அய்யாவின் அடிச்சுவட்டில்… 146
– கி.வீரமணி
சிங்கத்தின் குகை திராவிடர் கழகம் – சீண்டிப் பார்த்த
கண்ணதாசனுக்குப் பதிலடி!
தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாக்கள் தமிழகம் எங்கும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இன எதிரிகளின் கைக்கூலியாகச் செயல்பட்ட அன்றைய ஆஸ்தான கவிஞர் கண்ணதாசன், தந்தை பெரியாரின் குடும்பத்திற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில், அரசின் ஆதரவோடு ஓர் அற்பத்தனமான கருத்தை 05.03.1979 அன்று வெளிவந்த “தென்னகம்’’ என்ற அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேட்டில் எழுதினார். ஆளும் கட்சி அதிகாரபூர்வ அதே ஏட்டில் முன்பு, இப்படிப்பட்ட ஒரு இழிவான செய்தி வந்ததற்காக வருத்தம் தெரிவித்த அதே ஏடுதான் மகிழ்ச்சியோடு, இந்தக் “கட்டுரையையும்’’ வெளியிட்டிருந்தது என்பதிலிருந்தே, வருத்தம் தெரிவித்தவர்களின் உள்ளம் எப்படிப்பட்டது என்பது உலகுக்குத் தெரிந்துவிட்டது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி அயல்நாடு-களிலும் அமோக ஆதரவை பெற்றுள்ள நமது இயக்கத்தின் தோழர்கள், ‘உண்மையான சமுதாயத் தொண்டன் என்பவன், சமுதாய நலனுக்குச் செய்யும் காரியங்களில் மானக்கேடு ஏற்பட நேர்ந்தால் அதைத் துணிவுடன் ஏற்க வேண்டும்’ என்ற அய்யாவின் பாடப்படி துணிவுடன் இத்துரோகத்தை எதிர்-கொண்டார்கள்.
“எனக்கு அன்னை நாகம்மையாரையோ, நாகை மணியையோ, நடராஜனையோ தெரியாது என்றும் நான் திராவிடர் கழகத்தில் தொண்டனாக இருந்ததும் இல்லை’’ _ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த வரலாறுகள் தெரியாத இந்த வெற்று மண்டை வாலை சுருட்டிக்கொண்டு, வாயைப் பொத்திக் கொண்டிருக்கலாம், எல்லாமும் தெரிந்த மாமேதை போல் ஏட்டில் எழுதுவதற்கு ஏன் வரவேண்டும்? இதனைக் கண்டித்து ‘விடுதலை’யில் 08.03.1979இல் முதல் பக்கத்தில் நான் வெளியிட்ட அறிக்கையில் “கடந்த 5.3.1979 அன்று வெளிவந்த ‘தென்னகம்’ நாளேட்டில் தமிழ்நாட்டின் ஆஸ்தான கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட ஓர் கட்டுரையில் உலகத் தமிழர்களின் தனிப்பெரும் தலைவரும் பகுத்தறிவுப் பகலவனுமாகிய தந்தை பெரியார் அவர்களை மிகவும் கேவலப்படுத்துகின்ற தன்மையிலும், சுயமரியாதைச் சுடரொளிகளாக விளங்கி தந்தை பெரியார் அவர்களது தன்மானப் பேரியக்கத்திற்கு மாபெரும் தூண்களாக அடிநாளில் விளங்கியவர்களான மாயூரம் நடராசன், நாகை மணி ஆகியோர்களையும், இயக்கத்தின் பெருமதிப்புத் தாயாகிய அன்னை நாகம்மையார் பற்றியும் மிகவும் இழிவுபடுத்தும் தன்மையிலும் பல வாசகங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து ரத்தம் கொதிக்க பல பழம்பெரும் சுயமரியாதை வீரர்களிலிருந்து கழகத்தின் கருஞ்சட்டை அணியைச் சார்ந்த இளைய தலைமுறை வரை எல்லோரும் சொல்லொண்ணா ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் உள்ளனர்!
‘தென்னகம்’ ஏடு அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு. அமைச்சர் ஒருவருக்கு மிகவும் நெருங்கிய ஏடு ஆகும்.
ஆளுங்கட்சியின் அதிகாரபூர்வ ஏட்டில் ஒருவர் இவ்வளவு தாறுமாறாக (அதைத் திருப்பி நாம் எழுத கை கூசுகிற அளவுக்கு) எழுதப்பட்டுள்ளது! மாண்புமிகு முதலமைச்சர் போன்றவர்கள் அதில் வரும் ‘அற்புத முத்தமிழையும் தாண்டிய நாலாந்தமிழான வசைத் தமிழ்த் தொடர்களை’ தினமும் படித்து ரசிப்பதுபோலவே அக்கட்டுரையினையும் படித்து ரசித்தாரா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது!
தந்தை பெரியாருக்கு ஒருபுறத்தில் விழா, மறுபுறத்தில் அவரது துணைவியரான அன்னை மணியம்மையாருக்கு அதிகாரிகளால் அர்ச்சனை.
“பெரியாருக்குச் சிலை; மணியம்மையாருக்குச் சிறையா? இதைவிட விசித்திரம் எங்காவது உண்டா? என்று சிங்கப்பூர் நாளேடு ‘தமிழ் முரசு’ ஆணி அடித்தாற்போல அருமையான ஒரு கேள்வியை எழுப்பியது!
இப்போது ஆஸ்தான கவிராயர் என்ற ஒருவர் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, தோலைக் கடித்து துருத்துயைக் கடித்து, மனிதனையே கடித்த கதைக்கு வந்திருக்கிறார்.
பெரியார் தொண்டர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்பதை நாளுக்கு ஒருவருக்கு ‘ஜே’ போடும் அந்த ஆளுக்குத் தெரியாவிட்டாலும் தெரிய வைக்கச் செய்வது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆனால் நாம் கேட்பதெல்லாம் -_ இப்படிப்பட்ட கீழ்த்தரங்களுக்கு அய்யா வழி _ அண்ணா வழி ஆட்சியில் ஆஸ்தான கவிஞர் பதவியா? மக்கள் என்ன கொழுக்கட்டைகள் என்ற நினைப்பா அரசுக்கு?
மக்கள் வரிப்பணம் என்ன செம்புத்துண்டு என்ற எண்ணமா?
பெரியார் விழாவுக்கு வரமாட்டேன் என்று கூறியபோதே அந்தக் கவி பயன்படுத்திய சொற்கள் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை உடனிருந்தவர்கள் கூற நாமும் அறிவோம்!
நாம் அதை லட்சியம் செய்யவில்லை.
ஆனால் ஆத்திகத்தைக் காட்டி ‘கிருஷ்ணலீலை’களில் திளைப்பதை தனது வாழ்வின் பிறவிப்பயனாக கருதிக் கொண்டிருக்கும் இந்த கேவலப்பிறவி தானா முதல்வருக்கு ஆஸ்தான கவியாகக் கிடைத்தது!
அருமையான சுயமரியாதைக் கவிஞர்களான சுரதாவோ, புலமைப்பித்தனோ அவர் கண்ணில் ஏன் படவில்லை?
இந்தக் கவிஞர்கள் சுட்டுப் போட்டாலும் ஆத்திகத்தின் பக்கம் செல்லாதவர்கள் என்பதும் லட்சிய வீரர்கள் அவர்கள் என்பதும்தானா அவர்களுக்குத் தகுதிக் குறைவு?
ஆஸ்தானத்துக்கு அவசியம் கவி தேவைதான் என்றால் அவர்களைப் போட்டிருக்கலாமே!
அரசின் எந்தக் கொள்கைக்கு இப்போது உள்ள கவிஞர் உடன்பட்டவர்?
மதுவிலக்குப்பற்றி தீவிரம் காட்டும் அரசு, ‘கோப்பையில்தான் என் குடியிருப்பு’ என்று பச்சையாக கூறும் நபர்களை எப்படி சகிக்கிறது?
அரசு அதிகாரிகள் குடிக்கக் கூடாது; அரசு கவிஞர் குடிமகனாக, அதுவும் பெருங்குடிமகனாக இருக்கலாமா?
முதல்வர் கொள்கைப்படி இது இரட்டை அளவுகோல் அல்லவா?
ஆத்திகத்தின் ஒரே வாரிசு போல நினைத்து, பார்ப்பான் நம்மை சூத்திரன் என்று பெயரிட்டதை நியாயப்படுத்துவதுபோல நடக்கும் நபர்களை திராவிடப் பாரம்பரியத்திற்குச் சொந்தமான ஓர் கட்சி என்று மார் தட்டிக் கொள்ளும் ஓர் ஆட்சியில் ஆஸ்தான கவிஞர்களாக போடலாமா?
யாரை எங்கே வைப்பது என்பது தெரியாத நிலையா? இப்படிப்பட்டவர்களால் இவ்வளவு கீழிறக்க வேலைகளை நடத்தலாம் என்ற நினைப்பா?
‘தென்னகம்’ ஏட்டில் நேற்று மாலை வெளிவந்த ஓர் வருத்தம் தெரிவித்த வார்த்தைகள் மட்டுமே இதற்குப் பரிகாரம் ஆகிவிட முடியாது!
எழுதியவர் இதற்கு என்ன சொல்லுகிறார். அவரை எழுதத் தூண்டியவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இவருக்கு அமைச்சர் அந்தஸ்துடன் வாரிக் கொடுக்கப்படும் மக்கள் பணம் பற்றிக் கேட்க நாதியில்லை என்று நினைத்துவிட வேண்டாம்.
இதுகுறித்து நாடெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் கட்சி வேறுபாடு இன்றி கண்டனக் கடிதங்களை முதற்கட்டமாக ‘ஆஸ்தான கவியை நீக்கு’ என்று கோரி எழுதி அனுப்புங்கள்.
அடுத்தக் கட்டம் என்னவென்பது அடுத்து எழுதுகிறோம்.
ஆத்திரத்தால் ‘துடிக்கும்’ தன்மானத் தமிழர்களே அவசரப்படாதீர்கள்; கொஞ்சம் அமைதியாக இருங்கள்! பெரியாருக்கு விழா கொண்டாடும் அரசின் முதலமைச்சர் பெரியார்தம் பெரும் குடும்பத்தை, கீழ்த்தரங்களை விட்டு கண்டபடி எழுத விட்டிருக்கிறார்!
தந்தை பெரியார் பற்றி மேற்படி நபர் கீழ்த்தரமாகப் பேசியதை முன்பே நாம் லட்சியம் செய்ததில்லை -_ தந்தை பெரியார் ஆணைப்படி!
இப்போது அரசுக்கட்டில் இருக்கிறது என்ற தைரியத்தில் ஆபாச அர்ச்சனைகளை இடம் தெரியாமல் ஆரம்பித்திருக்கிறார்! இதற்கு அரசுத் தரப்பில் முதலமைச்சர் எந்த பரிகாரத்தை விரைந்து தேடப் போகிறார் என்று பார்ப்போம்’’ என்று எழுதினேன்.
அன்றைய முதலமைச்சர் ஆஸ்தான கவியைக் கண்டிக்காத நிலையில், அந்த ஆஸ்தான கவிஞரின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று இரண்டாவது முறையாக 19.03.1979 அன்று ‘விடுதலை’யில் அறிக்கை ஒன்று வெளியிட்டேன். அதில் மார்ச் 22இல் அடையாள மறியல் சென்னை சட்டமன்றத்தின் எதிரில் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். மேலும் பெரியார் தொண்டர்களின் மனக் கொதிப்பைத் தெரிவித்தும் முதல்வர் மவுனத்தைக் கண்டித்தும் அந்த அறிக்கையில் எழுதியிருந்தேன்.
இதோ அந்த அறிக்கை:
சுயமரியாதை இயக்கத் தாயாகிய அன்னை நாகம்மையார் அவர்களை மிகவும் இழிவுபடுத்தி அமைச்சர் ஒருவரால் துவக்கப்பெற்ற ஆளுங்கட்சி நாளேட்டில், ‘ஆஸ்தான கவி’ என்பவர் எழுதியது குறித்து, நாடெங்கிலும் உள்ள பெரியார் தொண்டர்கள் எவ்வளவு குருதி கொதிக்கும் நிலையில் உள்ளனர் என்பதை தமிழக அரசும் மாண்புமிகு முதல்வரும் உணரவேண்டும் என்று காட்டவே, நாடெங்கிலும் உள்ள தமிழ்ப் பெருமக்கள் கண்டனக் கடிதங்களை எழுத “ஆஸ்தான கவிஞர் பொறுப்பிலிருந்து அந்நபரை நீக்க வேண்டும்’’ என்று முதற்கட்டமாக எடுத்துச் சொன்னோம்.
அடுத்த கட்டமாக, சென்னையில் மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் ஓர் மாபெரும் பொதுக்கூட்டம் போடப்பட்டு இப்படிப்பட்ட தாறுமாறான வசை புராணத்தினால் தமிழகப் பொதுவாழ்வு எவ்வளவு தரங்கெட்டதாகி விடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, மக்கள் வரிப் பணத்தை இத்தகைய கீழ்த்தர நடையாளர்களுக்கு அள்ளி கொடுக்கக் கூடாது என்று கோரிக்கை தெரிவிக்கப்பட்டது.
ஆளுங்கட்சி தந்தை பெரியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இந்நாளில் ஒருபுறம் அவ்விழா, மறுபுறம் “ஆஸ்தான கவி’’களின் ஆபாச அர்ச்சனைகள் அய்யாவின் குடும்பத்தின் மீது என்றால் அதை நாகரிக உணர்வும் சுயமரியாதை உணர்வும் உள்ள எவர்தான் சகிக்க முடியும்?
பெரியார் தொண்டர்களின் கொதிப்பு முதல்வரின் மவுனத்தால் _ கண்டனம் தெரிவிக்க வேண்டிய முதலமைச்சர் இதுவரை இதுபற்றி ஏதும் சொல்லாததால், அவரும் ஆஸ்தான கவியின் அருவறுக்கத்தக்க எழுத்துக்களை ஆதரிக்கிறாரோ என்ற அய்யத்தையே தமிழ்ப் பெருமக்களுக்கு வெகுவாக ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களின் உணர்வுகள் இதில் எப்படி கொதிப்புடன் உள்ளதோ, அதை அரசுக்கு உணர்த்துவதற்காகவே அரசின் நேரடி பார்வையை இழுத்து இதற்குப் பரிகாரம் தேடுவது தந்தை பெரியார் தொண்டர்க்கு தவிர்க்க முடியாத உயிர்க் கடமையாகிவிட்டது.
அய்யா வளர்த்த ஒரு சிறு நாய்க்குட்டிகூட அவருடன் இருந்தபோது அவரைக் காத்துக் காவல் செய்தது! அவரால் மனிதர்களாக்கப்-பட்ட நாம், அவருக்குப் பின் அவரை, அவர்தம் வரலாற்றுப் புகழ்வாய்ந்த குடும்பத்தை எவரும் இழிவுபடுத்தலாம் என்று நினைத்தால் அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்று காட்ட வேண்டாமா?
அடி, உதை, குத்து, வெட்டு என்ற வன்முறைகள் அல்லது காமன் பண்டிகைக்கான லாவணிக் கச்சேரிகள் இதற்குப் பயன்படாது. அவைகளில் நமக்கு ஒருபோதும் நம்பிக்கையும் கிடையாது.
முறையான முறைகள் மூலமே அத்தகையோருக்கு தகுந்த பாடம் கற்பித்தாக வேண்டும் _ அதுவும் நம்மை வருத்திக் கொண்டாவது அதனைச் செய்ய வேண்டும் என்பதால்தான் வரும் 22.3.1979, அதாவது இன்னும் 3 நாட்களில் தமிழக சட்டமன்றத்தின் முன் ஒரு நாள் அடையாள மறியலை திராவிடர் கழகம் _ பெரியார் தொண்டர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
பொதுவாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரிகத்தையும் விரும்பும் அத்தனை பேரும் ஒரு பெரும் பேரணியாக சென்னை “அண்ணா’’ சாலை பெரியார் பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று தடை உள்ள பகுதி வந்தவுடன் தடைமீறும் அணியினர் மட்டும் சட்டமன்றம் நோக்கி (மறியல்) அறப்போர் நடத்தப் புறப்படுவார்கள்.
தமிழக அரசு சார்பில் இப்பிரச்சினை குறித்து முதல்வர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி தந்திருந்தாரானால், இப்படி ஒரு அறப்போர் நடத்த வேண்டிய அவசியம் பெரியார் தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்காது. 22ஆம் தேதி என்பதற்குள் ஏதாவது அப்படி அறிவிப்பு வந்தால் வரவேற்போம்.
“இல்லை நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றேகால்தான்’’ என்பதும் ஆட்சி அதிகாரம் நம் கையில் ; சட்டமும் போலீசும், குண்டாந்தடியும், துப்பாக்கியும் நம் கையில்; அவைகளுக்கு முன்னால் இவர்கள் எம்மாத்திரம்’’ என்ற போக்கு தமிழக ஆட்சியாளர்கள் போக்காக இருக்குமானால் காலமும் சரித்திரமும் அதற்குத் தக்க விடையளிக்கும் என்பது உறுதி.
பெரியாருக்கு இசைபட விழா ஒரு புறம்; பெரியார் குடும்பத்தினருக்கு வசையும் கேவலமும் மறுபுறம் என்றால், உண்மை பெரியார் தொண்டர்களால் அக்கொடுமையை எப்படி சகிக்க முடியும்?
சுயமரியாதைச் சுடரொளிகளாம் அன்னை நாகம்மையாரையும், மாயூரம் நடராசனையும், நாகை மணியையும் ஒழுக்கங் கெட்டவர்களாக்கி அவதூறு பரப்பிடும் அசிங்கமான எழுத்துக்களை உதிர்த்த ஆஸ்தான கவிஞரால் இந்த அரசுக்குப் பெருமையா? அது ஆஸ்தானத்திற்கே இழுக்கு அல்லவா?
எனவே, தன்மானமுள்ள தமிழர்களே! நீங்கள் எக்கட்சியிலிருப்பினும், எங்கிருப்பினும் சென்னையை நோக்கி 22ஆம் தேதி களம் காண துடித்து வாருங்கள்! தந்தை தந்த மானக் கவசமாம் சுயமரியாதை உணர்வு பொங்க வாருங்கள்.’’
கண்டன அறிக்கைகள் எழுதியதோடு, அந்த நபரையும் அவருக்குத் துணை நின்ற அ.தி.மு.க. அரசையும் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் மாபெரும் கண்டனக் கூட்டமும் நடைபெற்றது 16.3.1979. அதில், நான் மற்றும் தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் கலந்துகொண்டோம். ஆபாச எழுத்துக்களில் சுயமரியாதை சுடரொளிகளைத் தாக்கும் அந்தக் கவிஞருக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
தமிழக அரசின் ஆஸ்தான கவிஞர் கண்ணதாசன் தந்தை பெரியார் அவர்களின் துணைவியாரும் சுயமரியாதை இயக்கத்தின் தாயுமாகிய அன்னை நாகம்மையாரை அவதூறாக எழுதியதைத் தொடர்ந்து திராவிடர் கழகம் அதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்ததோடல்லாமல் அய்யா குடும்பத்தைப் பழித்த ஆஸ்தான கவிஞரை ஆஸ்தான பொறுப்பிலிருந்து அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து 22.03.1979 அன்று என்னுடைய தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து, பின்பு சட்டசபை முன் அறப்போரில் ஈடுபட ஆயிரக்கணக்கான தோழர்கள் நான் முந்தி நீ முந்தி என முனைப்போடு முன்வந்தனர்.
ஆனால் அறிவிக்கப்பட்டுள்ள மறியல் ஒரு அடையாள மறியல் என்கிற காரணத்தால் அதிகமானவர்கள் ஈடுபட வேண்டாம் என்றும், அய்ம்பது அல்லது அறுபது பேர் மட்டும் ஈடுபட்டால் போதுமானது என்று நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க போராட்டத்தில் ஈடுபடும் வாய்ப்புக் கிட்டவில்லையே என்ற ஏக்கத்தோடு, கட்டுப்பாட்டுடன் ஏற்றுக் கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபடும் தோழர்கள் தாய்மார்கள் மட்டும் தனியாக நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு திராவிடர் கழகம் முத்திரை பதிக்கப்பட்ட அடையாளச் சீட்டு வழங்கப்பட்டது. போராட்டக்காரர்கள் எனது தலைமையில் மெரினா கடற்கரையில் சென்றபோது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் அவர்களின் கார் எதிரில் வந்து எங்கள் அருகில் நின்றது.
(நினைவுகள் நீளும்)