– மஞ்சை வசந்தன்
மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம்,
நமது கலாச்சார பெருமையை இளந்-தலைமுறை-யினர் உணரவேண்டுமானால், மதபாகுபாடின்றி மாணவர்கள் அனைவருக்கும் இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை மூன்றும் போதிக்கப்பட வேண்டியது அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு இவற்றை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்ப்பது குறித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்-சகத்துடன் எங்கள் அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
பல்வேறு கலாச்சார சீரழிவுகளால் நாடு மோசமாகி வரும் நிலையில் இந்த முயற்சி அவசியம். ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தம் புகுத்தப்-படுவதாய்ச் சொல்வது உண்மையல்ல. ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தில் அப்படியென்ன தவறு உள்ளது? என்றார்.
மேற்கண்ட மகேஷ் சர்மா பேட்டியில் பெறப்படும் முதன்மையான கருத்துகள் எவை?
1. இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை ஆகிய மூன்றும் பள்ளி, கல்லூரிகளில் போதிக்கப்படவுள்ளன.
2. இம்மூன்றும் இந்து, இஸ்லாம், கிறித்தவ மாணவர்களுக்குப் பள்ளியில் மதவேறுபாடு இன்றி போதிக்கப்படும்.
3. இந்தியாவின் கலாச்சாரத்தை இம்மூன்றும் இளந்தலைமுறையினர்க்குக் கொண்டு சேர்க்கும்.
4. இந்த மூன்றும் இந்தியாவின் கலாச்சாரங்-களைக் கூறும் உள்ளடக்கம் பெற்றவை.
5. இந்திய கலாச்சாரம் என்றால் அது வைஷ்ணவ கலாச்சாரம் மட்டுமே!
6. இஸ்லாமியரும், கிறித்தவரும் இதர பிற மதத்தவரும் இந்த வைஷ்ணவ கலாச்சாரத்தையே ஏற்க வேண்டும்; படிக்க வேண்டும்.
7. ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தில் தவறே கிடையாது.
போன்ற முதன்மைக் கருத்துகள் இப்பேட்டியில் அடங்கியுள்ளன.
இம்முயற்சி சரியா?
இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களின் நலன்சார்ந்த முயற்சியா இது? இந்தியாவின் கலாச்சாரம் என்பது எது? இந்த மூன்றும் மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மாணவர்களுக்குப் போதிக்க ஏற்றவையா? மற்ற மத மாணவர்களும் வைஷ்ணவ சிந்தனைகளை கட்டாயம் படிக்க வேண்டும் என்பது சரியா? என்பன போன்றவற்றை நாம் கருத்தில் கொண்டு கவனமாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இதன் மூலம் வந்துள்ளது.
இந்தியாவின் கலாச்சாரம் என்பது எது?
இந்தியா என்பதே பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை, கலாச்சாரங்களை, மொழிகளை, இனங்களை, சிந்தனைகளைக் கொண்ட பகுதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு நாடு. அப்படி என்றால் இந்த நாட்டிற்-கென்று ஒரு கலாச்சாரம் எப்படியிருக்க முடியும்? இந்தியா பல்வேறு கலாச்சார கூறுகளை, ஏன் முரண்பட்டக் கலாச்சாரக் கூறுகளைக் கொண்டது.
அப்படியிருக்க இந்தியா முழுமைக்கும் ஒரே கலாச்சாரம் இருப்பதுபோல கற்பித்து இம்முயற்சி மேற்கொள்வது அப்பட்டமான பித்தலாட்டம் அல்லவா? அதன்வழி நோக்கின் இம்முயற்சியின் அடிப்படையே தவறு அல்லவா?
மற்றவர்கள் மீதான திணிப்பு கடும் போராட்டத்தை உருவாக்கும்
இஸ்லாமிய மாணவர்களும், கிறித்தவ மாணவர்களும் இதர பிற மத மாணவர்களும், சைவ சமய மாணவர்களும், வைஷ்ணவ (மாலிய) கருத்துக்களை கட்டாயம் கற்க வேண்டும் என்பது கடைந்தெடத்த ஆதிக்க வெறியல்லவா? இதன் விளைவாக நாட்டில் பெரும் எதிர்ப்பும், போராட்டமும் கலவரமும் உருவாகாதா?
இம்மூன்றும் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு தகுதி – உள்ளடக்கம் – உடையவையா?
இராமாயணம் என்பதே ஒன்றல்ல. ஏராளமான இராமாயணங்கள் உள்ளன. இராமனுக்குச் சீதை தங்கை என்னும் இராமாயணமும் உள்ளது.
வைணவத்திலே ஹிவா? சீயா? என்ற போட்டியுள்ளது.
இராமாயணத்தில், மகாபாரதத்தில், பகவத்கீதையில் சொல்லப்படும் செய்திகள் எல்லாம் மாணவர்கள் கற்பதற்கு, கற்பிப்பதற்கு உரியவை என்று கல்வியாளர்கள் ஆய்ந்து முடிவு செய்து அறிவித்துள்ளார்களா?
கணவனே இல்லாமல் குந்தி பிள்ளை பெற்றதும், அய்ந்து ஆண்களை பாஞ்சாலி கணவர்களாகக் கொண்டதும்தான் இந்தியக் கலாச்சாரமா? இப்படிப்பட்ட வாழ்வை மாணவர்கள் வாழவேண்டும் என்று போதிக்கப் போகிறார்களா?
ஜாதிப் பிரிவுகளை நானே உருவாக்கினேன். ஜாதிகள் வேண்டும். ஜாதிப்படியே ஒவ்வொருவனும் தன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று பகவத் கீதை சொல்வதை மாணவர்கள் பின்பற்ற வேண்டுமா? பின்பற்ற முடியுமா? இதைக் கல்விக் கூடங்களில் கற்பிக்க முடியுமா?
கொலை செய்யத் தயங்காதே! யாரும் யாரையும் கொல்ல முடியாது என்று கூறும் கொலைவெறிச் சிந்தனையைத்தான் மாணவர்களுக்கு ஊட்ட வேண்டுமா?
இப்படி உள்ளே புகுந்து ஆராய்ந்தால் வண்டி வண்டியாக வருமே. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல பாடத் திட்டத்தைப்பற்றி எவன் வேண்டுமானாலும் பேசலாம், முடிவெடுக்கலாம் என்ற அவலமும் அடாவடித்தனமும் அரங்கேற்றப்படுவது சரியா?
திருக்குறளைத் தள்ளிவிட்டு இவற்றை எடுத்தது ஏன்?
உலகே ஒப்புக்கொண்ட உலக மக்களே பின்பற்ற உகந்த _ உயரிய நூல் திருக்குறள். அப்படியிருக்க அதை இந்தியா முழுக்கக் கட்டாயமாக பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்க முயற்சி மேற்கொள்ளாமல் இவற்றைக் கற்பிக்க முயல்வது மத ஆதிக்க முயற்சி என்பது வெளிப்படையாகத் தெரியவில்லையா?
ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தம் தப்பில்லாததா?
ஆர்.எஸ்.எஸ். என்றாலே அது அசல் பாசிச அமைப்பு. பாசிச கொள்கையைத்தான் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கற்பிக்கப் போகிறீர்களா?
ஆரியர்கள் தவிர மற்றவர்களெல்லாம் விலங்குகளைப் போன்றவர்கள். ஆரியர்கள் மட்டுமே வணங்கத்தக்கவர்கள். சமஸ்கிருதம் மட்டுமே உயரிய மொழி என்று கூறும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகள் உயர்ந்தவையா?
கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்துக் கடவுளை ஏற்க வேண்டும். இல்லையென்றால் இந்த நாட்டை விட்டே சென்றுவிட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் மிகச் சரியானதா? எவ்வளவு பித்தலாட்டத்தனமான பேட்டி?
இந்த நாட்டில் எல்லாம் சொரணை கெட்டுப்போய் கிடக்கிறான் என்ற நினைப்பா?
இந்த முயற்சியில் அரசு இறங்கினால், மக்களின் கிளர்ச்சியும், எதிர்ப்பும் கட்டுக்கடங்காது போகும் என்பதை மதவாத பாசிசப் பேர்வழிகள் மனதில் கொள்ள வேண்டும்!
பல்வேறு நம்பிக்கை, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டில், எல்லாவற்றையும் மதித்து நடப்பதும், மாணவர்களிடம் மதவெறி, ஜாதிவெறி, பாசிசச் சிந்தனைகள் வளராமல் கற்பிப்பதும் ஓர் அரசின் கடமை!
கல்வித் திட்டம் கல்வியாளர்கள் முடிவு செய்ய வேண்டியது. மதவாதிகள் அல்ல! இந்த முயற்சியை உடனே அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்! எச்சரிக்கை!