கல்வியைக் காவிமயமாக்கிடும் ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பா.ஜ.க. தலைமையிலான மத்திய (மோடி) அரசின் கல்வித்துறை -_ மாணவர்களையும், இளைஞர்-களையும் தங்கள் இலக்குகளாக்கி, பல்கலைக் கழகங்கள், அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் அதன் மாணவர் பிரிவாகிய ABVP என்ற அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் வலைக்குள் மாணவர்கள், சில ஆர்.எஸ்.எஸ். ஆசிரியர்களின் துணையோடும் ஆர்.எஸ்.எஸ். மயமாக்கிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு ஏராளமான பணபலம், பத்திரிகை, ஊடக பலம், ஆட்சி அதிகார பலம், வன்முறை ஏவுதல் மூலம் – இப்பல்கலைக் கழகங்களை தங்களது முக்கிய கருவிகளாகக் கொண்டு இளைய தலைமுறையின் மூளைக்குள் காவிச் சாயத்தை, சமஸ்கிருத கலாச்சாரத்தை, ஹிந்துத்துவ விஷத்தை ஏற்றிட தீவிரமாக முயற்சிக்கின்றனர்.
அதன் விளைவுதான் பல மத்திய பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆட்சிமன்றக் குழுக்களில் தங்கள் ஆட்களை நிரப்பியும், துணைவேந்தர்களாக ஆர்.எஸ்.எஸ். ‘கார்டு ஓல்டர்’களையுமே நியமித்து, ஆங்காங்கே மாணவர்கள் போராட்டங்கள் வெடிப்பதற்கு வித்திட்டு, வேலை செய்கின்றனர்!
முற்போக்குச் சிந்தனை, மதச் சார்பின்மை, சமூக நீதி இவைபால் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள ஒடுக்கப்பட்ட மாணவர் களிடையே இது பெரும் எதிர்ப்பைக் கிளப்பி விடுகிறது!
அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலே நாடே கொந்தளித்துக் கிளம்புகின்ற நிலை இன்று எங்கெங்கும் எழுந்து விட்டது!
தேச விரோதம் ‘Anti National’ என்ற பொய்க் குற்றச் சாட்டினைக் கூறி, வன்மத்துடன் அடக்குமுறை, வன்முறை, அதிகார வீச்சு – இவைகளை நம்பியது மெல்ல மெல்ல பயனளிக்கப் போவதில்லை என்ற சுவர் எழுத்தை மத்திய ஆட்சியாளரும் படிக்கத் துவங்கியுள்ளனர்.
இதற்கு டில்லி நீதிமன்றத்தில் திட்டமிட்டு நடத்திய வன்முறைத் தாக்குதல்களே தக்க சான்று.
ஆத்திரம் அறிவுக்குச் சத்ருதானே! அது நன்றாக விளங்கி விட்டது!
சென்னை அய்.அய்.டி. நிறுவனத்தில் முதலில் வெள்ளோட்டம் பார்த்தனர்.
அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தை தேவையில்லாது தடை செய்து, அதன் அமைப்பாளர்களை, மாணவ வீரர்களை விலக்கி வைத்து, நடவடிக்கை என்று அச்சுறுத்தினர். அங்கே துவங்கிய எதிர்ப்பு கண்டு மிரண்டு வேறு வழியின்றி பின்வாங்கி, புற்றுக்குள் நுழைந்த பாம்புபோல அந்த ஹிந்துத்துவ அதிகார சக்திகள் தங்களை உள்வாங்கிக் கொண்டன.
அய்தராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் துணையோடும், மத்திய அமைச்சர்கள் சிலரின் தூண்டுதலாலும், ரோகித் வெமுலா போன்ற தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, கடும் மன உளைச்சலைத் தந்ததோடு, அங்கே போராட்டம் வெடித்துக் கிளம்பியது.
ஆட்சியாளர் நிலை ஆப்பசைத்ததாகியது! அங்கும் இதே ஏபிவிபி மயமாக்கும் திட்டத்தின் விளைவு இப்படிப்பட்ட உயிர்ப் பலி.
இதன் எதிரொலி இந்தியா முழுவதும் பல பல்கலைக் கழகங்களில் கேட்கத் துவங்கி, அவர்களது காவிமய முயற்சிக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற, சமூகநீதி, அமைப்புகளும், கட்சித் தலைவர்களும், அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று திரள ஆரம்பித்து விட்டதால், இது மத்தியில் உள்ள ஆட்சியை சற்று பின்வாங்க வைத்தது. அவாளின் வாடிக்கையான வேடிக்கைதான் இது!
டில்லி பல்கலைக் கழகத்திலிருந்து தான் இந்த அடக்கு முறை ராஜ்யம் முதலில் துவங்கியது!
தற்போது பிரபல ஜவகர்லால் நேரு தேசிய பல்கலைக் கழகமான (ஜே.என்.யு) அதில் உள்ள மாணவர் தலைவர் கன்னையாகுமார் என்பவர்மீது ‘Anti National’ தேச விரோத முத்திரை குத்தி, அரசுக்கு எதிரான சட்ட விதியை வைத்து (Sedition) குற்றம் சுமத்தியுள்ளது!
இதைவிடக் கேலிக்கூத்து வேறு இருக்க முடியுமா?
‘இம்’ என்றால் சிறைவாசம், ஏன் என்றால், ‘வனவாசம்’ என்று முன்பு பிரிட்டிஷ் ஆட்சியின் எந்த அடக்குமுறைச் சட்டங்களைப் பற்றிப் பேசினார்களோ இன்று அதே ஆயுதம், தங்களுக்கு வசதியாகவே இருக்கிறது என்று, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிராகப் பயன்படுத்துவது எவ்வகையில் அறிவு நேர்மையாகும்!
விசாரணை மூலம் அம்மாணவர் தலைவர்-மீது கூறப்பட்ட (இதை உள்துறை அமைச்சர் முதல் பலரும் பிரச்சாரமே செய்தனர்) தேச விரோதச் செயலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வெளிவந்து விட்டது!
உள்துறை அமைச்சரே தவறான குற்றச்சாட்டினைக் கூறி, பிறகு அது இல்லை என்று ஆகிய நிலை எத்தகைய வெட்கக் கேடு?
கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு
எட்டு நாள்கள் தானே! இவர்கள் புளுகு – பொய்க் குற்றச்சாட்டின் திரை கிழிந்து தொங்குகிறது!
குஜராத்தில் இடஒதுக்கீடு கேட்டு திரண்ட மக்களுக்குத் தலைமை தாங்கிய இளைஞன் மீதும் பாய்ச்சப்பட்டு சிறையில் தள்ளியது இதே Sedition 124A இ.பி.கோ. தான்!
மும்பையில் பாடல் குழுவினர்மீது மாவோயிஸ்ட் என்ற குற்றச்சாட்டு ஆதாரமின்றி.
பிரபல உலகப் பல்கலைக் கழகங்கள் பலவும் இந்தியாவின் பல்கலைக் கழக கருத்துரிமைப் பறிப்பு கண்டு எள்ளி நகையாடி அறிவிப்பு தருகின்றன.
அது உண்மையான சர்வதேச அவமானம்! இல்லையா?
இந்தப் போக்கு பாசிச உணர்வின் வெளிப்பாடு. மிகுந்த எச்சரிக்கையுடன் மாணவர் உலகம் இதனை எதிர் கொள்ள வேண்டும்!
அதற்கு ஒரே வழி, அனைத்து மாணவர்கள் அமைப்பும் – இந்த கல்வி நிலையங்கள் ஆர்.எஸ்.எஸ். மயமாக்கும், கைப்பற்றும் முயற்சிக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும்!
இது (ஒரு மதவெறித்) தீ அணைப்பு போன்ற அவசர அவசியப் பணியாகும்!
மாணவச் செல்வங்களே! உங்கள் மூளைகளைக் குறி வைத்துத் தாக்கி, புராணக் குப்பைகளை அறிவியல் புதையல்களாகவும், வரலாற்று ஆதாரங்களையும், பகுத்தறிவையும், உண்மை ஆய்வுகளையும் புறந்தள்ளும் முயற்சிக்கு எதிராக எச்சரிக்கையோடு இருங்கள். ஒன்றுபடுங்கள்!
ஆசிரியர்,
கி.வீரமணி