அய்யாவின் அடிச்சுவட்டில்….144 – கி.வீரமணி
தந்தை பெரியார் நூற்றாண்டு விழா திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பிறகு, மாவட்டங்களில் விழா நடத்த வேண்டும் என்ற திட்டப்படி திருச்சியிலே 18.02.1979 அன்று நடைபெற்ற அய்யா நூற்றாண்டு விழா ஊர்வலம் ஒரு புதிய வரலாற்றை அன்றைக்கு படைத்தது என்றால் அது மிகையாகாது.
இந்த விழாவில் தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியன் அவர்களும் கலந்துகொண்டனர். விழாவின் முதல் நிகழ்வாக, திருச்சி திராவிடர் கழக செயலாளர் கே.கே.பொன்னப்பா அவர்கள் தலைமையில் ஊர்வலம் தொடங்கியது. தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் பத்து அலங்கார வண்டிகள் ஊர்வலத்தின் சிறப்புமிகு மணிமகுடமாக திகழ்ந்தன.
இந்த ஊர்வலத்தில் என்னை அலங்கார வண்டியில் அமரவைத்து அழைத்து வந்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் நினைவு கூறுகின்றேன். ஊர்வலம் தந்தை பெரியார் சிலை அருகே வந்தபொழுது, அப்பொழுது நூற்றாண்டு விழா நினைவாக தந்தை பெரியார் அவர்களின் சிலை முகப்பிலே இரண்டு கல்வெட்டுகள் திறக்க ஏற்பாடாகியிருந்தது. வலதுபுரம் ஆத்மா மறுப்பும், இடது புறத்திலே கடவுள் மறுப்பும் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டு இருந்தன.
நான், தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மலர்மாலை சூட்டி, கடவுள், ஆத்மா மறுப்பு முழக்கங்களுக்கிடையே கல்வெட்டுகளையும் திறந்து வைத்தேன். பிறகு, கடல்போல் திரண்டு இருந்த மக்கள் பரப்புக்கு முன்னே நான் சிறப்புரையாற்றினேன்.
திருச்சி நமது இயக்கத்திற்கு முக்கிய நகரமாகும். தந்தை பெரியார் அவர்கள் தலைமை இடமாகக் கொண்டு பணியாற்றிய இடமாகும்.
அது மட்டுமல்ல, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தையைப் பிரிந்து சென்ற தனயர்கள், இதே திருச்சியில்தான் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள்.
ஆம். அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்றதும் நேராக ராஜ்பவனத்திற்குச் செல்லவில்லை. தந்தை பெரியார் இருக்கும் திருச்சியை நோக்கித்தான் வந்தார்கள். அது நமக்கு ஒரு நல்ல திருப்பமாகும். ‘அண்ணா எங்கோ வந்துவிட்டார் _ அவரை நாம் சுவீகரித்துக் கொண்டுவிடலாம் என்று கணக்குப்போட்டுக் கொண்டிருந்த ஆரியத்துக்குச் சரியான ஏமாற்றமும், அதிர்ச்சியும் கிடைத்தது.
திருச்சியிலே தந்தை பெரியார் சிலை திறப்பு! முதல்வர் அண்ணா அவர்கள் காலையிலே பெரியார் மாளிகைக்கு வந்து அய்யா அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார். ‘அண்ணா’ அவர்கள் அணிவித்த அந்த மாலையை அய்யா அவர்கள் அண்ணா கழுத்தில் “வாடாமாலை’’யாக இதைச் சூட்டுகிறேன் என்றார். நான் அருகில் இருந்து கண்டவன் என்ற பூரிப்பு எனக்குண்டு.
இந்த நிலையைக் கண்டு எதிரிகள் கலங்கினர்; நாமோ பெரிதும் மகிழ்ந்தோம்.
அன்று தொடங்கிய உறவு இன்று வரை நிலைத்து நிற்கிறது. தி.மு.க.வோடு இருந்த, பதவிகளில் பங்கு போட்ட ‘தோழமைக்’ கட்சிகள் எல்லாம் இன்று எங்கோ போய்விட்டனர்! சோதனைக் காலத்திலும் கொள்கை உணர்வோடு தி.மு.க.வுக்கு நேசக்கரம் நீட்டிக்கொண்டு இருப்பது திராவிடர் கழகம்தான். தந்தை பெரியார் போட்டுத் தந்த பாதை இது!
அய்யா, அம்மா ஆகியோர் மறைந்துவிட்ட இக்காலக்கட்டத்தில் தி.மு.க. கறுப்புச் சட்டையை மீண்டும் போட்டுக் கொள்ளும் ஒரு நிலைமை ஏற்பட்டது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
தி.மு.க. தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் உட்பட தோழர்கள் அனைவரும் கறுப்புச்சட்டை அணிந்திருந்த அக்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை! காரணம் நான் அப்பொழுது மலேசியாவில் இருந்தேன்.
பேராசிரியர் கறுப்புச் சட்டை அணிந்திருந்ததைப் பார்த்திருந்தால், அவரே தி.மு.க. கலர்போல் காட்சி அளித்திருந்திருப்பார்.
அண்மையில் ஒரு பத்திரிகை குறிப்பிட்டு இருந்தது. ‘தி.மு.க. எங்கே போகிறது தெரியுமா? தி.க. நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது’ என்று எழுதி இருந்தது.
இதில் என்ன ஆச்சரியம் என்றே எனக்கு விளங்கவில்லை. தி.க. தாய்வீடுதானே! தாய்வீடு நோக்கி சேய்கள் போவதில் என்ன தவறு இருக்க முடியும்? யார் யார் எல்லாமோ எங்கேயோ போய்க் கொண்டு இருக்கும் காட்சியைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.
இனி நம்முடைய திட்டங்கள் எல்லாம் வெறும் செயல்பாடுகளாக இருக்க வேண்டும். அதிகம் பேசிக்கொண்டு இருப்பதில் பயன் இல்லை. தந்தை பெரியார் அவர்கட்கு விழா எடுப்பதுகூட வேடிக்கை, கேளிக்கை நோக்குக்காக அல்ல. கொள்கைப் பிரச்சாரத்திற்கு ஒரு நல்ல வழியாக விழாவை நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
நான் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்குச் சென்றபொழுது அங்குள்ள தோழர்கள் எல்லாம் என்னிடம் சொன்னார்கள். ‘தாய்நாட்டில் தமிழர்கள் எந்த அளவுக்கு மரியாதையோடு, சுயமரியாதையோடு சுயநிர்ணயத்தோடு இருக்கிறீர்களோ அதே அளவுக்குத்தான் எங்களுக்கும் இங்கு மரியாதை’ என்று குறிப்பிட்டார்கள்.
அவர்கள் கூறியதற்கு ஆழமான பொருளுண்டு. சிந்திக்க சிந்திக்கத்தான் அதனுள் அடங்கியிருக்கும் பொருள் விளங்கும். திராவிடர் கழகம் ஒரு தற்கொலைப் பட்டாளமாகும். தந்தை பெரியார் அவர்கள் அதை அப்படித்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தில் தனது உடலிலே குண்டுகளை கட்டிக்கொண்டு யுத்தக் கப்பலிலே குதித்து யுத்தக் கப்பலை அழித்து தானும் அழிந்ததுபோல, திராவிடர் கழகத் தொண்டனும் அந்த நிலைக்குத் தயாராகவே உள்ளான். அதற்குமேல் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை என்றே கருதுகிறேன்.
எந்தத் தியாகத்திற்கும் தயாராக உள்ள இளைஞர்கள் இயக்கத்தில் ஏராளமாக உள்ளனர்; ஏராளமானவர்கள் வந்து கொண்டும் இருக்கின்றனர். இளைஞர்கள் என்று நான் குறிப்பிடும்பொழுது வயதின் அடிப்படையில் குறிப்பிடவில்லை _ உணர்வின் அடிப்படையில்-தான் குறிப்பிடுகின்றேன்.
தந்தை பெரியார் அவர்கள் 95 வயது முதிர்ந்த இளைஞராகச் செயல்பட்டவர். இன்னும்கூட மதுரை வாடிப்பட்டி எஸ்.சுப்பையா, திருச்சி டி.டி.வீரப்பா போன்றவர்கள் எல்லாம் “வயது முதிர்ந்த இளைஞர்களாக’’ இயக்கத்தின் தீவிரத்தோடு இருந்து வருகின்றனர். இனியும் நாம் எவ்வளவு காலத்திற்குப் பேசிகொண்டே இருப்பது? வெளிநாட்டில் உள்ளவர்கள் நம்மைப் பற்றிக் கூறும் கருத்து ‘தமிழர்கள் எல்லாம் வாய்ப் பேச்சு வீரர்கள்!’ என்பதாகும். அந்தப் பழிச்சொல்லை நாம் மாற்றி அமைத்தாக வேண்டும்.
தந்தை பெரியார் கொடுத்துச் சென்றுள்ள மருந்து நோய் மூலம்நாடித் தாக்கும் மாமருந்தாகும். அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடுவார் “தந்தை பெரியாரின் போர்முறை மூலபலத்தை நாடித் தாக்குவதுதான்’’ என்று குறிப்பிடுவார்!
இன்று இந்தியா முழுவதும் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்கக் கூட்டத்தை எதிர்த்துத் துவங்கிய போர், இப்பொழுது வடக்கே எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு முதலமைச்சரைக் கத்தியால் குத்தி இருக்கிறார்கள்.
‘சூத்திரர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் நாலாந்தர அரசுதான் இந்த அரசு’ என்று சட்டமன்றத்திலேயே பிரகடனப்படுத்திய கலைஞரை நோக்கி உளி வீசப்படுகிறது! இவற்றை எல்லாம் ஏதோ ஒரு தனிநபர் செயல்என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது!
மனுதர்மம் கூறுகிறது பார்ப்பனர்கள் தங்களது ‘தர்மத்தைக்’ காப்பாற்றிக் கொள்வதற்காக தண்டத்தை அதாவது பலாத்காரத்தைப் பிரயோகிக்கலாம் என்று மனுதர்மம் கூறுகிறது. அந்த முறையிலே பார்ப்பனர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
அவர்களைச் சந்திக்க நாம் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். நான் இப்படிக் கூறும்பொழுது வன்முறையைத் தூண்டுகிறேன் என்று பொருளல்ல. தற்காப்புக்காக நாம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
திராவிடர் கழகத் தோழர்களே! ஆத்தூர் தீர்மானப்படி ஒவ்வொருவரும் தற்காப்புக்காகக் கத்தி வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் குத்துவதற்காக அல்ல; யாராலும் குத்துப்படக் கூடாது; அதுவும் முதுகில் குத்துப்படக் கூடாது என்பதற்காகச் சொல்லுகிறேன்.
ஜாதி ஒழிப்பு என்பது வெறும் பேச்சால் நடக்காது. ஜாதியை ஒழிக்க அரசியல் சட்டத்தைத் திருத்து என்றால் தேசத் துரோகம் என்கிறார்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் முதலில் இந்த தேசாபிமானம் என்பதை முறியடிக்க வேண்டும் என்பார்கள். முதலில் மனிதனுக்குத் தேவையானது மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்துக்குத் தேவையானது மானாபிமானம் என்றார் தந்தை பெரியார்.
திராவிடர் கழகம் மட்டுமல்ல, ஜாதி ஒழிய வேண்டும், பகுத்தறிவு வளர வேண்டும் என்று கருதுகிற எல்லா அமைப்புக்களையும் சேர்ந்த இளைஞர்களும் அய்யா நூற்றாண்டு விழாவில் ஒரு பெரும் சக்தியாக உருவாக வேண்டும். அவர்கள் எல்லாம் தங்கள் பட்டியலை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்க முன்வர வேண்டும்.
இது ஒன்றும் செத்தக் குதிரை அல்ல; உணர்ச்சி உள்ள போர்க்குதிரை என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும். அய்யா வாழ்ந்த மண்ணிலே சூளுரை ஒன்று நாம் எடுப்போம்! அய்யா அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை எந்த விலை கொடுத்தும் முடிப்போம்! என்று சூளுரையை எடுத்துக் கூறினேன்.
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் எம்.ஏ. அவர்கள் அன்று உரையாற்றுகையில்,
திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகிய வீரமணியை தோழர் வீரமணி என்று அழைப்பதைவிட தம்பி வீரமணி என்று அழைப்பது பொருத்தம் என்று கருதுகிறேன். அதே நேரத்தில் அவர் தாய்க் கழகத்தின் பொதுச் செயலாளர். நானோ சேய்க் கழகத்தின் பொதுச்செயலாளர். எனவே, தம்பி என்று அழைக்கத் தயங்க வேண்டியிருக்கிறது.
வீரமணி பன்னிரெண்டு வயது இருக்கும்-பொழுது, மேசை மீது ஏற்றப்பட்டு சிறுவன் வீரமணி பேசியதை நான் கேட்டு மகிழ்ந்ததுண்டு. அப்பொழுது நான் திராவிடர் கழகத்தின் சொற்பொழிவாளன்.
அந்தச் “சிறுவன் வீரமணி’’ இன்றைய தினம் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்று இருக்கிறார்!
தந்தை பெரியார் அவர்களிடத்தில் வீரமணி பெற்ற சரியான பயிற்சியும், அதனால் அவர் பெற்ற உறுதியும், வழக்கறிஞர் என்ற நிலையில் உள்ள ஆற்றலும், திராவிடர் கழகத்தினைச் சரியாக வழிநடத்தும் சக்தியை அவருக்கு அளித்துள்ளன.
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் செல்வமாக இன்றைய தினம் வீரமணி திகழ்கிறார்! வீரமணியை யாரும் ஏமாற்ற முடியாது என்று எனக்குத் தெரியும். காரணம், அவர் எளிதில் கோபப்பட மாட்டார். அத்தகைய ஒரு நல்ல தலைமையின் கீழ் திராவிடர் கழகம் இயங்குகிறது பற்றி உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நான் இன்றைய தினம் வெள்ளைச் சட்டையைப் போட்டுக்கொண்டு உங்கள் முன்னிலையில் நிற்கிறேன் என்றால், நான் பெரியார் கொள்கைக்கு அப்பாற்பட்டவன் என்று பொருளல்ல. அய்ந்தாறு ஆண்டு காலம் கறுப்புச்சட்டையைப் போட்டவன்தான்; மேடைகளில் ஏறித் திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பறைசாற்றியவன்தான்.
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளில் நாம் உறுதியோடு இருக்கும்வரைதான் நமக்கு எதிர்காலம் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
யாரும் வாழாத அளவுக்கு வாழ்ந்தவர் பெரியார்; மக்கள் குருதியோடு கலக்கும் அளவுக்கு வாழ்ந்தவர்; இந்த சமுதாயத்தின் உணர்வுகளில் எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
தந்தை பெரியார் அவர்களின் கருத்தை ஏற்காதவர்கள் _ ஏற்க மறுப்பவர்கள் எவரும் கிடையாது. ஏற்கும் அளவில்வித்தியாசம் இருக்கலாமே தவிர, முழுவதுமாகப் பெரியார் அவர்களை எவரும் புறக்கணித்துவிட முடியாது. பார்ப்பனர்களேகூட பெரியாரவர்களின் கருத்தை ஏற்கவேண்டிய நிலை உண்டு. விதவையான பார்ப்பனப் பெண்கள் மறுமணம் புரிந்து கொள்கிறார்கள் என்றால் அது பெரியாரின் கொள்கைதானே!
ஏழ்மை நிலையில் உள்ள பார்ப்பனர், தங்கள் வீட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும்பொழுது வரதட்சணை கொடுமைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் கண்டிப்பாகப் பெரியார் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டு தீர வேண்டியவர்களாகிறார்கள்.
பார்ப்பனர்களை நாம் எல்லாம் உச்சிக் குடுமிகள் என்று அழைத்த காலம் உண்டு. இன்றைய தினம் உச்சிக்குடுமி மறைந்து, கிராப்பு முளைத்தவிட்டது. இந்த வடிவ மாற்றத்தை வைத்துக்கொண்டு நாம் ஏமாந்து விடக்கூடாது; எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்.
இந்த நாட்டிலே பெரியாரை மறுத்து எவரும் வாழ முடியாது. பெரியாரின் கருத்துக்கு மாறுபாடான ராஜாஜி அவர்களேகூட, பெரியாரைப் பற்றிச் சொல்லும்பொழுது என்ன சொன்னார்? ஆண்டவன்தான் பெரியாரை உண்டாக்கி இப்படி எல்லாம் பேசச் சொல்லி இருக்கின்றான் என்றார். தான் நம்பும் ஆண்டவன்தான் பெரியாரை உண்டாக்கினான் என்று சொன்னால்தான் ஆச்சாரியரேகூட வாழமுடிகிறது. பெரியாரைத் தவிர்த்தோ, மறுத்தோ இந்த நாட்டில் யாரும் வாழ முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இளமை முதற்கொண்டே சுயமரியாதை உணர்வு கொண்டவராக சுயசிந்தனையாளராக தந்தை பெரியார் வளர்ந்தார்.
தேசீய இயக்கமானாலும் சரி, கதர் இயக்கமானாலும் சரி தந்தை பெரியார் அவர்களின் முத்திரை அவற்றில் ஆழமாகப் பதிந்தது. தமிழ்நாட்டில் நாயுடு, நாயக்கர், முதலியார் என்றால்அவர்களை அறியாதவர்கள் யாரும் இல்லை.
காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தபொழுதே சேரன்மாதேவி குருகுலத்தில் நடைபெற்ற ஜாதி வேற்றுமையைக் கண்டு எதிர்த்துப் போர்க்குரல் கொடுத்தார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும்-பொழுதே, வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தினார். தன் இலட்சியத்திற்குக் காங்கிரஸ் ஒத்துவராது என்று கருதியபொழுது, அந்தக் காங்கிரசையே உதறித்தள்ளினார்.
தந்தை பெரியார் துவக்கிய ‘குடிஅரசு’ ஏடு நாட்டு மக்களிடத்திலே நல்ல தெளிவை உண்டாக்கியது. அழுத்தப்பட்டுக் கிடந்த மக்களிடத்திலே சுயமரியாதை உணர்வை ஊட்டுவதில் ‘குடிஅரசு’ வெற்றிபெற்றது!
பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கமாக வைதீகத்தை எதிர்க்கும் இயக்கமாக, சீர்திருத்த இயக்கமாக, தன்மான இயக்கமாக தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் திகழ்ந்தது.
தந்தை பெரியார் பெற்ற அறிவு எந்த மேல்நாட்டு அறிஞர்களின் அறிக்கைகளைப் படித்துப் பெற்ற அறிவல்ல வேறு எந்த மனிதருடைய, அறிஞருடைய கருத்துக்களை ஏற்று, தந்தை பெரியார் அவர்கள் எந்தக் கருத்தையும் சொன்னது கிடையவே கிடையாது.
அவருடைய சிந்தனை எல்லாம் சுயசிந்தனை. தன்னையே கல்விக்கூடமாக, பல்கலைக்கழகமாக ஆக்கிக் கொண்டு வளர்ந்த சிந்தனை அது!
அநீதிகளை பார்க்கும்பொழுது கொந்தளிக்கும் கடலாக அவர் குமுறி எழுந்தார்! அநீதிகளுக்குப் பக்கபலமாக வைதீகம் வந்தபொழுது அதனைக் கடுமையாகச் சாடினார், சாத்திரங்கள் வந்தபொழுது வேகமாக எதிர்த்தார். அவை அத்தனைக்கும் ஆதாரமாகக் கடவுளைக் காட்டி வந்தபொழுது, கடவுளின் மீதும் கைவைத்தார்.
மக்களைக் கடவுள்தான் படைத்தார் என்றால் நான்கு வருணங்களையும் அவர்தான் உண்டாக்கினார் என்றால், அந்த நான்கு வருணங்களையும் ஏன் அமெரிக்காவில் அந்தக் கடவுள் உண்டாக்கவில்லை என்று கேள்வி கேட்டார். கடவுளுக்குக்கூட இளித்தவாய் நாடாக இருப்பது இந்நாடுதானா என்று கேட்டார்.
எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் மூலகாரணமாக இருக்கும் கடவுளை பெரியார் ஒழிக்க முன்வந்தார். ‘கடவுளுக்கும் எனக்கும் என்ன தனிப்பட்ட தகராறா… நான் சாப்பிடும் சாப்பாட்டை அவர் தடுத்தாரா? கடவுள் என்ற கற்பனையை எவனோ ஒரு மடையன் கற்பித்தான். அந்தக் கற்பனையை நம்புவதால் கடவுள் பெயரால் ஒரு கூட்டம் நம்மை ஏமாற்றிப் பிழைக்கிறது’ என்று கூறி பெரியார் மக்களைத் திருத்த முற்பட்டார்.
கடவுள் இல்லை என்று சொல்லி மக்களைத் திருத்த இந்த நாட்டில் பெரியார் ஒருவரால்தான் முடியும் என்னால்முடியாது; காரணம் நான் கூப்பிட்டால் நாலு பேர் வரவேண்டும். எதற்கு வரவேண்டும் என்று என்னை கேட்காதீர்கள். அப்படிக் கூப்பிட்டால் நாலுபேர் வரவேண்டியதும் அவசியம்தான் என்பதை நாடு இருக்கும். இன்றைய நிலையில் நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்குச் சென்றார் என்றால் பெரியார் அவர்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல. தந்தை பெரியார் அவர்களின் சமுதாயக் கருத்துக்கள் வெற்றி பெற ஒரு நல்ல அரசியல் கட்சித் தேவை என்பதை அண்ணா உணர்ந்தார். அய்யாவுக்கும், அண்ணாவுக்கும் அடிப்படைக் கருத்தில் முரண்பாடு கிடையாது. ‘என் வாழ்நாளிலேயே நான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்!’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் பலமுறை சொல்லி இருக்கிறார். திராவிடர் கழகம் வாள் என்றால் தி.மு.க. கேடயமாகவும், திராவிடர் கழகம் கேடயம் என்றால் தி.மு.க. வாளாகவும் இருக்கும் என்று அண்ணா சொல்லி இருக்கிறார்.
ஒரு அரசியல் கட்சிகூட ஒரு இனத்தலைவனைக் காட்டித்தான் வாழவேண்டும். அத்தகைய இனத்தலைவராக பெரியாரைத்தான் அண்ணா ஏற்றார்.
கிரேக்க நாட்டில்கூட இந்த நாட்டில் இருந்த அளவுக்கு மூடநம்பிக்கை இருந்தது என்று கூற முடியாது. சாக்ரட்டீஸ் அந்தக் காலத்தில் கூறிய கருத்துக்களையும் கூட அவ்வளவு புரட்சிகரமான கருத்துக்களாகக் கருத முடியாது. மார்ட்டின் லூதர்கூட மதத்தை முற்றிலுமாக எதிர்த்தவர் அல்ல -_ அவர் ஒரு மத சீர்திருத்தவாதி என்கிற அளவுக்குக் கொள்ளலாம் _ அவ்வளவு£ன்!
ஆனால், பெரியார் போராட வேண்டி இருந்த இந்த சமுதாயத்தைப்போல், நாட்டைப்போல் பிற்போக்கான சமுதாயமும், நாடும் உலகில் இல்லை. பெரியார்போல முற்போக்கான கருத்துக்களைச் சொன்ன தலைவரும் உலகில் இல்லை. கிணற்றில் இருந்த நீர் மட்டும் நச்சு நீரல்ல; அதற்கு மேல் உள்ள காற்றும் நச்சு. அத்தகைய கிணற்றிலே பெரியார் மூழ்கி மூழ்கி எழவேண்டிய நிலை இங்கு இருந்தது!
திராவிடர் கழக மேடையின் கருத்துக்கள் வித்து என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துக்கள் நாற்று என்று பொருள். திராவிடர் கழகம் ஏர் உழுகிறது என்றால் தி.மு.க. நீர்பாய்ச்சும், திராவிடர் கழகம் பயிரிட்டால் தி.மு.க. அதனை அறுவடை செய்யும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் பணிகளைப் பகிர்ந்து கொண்டு செயல்படுகிறது.
என்றென்றும் இருந்து தீரவேண்டிய இயக்கம் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம் மனித சமுதாயத்திற்கே என்றென்றும் பயன்படும் இயக்கமாக திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கம் இருக்கின்றது.
கருப்புச் சட்டைத் தோழர்களைக் குறிப்பிடும்பொழுது, அதை ஒரு தற்கொலைப் பட்டாளம் என்று வீரமணி குறிப்பிட்டார். அது முற்றிலும் உண்மையாகும். இந்த சமுதாயத்தைக் காக்கும் உண்மையான படை அது. திராவிடர் கழகத் தோழர்கள் அணிந்துகொண்டு இருக்கும் கருப்புச் சட்டை பெரியார் சொன்ன இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும் உணர்வை ஊட்டக்கூடியது.
மக்கள் சமுதாயத்திலே பகுத்தறிவுச் சிந்தனை மலர, சுயமரியாதை உணர்வு தொடர்ந்து ஊட்டப்பட திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் என்றென்றைக்கும் தாய் _ சேய் கட்சிகளாக, தோழமை உணர்வோடு பணியாற்றும் என்று உறுதியாக தந்தை பெரியார் நூற்றாண்டு விழா மேடை வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
விழாவில், ‘ஜனசக்தி’ ஆசிரியர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றும்போது, அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையே மூச்சு நிற்கும் வரை அயராப் பணியாற்றியவர் பெரியார். அவருடைய உழைப்புக்கும் தொண்டுக்கும் ஏற்ற வகையில் நாம் நமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு விட்டோமா? என்ற கேள்வியை நமக்குள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டு, இனி நாம் ஆற்ற வேண்டிய பணியையும் கணக்கிடுவோம்.
பெரியார் மட்டும் இங்கு பிறந்திருக்கா-விட்டால் தமிழகமும் 1979இல் பீகாரைத்தான் சந்திக்கும்படியாக இருந்திருக்கும்! இந்த ஒன்றுக்காவது தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டவனும் பெரியாரை நன்றியோடு நினைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அரசியல் கட்சிகளால், பல்கலைக்கழகங்களால் செய்ய முடியாததை பெரியார் செய்தார் -_ திராவிடர் கழகம் செய்தது. இன்றும் செய்து வருகின்றது. எல்லாக் கட்சிகளிலும் உள்ள பகுத்தறிவாளர்களுக்கும் பொதுவான இயக்கம் திராவிடர் கழகம். இது அவசியம் தேவையான இயக்கமாகும் என்று குறிப்பிட்டு பெரியார் அவர்கள் தொண்டுக்கும், உழைப்புக்கும் ஏற்ற வகையில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறி விடைபெற்றார்.
விழாவிற்கு ஏராளமான கழக தோழியர்கள் குடும்பம் குடும்பமாகவும், தோழர்கள், தி.மு.க. தோழர்களும், பெருந்திரளாக பொதுமக்களும் பங்கேற்று அய்யா அவர்களின் கொள்கை தொண்டிற்கு நன்றிக்கடன் ஆற்றும் அளவிற்கு கூடியிருந்தார்கள் என்பது என்றும் பசுமை மாறா நினைவாகும்.
(நினைவுகள் நீளும்)