அயல்நாட்டாரும் மதிக்கும் அரும்பெருந்தலைவர் பெரியார்! – – கவிஞர் கண்ணதாசன்

செப்டம்பர் 16-30


(சிதம்பரம் கார் அளிப்பு விழாவில் கண்ணதாசன் பேசியதன் விவரம்)

இந்த விழாவின் வெற்றி கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தந்தை பெரியாருக்கு நல்லதொரு காரை அன்பளிப்பாகத் தர நாம் கூடியுள்ளோம்.

ஐயா அவர்களுக்கு ஒரு நாளாவது பேசா விட்டால் உடல்நிலை குறைந்து விடும் என்ற நிலையிலுள்ளது. ஆனால் அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள், கோயில், குளம், தலைவிதி போன்றவற்றை நம்பித் திரிந்தனர். ஒற்றைப் பார்ப்பான் வந்தால் ஒதுங்குவதும், எண்ணெய் வருகிறதா, எனப் பார்ப்பதும், பல்லியின் குரலுக்கும் பயந்தும் இருந்தனர். அந்நாளில் முதன் முதலாக ஒலித்த குரல் தந்தை பெரியாரின் குரல்தான்.

 

முதல் குரல்

நம்முடைய பருவத்தில் பார்க்காவிட்டாலும், நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. இன்றைக்கு கூட்டமென்றால் மக்கள் திரளாக கூடுகின்றார்கள். பலமாகக் கை தட்டுகிறார்கள். ஆனால் பயங்கர வைதீகம் தலை விரித்தாடிய நாளில், ஆண்டவனைப் பற்றி பேசினால் அம்மை வரும், காலரா வரும், என்று பயமுறுத்திய நாட்களில் கடவுளைப் பற்றி அடிமுதல் நுனி வரை பேச ஆரம்பித்தது பெரியார்தான். முடங்கிக் கிடந்த இனத்தின் வளர்ச்சிக்கு முதற்குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்தான்.

தந்தை பெரியார் போட்ட பாதையில் இன்று பலபேர் கார் விடுகிறார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த அந்த நாளில், எந்த வழியாய் பாதை வெட்டுவது என்பது கூட அறியாதிருந்த நேரத்தில், செருப்பு வீச்சு, சாணியடி, பன்றி விரட்டு, பாம்பு விடுதல் போன்ற வைதீக வெறியாட்டங்களுக்கு நடுவில், சாதியின் பல்லைப் பிடுங்கப் படாதபாடு பட்டவர் ஐயா அவர்கள்தான். நேற்று மதுரையில் பேசிய நேரு, சாதி ஒழிப்பைப் பற்றி பேசியிருக்கிறார். வடநாட்டில் சாதி ஒழிப்பைப் பற்றி பேசாமல் தமிழகத்தில் அவர் பேசியதற்குக் காரணம் தந்தை பெரியாரின் உழைப்புதான்.

காதல் கதை பேசிய தலைவர்

இன்றைக்கு அரசியல் பேசுவது மிகச் சாதாரணம்; சுலபமானது. காதல் கதை பேசி அரசியல் வாதியாகி விடலாம். கடுமையான அரசியல் தொண்டைவிட அலங்காரப் பேச்சால் சுலப வியாபாரம் நடக்கிறது. ஆனால் அன்று ஐயா எடுத்துக் கொண்ட பணி பயங்கரமானது. காங்கிரசில் கண்ட ஆதிக்க சக்தியினையும் அதனால் பெற்ற அனுபவங்களையும் கொண்டு வெளியேறினார். காங்கிரசிற்குள்ளேயும் பேத உணர்ச்சி வளர்ந்து கொண்டே வந்தது. ஆச்சாரியார், காமராசர் போர் நடக்க ஆரம்பித்தது. ஆரம்ப முதலே பெரியார் காமராசரை ஆதரிக்கத் தயங்கவில்லை. காங்கிரசிலேயும் பெரியார் வெளியே இருக்கிறார்; இங்கு ஏதாவது நடந்தால் பெரியார் மடியில் விழலாம் என்ற துணிச்சலால்தான் ஆச்சாரியாரை எதிர்க்கும் துணிவு பிறந்தது.

தீண்டாமைக்கு தீ

அக்கிரகாரத்தில் நடக்கக்கூட முடியாம-லிருந்த நிலையை அடித்துத் தகர்த்தவர் பெரியார். தண்ணீர் பந்தல்களில் பிற்பட்ட மக்களுக்கு மூங்கில் குழாய் மூலந்தான் தண்ணீர் ஊற்றுவார்கள். அது இன்று மாறியது ஐயாவால்தான். ஓட்டல்களில் சேவை பார்ப்பவனை சாமி என்று அழைத்தனர் அப்போது. ஆண்டவனும் சாமி இவனும் சாமியா? எனக் கேட்டு, இன்று அதிகாரம் செய்யுமளவுக்கு உணர்ச்சியூட்டியவர் பெரியார்.

பெரியார் முன்பு பேசிய பேச்சுத்தான் சமுதாயச் சீர்த்திருத்தம் பற்றி பேச மற்றவர்களுக்கு துணிச்சலைத் தந்தது. அய்யா அவர்கள் அரசியலைப் பற்றி ஒருவரையறை வகுத்தார். சட்டசபை செல்வது பொறுக்கித்தனம் என்று கூறி, அங்கு நுழையாமல் துணிந்து நல்ல கருத்துக்களை சொல்பவர் ஐயா ஒருவர்தான்.

தி.மு.க. பிறந்த நேரத்தல் எங்களுக்கென்று யாரும் தலைவர் கிடையாது. தலைவர் நாற்காலி காலியாக இருக்கிறது. ஐயாவின் கொள்கை தான் எங்களின் கொள்கையும் என்று பேசி முழங்கினர். நான் கட்சிக்கு சென்ற நேரத்தில் கூட தி.மு.க.வில் கடவுள் எதிர்ப்பு கோஷம், பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி காணப்பட்டன.

முழக்கமும்; மயக்கமும்

சீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கிவைத்து பிளப்பது எந்நாளோ? பெண்  கேட்டு, சேய் கேட்டுப் பித்தான சாமிகளை மண்போட்டு மூடுவதும் எக்காலம் என்று பாடியவர்கள், திருச்சியில் கூடி தேர்தலில் நிற்பது என்று முடிவு செய்தவுடன் முழு நாத்திகத் தன்மையிழந்து, பார்ப்பனீயம் போனால் போதும்; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றே முழங்கும் எங்கள் கழகம் என முழங்கத் தொடங்கினர். ஆனால் ஐயா அவர்கள் என்றும் தன்பாதையை மாற்றிக் கொள்ளவே இல்லை.

அவர் துணிவு

மக்களைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள் எனக் கூறும் துணிச்சல் படைத்தவர் ஐயா ஒருவர்தான். ஐகோர்ட் பற்றிய வழக்கில் நீதிமன்றத்தில் பேசும் போது இந்த நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை எனத் துணிந்து கூறியவர் பெரியார் ஒருவர்தான். அவர் கட்டுப்பாடு பற்றி ஒரு மணி நேரம் பேசுவதில்லை; கண்ணியம் பற்றி ஒரு மணிநேரம் முழங்குவதில்லை; ஆனால் கட்சியில் கட்டுப்பாடு குலைந்தால் அந்தக் கிளை அப்போது கலைக்கப்படும். அத்தகைய இராணுவத் தலைவருக்குரிய தகுதி ஐயா ஒருவரிடந்தான் உண்டு.

கொடி எரித்த கோ!

வீரம், குருதி,  என்றெல்லாம் ஒருநாள் கூட பேசியதில்லை, அவர் ஒரு செயல் வீரர். வணங்குவதற்குரிய தேசியக் கொடி என்றனர் காங்கிரசார்! அது வெறும் துணி என்றார் ஐயா. சட்டம் என மிரட்டினார்கள்; அது வெறும் காகிதம் என்றார்!

15 பேர் மாண்டனர்

சட்ட எரிப்புப் போரில் 9 மாத காலம் சிறை சென்றிருந்தார்; பல திராவிடர் கழக வீரர்கள் சிறை சென்றனர்: 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையில் பல்வேறு தண்டனைகள் பெற்றனர்; போர்க்களம் சென்ற திராவிடர் கழக வீரர்களில் 15 பேர் மரணமடைந்தனர்.

அந்தப் பிணங்களைக் காட்டி ஐயா அவர்கள் தன் பிரசாரத்தைச் செய்யவில்லை. சொந்தப் பிணங்களைப் பற்றியே ஐயா அவர்கள் பிரமாதப்படுத்தவில்லை. சில கட்சியினர் சாலைப் பிணங்களைச் சபையில் தூக்கிவைத்துக் கொண்டு திராவிடா! மாண்டாயா? என அழுவதையும் பார்க்கிறோம். உண்மையில் யார் வீரர்? எது படை? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தலைவன் அவனே!

எதிர்த்தவர் பகுதியில் நின்றவன் நான். இன்று என் நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஐயாவை ஆம்பூரில் தான் முதன்முறையாகப் பார்த்தேன். எனக்கு அவர் இன்னும் 80 ஆண்டு வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை. தோழர் சம்பத் அவர்கள் 60 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திரும்பி வரும் போது 8 பவுண்ட் எடை குறைந்து வந்தார். ஆனால் ஐயாவின் உடல் எவ்வளவு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் தளராத தன்மை படைத்தது. பக்கத்து நாட்டுக்காரன் அவருடைய போட்டோவைப் பார்த்தால் கூட மதிக்கக்கூடிய கம்பீரம் வாய்ந்த தலைவர் ஐயா அவர்கள்.

உண்மையான தொண்டன்

பெரியாரிடம் உத்தமமான தொண்டர்கள்தாம் இருக்க முடியும். காலணாக்கூட சம்பாதிக்க முடியாது. கட்டுப்பாடு மீறமுடியாது; இருந்தாலும் எண்ணற்ற தொண்டர்கள் இருக்கின்றனர் என்றால் அது ஐயாவின் தன்னலமற்ற பணியையே குறிக்கிறது எனப்பேசி முடித்தார்.

நன்றி: தென்றல், 21.10.1961

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *