பெண்ணால் முடியும்

ஜனவரி 01-15

வாகன ஓட்டுநரை கண்காணித்து கட்டுப்படுத்தும் கருவியைக் கண்டுபிடித்த இளம் விஞ்ஞானி மாஷா!

– ஒளிமதி

தன் புதிய கண்டுபிடிப்புகளுக்காக 5 தேசிய விருதுகள், 2 சர்வதேச விருதுகள், 5 தென்னிந்திய விருதுகள் என்று இதுவரை 12 விருதுகளைக் குவித்திருக்கிறார் இந்த இளம் பெண் மாஷா. தன்னைப் போலவே இளம் கண்டுபிடிப்-பாளர்களை உருவாக்குவதற்காக மாஷா இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் என்ற இலவச மய்யத்தை தன் வீட்டிலேயே ஆரம்பித்திருக்கிறார்.

 

தற்போது வாகன விபத்துகளைத் தவிர்ப்பதற்காக விமானத்தில் இருக்கும் கறுப்புப்பெட்டி போன்ற கோ அஹெட் என்ற கருவியை கண்டு-பிடித்திருக்கிறார். எஸ்.ஆர்.எம்.மில் எம்.டெக். படித்துக் கொண்டிருக்கும் இந்த மாஷாவின் சொந்த ஊர் நாகர்கோவில் பார்வதிபுரம்.

அப்பா, நஸீம் நாகர்கோவில் கருவூலத்தில் அதிகாரியாக இருக்கிறார். உதவியாளர் இல்லாத வேளைகளில், அரக்கை உருக்கி, ஆவணங்க-ளுக்கும் கடிதங்களுக்கும் சீல் வைப்பார். அரக்கை உருக்கும்போது, மெழுகு, உடல் மேலே சிந்தி சிரமப்படுவார். அதற்குத் தீர்வு காண, இவர் உருவாக்கியதுதான், நெருப்பில்லா முத்திரை வைப்பான் கருவி. வெறும், 130 கிராம் எடையுள்ள இந்த கையடக்கக் கருவியில், அரக்குக் குச்சியை உள்ளே செலுத்தி, சுவிட்ச் ஆன் செய்தால், வட்ட வடிவில், சீல் விழுந்துவிடும். கால் மணி நேரத்தில், 100 சீல்கள் வைத்துவிடலாம். கடந்த சட்டசபைத் தேர்தலில், தேர்தல் கமிஷன் அனுமதியுடன், நாகர்கோவில் தொகுதியில் இரண்டு ஓட்டுச் சாவடிகளில், இந்த சீல் மேக்கர் கருவியைப் பயன்படுத்தி சீல் வைத்தார்கள்.

அதேபோல் இவர் முதல்முதலில் கண்டுபிடித்தது இவருக்கு சர்வதேச விருதைப் பெற்றுத்தந்த ஹைடெக் டிரெய்ன் டாய்லெட் (ரயில் கழிப்பறை) இந்திய ரயில்வேயில் சோதனை முயற்சியாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

இப்போது, புதுசாக கோ அஹெட் (Go Ahed – Governor to Avoid Human Errors in Driving)ங்கிற கருவியை இவரும் இவரோட தோழி மீனாட்சியும் சேர்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். விமானத்தில் இருக்கிற கறுப்புப் பெட்டியோட பயன்பாடு என்னவென்று நமக்கெல்லாம் தெரியும். விபத்து அல்லாத சூழலிலும்கூட விமான பைலட்டு-களின் அனைத்து நடவடிக்கைகளும் இந்தக் கறுப்புப் பெட்டியில் பதிவாகி இருக்கும். இதன்மூலம் பைலட்டுகளின் பணிநேரத் தவறுகள் ஆராயப்பட்டு, அடுத்து அந்தத் தவறுகள் நிகழாமல் தடுக்கப்படும். இதே போன்ற ஒரு கறுப்புப் பெட்டி பஸ், லாரி போன்ற வாகனங்களில் இருந்தால் சாலைப் பயணம் எவ்வளவு பாதுகாப்பா இருக்கும் என்ற எண்ணத்திலேதான், இந்த கோ அஹெட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இன்றைக்கு உலகத்தில் உள்ள சாலை விபத்துகளில் 90 சதவிகிதம் மனித தவறுகளால் தான் ஏற்படுகிறது. வருஷத்துக்கு 50 லட்சம் பேரோட உயிர் போகவும் 50 லட்சத்துக்கு அதிகமானோர் உடல் ஊனமாகவும் காரணம் சாலை விபத்துகள்தான்.

கோ அஹெட் கருவியை வாகனத்தில் பொருத்தும்போது, வாகன ஓட்டுநரின் பயண நேர செயல்பாடுகள் அனைத்தும் இந்தக் கருவியின் கண்காணிப்பின் கீழ் வந்து விடுகிறது. ஓட்டுநர் குடித்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தால் இந்தக் கருவி இஞ்சினை ஸ்டார்ட் செய்ய அனுமதிக்காது. நீண்ட பயணத்தின்போது ஓட்டுநர் ஸ்டியரிங்கை பிடித்தவாறு தன்னையறியாமல் கண் அயர்ந்தால் இதிலிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர் விழித்துக் கொள்ளவில்லை என்றால் பயணிகளையும் எதிர்வரும் வாகனங்களையும் எச்சரிக்கும் விதமாக சிவப்பு விளக்கினை எரிய வைக்கும். இது மட்டுமில்லாமல் வேகமாக ஓட்டுதல், ரேஷ் டிரைவிங், திடீரென வேகமாக ஓட்டுதல், திடீரென்று பிரேக் பிடித்தல், தேவையில்லாமல் கிளட்ச் அல்லது பிரேக்கில் அழுத்தியவாறு ஓட்டுதல் போன்ற ஓட்டுநரின் மோசமான செயல்பாடுகளை நேரவாரியாக பதிவு செய்து, டிப்போவுக்குத் தெரிவித்து விடும் இந்தக் கருவி. ஓட்டுநர் தூங்க ஆரம்பித்தாலும் இந்தக் கருவி கண்கொத்திப் பாம்பாக அவரை கண்காணிப்பதால் ஓட்டுநர் தவறு செய்யாமல் கவனமாகச் செயல்பட உதவுகிறது!.
தற்போது மாஷா இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் இளம் தலைமுறை மாணவ கண்டுபிடிப்பாளர்-களுக்காக ஒரு இலவச ஆய்வு மய்யத்தை தன்னுடைய வீட்டிலேயே கட்டியிருக்கிறார் மாஷா. மாதத்துக்கு இரண்டு நாள் ஊருக்கு வரும்போது, இந்த மய்யத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்… முதல் முறையாக இவரோட வழிகாட்டுதலில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அறிவியல் ஆக்கத்திறன் போட்டியில் ஏழாம் வகுப்பு மாணவன் ராம் நிகாஷ் கண்டுபிடித்தத் தானியங்கி நடைமேடை பாதுகாப்புக் கருவி தேசிய விருதைப் பெற்றுள்ளது. ஓடும் ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயணிகளுக்கு ஏற்படும் உயிழிழப்புகளைத் தவிர்க்க உதவுகிறது இந்தக் கருவி.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகம், திருவனந்தபுரம் இந்திய விண்வெளிப் பல்கலைக்கழகம் ஆகியவை மாஷாவின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி கவுரவித்துள்ளது. தவிர, ஜப்பான் அரசு இவரைத் தங்கள் நாட்டுக்குக் கல்விச் சுற்றுலாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துப் பாராட்டியது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவரது தங்கை இன்ஷா நஸீமும் அக்காவைப் போலவே கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார். நடக்கும்போதே டைனமோ மூலமாக மின்சாரம் உற்பத்தியாகி எலக்டிரிக் சார்ஜ் உருவாகும் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார் இவர். வளர்க பெண்களின் சாதனை!  ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *