– குடந்தய் வய்.மு.கும்பலிங்கன்
சரசுவதி பூஜை கொண்டாடும் நம் நாட்டில் 100-க்கு 50 பேர் தற்குறிகளாக – கை நாட்டுப் பேர் வழிகளாக இருப்பது ஏன்?
சரசுவதி பூஜை கொண்டாடாத மேலை நாடுகளில் நூற்றுக்கு நூறு பேரும் படித்திருக்க -_ கல்வி அறிவு பெற்றிருக்க என்ன காரணம்?
இந்திய நாட்டுக் கல்விக் கடவுள் சரசுவதி என்றால், ஆங்கில நாட்டுக் கல்விக் கடவுள் _- அய்ரோப்பிய நாட்டுக் கல்விக் கடவுள் -_ ஆஸ்திரேலிய நாட்டுக் கல்விக் கடவுள் யாவர்? கடவுள் என்றால் உலகம் முழுவதற்கும்தானே? பின் ஏன் இந்தியாவில் மட்டும்?
ஆத்திகக் கம்பனுக்கும், காளிதாசனுக்கும் நாவிலே அருள் பாலித்தது சரசுவதி என்றால் அகில உலகப் புகழ்பெற்ற நாத்திகத் தந்தை பெரியாருக்கும், புரட்சிக்கவிஞர் பாரதி-தாசனுக்கும், அறிஞர் அண்ணாவுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் நாவிலே அருள் பாலித்தது யார்? அயலக நாத்திக அறிஞர்-களான இங்கர்சாலுக்கும், சாக்ரட்டீசுக்கும், பெட்ரன்ட் ரசலுக்கும், சார்லஸ் பிராட்லாவுக்கும், பெர்னாட்ஷாவுக்கும் நாவிலே அருள்பாலித்தது யார்?
சரசுவதியை வணங்கியே கல்வி, அறிவு பெறலாம் என்றால் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், ஆசிரியர்களும், பாடத் திட்டங்களும், பாடப் புத்தகங்களும், கல்வி அலுவலர்களும், தேர்வு முறைகளும், கல்வி தொடர்பான இன்ன பிற செலவினங்களும் தேவை இல்லையே?
பெற்ற தந்தை பிரம்மனாலேயே பெண்டாளப்-பட்ட (மனைவியாக ஏற்று அனுபவிக்கப்பட்ட) சரசுவதியா நமக்குக் கல்விக் கடவுள்? அந்தக் கடவுளும், கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்குமா? நவராத்திரி தமிழர் விழா என்பதற்கு ஆதாரமான இலக்கிய -_ இலக்கணச் சான்று ஏதேனும் உண்டா? பழந்தமிழர் சங்க நூல்களிலாவது, தமிழர்மறை என்று சொல்லப்படுகின்ற திருக்குறளிலாவது நவராத்திரி விழாவுக்கு ஆதாரம் உள்ளதா?
நவராத்திரி, பண்டிகை, ஆயுதம், பூஜை, விஜய தசமி முதலிய அனைத்துச் சொற்களும் வடமொழிச் சொற்களாக இருக்க இவை எப்படித் தமிழுக்கு, தமிழர்க்கு, தமிழ்நாட்டிற்கு ஏற்ற விழாவாக அமைய முடியும்? கடவுள் பெயர் எதுவும் தமிழில் இல்லையே! பின் எப்படி தமிழர்க்குரியதாக இருக்க முடியும்?
நவராத்திரி சைவ சமயப் பண்டிகையா? அன்றி வைணவ சமயப் பண்டிகையா? இரண்டும் சார்ந்த பொதுவான இந்து மதப் பண்டிகை எனில், அது ஏன் வைணவ ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்-படவில்லை?தொலைக்காட்சி, தொலைபேசி, தொலைவரி (தந்தி), தொடர்வண்டி, பேருந்து, மின்சாரம் போன்ற சமுதாய மனநல மேம்பாட்டு வாழ்வுக்குப் பயன்படும் அனைத்துக் கருவிகளையும் ஆயுத பூஜை கொண்டாடாத அயல்நாட்டுக்காரர்களே கண்டுபிடித்திருக்க, ஆயுத பூஜை கொண்டாடும் இந்து மத பக்தத் தமிழா! நீ இன்றுவரை கண்டுபிடித்த ஆயுதம் _ கருவி என்பது விபூதியும், நாமக் கட்டியும், துளசியும், தர்ப்பைப் புல்லும்தானே!
தலையிலே உள்ள நீரை உறிஞ்சுவதற்காக நெற்றியிலே திருநீற்று விபூதிப் பட்டையை அறிவியல் காரணமாக (சமய மதக் காரணம் அன்றாடம்) பூசுகிறோம் என்று கதை விடுகிற ஆத்திக பக்தனே! மரக் கல்லாப் பெட்டிக்கும், மரப் பீரோவுக்கும், மரநிலைக் கதவுப் படிக்கும் திருநீற்று விபூதிப் பட்டை போடுகிறாயே, என்ன காரணம்? அவற்றிற்கு நீர் பிடித்திருக்கிறதா? ஏன் இந்த ஏமாற்றுத் தில்லுமுல்லு? அணுகுண்டையும், அய்ட்ரஜன் குண்டையும், ஆகாய விமானத்தையும் கண்டுபிடித்தவன் கொண்டாடாத ஆயுத பூஜை, பிள்ளைப் பேற்றைக் கருதி அரச மரத்தையும், அத்தி மரத்தையும், ஆல மரத்தையும் சுற்றி வருபவனுக்கு -_ சுற்றி வருபவர்களுக்கு ஒரு கேடா?
மேல்நாட்டான் கண்டுபிடித்த ஆயுதங்கட்கு பொட்டிட்டு, பூவிட்டு, குங்குமம் வைத்துக் கும்பிட்டுக் கூத்தடிப்பது கேவலமல்லவா? கண்டுபிடித்தவனே இப்படிக் கும்பிட-வில்லையே?