பெரியார் கொள்கையின் இலட்சிய வீரர்…

டிசம்பர் 01-15

பேராசிரியர் க.அன்பழகன்
(பொதுச்செயலாளர் தி.மு.க)

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எனது கெழுதகை நண்பர், தளபதி கி.வீரமணி அவர்களின் அய்ம்பதாம் ஆண்டு நிறைவுப் பொன்விழா மலர் பகுத்தறிவு மாணவர் கழக சார்பில் வெளியிடுவது அறிந்து மகிழ்ச்சி உறுகிறேன்.

அயராத உழைப்பு!

சிறுவனாய், இளைஞனாய் தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கையில் ஆர்வங்கொண்டு, பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி பெற்று, திராவிடர் இயக்கத்தின் இலட்சியத்தில் உறுதி பூண்டு, தடம் மாறாமலும், தளர்வு கொள்ளாமலும், இன்றளவும் அயராது பணியாற்றி வருபவர் தோழர் கி.வீரமணி.

திராவிடமணி தந்த வீரமணி!

நாற்பது ஆண்டுகட்கு முன்னர் நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன். அக்காலத்தில் கடலூரில் வாழ்ந்து திராவிடர் இயக்கப் பணியில் ஈடுபட்டிருந்த நண்பர் திராவிடமணி அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிட என்னை அழைத்திருந்தார். கடலூர் பழைய நகரில் கூட்டம் நடைபெற்றது. நண்பர் திராவிடமணி அவர்கள், அந்தக் கூட்டத்தில் ஒரு பத்து வயது பிள்ளையை மேசை மீது ஏறிநின்று பேசச் செய்தார். தங்கு தடையின்றி அய்யாவின் கொள்கையை அடியொற்றி அந்தப் பிள்ளை பேசக் கேட்டு வியந்தவன் நான். அந்தப் பிள்ளையே _ சிறுவன் வீரமணியாக, நாட்டில் வலம் வந்து தளபதியாக இன்று விளங்குபவர்.

பெரியாருடன் பிணைப்பு!

தமிழ் இனத்தின் விழிப்புக்கு வழிகண்ட தந்தை பெரியாரின் வழித் தோன்றலாக பெரியாரின் தேர்வுகளில் வென்று அவரின் நம்பிக்கையைப் பெற்றவராக, பெரியாரின் கொள்கைக் காவலராக, அவற்றைப் பரப்பும் பொறுப்பினராக, அதற்குரிய தகுதியும் திறமையும், தெளிவும் உறுதியும், ஊக்கமும் முயற்சியும் உடையவராக விளங்குபவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். பெரியாரின் பெருந்தொண்டின் பயன் மங்கி, மறையாது தொடர்ந்து நிலைத்திட _ ஆசிரியர் வீரமணியின் தொண்டு தொடர்ந்தாக வேண்டும்.

பெரியார் ஒரு சகாப்தம்!

தமிழனத்தின் வரலாற்றில் தந்தை பெரியார் அவர்களே _ ஒரு சகாப்தம் என்றார் பேரறிஞர் அண்ணா. இந்த இருபதாம் நூற்றாண்டின் முத்திரை பெரியார் அவர்களின் சிந்தனையினா-லேயே பதிவாகியுள்ளது. இந்த நூற்றாண்டு அவருக்கே கடமைப்பட்டதாகிறது என்பதே அதன் பொருள். இந்த நூற்றாண்டாக விளங்கும் பெரியாரின் பகுத்தறிவு மனப்பான்மை வளர்த்திடும் பணி, சமுதாயத்தின் அனைத்து மக்களிடமும் அறிவொளி படர்ந்து, அறியாமை இருள் விலகி, மூடநம்பிக்கைகள் முறியடிக்கப்பட்டு, புதியதொரு சமுதாயம் வாழ்வும் வடிவும் கொள்ளும் வரையில் தொடர்ந்தாக வேண்டும்.

இலட்சிய நோக்கு!

அப்பணியை தொடருவதற்கு ஏற்றதொரு இளைஞராக, கல்வி நலமும் கருத்துத் தெளிவும் கொண்ட இலட்சியவாதியாக, திரு.வீரமணி விளங்குகிறார் என்பது நம்பிக்கையூட்டுவதாகும்.

தமிழ்ச் சமுதாயம் _ ஓரினமாக வாழும் திறன் இழந்து தலைதாழ்ந்து வீழ்ந்துபோனதற்கான காரணங்கள் பலப்பல. புறப்பகையின் தாக்குதல், அகப்பகையின் விளைவறியாமை, தாழ்வு மனப்பான்மை விளைவிக்கும் எண்ணங்களின் தரக்குறைவு, தன்னல வெறியால் இனநலன் புறக்கணித்த ஏமாளித்தனம் முதலான பலப்பல ஏதுக்களால் தமிழன் என்னும் உணர்வு தாழ்ந்தது, மங்கியது, மடிந்தது. தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர்ந்திட, உரிமை வாழ்வு பெற்றிட, தன்மானமும் வேண்டும், இனமானம் போற்றும் மனமும் வேண்டும்.

தாழ்வு போக்க தன்மானம் வேண்டும்!

தமிழன், தாழ்வு மனப்பான்மை நீங்கிய மனிதனாக விளங்கத் தன்மானம் வேண்டும். தன்மானம் கொண்டிடப் பகுத்தறிவுப் பயிற்சி வேண்டும். வைதீக, சனாதன, வருணாசிரம வடமொழிக் கொள்கைகளின் பொய்மையையும் புரட்டையும் புரிந்த நிலை வேண்டும். மனிதன் எல்லோரும் _ எவரும் பிறவி இழிவுக்கோ, உயர்வுக்கோ உரியவரல்லர் என்னும் உறுதி ஓங்க வேண்டும். ஆணும் பெண்ணுமே அறிவால் சமம், வாழ்க்கை உரிமையில் சமம் _ ஒப்புரிமை உடையார் என்னும் தெளிவு வேண்டும்.

தமிழன் வாழ்வு, தாழ்நிலை எய்தாமல் தடுத்திட, முன்னேற்றம் கண்டிட, வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும், விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும் என்னும் புரட்சிக்கவிஞரின் முழக்கம் நடைமுறையில் வடிவம் பெற, இனமானம் காத்திட வேண்டும். தனிமனிதனுக்குப் பகுத்தறிவு வழியான தன்மானமும், தமிழ் மக்களுக்கு _ இன உணர்வு வழியான இனமானமும் கண்ணொளியாகும்.

தமிழர் என்ற இனவுணர்வு தேவை!

இனவுணர்வு கொண்ட சமுதாயத்தாலேயே _அதன் வீழ்ச்சியையும் மாற்றாரின் சூழ்ச்சியையும் வெல்லும் ஓர் ஆற்றலைப் பெற முடியும்.

இனமானம் காத்திட வேண்டின், அந்த இனத்தின் மீது, எவ்வகை ஆதிக்கமும் _ வேற்றவர் செலுத்தும் நிலை கூடாது. எந்தத் துறையிலும், எவ்வழியாலும் தமிழர் அல்லாதார் தமிழரைத் தம்மவர் என்று மதியாதார். மதிப்பதாகக் கூறினும், மதிக்கும் மனத்தினை இயல்பாகப் பெற்றில்லாதார், பெறவியலாதார் எவரும் தமிழர் வாழ்விற்குப் பொறுப்பேற்கும் நிலைபெறல் ஆகாது. தமிழர்களைத் தமிழர் அல்லாதார் எவ்வகையிலும் ஆளுதல் கூடாது. தமிழரே எனினும் தமிழ் _ உணர்வில்லாத-வரிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கலாகாது.

எனவேதான்,

தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழகத்தில் முதலமைச்சராய் வருதல் வேண்டும் என்றார் புரட்சிக்கவிஞர்.

இரட்டைக்குழல் துப்பாக்கி

அந்த உணர்வு கொண்ட சமுதாயத்தை உருவாக்கிட தன்மான முரசாக முழங்குவது திராவிடர் கழகம். இனமானப் பேரிகையாக முழங்குவது திராவிட முன்னேற்றக் கழகம்.
தமிழ் மக்களிடையே தன்மானமும், இனமானமும் தழைக்கவும், எவ்வகை ஆதிக்கமும் சடசடவெனச் சரியவும், எதேச்சதிகார வெறி சாய்ந்திடவும் _ உரிமை வாழ்வின் தடைகள் அகற்றப்படவும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்-பட்டோர் ஒடுக்க நிலை மாற்றப்படவும் _ ஆசிரியர் வீரமணியின் சிந்தனையும், செயலும், பேச்சும், எழுத்தும், பயன்படுவது கண்டு பாராட்டுகிறேன்.

அய்ம்பதாவது ஆண்டு நிறைந்திட்ட நிலையில் _ இன்னும் நெடும் தொலைவு நடைபோட வேண்டிய இலட்சியப் பயணம் உள்ளதை எண்ணுகிறேன். இலட்சியப் பயணம் வெற்றி பெற _ இன்னும் அய்ம்பதாண்டு திரு.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரைப்-போல முழு வாழ்வு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

வாழ்க வீரமணி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *