அய்யாவின் அடிச்சுவட்டில் -140
மனிதனை மனிதனாக்க 95 ஆண்டுகள் உழைத்த தலைவர்
மணமகள் தந்தையும், சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமாகிய பொத்தனூர் க. சண்முகம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
எனது மூத்த மகளுடைய திருமணம் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது. அய்யா _ அம்மா ஆகியோர் இல்லாத நிலையிலும், அவர்கள் இருவருடைய பெயராலும் அமைந்திருக்கிற இந்த மன்றத்தில் திருமணம் நடைபெறுவது கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
அய்யா, அம்மா அவர்கட்குப் பிறகு எங்களது இயக்கத்தின் தலைவராகவும் குடும்பத் தலைவராகவும் இருக்கிற கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையில் எங்கள் வீட்டுத் திருமணத்தை நடத்த முன்வந்துள்ளோம். வந்திருக்கும் அனைவருக்கும் எங்கள் அன்பையும், வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
மணமகளின் தந்தையார் சண்முகம் அவர்களைப் பாராட்டுவதைவிட மணமகன் வீட்டாரைத்தான் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். பழமைகளிலிருந்து விடுபடுவது என்றால் அது சாதாரணமானதல்ல.
இந்தத் திருமணத்தில் நாங்கள் எல்லாம் பேசுவது பெரியவர்களுக்கு அல்ல; திருமணம் செய்து கொண்டவர்களுக்குமல்ல. இனித் திருமணம் செய்து கொள்ள இருக்கும் இளைஞர்களுக்-காகவும் பெண்களுக்காகவும்தான். அவர்கள் தங்கள் வீட்டில் சென்று சொல்ல வேண்டும். செய்து கொண்டால் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்வோம் என்று அவர்கள் பிடிவாதம் பிடிக்க வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்கிறோம்.
கலியாணம் என்ற சொல்லுக்கு சனிபிடித்தல் என்று பொருள். அதையா நாம் செய்து கொள்ள வேண்டும்? அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று பெயரிட்டார்கள்.
நாம் நடை உடைகளில் எவ்வளவோ மாற்றம் பெற்று இருக்கிறோம். ஆனால், சிந்தனையில் பழைமை உலகத்திலேயே இருக்கிறோம். இதை மாற்றி அமைக்கப் பிறந்தவர்தான் தந்தை பெரியார்.
நம் வீட்டில் உள்ள எண்பது வயது பெரியவரை ஒரு சாதாரண பார்ப்பான் ஏய், டேய் போட்டுக் கூப்பிடுவான்.
இப்படிக் கூப்பிடுவது கூடாது என்று சொன்னவர் தலைவர் பெரியார் ஆவார்கள். தந்தை பெரியார் அவர்களின் தலையாய சீடர் அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் முதன் முதலாக செய்த சட்டமே சுயமரியாதைத் திருமணச் சட்டம் செல்லும் என்பதுதான்.
இந்தத் திருமணத்திலே நாங்கள் சொல்வது என்ன என்று உங்களுக்குப் புரிகிறது. பார்ப்பான் வந்தால், அவன் சொல்லும் மந்திரம் யாருக்குப் புரியும்? இதை எல்லாம் சிந்திக்க வேண்டும்.
இந்தத் திருமணம் அறிவுக்குப் பொருத்த-மானது, சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் மிக நல்லபடியாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
நண்பர் சண்முகம் அவர்கள் நீண்டகால சுயமரியாதைக்காரர். மிசாவில்கூட ஒரு வருடம் சிறையில் இருந்தார். ஏற்றுக் கொண்ட இலட்சியத்திற்காக அந்தத் தியாகத்தை ஏற்றுக் கொண்டவர். அவருடைய வீட்டில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதிலே மிக்கப் பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டார்.
கழகப்பொருளாளர் கா. மா. குப்புசாமி அவர்கள் தமது உரையில்,
எங்கள் இயக்கத்தில் உள்ள முக்கிய பிரமுகரின் திருமண வீட்டிலே நாங்கள் எல்லாம் கலந்து கொள்வது எங்களது கடமையாகும். மணமக்கள் தந்தை பெரியார் வகுத்துத் தந்த கொள்கை நெறிப்படி வாழப் பெரிதும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.டி. வீரப்பா அவர்கள் தமது உரையில், இன்றைக்குச் சந்திரமண்டலம் சென்று கொண்டிருக்கிற நாட்டுக்காரர்கள் எல்லாம் பல நூறு ஆண்டு-களுக்கு முன்பு காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்தார்கள். அந்தக் காலக்கட்டத்திலே புத்தர் இங்கு தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்து இருக்கிறார்கள். ஆனால், அந்தப் புத்தன் வாழ்ந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் 2000 ஆண்டுகளுக்குப் பின்னும் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
மதம் என்பது ஒரு காட்டுமிராண்டித் தத்துவம். அன்பே சிவம் என்று சொல்லும் சைவமதம் தான் இந்நாட்டில் 8000 சமணர்களைக் கழுவிலேற்றி மகிழ்ந்திருக்கிறது.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள் சொன்ன தத்துவம் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டது.
அந்த மனிதாபிமான தத்துவப்படி மணமக்கள் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருச்சி திராவிடர் கழகச் செயலாளர் கே.கே. பொன்னப்பா அவர்கள் தமது உரையில், தந்தை பெரியார் அவர்களிடத்திலே நீண்ட நாள் தொடர்புகொண்ட நமது சண்முகம் அவர்கள் வீட்டிலே நடைபெறும் திருமணம் இது. இது எங்கள் வீட்டு திருமணம், இந்தத் திருமணத்திலே நாங்கள் கலந்து கொள்வதிலே பெருமகிழ்ச்சி அடைகிறோம். மணமக்கள் தந்தை பெரியாரும் அவரது கொள்கையும் போல் நல்ல சிறப்புடன் வாழ கேட்டுக் கொள்கிறேன் என்று உரைத்தார்.
மலேசியா திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அண்ணல் ஆறுமுகம் அவர்கள் தனது உரையில், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் நாட்டில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்-பட்டிருந்தாலும், அய்யா அவர்கள் விரும்பிய முழுமையான கொள்கையை நாடு ஏற்றுக் கொண்டு செயல்படுகிறதா என்பது கேள்விக்குறி.
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை முழு அளவு நாடு ஏற்றுக் கொள்கிறவரை நம்முடைய பிரச்சாரம் தீவிரமாக இருந்தே தீரவேண்டும். குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளை மேடைகளாகப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்தே தீர வேண்டும் என்று குறிப்பிட்டார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது உரையில், திருமண மேடைகளிலே பிரச்சாரம் என்பது ஒரு சடங்கல்ல. இன்னும் திருந்தாத மக்கள் இருக்கிறார்களே என்ன செய்வது? அவர்கள் திருந்துகின்ற காலம்வரை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் ந. இராமநாதன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
நம் நாட்டுப் புராணங்கள் எல்லாம், சாத்திரங்கள் எல்லாம், இதிகாசங்கள் எல்லாம், பெண்களை அடிமை என்று நிலை நிறுத்துபவைதான். தந்தை பெரியார் அவர்கள்தான் நம் நாட்டைப் பொறுத்த-வரை அதற்கு மாறான கருத்தைக்கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை உருவாக்கி-யவர்கள் என்று குறிப்பிட்டார்.
மராட்டிய பேராசிரியர் திரு. சந்திரமோகன்வாக் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்ட-தாவது:
புரட்சியை நாட்டில் மலரச் செய்த தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள இங்கு வந்தேன். இத்தகைய சந்தர்ப்பத்தில் இம்மணவிழாவில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பு ஏற்பட்டது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பெரியார் அவர்கள் தமிழகத்திலே கொடுத்து இருக்கிற சமுதாயப் புரட்சி எத்தகையது என்பதை இத்திருமண அமைப்பிலும் நடைமுறையிலும் பார்த்துப் பூரித்துப் போகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
திருமண விழாவில் பல்வேறு கிராமப்புறங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் கழக தோழியர்கள், தோழர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்-களும் கூடியிருந்து திருமணத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.
நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவினை அகிலம் முழுவதும் மிகவும் சிறப்புடன் கொண்டாடும் நிலையில், மலேசியா, சிங்கப்பூர் நண்பர்கள் அந்த இரு நாடுகளிலும் ஏராளமான நிகழ்ச்சி-களை சுமார் 40 நாட்களுக்கு நடத்த வேண்டு-மென வற்புறுத்திய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல பொறுப்புகளிடையே, அத்தனை நாட்கள் ஒதுக்க இயலாது எனக்கூறி அவர்களை எப்படியும் அதில் பகுதியாக 20 நாட்களில் நிகழ்ச்சிகளை அடக்கி விடவேண்டுமென கேட்டுக்கொண்டு அதன்படி, நான் மலேசியா, சிங்கப்பூர் பயணம் அறிந்த ஹாங்காங் நண்பர்கள் அங்கேயும் அய்யா நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் நடப்பதாகவும் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைத்தனர், அதுபோலவே பர்மாவில் உள்ள தோழர்களும் அங்கேயும் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளில் கலந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
இதில் பர்மா போன்ற நாடுகளின் பயணத்தை இப்போது இப்பயணத்துடன் இணைக்க இயலாமை குறித்து எழுதி விட்டதோடு, அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு ஏற்பாடு செய்யுங்கள் என்று நான் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.
பிறகு, நான் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்குப் புறப்பட்டுச் செல்ல என்னை வழியனுப்பும் விழாவில் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரிடமும் வாழ்த்து பெற்று அய்யாவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள புறப்பட ஆயத்தமானேன்.
முன்னதாகவே, காலையில் தி.மு.க. தலைவர் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்து குடியரசு நாள் அன்று அணிவதற்காக கறுப்புச் சட்டையினை தந்துவிட்டு வந்தேன். பதிலுக்கு, கலைஞர் அவர்கள் என்னுடைய மலேசியப் பயணம் வெற்றிபெற வாழ்த்தி சால்வை ஒன்றை அணிவித்தார்கள்.
13.01.1979 மாலையில், விடுதலை ஊழியர்கள் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவானது பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் நடைபெற்றது. விழாவில், என்னுடைய வெளிநாட்டு பயணத்தைப் பாராட்டி விடுதலை கம்போசிங் போர்மேன் திரு எஸ்.ராதா (விடுதலை ராதா) அவர்கள் வாழ்த்து இதழ் வாசித்து அளித்தார்.
விடுதலை ஊழியர்களின் சார்பில் உல்லன் சால்வையும், விடுதலை பொறுப்பாளர் திரு. மீ.அண்ணாமலை அவர்கள் அணிவித்தார்கள் என்பது பசுமையான நினைவுகளாக இருக்கின்றன. விழாவில் நான் நன்றியுரையாக, அய்யா உருவாக்கிய இன்ஸ்டியுஷன் _ நிறுவனம் இது என்றும், இந்த 1979ஆம் ஆண்டு ஒரு வரலாற்று திருப்பமான ஆண்டு; நமது இயக்க ஏடுகளுக்கு நல்ல வாய்ப்பு உள்ள காலம் என்றும், நம் இயக்க ஏடுகளின் வளர்ச்சியோடு _ உங்கள் வளர்ச்சியும் இணைந்து இருக்கிறது என்றும் இங்கு முதலாளி _ தொழிலாளி விவகாரம் நமக்குள் இல்லை; விடுதலைக்கு ஊழியர் அனைவரும் பங்காளிகளே! என்று கூறி என் நன்றியுரையை முடித்துக் கொண்டேன்.