– கி.வீரமணி
விளம்பரத்தை நாடாது வினையாற்றும் தோழர்கள், தொண்டர்களின் பாசறைதான் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம். நெல்லை மாவட்டம் மூலக்காரப்பட்டி என்ற சிற்றூரிலிருந்து (பழைய பம்பாய்) இன்றைய மும்பைக்குச் சென்று ஒரு தொழிலாளியாகப் பணியாற்றிய மானமிகு தோழர் திராவிடன் ஒரு அற்புதமான ஒப்புவமையற்ற முதுபெரும் லட்சிய பெரியார் பெருந்தொண்டர். சுயமரியாதைச் சுடரொளியான சொக்கத்தங்கம்.
எளிமை, ஏழ்மை, இவைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத கறுப்புடைச் சிப்பாய்.
பம்பாய் திராவிடர் கழகத்தின் முன்னோடி-களில் ஒருவர். தொல்காப்பியனார், மந்திரமூர்த்தி, எஸ்.எஸ்.அன்பழகன், ஆர்.ஜெ.சுப்பையா, நெல்லையப்பர், சீர்வரிசை சண்முகநாதன், ஆரிய சங்காரன் (இவர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரம் பாய்ந்த கொள்கை நெஞ்சர்), தி-.மு.க.தியாகராஜன், பொற்கோ போன்ற பலராலும் பெரிதும் பாராட்டப்படும் கொள்கை மாவீரர் திராவிடர் கழகத் தீரர் திராவிடன் அவர்கள். கம்பீரமான தோற்றமும் உயரமும் உடைய கறுப்பு மனிதர். அய்யா, அம்மா, என்னிடம் அவர் காட்டிய அடக்கம் மிகுந்த அன்பும் மரியாதையும் பாசமும் எழுத்தில் வர்ணிக்க முடியாதவை.
கோயில் வரி கட்ட மறுத்தவர். அவரது கிராமமான மூலக்கரைபட்டியில் அவரது தாயார் காலமான நிலையில், அவர் ஒரு கடவுள் மறுப்பாளர் _ நாத்திகர் _ முரட்டுக் கொள்கைவாதி என்பதால் அவ்வூர் இடுகாட்டில் அவரது தாயாரின் சவத்தைப் புதைக்க ஊர்க்காரர்கள் கட்டுப்பாடு காரணமாக மறுத்துவிட்டனர்.
கிறித்துவ இடுகாடும் மறுக்கப்பட்டது! மனங்குலையவில்லை, மன்னிப்புக் கோரவில்லை. உடனடியாக ஒரே நாளில் இடுகாடு அருகில் ஒரு நிலத்தை விலைக்கு வாங்கி அதில் புதைத்தது, கொள்கையைப் புதைக்காது விதைத்த மாவீரன்!
தந்தை பெரியார் முதல் கடலூர் மாணவன் வீரமணி வரை எந்தக் கழகப் பேச்சாளர் பம்பாய் தாராவி திராவிடர் கழகத்தால் அழைக்கப்பட்டு பிரச்சாரத்திற்குச் சென்றாலும், வரவேற்பதிலிருந்து, வழியனுப்பும் வரை அவர்தான் அவர்களது மெய்க்காவலர்போல பணிபுரிவார்.
அவரைப் பற்றி தமிழ் லெமூரியா ஏட்டின் ஆசிரியர் மானமிகு தோழர் குமணராஜன் அவர்களிடம் தகவல் கேட்டபோது அவர், நாங்கள் மாணவச் சிறுவர்களாக இருந்தபோது, சென்னையிலிருந்து கழகத் தலைமையிலிருந்து பெறப்பட்ட சரஸ்வதி பூஜை கொண்டாடலாமா? ஆயுதபூஜை ஏன்? போன்ற சுவரொட்டிகளை பம்பாய் தாராவி மற்ற பகுதிகளில் ஒட்ட எங்களை அழைத்து ஒரு முக்காலி ஸ்டூலை எடுத்துக்கொண்டு பசைச் சட்டியுடன் புறப்படுவார்.
நாங்கள் கூடவே செல்வோம். 4, 5 சுவர்களில் தொடர்ச்சியாக ஒட்டியபிறகு அந்த ஸ்டூலை வேண்டுமென்றே அவர் இறங்கும்போது சரியாகப் பிடிக்காமல் கவிழ்த்து விடுவோம். அவர் விழுந்து தடுமாறுவார். அப்படி அடிபட்டபோதுகூட எங்களுக்கு அவர் கொள்கைப் பிரச்சாரத்தை மகிழ்ச்சியோடு சொல்வார் என்றார்.
ஒருமுறை தாராவியில் நான் பேசிக்-கொண்டிருந்தபோது, (ஆத்தூர் தீர்மானத்தையும் தாண்டி பட்டாக்கத்தி போல வைத்திருப்பார்) ஏதோ ஒரு எதிர்ப்புக்குரல் கேட்டபோது, கத்தியுடன் உணர்ச்சிவயப்பட்டு மேடைமீது ஏறி அறைகூவல் விடுத்தவர் அவர். அது என்னால் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. டார்ப்பிடோ ஏ.பி.ஜெனார்த்தனம் எம்.ஏ., மற்றும் எங்களைப் போன்றவர்களிடம் எப்போதும் மாறாத பாசம் பொழிந்தவர்.
அவரது மூன்று சகோதரர்களும் இல்லை என்று அறிகிறோம். தோழர் ராஜி ரயில்வேயில் இருந்தவர் சென்னையில். அவர் அடிக்கடி பெரியார் திடல் வந்து சந்திப்பார்.
மறைந்தவர்களானாலும் நம் நெஞ்சில் என்றும் நிறைந்த கொள்கை மாவீரர்கள் அவர்கள்! அவர்களை நெஞ்சம் மறப்பதில்லை! நினைவு நீங்குவதில்லை!!