அய்.அய்.டி., என்.அய்.டி., அய்.அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்களும், பிளஸ் டூ படித்துவரும் மாணவர்களும் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
அய்.அய்.டி.க்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அய்.அய்.டி. நுழைவுத் தேர்வுக்கும் என்.அய்.டி., அய்.அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கும் (ஏ.அய்.இ.இ.இ) பதிலாக பொது நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ. மெயின்) நடத்தப்படுகிறது. என்.அய்.டி.க்கள், மத்திய அரசு நிதியுதவியுடன் நடைபெறும் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளில் மாணவர்-களைச் சேர்ப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கு 60 சதவீதம் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.
அய்.அய்.டி.க்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கும் ஜே.இ.இ. மெயின் தேர்வில் தகுதிபெற வேண்டியது அவசியம். தற்போது, குஜராத், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், நாகாலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களும் ஜே.இ.இ. மெயின் தேர்வின் அடிப்படையில் அட்மிஷன் மேற்கொள்வதாக அறிவித்துள்ளன. இந்தத் தேர்வு மதிப்-பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்தும் வேறு பல கல்வி நிறுவனங்களும் உள்ளன.
ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வை மத்திய செகண்டரி கல்வி போர்டு (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. இந்தப் பொது நுழைவுத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (என்.அய்.டி.) உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மெயின் தேர்வின் முதல் நாளை (ஏ.அய்.இ.இ.இ. தேர்வில் முதல் தாளாக முன்பு இருந்தது) எழுத்துத் தேர்வாக எழுதலாம். கம்ப்யூட்டர் மூலமும் எழுதலாம். ஏப்ரல் 3ஆம் தேதி காலை9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வு ஏப்ரல் 9, 10 தேதிகளில் நடைபெறுகிறது. பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளில் சேருவதற்-கான மெயின் தேர்வு இரண்டாம் தாளை (ஏ.அய்.இ.இ.இ. தேர்வில் இரண்டாம் தாளாக இருந்தது) எழுத்துத் தேர்வாக (Pen and paper based Exam) மட்டும் எழுதலாம். இந்தத் தேர்வு ஏப்ரல் 3ஆம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறுகிறது.
மெயின் தேர்வின் முதல் தாளில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்-களிலிருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு விடையளிக்க மூன்று மணி நேரம் அளிக்கப்படும். வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். இரண்டாம் தாளில் ஏற்கெனவே ஏ.இ.இ.இ. தேர்வில் இருந்ததுபோலவே கணிதம், ஆப்டிட்யூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் ஆகியவற்றில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கும் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும்.
இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என்.அய்.டி. உள்ளிட்ட கல்வி நிறுவனங்-களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பி.ஆர்க். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்தப் பாடங்களில் பெறவேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், 1991ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்திருக்க வேண்டும். செகண்டரி பள்ளிச் சான்றிதழில் உள்ளபடி பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படும். 2014ஆம் ஆண்டிலோ அல்லது 2015ஆம் ஆண்டிலோ பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 2016இல் பிளஸ் டூ தேர்வை எழுதும் மாணவர்களும் தேர்வு எழுத அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஜே.இ.இ. மெயின் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம். மெயின் தேர்வில் முதல் தேர்வை மட்டும் எழுதுகிறோமா அல்லது இரண்டாவது தேர்வை எழுதுகிறோமா அல்லது இரண்டு தேர்வுகளையும் எழுதுகிறோமா என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அத்துடன் காகிதத்தில் எழுதும் எழுத்துத் தேர்வை எழுதுகிறோமா அல்லது கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுதுகிறோமா? என்பதையும் குறிப்பிட வேண்டும். அதைப் பொருத்து கட்டணம் வேறுபடும்.
இத்தேர்வில் முதல் தாள் அல்லது இரண்டாவது தாளை மட்டும் எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,000. மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.500. முதல் தாளை கம்ப்யூட்டர் மூலம் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.500. அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.250. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.250.
முதல் தாளையும் இரண்டாவது தாளையும் சேர்த்து எழுத்துத் தேர்வாக எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,800. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.900. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.900. அதேபோல முதல் தாளை கம்ப்பூட்டர் தேர்வாகவும் இரண்டாவது தாளை எழுத்துத் தேர்வாகவும் எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.1,300. இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளுக்குக் கட்டணம் ரூ.650. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கட்டணம் ரூ.650. இந்தக் கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு, சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, அய்.சி.அய்.சி.அய்., எச்.டி.எஃப்சி வங்கிகளில் இ-_செலான் மூலமும் கட்டணம் செலுத்தலாம்.
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதனால், இந்தத் தேர்வுக்கான தகவல் விவரக் குறிப்புகளை கவனமாகப் படித்து, தகுதி குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். புகைப்படம், கையெழுத்து, இடது கை கட்டை விரல் ரேகை ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஜேபிஜி பார்மெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அப்புறம், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன், ஸ்கேன் செய்யப்பட்டவற்றையும் அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். (அல்லது இ_செலான் மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்). விண்ணப்த்தை அனுப்பியதற்கான ரசீதை டவுன்லோடு செய்து பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் தனது அல்லது பெற்றோரின் இ_மெயில் முகவரியையும் மொபைல் எண்ணையும் கொடுக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம்தான் தகவல்கள் அனுப்பப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வு குறித்தும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் இணையதளத்தில் உள்ள விளக்கக் குறிப்பேட்டில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்.அய்.டி.க்களிலும் என்.அய்.டி.க்களிலும் சேருவதில் ஆர்வமிக்க பிளஸ் டூ படித்த மாணவர்களும் தற்போது பிளஸ் டூ படிக்கும் மாணவர்களும் அதற்கான மெயின் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: http://jeemain.nic.in/