கேள்வி : மறைமலையடிகள் சுயமரியாதை இயக்கத்தவரைத் தாக்கிப் பேசியதற்கு சுயமரியாதைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தமைக்கு ‘குடிஅரசு’ இதழில் பெரியார் மன்னிப்புக் கேட்டதாக ஜூனியர் விகடனில் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளது சரியான தகவலா?
– நா.இரவிச்சந்திரன், கோவில்வெண்மணி
பதில் : தலைவர் தந்தை பெரியாரின் தனிப்பெரும் பண்புகளில் ஒன்று, பண்பட்ட விமர்சனங்களைச் செய்வது. தனது தோழர்களேகூட, அதி உற்சாகத்துடனோ, அல்லது கடும் ஆத்திரம் காரணமாகவோ, மற்றவரை வரம்பு மீறி தாக்கினால் தந்தை பெரியார் கண்டிக்கத் தயங்குவதே இல்லை. ஒரு சம்பவம் பற்றிய குறிப்பு:
“தமிழர் தலைவர்’’ புத்தகத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பார்ப்பனரிடம் கடுமையாக விவாதித்த பூவாளூர் பொன்னம்பலனாரைத் தடுத்து, பொறுமையாக பதில் சொல்லச் சொன்னவர் பெரியார் _ தாடியில்லாத காலமாக இருக்கலாம் _ பெரியாரைத் தெரியாத அந்த பார்ப்பனர், ‘அய்யா இவர்களெல்லாம் அந்த இராமசாமி நாயக்கன் கூட்டம்; இப்படித்தான் பேசுவார்கள்’ என்றதும் பக்கத்திலிருந்தது பெரியார் சிரிப்பை அடக்கிக் கொண்டார். பிறகு கழிப்பறைக்கு எழுந்து சென்ற நிலையில், பக்கத்தில் உள்ள சில பயணிகள், என்னய்யா நீங்க இப்படிச் சொன்னீங்க, அவர்தான் இராமசாமி நாயக்கர் என்றவுடன் அந்தப் பார்ப்பனர் அதிர்ந்து பிறகு பெரியார் பற்றி விரைந்து வருத்தம் தெரிவித்தார். இது அய்யா விஷயத்தில் அதிசயமானது அல்ல.
கேள்வி : மதவாதிகள் தங்கள் பக்தர்கள் மூலம் மதப் பரப்புரை பலவழிகளில் செய்வதுபோல, தி.க. தொண்டர்கள் ஏன் செய்யக் கூடாது? திட்டம் வகுப்பீர்களா? – நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்
பதில் : செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் தெருமுனைப் பிரச்சாரத்தை, கிராமப் பிரச்சாரத்தை வலுவுடன் செய்யவும் முனைவோம். தங்களது ஆலோசனைக்கு நன்றி.
கேள்வி : மத்திய அரசின் விருதுகளை பெற்றவர்கள் அரசிடமே திருப்பித் தருவது அரசுக்கு அவமானமா? அல்லது மத இணக்கத்தைக் கைவிட்டு, மதவெறியில் செல்லும் பா.ஜ.க. ஆட்சிக்குக் கண்டனமா?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில் : இரண்டும்தான்.
கேள்வி : “சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்று எந்தத் திருமணச் சட்டமும் இல்லை. இந்துத் திருமணச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தந்தான்!’’ என்று தமிழ்த் தேசியவாதிகள் கூறுவது சரியா?
– மா.ரமேஷ், பட்டாளம்
பதில் : சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்து, முந்தைய சுயமரியாதைத் திருமணங்களையும் செல்லு-படியாக்கி, அவர்களுக்குப் பிறந்த பிள்ளை-களுக்கு தேவடியாள் மகன்கள், மகள்கள் என்ற இழிவைத் துடைத்தெறிய எளிய வழிமுறை _ மத்திய சட்டமான இந்து திருமணச் சட்டத்திற்கு ஒரு மாநிலத் திருத்தம் மூலம் எளிதாகவும் _ விரைந்தும் அண்ணாவின் தி.மு.க. ஆட்சி செய்த சாதனை இது.
இந்துப் பெண்களுக்குச் சம சொத்துரிமை தரும் சட்டம் _ திருத்தம் அந்தப் பெயரைக் கொண்டது போலத்தான் இதுவும்.
சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம்தான் முக்கியம். உளறுகின்றவர்-களுக்கு இந்த விளக்கமே போதும்!
கேள்வி : வெள்ளநிவாரணப் பணிகள், உதவிகள் செய்வதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதோடு, அனைத்துக் கட்சிகளையும் புறக்கணித்து, ஒருங்கிணைப்பின்றி செயல்-பாடுகளை மேற்கொள்வது மக்கள் விரோத செயல் அல்லவா? இந்தப் போக்கை மாற்ற வழியென்ன?
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம்
பதில் : வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம்தான்! வேறு வழி எதுவும் தென்படவில்லையே! 4½ ஆண்டில் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டமும் அரசு கூட்டியதே இல்லை என்பது உண்மையல்லவா?
கேள்வி : வெள்ளப் பாதிப்புக்குட்பட்ட மாவட்ட மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாய் அறிவிக்கச் சொல்லும் பா.ம.க. நிறுவனர் கோரிக்கை சரியானதா?
– சு.குணசேகரன், கருங்குழி
பதில் : வெள்ளம் பாதிக்காத மாணவர்கள் உடனே கேட்பார்களே, நாங்கள் மட்டும் ஏன் பரிட்சை எழுத வேண்டும் என்று? விந்தையான கருத்து!
கேள்வி : மனிதம் மலர்ந்து மணம் வீசும் இளைஞர்களை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்போது காண முடிகிறது. இப்படிப்பட்ட இளைஞர்-களில் சிலர் கூலிக்குக் கொலை செய்வதை தொழிலாகக் கொள்வது ஏன்? அவர்களைச் சரியான தடத்தில் செலுத்த வழி என்ன?
– பா.வேல்முருகன், வந்தவாசி
பதில் : பகுத்தறிவுப் பிரச்சாத்துடன் ஆக்கப்பூர்வ பணிகளை அவர்களுக்கு அளித்தால் அவர்களால் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் கோடி நன்மை உண்டாகும்.
கேள்வி : அமெரிக்காவில் முஸ்லீம்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வேட்பாளர் டொனால்டு டிராம்ப் வற்புறுத்துவது முறையா?
– தீ.கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனம்
பதில் : அமெரிக்காவே ‘வந்தேறிகள் நாடு’ ‘A Nation of Immigrants’ என்று பெயர் பெற்றது. இதில் இப்படிப்பட்ட கிறுக்கர்களும் _ வெறியர்களும் இருப்பது விசித்திரமாக உள்ளது. ரிபப்ளிக்கன் கட்சியிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலோ?
கேள்வி : வெள்ள நீர்புகுந்து மக்கள் தவிக்கும் நிலையில், நிலை சீரடைய கடவுளுக்கு பூசை, யாகம் செய்வது பைத்தியக்-காரத்தனம் அல்லவா? கடவுள் வெள்ளத்தையே தடுத்திருக்கலாம் அல்லவா?
– வே.தட்சிணாமூர்த்தி, விழுப்புரம்
பதில் : வெள்ளத்தை அனுப்பி பக்தர்-களையும் இப்படி சோதனைக்கு ஆளாக்கிய கடவுள் _ கருணையே வடிவானவனா? எல்லாம் கடவுள் செயல் என்றால் மழை _ வெள்ளம் _ அவதி எவன் செயல்? சிந்தியுங்கள்! புரட்டு விளங்கும்.