியும் மறைவு பட்டு, அன்னியர் ஆதிக்கத்திற்கும், சுரண்டுதலுக்கும், ஏவல் கொள்ளுதற்கும் ஆளாகி ஈன நிலையில் இருக்கும் நம் நாடும், சமுதாயமும் அடியோடு மறைந்து அழிந்து போன நம் அரசும் மறுபடியும் புத்துயிர் பெற்று எழ வேண்டுமானால் அவற்றிற்கேற்ற இலட்சியத்தையும், உணர்ச்சியையும், ஊக்கத்தையும் குறிக்கும்படியான சின்னமாக நம் திராவிடக் கொடியை திராவிட மக்கள் யாவரும் கருத வேண்டும்.
_-கோபி மாநாட்டில் கொடியேற்றி மணியம்மையார் பேசிய உரையிலிருந்து… குடிஅரசு 13.6.1944