பெண்கள் விடுதலைக்கு பெண்களே முன்வருக!

மார்ச் 01-15

– அன்னை மணியம்மையார்

கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகப் பொன் விழாவில்,
26-_4_-1975 அன்று பெண்கள் மாநாட்டைத் திறந்து வைத்து அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து…

எங்கள் இயக்கத்தின் (திராவிடர் கழகத்தின்) முக்கிய கொள்கைகள் இரண்டு. ஒன்று சாதி முறை அடியோடு ஒழிக்கப்பட்டு மக்கள் எல்லாம் சமத்துவம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பது. மற்றொன்று, பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு ஆண்களைப் போலவே சகல உரிமைகளையும் ஆணுக்குச் சமமாக அடைய வேண்டும் என்பது.

இந்த இரண்டும்தான் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் இரண்டு கண்களைப் போன்ற முக்கியமான கொள்கைகள். இதையேதான் தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் முழுதும் எடுத்துச் சொல்லி அதற்காகப் பாடுபட்டும் வந்தார்கள். பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். அவர் இயற்கை எய்திய காலம் வரைக்கும் இந்தக் கொள்கையினையே மக்களிடம் வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தும் வந்தவர்கள் ஆவார்.

அப்படிப்பட்ட கொள்கையினை நாம் இன்று கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்-றோம். தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப் பிறகும் அந்த இயக்கத்தினர்களாகிய நாங்களும், அந்தக் கொள்கையினையே நாட்டுமக்களிடம் எடுத்துச் சொல்லி வருகின்றோம்.

ஆணும், பெண்ணும் சமம் என்பது எங்கள் இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் அவர்கள் ஆணும், பெண்ணும் உங்கள் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ஸ்திரீயும் – புருஷனும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆதாரங்களைக் காட்டி அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி வருவார்கள்.

நமது இந்து சமுதாயத்தில் அத்தகைய முறை ஏற்றுக் கொள்ளப் படுவதும் இல்லை; கைக்கொள்ளப்படுவதும் இல்லை; ஒப்புக்-கொள்ளப்படுவதும் இல்லை.

எனக்கு முன்பு பேசிய தோழர் சங்கர-நாராயணன்கூட சொன்னார்; சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் சமமாக இருக்க முடியாது என்று. அது மிக மிகத் தவறு. அப்படி ஒரு நிலை இனியும் இந்த நாட்டில் இருக்கவே முடியாது – இருக்கவும் கூடாது. எனவே, சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் சம அந்தஸ்து உடையவர்களாக எல்லாத் துறைகளிலும் ஆக வேண்டும். அதற்காகப் பெண்கள் சமுதாயம் பாடுபட வேண்டும்.

இந்த முயற்சிக்குப் பெண்கள்தான் முழுமூச்சாகப் பாடுபட வேண்டும். ஆண்கள் பாடுபடுவார்கள் என்று நினைத்தால், அதைவிட மிக மிகப் பைத்தியக்காரத்தனம் வேறு இருக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் விடுதலைக்காக எவ்வளவோ பாடுபட்டார்கள். பெண்கள் அடிமை நீக்கத்திற்காகவே சுயமரியாதைத் திருமணம் என்ற முறையினைப் புகுத்தி தமிழ்நாட்டில் வைதீக முறைகளிலே நடைபெற்ற திருமணங்களை மதிப்பிழக்கச் செய்து, நாடெங்கும் சீர்திருத்தத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் பரவ வழிவகைகளைச் செய்தார்.

இதன் மூலமாகப் பெண்கள் ஓரளவு விழிப்படைந்து உள்ளார்கள். அவர்களுக்கும் ஓரளவு உரிமைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண் என்றால் எஜமானன், பெண் என்றால் அடிமை – வேலைக்காரி என்ற எண்ணம் தகர்க்கப்பட்டு வருகின்றது.

தந்தை பெரியார் அவர்கள் சோஷியல் சர்வீஸ் என்று சொல்லாமல், சோஷியல் ரெவல்யூஷன்; அதாவது சமுதாயத்தை ஒரு புரட்சிகரமாக மாற்றி அமைக்கவேண்டும் என்று சொன்னார்கள்; சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லுவதற்குப் பல வேறுபாடுகள், கருத்துகள் உண்டு.

நான் முன்னே சொன்ன அந்த நிகழ்ச்சியை (சோஷியல் சர்வீஸ் என்ற பெயரால்  செய்யப்படுகின்ற காரியத்தை) ஒருநாளும் தந்தை பெரியார் அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

அது தானாகவே, மனிதனுக்கு அறிவு வந்தால் – கல்வியைக் கொடுத்தால் – தக்கபடி நாம் அவர்களைப் பக்குவப்படுத்தி விட்டால் – அது தானாகவே இயற்கையாகவே நடக்க வேண்டிய நிகழ்ச்சியே தவிர, ஒருவர் போய் அவர்களைக் கழுவிக் குளிப்பாட்டி, எண்ணெய் தடவிச் சீவிவிட்டுச் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவதன் மூலம் ஒரு சமுதாயத்தைத் திருத்திவிட முடியாது. மக்கள் மனத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்கி அறிவு வளர்ச்சியினை அளித்து உண்மையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றால், சாதியின் பெயரால் – மதத்தின் பெயரால் – கடவுளின் பெயரால் அவர்களுக்கு இருந்து வருகின்ற இழிவுகள், கொடுமைகள் எல்லாம் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். இவற்றுக்-கெல்லாம் மக்களுக்கு விளக்கம் கொடுத்து அவர்கள் புரிந்துகொள்ளும்படி விழிப்படையும்-படி செய்ய வேண்டும். இத்தகைய தொண்டினைத்-தான் தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்கள்.

எங்கள் தமிழகத்திலே பெண்கள் சாதாரணமாக சிம்பிளாக ஒரு நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லாத வகையில்கூடப் பெண்கள் உடை அணிய வேண்டும் என்பது எங்களுடைய கொள்கை. உங்கள் கேரள நாட்டில் அப்படித்-தான் இருந்து வருகின்றார்கள்.

மாதவன் அவர்கள் மிகவும் படித்தவர்; பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்தான். ஆனால், தாழ்த்தப்பட்டவர்; ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் எவ்வளவு பணக்காரராக, படிப்பாளியாக இருந்தபோதிலும் சமுதாயத்தில் முன்னதாக வைத்து அன்று கருதப்படவே இல்லை. இதன் காரணமாக ஏற்பட்டதுதானே வைக்கம் சத்தியாக்கிரகமே.

நாம் எப்படித்தான் பொருளாதாரத்தில் உயர்ந்த போதிலும் நமது இழிவு மாறவே மாறாது.
நமது இழிவுக்கும், மடமைக்கும் காரணமான கடவுள், மதம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளவற்றை மாற்றிக் கொண்டால் ஒழிய, நாம் உயர்வு அடையவே முடியாது.

மக்கள் தொகையில் சமமாக உள்ள பெண்கள் சமுதாயத்துக்குச் சம அந்தஸ்து அளிக்க முன்வருகின்றார்களா என்றால் இல்லை. படித்த மக்கள் அதிகமாக உள்ள கேரளத்தில் – அதுவும் படித்த பெண்கள் மிகுதியாக உள்ள கேரளத்தில் – இரண்டு பெண்கள்தான் சட்டசபையில் இருக்கின்றார்கள் என்றால், பெண்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக அரசியல்வாதிகள் மதிக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்! சட்டசபை-களிலும், பதவிகளிலும் 100-க்கு 50 விகிதம் பெண்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று பெண்கள் போராட வேண்டும்.

இன்றைக்குச் சமுதாயத்தில் ஒரு சாராருக்கு மட்டும் கற்பைப் பற்றி வலியுறுத்தப்படுகின்றது. அது தவறு. இருசாராருக்கும் இருந்தால்தான் நாட்டிலே நல்ல நிலையில் வாழ முடியும். ஆண் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். எத்தனை பேர்களுடன் வேண்டுமானாலும் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். ஆனால், பெண்கள் மட்டும் ஒரு புருஷனுடன் மட்டும்-தான் வாழ வேண்டும் என்றால் என்ன நியாயமான நீதி இது? இன்றைக்கு நாட்டிலே எத்தனையோ குழந்தைகள் அனாதைகள் என்ற பெயரால் இருக்கின்றார்கள். இது யாருடைய குற்றம்? புருஷனுடைய குற்றமே தவிர, பெண்கள் குற்றம் என்று சொல்ல முடியாது. சமுதாயத்தின் குற்றம் அல்லவா? நான்கூட இப்போது என்னுடன் இரண்டு அனாதைக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றேன். இவர்-களுக்கு யார் தகப்பன்? யார் தாய்? என்று தெரியாத ஒரு நிலை.

இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் அரசாங்கமாவது ஏதாவது பாதுகாப்புக் கொடுக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. ஏமாந்த பெண்கள் யாராவது வீதியிலே திரிவார்களேயானால், அவர்களை மட்டும் பிடித்து ஜெயிலில் தள்ளித் தண்டனை கொடுத்துக் குழந்தைகளை யாரிடமாவது கொடுத்து விடுகின்றார்கள். மூலகாரணமாக இருந்த ஆணைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதோ அல்லது அதற்குப் பரிகாரம் தேடுவதோ இல்லை. இப்படிப்பட்டவர்கள் இருவரையும் கண்டுபிடித்து இருவருக்கும் தண்டனை அளிக்க வேண்டும் அல்லது இரண்டு பேர்களையும் ஒன்று சேர்த்து சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக ஆக்கவேண்டும். இது ஒரு நல்ல அரசின் கடமையாகும். இத்தகைய கொடுமைகளைச் சமுதாயத்தில் வளரவிடக் கூடாது.

இந்தக் காரியங்களை எல்லாம் எங்கள் இயக்கம் செய்துவருகின்றது. அதுதான் சமுதாய சீர்திருத்தத் தொண்டு ஆகும். ஆகவே, நாம் செய்கின்ற பணிகள் மனித சமுதாய முன்னேற்றத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

நான் முன்பு குறிப்பிட்டதுபோல் 50 சதவிகிதம் நமக்குப் பதவிகளிலே, உத்தியோகங்-களிலே அரசாங்கம் ரிசர்வேஷன் செய்ய வேண்டும். மற்றும் பெண்கள் இன்றைக்கு ஆடம்பரத்தில் ரொம்பவும் மோகமாக இருக்கின்றார்கள். அதனைத் தவிர்க்க வேண்டும். உடுக்கும் துணி, அணியும் நகை முதலியவற்றில் பெண்கள் பைத்தியமாக இருக்கின்றார்கள். இங்கு அவைகள் கொஞ்சம் குறைவு. உங்கள் உணவு மிகவும் எளிய உணவு; உங்களுடைய உடை மிகவும் ஆடம்பரம் இல்லாத சாதாரண உடை..

எங்கள் நாட்டு (தமிழ்நாட்டு) வழக்கங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டொன்றைச் சொல்லு-கின்றேன். படித்த பெண்கள் சமுதாயத்துக்குப் பயன்படாதவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் படித்தவுடனே தங்கள் குடும்பம், பிள்ளை – குட்டி, இவைகளில் கவனம் செலுத்துகின்றார்கள். தங்கள் குடும்ப நலனைப் பற்றியே அக்கறை செலுத்துகின்றார்களே ஒழிய, சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லை. படித்த பெண்கள் மக்கள் சமுதாயத் தொண்டுக்குப் பயன்பட வேண்டும். குடும்பத்தில் வீட்டு வேலை செய்பவர்களாக மட்டும் இருந்து-விட்டால் போதாது.  பெண்களை அடிமையாக வைத்துக் கொள்வதற்குச் சமையல்காரியாக வைத்துள்ளார்களே தவிர வேறு இல்லை. அதனால் அது கேவலம் என்று நான் கூறவில்லை. அந்தத் தொழில் ஒரு மனித சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டும்தான் உரிய தொழில் என்று இருக்கக் கூடாது.

இந்த ஆண்டானது சர்வதேசப் பெண்கள் ஆண்டாகும். இந்தப் பெண்கள் ஆண்டிலே நம் பெண்கள் சமுதாயம் முன்னேறுவதற்கான முயற்சிகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

– (‘விடுதலை’ 23-05-1975)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *