16.9.1927 அன்று தஞ்சையில் காந்தியை நீதிக்கட்சித் தலைவர்கள் சந்திக்கையில்,
கே.நடராஜன் தாயாரான வயதான அம்மையாரும் காந்திஜியைப் பார்க்க வந்தபோது அண்ணல் அவரை அன்போடு வரவேற்று, பெண்கள் கட்டிக்கொள்ளத்தக்க மெல்லிய புடவைகள் கதரில் இருப்பதாகச் சொன்னார். நீதிக்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது இருதரப்பினருக்குமே நல்லதாகப் போயிற்று. காந்திஜியின் தரப்பை அவர்களும், அவர்கள் தரப்பை காந்திஜியும் அதிகம் புரிந்துகொள்ள இந்தச் சந்திப்பு உதவியது.
நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்-செல்வமும் உமா மகேசுவரம்பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரையாடல் “சுதேசமித்திரன்’’ இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பதுகூட இப்போது சுவையாக இருக்கும்.
உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணர் -_ பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும்.
மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள்.
பிராமணர் _ பிராமணர் அல்லாதாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைந்து விடும் என்று டாக்டர் வரதராஜூலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிற-தென்றும் என்னைப் போன்றவர்கள் இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒர முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர்களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது, எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டில் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள்.
பன்னீர்செல்வம்: பிராமணர்கள் அதிகாரங்-களையும் உத்தியோகங்களையும் தாங்களே வைத்தக் கொள்கிறார்கள். பிற வகுப்பார் அவைகளை அடைவதற்கு இடமில்லாமற் போய்விடுகிறது.
மகாத்மா: நீங்கள் சொல்வதிலிருந்து அதிகாரங்களையும் உத்தியோகங்களையும் பங்கு போட்டுக் கொள்வதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாய் இருப்பதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு குறிக்கோளுக்கு நான் ஆதரவாயிருக்க முடியாது. பொது மக்களுடைய நன்மையைக் கருதாத எந்த இயக்கத்திலும் எனக்கு அனுதாபம் கிடையாது.
உமா: அதிகாரம் பெறுதல் என்பது பல நோக்கங்களில் ஒன்றாகும். சமூகத் தீமைகளைப் போக்குவதும் மத சம்பந்தமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்பதும் எங்களுடைய மற்ற குறிக்கோள்கள்.
மகாத்மா: உங்கள் இயக்கத்தின் கொள்கையில் மாறுதல் ஏற்பட்டிருப்பது நல்லது. சமய சம்பந்தமான சீர்திருத்தங்கள் செய்வது நோக்கம் என்று கூறுகிறீர்கள். ஆனால், பிற மதத்தினரையும் சேர்த்துக் கொண்டிருக்-கிறீர்களே?
உமா: இந்து சமயத் தலைவர்கள் எங்கள் இயக்கத்தைக் கவனியாதிருந்தபோது, நடந்த வரையில் நடைபெறட்டும் என்று கருதி இந்துக்களல்லாதாரும் இயக்கத்தின் தொடக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பிராமணரல்லாதார் பல வழிகளிலும் பிராமணர்களால் அவமதிக்கப்-பட்டிருக்கிறார்கள். பொது மக்களிடையே இப்போது விழிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மகாத்மா: இப்போது நடைமுறையிலிருக்கும் வர்ணாஸ்ரம தர்மத்தைக் களைந்தெறியலாம். ஆனாலும் அடிப்படையான தத்துவத்தை அழிக்க முற்படலாகாது. பிறப்பினால் மட்டும் ஒரு மனிதன் உயர்ந்தவனாகி விடமாட்டான்.
பன்னீர்: கதர் இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல பிராமணரல்லாதார் உங்களோடு சேர்ந்து வேலை செய்ய இடங் கொடுக்காமல் இராஜகோபாலாச்சாரியார் செய்கிறார் என்ற புகார் இருந்து வருகிறது. எஸ்.இராமநாதன் கதர் இயக்கத்தில் இருக்கிறார் என்பது உண்மையே. ஆனால் அவரையும் வெளியே போகும்படி பிராமணர்கள் செய்து விடுவார்கள். (இவ்வாறு அவர் கூறியபோது ராஜாஜியும் எஸ்.இராமநாதனும் அங்கிருந்தார்கள்.)
மகாத்மா: ஆச்சாரியார் கதர் இயக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். கதர் இயக்கத்திலிருந்து அவருக்குப் பணம் கொடுக்கப்படவில்லை. பஜாஜுக்கு நான் எழுதி அவருக்கு உதவி கொடுக்கும்படி செய்தேன். கதர் இயக்கத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்யக் கூடியவர்கள் வந்தால் ஆச்சாரியாரை விலகிக் கொள்ளச் சொல்கிறேன். நானும் விலகிக் கொள்கிறேன். ஆச்சாரியார் தமது வக்கீல் தொழில், சம்பாத்தியம், பதவி இவைகளையெல்லாம் ஏன் விட்டுவிட்டு வரவேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டாமா?
பன்னீர்செல்வம்: கதர் வேலையைக் காரணமாக வைத்துக் கொண்டு தமக்கும் தம்மைச் சேர்ந்தவருக்கும் செல்வாக்குத் தேட வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். உங்களுடைய பக்கத்தில் இருப்பதால் மக்கள் ஒருவித பிரமையை அடைகிறார்கள். தேர்தல் காலத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ளுதல் வழக்கமாகி விட்டது.
மகாத்மா: ஆச்சாரியார் சம்பந்தப்பட்ட மட்டில் அந்த மாதிரியான நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. கதர் இயக்கத்தில் வேஷக்-காரர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தாலும் அவர்கள் கதர் வேடம்தானே போடுகிறார்கள்? அந்த அளவில் நன்மைதானே?
இந்த உரையாடல், அந்தக் காலத்தில் பிராமணர் அல்லாதார் மத்தியிலிருந்த கருத்தை எடுத்துக்காட்டுகிறது. மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த உரையாடலைப் பற்றி காந்திஜி குறிப்பிட்டார். காந்திஜி சொன்னார்: “இங்குச் சில நண்பர்களுடன் நான் பிராமணர் _ பிராமணரல்லாதார் சிக்கலைக் குறித்து விவாதித்தேன். இந்த வாதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. முன்னைக்காட்டிலும் சற்று நல்ல முறையில் பிராமணரல்லாதார் இயக்கத்தைப் பற்றி இப்போது நான் புரிந்துகொண்டிருக்கிறேன். இந்த வாதத்தின்-போது என்னைப் பற்றி அவர்கள் ஒரு கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அது அவர்கள் மனத்தைத் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது என்பதையும் கண்டேன். பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று நான் கருதுவதாக அவர்கள் எண்ணுகிறார்கள். எல்லா மனிதர்களும் பிறப்பால் சமம் என்பதுதான் என் கருத்து என்பதை அவர்களுக்கு நான் விளக்கினேன்.
ஒரு பிராமணரோ அல்லது யாரோ தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும்போது பிராமணரல்லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்-படுவதற்கு உரியவனல்ல. ஆனால் இந்த நம்பிக்கைகளெல்லாம் எனக்கு இருந்தாலும் வர்ணாஸ்ரம தர்மத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய பெற்றோர்கள், மூதாதையர்கள் ஆகியோரை அனுசரித்த உருவம் எவ்வாறு கிடைக்கிறதோ அதேபோன்று அவர்களுடைய ஆற்றலும் கிடைக்கிறது. இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதன் மூலம் நம்முடைய லோகாயத ஆசைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பெறுகிறது. ஆன்மிக வளர்ச்சிக்கு நம் சக்தி பயன்படுகிறது. இதை நீங்கள் ஒப்புக்கொள்வ-தானால் சமய அடிப்படையில் பிராமணர் _ பிராமணரல்லாதார் சிக்கல் எளிதாகத் தீர்ந்துவிடும். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணனே அல்லன்.
சுமார் ஒரு மணி நேரம் காந்திஜி பேசினார். விஸ்வகர்மாக்கள் அளித்த வேலைப்பாடமைந்த தட்டை அவர் மிகவும் பாராட்டினார். அதை அவர் ஏலத்தில் விட விரும்பவில்லை. “விஸ்வகர்மா நண்பர்களை அவர்களுடைய அழகிய வேலைப்பாட்டிற்காகப் பாராட்டுகிறேன். ஆமதாபாத்திலுள்ள குசராத் வித்யாபீடத்தின் பொருட்காட்சியில் இது வைக்கப்பெறும்’’ என்று அவர் சொன்னார்.
20.9.1927
திருச்சி நகரைச் சேர்ந்த மாணவர்களும் இவ்வாறு ஒரு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தினார்கள். எல்லோரும் திருச்சி தேசியக் கல்லூரியில் கூடி ஒரு கணிசமான தொகையைப் பண முடிப்பாக அளித்தது மட்டுமல்லாமல் சமஸ்கிருதத்திலும் வரவேற்புரையை அளித்து விட்டார்கள். காந்திஜி பேச எழுந்தார். கூட்டத்தில் சமஸ்கிருதம் தெரிந்தவர்களைக் கையைத் தூக்குமாறு கேட்டுக் கொண்டார். வெகு சொற்பப் பேரே தூக்கினார்கள். மிகப் பெரும்பாலோருக்கு சமஸ்கிருதம் தெரியாத போது அந்த மொழியில் வரவேற்புரையைப் படித்து அளித்திருக்க வேண்டியதில்லை என்று அண்ணல் கூறினார். அதே சமயம், மாணவர்கள் அனைவரும் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சமஸ்கிருதத்தில் வரவேற்புரை அளித்தால் காந்திஜி அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பார் என்று வரவேற்றவர்கள் எண்ணினார்கள். விழாவிற்கு வந்திருந்த ஆச்சார்ய காகாகலேல்கார்கூட அவ்வாறு தான் எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு மாறாக காந்திஜி அதை வரவேற்கவில்லை. வருத்தம் தெரிவித்தார். வரவேற்புரையைத் தமிழில் எழுதிவிட்டு, அதன் சாரத்தை இந்தியிலோ சமஸ்கிருதத்திலோ தெரிவித்தருக்கலாம் என்று கூறினார். பின்னர் அக்கூட்டத்தி-லிருந்து திரும்பி வந்தபோது, ‘சமஸ்கிருதத்தின் மீது உங்களுக்குள்ள பிரியம் தெரிந்ததுதானே, அப்படியிருந்தும் சமஸ்கிருத மொழியில் எழுதிய வரவேற்பை நீங்கள் ஏன் விரும்பவில்லை?’’ என்று கலேல்கார் கேட்டார். அதற்கு காந்திஜி சொன்ன பதிலிலிருந்து சமய சந்தர்ப்பங்களை அவர் எவ்வளவு உன்னிப்பாகக் கவனிப்பவர் என்பது தெரிந்தது. காந்திஜி சொன்னார்: “எல்லா வகுப்புகளையும் சேர்ந்த மாணவர்களின் சார்பாக இந்த வரவேற்புரையைப் படித்துக் கொடுத்தார்கள். ஆகையால்அவர்களுக்குப் புரியக்கூடிய மொழியிலே அதைத் தயாரித்திருக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் பிராமணர் -_ பிராமணரல்லாதார் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் எதிரொலியாகத்தான் இந்த வரவேற்புரையை சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கிறார்களோ என்றும் நான் அய்யப்படுகிறேன். அதனால் தான் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.’’
புத்தூர் ஒய்.எம்.சி.ஏ.யில் கிறித்தவர்கள் கூட்டத்திற்குச் சென்றபோது, “கிறித்தவர்களுக்கு நாம் கூறக் கூடிய அறிவுரை என்ன இருக்கிறது?’’ என்று வழியில் யோசித்துக் கொண்டே போனார். கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அதைத்தான் அங்கு போய்க் கூறினார். “கிறித்தவர்களாக இருப்பவர்கள் அந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்-களாய் இருப்பதற்காகத் தங்களுடைய நாட்டை மறந்துவிட வேண்டியதில்லை. மனமார மதம் மாறியவன் தனது தேசிய உணர்வை விசாலப்படுத்திக் கொண்டுபோக வேண்டும்’’ என்றார். (இங்கு ரெவ. சான்போர்டு அவரை வரவேற்றார்.’’)
பிற்பகலில் நகராட்சி மன்றப் பொதுமண்டபத்தில் பெண்கள் கூட்டம். (திருமதி சாமிநாத சாஸ்திரியும், தேவதாசிகளின் சார்பாக குமாரி ஜீவரத்தினமும் வரவேற்புரைகள் கொடுத்தார்கள்.) இங்கு அவர்கள் கூறியிருந்த ஒரு கருத்தை காந்திஜி மறுக்க வேண்டியது அவசியமாகப் போய்விட்டது. தாங்கள் போட்டிருக்கும் நகைகளெல்லாம் சிக்கனமாக வாழ்ந்து கொஞ்சங் கொஞ்சமாக மீத்து வைத்துச் சேர்த்தவை என்று அவர்கள் கூறியிருந்தார்கள். இதை காந்திஜி ஒப்புக்கொள்ளவில்லை. “இவைகளெல்லாம் உங்களுக்குப் பிறரால் கொடுக்கப் பெற்றவை; நீங்கள் உழைத்துச் சம்பாதித்தவையல்ல, அது சீதனமாக வந்ததுதான். ஆகையால் உங்களுடைய ஏழைச் சகோதரிகளுடன் நீங்கள் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என்று கண்டிப்போடு கூறினார்.
22.09.1927
கானாடுகாத்தான் கூட்டத்தில் நகரத்தார்-களுக்குக் கசப்பாகத் தோன்றக்கூடிய தம் கருத்து ஒன்றையும் சொன்னார். “ஆலயங்களை நிர்மாணிப்பதில் நீங்கள் தாராளமாகப் பணத்தைச் செலவிடுகிறீர்கள் என்று அறிகிறேன். ஆலயம் என்று ஒரு கட்டிடத்தைக் கட்டி விட்டதால் மட்டும் கடவுள் அங்கு இருக்கிறார் என்று எண்ணுவது மூடநம்பிக்கை. தாசி வீட்டில் எந்த அளவு இறைவன் இருப்பாரோ அந்த அளவே அவர் இருக்கும் ஆலயங்கள் பலவற்றை நான் அறிவேன். தீண்டத்தகாதாருக்குக் கோவில் கட்டிக் கொடுக்குமாறு சில நண்பர்கள் என்னிடம் பணம் கொடுத்தார்கள். ஒரு புனிதமான மனிதன் கிடைத்தாலொழிய _ அதை நிருவகிக்க நல்ல தர்மகர்த்தாக்கள் கிடைத்தாலொழிய அப்பணத்தை வைத்துக் கோவில் கட்ட நான் மறுத்து விட்டேன்,’’ என்று அவர் கூறினார்.
“விபச்சார விடுதிகளில் ஆண்டவன் எந்த அளவு இருக்கிறாரோ அந்த அளவே அவர் இருக்கக்கூடிய பல கோவில்கள் எனக்குத் தெரியும்’’ என்று காந்திஜி கூறியதற்குத் தமிழகத்தில் வைதிகர்கள் மத்தியில் _ ஏன், வைதிகர்கள் அல்லாதோர் சிலரிடமிருந்தும் _ பின்னால் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. ஸீ