– சிகரம்
ஆரிய பார்ப்பன அணுகுமுறை அன்றுமுதல் இன்று வரை கொள்கை எதிராளியைக் கொன்று தீர்ப்பதைக் கொள்கையாய் கொண்டுள்ளது.
சைவத்தை ஏற்காது சமணத்தை பின்பற்றியதால், பேசியதால் மன்னன் உதவியோடு 8000 சமணர்களைக் கழுவேற்றிக் கொன்றான் திருஞானசம்பந்தன் என்ற ஆர்ய பார்ப்பான்.
கொள்கையால் மாறுபட்டார் என்பதால் அப்பரை சிதம்பரம் கோவில் கருவறையிலே கொன்று புதைத்தனர் தீட்சதர்கள்.
மனித நேயக்கருத்துக்களைப் பரப்பி, மதத்திற்கு எதிராய் கருத்துச் சொன்னதால் வள்ளலாரை வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடித்துக் கொன்று புதைத்தனர் ஆரிய பார்ப்பனர்கள்.
ஆளைமட்டுமல்ல நூலையும், அப்படித்தான் அழித்தனர். ஒப்பற்ற தமிழ் நூல்களை ஒழித்துக்கட்ட புனல்வாதம், அனல்வாதம் என்ற பெயரில் நீரினிலும் நெருப்பினிலும் போடச்செய்து அழித்தனர்.
அக்காலத்தில் தொடங்கிய இந்த கொலை வெறி இன்றும் தொடர்கிறது. கருத்தை கருத்தால் வெல்ல வேண்டும்.. தன் கருத்தை பிறர் ஏற்கச் சொல்ல வேண்டும் என்பதே கொள்கைவாதிகளின் செயல்.
ஆனால், கொலைவறிக் கூட்டமான இந்த மதவெறிக் கூட்டத்திற்கு கொள்கையைக் கொள்கையால் சந்திக்க வேண்டும் என்ற நேர்மையான வழிமுறை இல்லை. கொள்கையை வன்முறையால் ஒழித்துக்கட்ட யார் முயன்றாலும் அவர்கள் கொள்கை அந்த அளவிற்குப் பலமற்றது, ஏற்பில்லாதது என்பதே பொருள்.
உலகில் கோடிக்கணக்கான மக்கள் வாழும்போது கோடிக்கணக்கான கருத்துக்கள் நிலவவேச் செய்யும். நூற்றுக்கணக்கான தலைவர்கள் தங்களின் கருத்துக்களைப் பரப்பவே செய்வர்.
ஒருவர் கூறும் கருத்து மற்றவர்களுக்கு மாறுபட்டதாக, முரண்பட்டதாக, ஒத்து-வராததாக அமையலாம். என் கருத்தை நீ ஏற்க வேண்டும் என்றோ, என்கருத்தை எவரும் மறுக்கக்கூடாது என்றோ கூறும் உரிமை எவருக்கும் இல்லை.
அப்படியிருக்க மாறுபட்ட கொள்கை-யாளரை அழித்து ஒழிப்பது ஆதிக்கவாதிகளின் அணுகுமுறை.
கடவுளை ஒரு மனிதன் கற்பிக்கிறான். அதை எல்லோரும் ஏற்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
மூடத்தனமாக சிலர் சிலவற்றை நம்பலாம். அதை எல்லோரும் நம்ப வேண்டும் என்று எப்படி வற்புறுத்த முடியும்?
இவன் வெண்டைக்காயை விரும்பிச் சாப்பிட்டால் அடுத்தவன் வெண்டைக்காய் வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்று எதிர்பார்ப்பது அநியாயம் மட்டுமல்ல அயோக்கியத்தனமும் ஆகும்.
அந்த அநியாயமும் அயோக்கியத்தனமும் அண்மையில் தொடர் நிகழ்வாவது அமைதிக்-கான சூழலை அறவே அழித்துவிடும் என்பதை வன்முறையாளர்களுக்கு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறோம்.
இவர்கள் தொடங்கியுள்ள இந்த வன்முறை-யின் எதிர்விளைவு இவர்களை, இவர்களைப் பின்னாலிருந்து இயக்குபவர்களை முற்றாக அழித்து ஒழித்துவிடும் என்பதை அறியாது செயல்படுகிறார்கள்.
என் மதக்கருத்துக்கு எதிராய் எவரும் கருத்து சொல்லக் கூடாது என்ற ஆணவம், ஆதிக்க மனநிலை, அடுத்தக்கட்டமாய் என் மதக்கொள்-கையை மற்ற மதத்தார் ஏற்கவேண்டும் என்ற நிலையில் கொண்டு நிறுத்திடும்.
விளைவு என்னவாகும்? விரைவில் நாடு சுடுகாடாகும்! கருத்து மோதல்கள் கொலை-களில் முடியும். இரத்தக் களறியில் நித்தம் நித்தம் நிம்மதி இழக்க நேரிடும்!
இரண்டாண்டுகளுக்கு முன் மராட்டிய மாநிலத்தில் நரேந்திர தபோல்கர் இந்துமத வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மூடநம்பிக்கைகளுக்கும், சமூக அநீதிகளுக்கும் எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காக அவரைக் கொன்றனர்.
இந்த நிகழ்வு நடந்த அதே மகாராட்டிர மாநிலத்தில் கோவிந்த் பன்சாரே கொலை செய்யப்பட்டார்.
நரேந்திர தபோல்கருக்கு நேர்ந்த அதே முடிவுதான் உனக்கும் என்று அச்சுறுத்தி கடிதம் அனுப்பிய படியே பன்சாரேவின் உயிரையும் பறித்தனர் பாசிச மதவெறியாட்கள்.
மகாராட்டிர மாநில கோலாப்பூர் நகரைச் சேர்ந்த கோவிந்தபன்சாரே (82 வயது) கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர்.
மூடநம்பிக்கைகளுக்கும் மதவாதத்திற்ம் எதிராக முழக்கங்கள் போராட்டங்கள் செய்தார் என்பதற்காக அவர் வீட்டிற்குள் நுழையும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஆட்கள் சுட்டதில் மூன்று குண்டுகள் பாய்ந்து பன்சாரே பலியானார். அருகிலிருந்த அவரது மனைவியின் தலையிலும் ஒரு குண்டு பாய்ந்து துளைத்தது!
தபோல்கரையும் இதே முறையிலேதான் கொன்றனர். மூடநம்பிக்கைக்கு எதிராக, மதத்திற்கு எதிராகக் கருத்துக்கூறினார் என்பதற்காகவே அவரும் கொல்லப்பட்டார்.
பிள்ளையார் பால்குடித்ததாகப் பரப்பப்பட்ட பொய்களை தபோல்கர் ஆதாரபூர்வமாய் மறுத்தார். இஸ்லாமியரின் எதிரியாய் சிவாஜியைக் காட்ட முனைந்த சிவசேனா, ஆர்.எஸ்.எஸ்.கருத்துக்களை கடுமையாக எதிர்த்தார் பன்சாரே. காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்குச் சிலை வைக்க முயன்ற போது அதைக் கண்டித்தார் பன்சாரே!
இவர்கள் பகுத்தறிவு கொள்கைகளைப் பரப்பியதோடு, ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்களாகவும் பணியாற்றினர். எனவே, இவர்கள் இறந்தபோது அடித்தட்டு மக்கள் அழுது புரண்டு தவித்தனர்.
பன்சாரே கொலையின் எதிர்விளைவாய் 53 தாக்குதல்கள் நடந்தன. 9 பேர் உயிரிழந்தனர். இப்படி எல்லா மக்களும் சமத்துவமாய் சம உரிமைபெற்று பகுத்தறிவோடு வாழ பாடுபட்டவர்களை ஒவ்வொருவராக மத வெறி கூட்டம் கொலை செய்வதும் அதைக் காவல்துறை எந்த நடவடிக்கையும் இன்றிக் கண்டும் காணாமல் இருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும்.
இப்படி காவல்துறையும், அரசும் வேடிக்கைப்பார்த்ததன் விளைவுதான் சில நாள்களுக்கு முன் கர்நாடகாவில் எழுத்தாளர் கல்புர்கி படுகொலை செய்யப்பட்டது.
சாகித்ய அகாதமி விருது பெற்றவர். ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர். முதுகலைப்படிப்பு முடித்தவர். பல நூல்களை எழுதிய எழுத்தாளர். கல்வெட்டுக்களை ஆய்வு செய்தவர். கன்னட தொன்மையை பண்-பாட்டை நிறுவியவர். அவரது பணிகளைப் பாராட்டி பம்பா, ராணா, நுருபதுங்கா போன்ற உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
நாடுமுழுக்க மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும் பகுத்தறிவு வளர்க்கவும் இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பையும் வேண்டாம் என விலக்கினார். இப்படிப்பட்ட ஓர் உயர்ந்த மனிதரை, மனிதநேயரை மதவெறியர்கள் அவர் வீட்டிலே, கதவைத் திறக்கச் செய்து நேருக்குநேர் சுட்டுக்கொன்றனர். இவர்களும் இருசக்கர வாகனத்தில் வந்து சுட்டுவிட்டுச் சென்றார்கள்.
ஆக, இந்த மூன்று கொலைகளும் ஒரே முறையில் நிகழ்த்தப்பட்டிருப்பதால், ஒரு -குறிப்பிட்ட மதவெறிக் கும்பல் இப்படிப்பட்ட செயலை திட்டமிட்டுச் செய்து வருகிறது என்பது தெளிவாகிறது.
கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்ட சூடு தணிவதற்-குள் கே.எஸ்.பகவான் என்ற கன்னட பகுத்தறிவு எழுத்தாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது இந்த மதவெறிக்கும்பல். அடுத்த குறி நீதான் என்ற மிரட்டலுக்கெல்லாம அஞ்சப் போவதில்லையென்று அறிவித்துவிட்டார் கொள்கை உறுதி கொண்ட உண்மையான வீரர் பகவான் அவர்கள்!
இந்தத் தொடர் கொலை வெறித்-தாக்குதல்கள் மூலம் மூடப்பழக்கவழக்கங்-களையும், புராணக் கதைகளையும், மனித எதிர் கொள்கைகளையும் விமர்சிக்கும், எதிர்க்கும், கேள்விக்குறியாக்கும் துணிவும், சமூக அக்கறையும், மனித நேயமும் மிக்க எழுத்தாளர்களை, கல்வியாளர்களை, புரட்சியாளர்களை, மக்களின் மகத்தான தொண்டர்களை அழித்தொழித்து பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் அரசியல் சாசனத்தின் நோக்கம் இவற்றிக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளனர்.
இதை முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பு மக்களும் அணிசேர்ந்து எதிர்க்க வேண்டும். மதவெறிக்கூட்டத்தை வேரோடு-களைந்து எறிய வேண்டும். மக்களின் நலனுக்காகத் தொண்டாற்ற வந்த எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள் என்றைக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கண்டு ஒடுங்கிவிட மாட்டார்கள். இதை பேராசிரியர் கே.எஸ்.-பகவான் அவர்களே உறுதிசெய்துவிட்டார்கள்.
கல்புர்கர் கொலை செய்யப்பட்டவுடன், அடுத்த இலக்கு நீதான் என்று கே.எஸ்.பகவான் அவர்களை பஜ்ரங்தள் எச்சரித்தது. ஆனால் தான் எந்த மிரட்டலுக்கும் அஞ்சப்-போவதில்லை என்று துணிவோடு, நெஞ்சுறுதியோடு பகவான் அவர்கள் அறிவித்துவிட்டு,
எனக்குக் கொலைமிரட்டல் விடுத்த அந்த இளைஞரோடு பேச விரும்புகிறேன். அறிவார்ந்த விவாதம் ஒன்றில் அவரோடு ஈடுபடவும் விழைகிறேன். இந்த வயதான காலத்தில் என்னால் நெடுந்தொலைவு சென்று அவரை சந்திக்க முடியாது; எனது மைசூர் இல்லத்திற்கு அவர் நேரே வந்து என்னைச் சந்திக்கலாம். நான் இதுகாறும் கற்றது அனைத்தையும் தகர்க்கும் வண்ணம் அவரிடம் தகுந்த சான்றுகள் இருக்குமானால், நிச்சயம் நான் என் நிலைபாடுகளை மகிழ்ச்சியோடு மாற்றிக் கொள்ளத் தயார். ஆனால், என்னை அவர் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதற்-கெல்லாம் அஞ்சி என் பணிகளை நான் நிறுத்திக் கொள்வதாயில்லை.
என்னைக் கொன்று விடுவேன் என்று மிரட்டுவோருக்கு மட்டுமல்ல, பேரா கல்புர்கி கோவிந்த் பன்சாரே மற்றும் நரேந்திர தபோல்கர் மூவரையும் சாய்த்தவர்களுக்கும் நான் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். எங்களைத் தாக்கலாம்; சுக்கு நூறாகக் கிழித்தெறியவும் செய்யலாம் – ஆனால் எங்கள் படைப்புகள் வாழ்வாங்கு வாழும். என்னைக் கொல்வதால் மட்டும் என் நிலைபாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது.
நான் அவர்களைக் கண்டு அஞ்சி ஓடி ஒளியவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். மிரட்டப்படுவது என்பது எனக்கோ, பேரா கல்புர்கி அவர்களுக்கோ புதிதல்ல.
சங்கராச்சாரியாரும், பிற்போக்குத் தத்துவமும் என்ற என் நூலை 1985ல் வெளியிட்டபோது நான் முதன் முறை மிரட்டலைச் சந்தித்தேன். சமூக சீர்திருத்தவாதி என்பதை விடவும், சங்கராச்சாரியார் சாதி அமைப்பை வலுவாக ஆதரித்தவரே என்பதை எனது ஆய்வுகள் மெய்ப்பித்தன. சமஸ்கிருத மொழியில் இருக்கும் அவரது போதனைகளை முழுமையாக வாசித்து, சங்கரர் பெண்களுக்கும், தலித் மக்களுக்கும் எதிராகவே இருந்தார் என்பதை என்னால் நிரூபிக்க முடிந்தது.
நிந்தனை செய்து விட்டதாக என்மீது புனையப்பட்ட வழக்குகளுக்காக நான் நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்கப்பட்ட, என் வாழ்க்கையில் கொந்தளிப்பு மிகுந்திருந்த அந்த நாட்களில் தான் பேரா. கல்புர்கி அவர்களோடு எனக்கு நட்பு உருவானது. என்ன ஒற்றுமை, அதே ஆண்டில்தான், பேரா கல்புர்கி 12ஆம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணாவின் ஒன்று விட்ட சகோதரரான சென்னபசவண்ணா உண்மையில் தத்தெடுக்கப்-பட்டவர் என்ற கருத்தை முன்வைத்து மிகப் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வழங்கி இருந்தார். சென்னபசவண்ணா லிங்காயத் பிரிவினருக்குக் கடவுள் போன்றவர்; ஆதலால் இந்தக் கருத்துக்காக அவர்களது கடுமையான அச்சுறுத்தலை கல்புர்கி எதிர் கொண்டார்.
அந்தச் சமயத்தில் ஒரு மாநாட்டில்தான் முதன்முதலாக ஒருவரை ஒருவர் சந்தித்தோம். இன்னார் என்று என்னை அவருக்கு அறிமுகம் செய்தமாத்திரத்தில் அவர் என்னை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு நாம் இருவரும் ஒரே கலத்தில் பயணம் செய்கிறோம் என்றார். இருவரும் சிரித்து மகிழ்ந்தோம். அந்த கணத்திலிருந்து நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
நாட்கள் செல்லச் செல்ல அவர் மீதான மதிப்பு கூடிவரவே செய்தது. அவர் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு நகராத அறிவுஜீவி அல்ல என்பது என்னை மிகவும் ஈர்த்தது; எளிய மக்களுடன் நெருங்கிப் பழகியவர்; அவர்களது பாடுகளைப் பற்றிய அக்கறை கொண்டிருந்தவர். மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவு பயன் குறித்து அவர் பேசினார்; குரலற்ற மக்களுக்கான குரல் அவருடையது. ஆன்ற பெருமை வாய்ந்த சான்றோராக அவரை நான் மிகவும் நேசித்தேன். நாம் எல்லோரும் மரித்த பிறகும், அவரது படைப்புகள் நெடிய வாழ்ந்திருக்கும். என்றார்.
ஆக, பகுத்தறிவாளர்களை, மக்கள் தொண்டர்களை, மனித நேயப்பற்றார்களை மதவெறியர்கள் மாய்த்து விடலாம் என்ற திட்டம் முட்டாள் தனமானது. ஒருவரை அழித்தால் ஓராயிரம் பேர் உருவாவர். அவரது சிந்தனைகள் மேலும் பரவும், தீவிரமாகப்பரவும். மத்ததை மக்கள் வெறுப்பர். இச்செயல் அதிகமானால், மதவெறி கூட்டத்திற்கு எதிராய் மக்கள் எழுவர்! கருத்தைக் கருத்தால் சந்திக்காது, கொலையால் ஒழிப்பதுதான் இந்து மதத்துவம் என்றால் அது உங்களாலே ஒழிந்துபோகும்!