சிறுகதை

ஜூன் 16-30

செவ்வாய் தோசம்

இன்னைக்கு சனிக்கிழம வேற, இந்த சம்பள சிட்டைய எங்க வச்சோம், சிட்டய காட்டலனா சம்பளம் தரமாட்டான். கடங்காரப் பயல்களுக்கு என்ன பதிலச் சொல்ல, என்கிற வேதனையும் அங்கலாய்ப்பும் வந்து ஒன்று சேர, சட்டி பொட்டியெல்லாம் தேடிக் கொண்டு இருந்தாள் செல்லம்மாள்.

ஏம்மா, அக்காவோட ஜாதக நோட்டும்மா என அவளுடைய மகன் எடுத்துக் காட்டினான்.

அவதான் செத்துப் போயிட்டாளே, இனி எதுக்கு, பேசாம அதத் தூக்கி குப்பையில் போடு என்றாள்.

நாம இரண்டு பேரும் என்ன பாடுபட்டு தேடிக்கிட்டு இருக்கோம், அவ பாரு செத்த பிணமா தூங்குறதப் பாரேன். ஏய் இங்க பாருடி உடனொத்த புள்ளக எல்லாம் என்ன பாடுபட்டுக்கிட்டு கெடக்குதுக இவ என்னடானா,

கொஞ்ச நேரம் சும்மா கெட எனக்குத் தெரியும் பேசாம கெட என மறுபடியும் திரும்பிப் பார்த்த வண்ணம் புரண்டு படுத்தாள்.
ஆமான்டி பொத்தி பொத்திப் படு வேள வேளக்கி நல்லா சாப்பிடலாம் எனச் சீறினாள்.

அம்மா விடுமா செத்த தூங்கித்தான் எந்திரிக்கட்டுமே? என்றான் பாண்டி.

பாண்டி எட்டாம் வகுப்புப் படிக்கின்றான். அவனது அப்பா இறந்து அய்ந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

மாரியம்மாளும், பாண்டியும் மட்டும்தான் செல்லம்மாளுக்கு. பாண்டி எப்படியும் படித்து முன்னுக்கு வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. மாரியம்மாளுக்கு ஒரு திருமணத்தை முடித்துவிட்டால், நிம்மதியாய் இருக்கும் என்கிற எண்ணம் செல்லம்மாளின் எண்ணத்தில் நிழற்படமாய் ஓடிக்கொண்டே இருக்கும்.

வேலையில் படுசுட்டி. மாரியம்மாளோடு போட்டி போட்டு ஜெயிக்க யாராலும் முடியாது. சில நேரம் சாப்பிடக்கூட மறந்து விடுவாள். வாய்ச் சவடாலில் கெட்டிக்காரி, ஆனால், யாரிடமும் வம்பு தும்புக்குப் போகமாட்டாள்.

அதிகாலை நேரம் அது. ஒரு ஒத்தையடிப் பாதை, ஆபீஸ்சுக்கு அந்த வழியாகத்தான் நடந்தே போகவேண்டும். எறும்பு ஊர்ந்து செல்லுவது போல முன்னும் பின்னும் ஆணும் பெண்ணும் நடந்து போவார்கள். சரியாக 7.30 மணிக்கெல்லாம் ஆபிஸ்க்குள் நுழைந்துவிட வேண்டும். இல்லையென்றால் வாட்ச்மேன் கேட்டைப் பூட்டிவிடுவான், அப்புறம், மேனேஜர், போர்மேன் இவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வேலையில உக்கார முடியும்.

ஒரு வேளை வீட்டுக்குத் திரும்பிட வேண்டிய சூழலும் ஏற்பட்டுவிடும். இந்த நினைவுகளுடனே சென்ற அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

வாயெல்லாம் பல்லைக் காட்டியவனாய், என்ன ரொம்ப வேகமாக இருக்கு என்றவனாய் அவளைப் பின்தொடர்ந்தான்.

மூஞ்சியும் முகரக்கட்டையும், எப்படா வருவா இவ! பின்னாடியே நாய் நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வர்றது போல வர்றது. இதுகளுக்கு இதுஎல்லாம் ஒரு பொளப்பு ச்… சே என மனசுக்குள் எண்ணியவளாய் முகத்தில் செயற்கையாய் சிரிப்பை வரவழைத்தவளாய் நேரமாச்சுல என்று பதிலளித்துவிட்டு விறுவிறுவென நடந்தாள்.

அவனுக்கோ ரெக்கை கட்டிப் பறப்பது போன்ற பரவசம். தான் கேட்ட கேள்விக்கு அவளிடம் இருந்து பதில் வந்துவிட்டது என்கின்ற சந்தோசத்தின் நீர் ஊற்று பீறிட்டு எழுந்தது மனசெல்லாம்.

மீண்டும் அவளிடம் ஒரு கேள்வி கேட்போமா என்கிற உந்துதல் குதியாளம்போட்டது.

இன்னைக்கு ரொம்ப லேட்டா… அவன் முடிக்கவில்லை. ஆனால், அவளோ அவனுக்குப் பதில் சொல்ல விரும்பாமல் வேகவேகமாக ஆபீஸை நோக்கி விரைந்தாள். ஆபிஸ் கேட்டை நெருங்கி விட்டாள், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

என்ன புள்ள ரெம்பா லேட்டா வர்ற? என்றவாறு பல்லைக் காட்டியது எழுபது வயது கிழம்.

பதிலே சொல்லாமல் விறுவிறுவென ஆபீஸ்சுக்குள் நுழைந்தாள்.

நல்லவேளை போர்மேன் பார்க்கவில்லை, பார்த்திருந்தால், இந்நேரம் வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துவிடுவான். அதுவும் இல்லாமல் வீட்டுக்கே பத்திவிடுவான்.
ஏன்டி ரொம்ப லேட்டா வந்திருக்க உன்ன பொண்ணு பாக்க மாப்புள்ள வூட்டுக்காரங்க வந்தாங்களாடி  என்றாள் உடன் வேல பார்க்கும் கிழவி. ஆமா, என்னப் பொண்ணு பார்க்க வந்தாங்க, நீ வேணா எனக்குப் பதில் அவனைக் கல்யாணம் பண்ணிக்கோ எனச் சீறினாள்.

எவன் ஜாதகம் எழுதினானோ தெரியல செவ்வாய் தோசம் இருக்குனு எழுதிவச்சுப்புட்டான். அத நம்பிக்கிட்டு ஒரு பயலும் சீந்த மாட்டேங்குறான். இத நல்லா தெரிஞ்சுக்கிறாள்க, தெரிஞ்சுக்கிட்டே நம்மகிட்ட வாயப் புடுங்குறாள்க என மனசுக்குள் திட்டித் தீர்த்தாள்.

முதன் முதலா அன்னைக்குத்தான் மாரியம்மாளைப் பார்ப்பதற்காக ஆலமரத்துப்பட்டியில் இருந்து மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து இருந்தார்கள். அன்று என்றும் இல்லாத சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனார்கள், மாரியம்மாளும் அவளது அம்மாவும். இத்தனைக்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு மாரியம்மாளைப் பிடித்துவிட்டது.

சரி அப்ப பொண்ணு ஜாதகம் இருந்தாக் கொடுங்க என்றார்கள்.

என்றோ எழுதி வைத்திருந்த மாரியம்மாளின் ஜாதகத்தைத் தேடிப்பிடித்து எடுத்துப் கொடுத்தாள் செல்லம்மாள்.

அப்புறம் என்ன ஜாதகப் பொருத்தம் சரியா இருந்தா அடுத்த முகூர்த்தத்தில கல்யாணத்த வச்சுக்கிடுவோம் என்று சொல்லிச் சென்றவர்கள்தான், திரும்பி வரவே இல்லை. செல்லம்மாள் ரொம்பவும் நொந்தே போய்விட்டாள்.

என்ன விஷயமாக இருக்கும் என கலங்கி இருந்தவளுக்கு அரசல் புரசலாக அவள் காதில் வந்து விழுந்த செய்தி இதுதான். மாரியம்மாளுக்கு செவ்வாய் தோசமாம், அதனால்தான் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரவில்லையாம் என்கிற செய்தி செல்லம்மாளின் தலையில் இடியாய் விழுந்தது.

பின்பு, மாரியம்மாளும் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. பாவம், செல்லம்மாள்தான் கவலைப்பட்டாள்.

நீ ஏம்மா கவலப்படுற உனக்குத் துணையா இருந்துட்டுப் போறேன். ஒரு பயலும் சீந்த வேண்டாம் என வீராப்பாய்க் கூறுவாள். இந்த நினைவுகளோடு இருந்தவளுக்கு கணக்குப் பிள்ளையின் குரல் அவளைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.

என்ன வந்து நேரமாச்சோ, அய்ந்து கட்டுத்தான் எடுத்துருக்க போல இருக்கு, இன்னியொரு பதினைஞ்சு கட்டு எடுத்துக்கோ ஆளுக்கு இருபதுகட்டு ஒட்டி முடிச்சதும் இருபத்தொன்னு ஒட்டனும் எனக் கூறிவிட்டு அடுத்த ரூமுக்குச் சென்றுவிட்டான்.

கூழ் போல் கரைத்து வைக்கப்பட்ட பசை முக்காலி பக்கத்தில் பிளாஸ்டிக் கப்பில் இருக்க அதில் இருந்து பசையை எடுத்து ஆள்காட்டி விரலால் லேபிளில் தடவி சக்கரக் குழாயை (மருந்து அடைக்கப்பட்ட) அதன் மேல் வைத்து உருட்டி விடும் போது அவளது விரல்கள் மின்சாரப் பாய்ச்சலையும் தோற்கடிக்கின்ற வேகம்.

மருந்து பிசிறு ஒன்று இருக்க அது அவளது விரலைப் பதம் பார்க்க… அவளது விரலில் இரத்தக் கசிவு ஏற்பட்டது. இது உழைக்கும் வர்க்கம் முதலாளி வர்க்கத்திற்குக் கொடுக்கும் காணிக்கை. இரத்தப் பலி கொடுத்து வரம் கேட்கும் பாமரன் இங்கே குருதி இழந்து கூலி பெறும் கொடுமை.

மாரியம்மாளுக்கு வயது 28 தாண்டிக் கொண்டு இருந்தது. ஊரில் உள்ள எல்லோருக்கும் இவளுக்கு செவ்வாய் தோசம் என்கிற செய்தி வேகவேகமாகப் பரவிக் கொண்டு இருந்தது. இருந்தாலும் நல்ல வேலைக்காரி, பார்க்க மிகவும் அழகாகவும், லட்சணமாகவும் இருப்பாள். துடுக்குத்தனமும் எவரையும் வந்து பார் என்கிற வேகமும் யாருக்கும் எதிலும் எவரையும்விடக் குறைந்தவள் இல்லை என்கிற திடமும் அவளிடம் இருந்தன.

மதியம் இரண்டு மணியைத் தாண்டிக் கொண்டு இருந்தது. அவளோடு வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் சாப்பிடச் சென்று விட்டார்கள். இவள் மட்டும் வேலை செய்து கொண்டு இருந்தாள். அப்பொழுதுதான் அந்தச் செய்தி அவளது காதில் வந்து விழுந்தது.

என்னவாக இருக்கும், ஏதுவாக இருக்கும் என்கிற பதைபதைப்பு அவளது மனசு முழுவதும். வேகவேகமாய் செய்த வேலையை அப்படியே போட்டுவிட்டு ஆபீஸ் கேட்டை நோக்கி விரைந்து வந்தாள்.

அங்கே அவளது தம்பி பாண்டி நின்று கொண்டு இருந்தான். என்னடா இந்நேரம் இங்க வந்துருக்க அம்மாவுக்கு ஏதும்… முடிக்கவில்லை அவளது கேள்வியில் பதற்றம் இருந்தது-. அதெல்லாம் ஒன்னும்மில்ல அம்மாதான் உன்ன கூட்டியாறச் சொல்லுச்சு என்றான்.

வேல கிடக்குடா என்றாள்.  அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கிடலாம், உடனே கிளம்பு என்றான்.

அவளது வீட்டின் முன்பு அய்ந்தாறு செருப்பு ஜோடிகள் கிடந்தன. இவளுக்கு மனசுக்குள் திக்கென்றது. லேசாக எட்டிப் பார்த்தாள். அம்மாதான் அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தாள்.

இவளைப் பார்த்ததும், செத்த இருங்க இதோ வந்துடுறேன், அதுவரைக்கும் தம்பியோட பேசிக்கிட்டு இருங்க என்று சொல்லியவளாய், மாரியம்மாளை வேகவேகமாக அழைத்துக்கொண்டு போனாள். பக்கத்து வீட்டில் குளிக்கச் சொல்லிவிட்டு ஒரு நல்ல சேலையைக் கையில் கொடுத்து இதைக் கட்டிகிட்டு வா என்றாள்.

மாரியம்மாள் ஒன்றும் புரியாதவளாய் விழித்தாள். என்னடி முழிக்கிற உன்னப் பொண்ணு பாக்க வந்துருக்காங்கடி என்றாள்..

ஏம்மா உனக்கு வெட்டி வேலை, எனக்குத்தான் செவ்வாய் தோசம் இருக்குனு சொல்லி இருக்காக, அதுவும் இந்த ஜென்மத்துல கல்யாணமே நடக்காதுனு சொன்னது உனக்கு நினைவு இல்லையா?

அடக் கிறுக்கி நாஞ் சொல்லுறத மட்டும் செய்யு, கண்ட பய சொல்லுறத எல்லாம் காதுல போட்டுக்க வேணாம் என்றாள்.

நம்பிக்கை இல்லாதவளாய் அம்மாவின் நச்சரிப்புத் தாங்காமல் குளித்து முடித்து தட்டில் டீ கொண்டுவந்து வந்தவர்களுக்குக் கொடுத்தாள்.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு பொண்ணு புடிச்சுப் போச்சு. கல்யாணமும் ஜாம் ஜாமுனு நடந்து முடிஞ்சிருச்சு. இப்போ மாரியம்மாளின் கையில் ஆறு மாதக் கைக்குழந்தை. இது எப்படிச் சாத்தியமானது, மாரியம்மாளுக்குப் புரியாத புதிராக இருந்தது. எப்படி நமக்குத் திருமணம் நடந்தது என்கிற கேள்வி அவள் உள் மனசுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் அம்மாவிடம் கேட்டே விட்டாள். அவளோட தம்பிதான் பதில் சொன்னான். செல்லம்மாள் புன்சிரிப்பில் சுவற்றில் புதிதாய் மாட்டி இருந்த தந்தை பெரியாரைப் பார்த்தாள்.

பாண்டி சொன்னதைக் கேட்ட மாரியம்மாள் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *