அய்யாவின் அடிச்சுவட்டில்…. 135 ஆம் தொடர்

ஆகஸ்ட் 01-15

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா பெரியார் நூற்றாண்டு விழாவை அளவிறந்த சிரத்தையோடும் மிகுந்த மரியாதையோடும் உணர்ச்சிப் பூர்வமாகக் கொண்டாடிய பெருமை திராவிடர் கழகத்தையே சாரும். இக்கொண்டாட்டங்களில் கொள்கை ரீதியான பிடிப்பும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் எடுப்பாகத் தெரிந்தது.

திராவிட கழகத்தினர் பொதுவாழ்வில் ஓர் அபூர்வ ரகம். பதவி, பட்டம், மாலை மரியாதை, பணம்_பவிசு ஆகிய அத்தனையும் பெறுவதற்காகவே பொதுவாழ்வில் இறங்குவது என்பது தர்மமாகவே ஆகிவிட்ட இக்காலத்தில், அவை அத்தனையையும் காலால் ஒதுக்கிவிட்டு மனித இழிவைப் போக்கி, மனித மரியாதையை என்ன விலைகொடுத்தும் நிலைநாட்டுவதற்காக ஓர் இயக்கம் இருப்பதென்றால் _ நீடிப்பதென்றால் அது வினோதமல்லவா? திராவிடர் கழகம் ஓர் அரசியல் ஸ்தாபனமல்ல.

ஆதார பலம்

பதவிகளை இக்கழகம் எந்த நாளிலும் நினைத்ததில்லை. இதுவே அதனுடைய ஆதார பலம்; பொது வாழ்வில் முழு ஆரோக்கியத்துடன் இன்றளவும் இருந்து வருவதற்கு மூலகாரணம் திராவிடர் கழகத்தின் கொள்கைகள் திட்டவட்டமானவை. இந்து மகாசபை, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டின் கொள்கைகளும் கோட்பாடுகளும் பொதுவாழ்வு நெறிகளும் எவ்வளவு திட்டவட்டமானவையோ, அதே அளவுக்குத் திட்டவட்டமானவை திராவிடர் கழகத்தின் கொள்கைகளும்.

இக்கழகத்தினர் பெரியாரைத் தவிரவேறு எவரையும் தங்களுடைய தலைவராக மதிக்காதவர்கள். முரட்டுத்தனமாக அல்ல. அறிவுப் பூர்வமாகப் பெரியாரை மட்டுமே தங்களுடைய ஒரே தலைவராக மதிப்பவர்கள். இந்த இயக்கத்தை ஒரு குடும்பத்தை போல நடத்திவந்த பெரியாரைத் தங்களுடைய இயக்கத் தந்தையாகவே பாவித்துப் பாசம் _ மரியாதை இரண்டும் கலந்த நிலையில் இக்கழகத்தினர் பெரியாரைத் தமது இதயத்தில் வைத்திருக்கிறார்கள்.

பெரியார் மறைந்த பிறகு திராவிடர் கழகம் உருப்படாது என்று மனப்பால் குடித்தவர்கள் மருளும் அளவுக்கு என்றும் காணாத ஒற்றுமையும் பாச உணர்வும் இந்த இயக்கத்தில் இப்பொழுது காணப்படுவது எடுப்பான காட்சி.

பாசம் – மேலும் இறுக்கம்

பெரியார் நூற்றாண்டு விழா இந்தப் பாசத்தை மேலும் இறுக்கியிருக்கின்றது. திராவிடர் இயக்கத்தின் அடிமரம் திராவிடர் கழகமே. கிளைகள் இரண்டு இல்லை; கிளை ஒன்று; அதிலிருந்து பிரிந்த கிளை இன்னொன்று; தி.மு.கழகமும் அ.இ.அ.தி.மு.கழகமும் அவை இரண்டும்.

அரசியல் மாறக்கூடியது. அந்த உலகத்தில் எதுவும் எப்பொழுதும் நிகழலாம். ஆகவே, தமிழர் நலனைக் காத்து தமிழரின் ஆதிபத்தியத்தை நிலைநாட்டும் பொறுப்பு நிரந்தரமாகத் தன்னுடையதே என்ற உணர்ச்சியுடன், கண்ணோட்டத்துடன் நடந்துவருவதே திராவிடர் கழகத்திற்கு கனத்தையும், கண்ணியத்தையும் சேர்க்கிறது.

பெரியாரின் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தி அதில் புதிய வேகத்தையும் பாய்ச்சிய பெருமை வீரமணிக்கே உரியது. பெரியாரிடம் இளம் பருவம் முதற்கொண்டு அவர் பெற்ற பயிற்சி; கொள்கைப் பத்தியத்தில் அவர் வளர்ந்த வளர்ச்சி; தாராள சிந்தனை; ஓயாது சுரந்த பெரியாரின் அறிவுக் கூடத்தில் அவர் பெற்ற தேர்ச்சி ஆகிய மூன்றும் சேர்ந்து இளைய உடலின் மீது முதிர்ந்த மெரு

கேறிய தலைமையை உருவாக்கியிருக்கின்றது அவருடைய பிரதிகூலம் நிச்சயமாக அவருடைய இளமைதான்.

கொள்கைப் பத்தியம்!  ஆனால், வீரமணியோ அதுதான் தன்னுடைய அனுகூலம் என்கிறார். அது எப்படி? வயதில் அவர் இளையவராய் இருப்பதால் எவரிடத்திலும் பணிவையும் அறிவார்ந்த அடக்கத்தையும் இயல்பாக காட்டமுடிகின்றது. இது மற்றவர் நெஞ்சில் வீரமணிக்கு கனமான இடத்தை ஏற்படுத்தித் தருகின்றது. மூன்றாம்தர அரசியல்வாதிகளே எஜமான் தோரணையில் மற்றவர்களிடம் நடந்துகொள்வது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக இருக்கும்பொழுது முதல்தரத் தலைவர் ஒருவர் அடக்கத்துடன் நடந்து கொள்வதென்பது அபூர்வ காட்சியல்லவா?

கற்பனையும் இல்லை

பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு வகையான கருத்து அரங்குகளையும், திராவிடர் கழகச் சார்பில் வீரமணி முன்னின்று நடத்தினார். இவற்றில் தமிழகத்தின் பேரறிஞர்கள் சிந்தனையாளர்கள் பங்கு கொண்டார்கள். இந்த அரங்குகளில் வீரமணி நிகழ்த்திய உரைகளை செவிமடுத்தபோது இப்பொழுது புதிய வீரமணியே பரிணமித்து வருகிறார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அவருடைய நெஞ்சில் கொள்கைகள் கனிந்து புதிய மணத்தை வீசுகிறது. மிகுந்த லாவகத்துடனும், தெளிவுடனும் அற்புதமாகப் பேசுகிறார். தமிழ் மண்ணில் பெரியார் விழாவை எவருமே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு வெகு சிறப்பான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்த வீரமணி இப்பொழுது மலேசியாவில் நடைபெறும் பெரியார் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கு கொள்கிறார். சென்னையிலிருந்து புறப்பட்ட பொழுது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் திரண்டு நின்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். வீரமணி தமிழினத்தின் தூதராக பெரியாரின் வாரிசாக கடாரத்துக்குப் புறப்பட்டார். அவரை வாழ்த்தி கருணாநிதி ஒரு அருமையான சால்வையைப் போர்த்தி வழியனுப்பி வைத்தார்.

அரசியல் கட்சிகள்

பெரியார் நூற்றாண்டு விழாவை தமிழினம்  ஒரே மூச்சோடு ஒரே நினைவோடு கொண்டாடிய போதிலும் அரசியல் கட்சிகள் இதில் விவேகத்துடன் நடந்துகொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக இரண்டு காங்கிரசும் ஜனதாவும் இதில் நடந்துகொண்ட முறை எதிர் காலத்திலாவது தமிழ்மண்ணில் இவை வேர்விட்டு நிற்க முடியுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள எல்லா கட்சிகளும் பெரியார் நூற்றாண்டு விழாவை உரிமையுடன் கொண்டாடியிருக்க வேண்டும். ஏனெனில், அவர் கட்சி கடந்த சமுதாய புரட்சி வீரர். லாலா லஜபதிராயின் விழாவை கொண்டாடிய காங்கிரசுக்காரர்கள் பெரியாருக்கென ஏன் தனியாக விழா எடுக்கவில்லை?

தமிழ்நாட்டில் காங்கிரசை ஒரு காலத்தில் கட்டியவரே அவர்தான். ஜனதாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராமச்சந்திரனோ இதில் ஏனோதானோ என்று நடந்துகொண்டார். நூற்றாண்டு விழாவில் ஜகஜீவன் கலந்துகொண்ட பொழுது அவர் சென்னையில் இருந்தும் விழாவுக்கு வரவில்லை. ஆனால், ராஜாஜி விழாவுக்கு ஓடோடிப் போய் தோத்திரங்களைப் பாடுகிறார். இதையெல்லாம் பார்க்கும்பொழுது அகில இந்தியக் கட்சிகள் அனைத்துமே தமிழ் மண்ணில் வேர்காய்ந்து விழுந்து விடுகின்ற நாள் வெகு தூரத்தில் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில், தமிழகத்துப் பொதுவாழ்வில் உஷ்ணமாகவும், காற்றாகவும் இருந்துவருவது பெரியாரின் சிந்தனைக் கனலும், மூச்சுமே. இதைப் புரிந்து கொள்ளாத அரசியல் சக்திகள் தமிழர் நெஞ்சில் வேர்விட முடியுமா? என்று அன்று தமிழ் முரசு இதழ்  வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

****
நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர், தந்தை பெரியார் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டார்கள் என்றவுடன் பார்ப்பனர்கள் அர்ச்சனைகளை தொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

நடைபாதைக் கோயில்களை இடித்துவிட வேண்டும் என்று ஒரு நீதிபதி பேசலாமா? என்று எகிறிக் குதித்தனர்.

ஆம், நீதிபதிதான் பேசினார். ஏன் எனில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்துக்குப் புறம்பாக, முன் அனுமதி எதுவும் பெறாமல் உண்டியல் கொள்ளைகளுக்காக நடைப்பாதைகளில் கோயில் அமைப்பது சட்டத்துக்கு விரோதமா? இல்லையா? சட்டத்தைப் பேணும் பொறுப்பில் இருப்பவர்கள் இதைச் சுட்டிக்காட்டாமல், இருக்க முடியுமா? என்ற கேள்வியோடு துள்ளாதே ஆரியமே! என்று தலைப்பிட்டு விடுதலையில் தலையங்கம் 28.9.1978இல் எழுதப்பட்டது.

துள்ளாதே ஆரியமே! – தலையங்கம்

மதச்சார்பற்ற தன்மை (Secularism) என்பதற்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் என்ன பொருள்? மதச்சார்பின்மை என்றால், மதத்துக்கு சம்பந்தமில்லாத, அப்பாற்பட்ட தன்மை என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

உலகத்தில் மதச்சார்பின்மை பற்றி சொல்லிக்கொண்டிருக்கின்ற நாட்டில், எல்லா மதத்தினருக்கும் சமவாய்ப்பு என்ற மோசடி வியாக்யானத்தை இந்தக் கேடுகெட்ட நாட்டில் சொல்லிக்கொண்டிருப்பதுபோல வேறு எங்கேயாவது சொல்லியிருக்கிறார்களா? மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமாக நீதிபதிகள் கோயிலுக்குப் போகலாமா?

ஒரு மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் அரசாங்கப் பரிவாரங்களோடு, வர்ணாசிரமத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் தனது ஜாதிக்காரனைத் தவிர மற்ற ஜாதிகாரர்களுக்கு தனது பதவியை நெருங்குவதற்கு உரிமை கிடையாது என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் பச்சை வர்ணாசிரம வெறிபிடித்த சங்கராச்சாரியாரின் காலடியில் விழுந்து தரிசனம் பெறலாம். அய்யாவின் அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிவிட்டார் என்பதற்காக, நடைப்பாதைக் கோயிலை இடித்துவிட வேண்டும் என்று ஒரு நீதிபதி பேசலாமா? என்று நீட்டி முழங்கும் பார்ப்பனர்களுக்காகச் சொல்கிறோம்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமைக்காக தந்தை பெரியார் போராடியதால்தான் எங்களைப் போன்றவர்கள் உயர்நிலைக்கு வரமுடிந்தது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொல்கிறார்கள் என்றால் அதிலே என்ன தவறு?

என்னுடைய தந்தையும், தாயும் எனக்காக பாடுபட்டிருக்காவிட்டால், ரத்தம் சிந்தியிருக்காவிட்டால் நான் இந்த அளவு முன்னேறியிருக்க முடியாது என்று சொல்வது தவறா?
பெரியார் ஜாதி ஒழிப்புப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பு, நீதிமன்றத்தில் ஜாதி வெறி தாண்டவமாடியதா? என்று ஏதோ வானத்திலிருந்து நேற்றுதான் பூமியிலே குதித்ததைப் போல கேட்கும் பார்ப்பனர்களுக்கு சொல்லிக்கொள்கிறோம்; ஆமாம்!

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு, அவர்கள் ஊட்டிவிட்ட இன உணர்ச்சி மங்காது, மறையாது, மேலும் சுனையேற அவர்கள் நாலுகால் பாய்ச்சல் பாயட்டும் _ தமக்கு நல்லதுதான்!

நடைபாதைக் கோயில்கள் – தலையங்கம்

4.10.1978இல் நடைபாதைக் கோயில்கள் என்ற தலைப்பில் அரசுக்கு நமது வேண்டுகோள்! என்ற தலையங்கம் அன்று நான் விடுதலையில் எழுதினேன். அந்த தலையங்கத்தில், தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய அரசு வெளியிட்ட அஞ்சல்தலை வெளியீட்டு விழாவில் சென்னையில் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு திரு-.எஸ்.மோகன் அவர்கள் தலைமையுரையில் நடைபாதைக் கோயில்களை தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும். தந்தை பெரியார் அவர்களுக்கு தமிழக அரசினையே காணிக்கை ஆக்கினார் அண்ணா.

இந்த அரசு குறைந்தபட்சம் அய்யா அவர்களது நூற்றாண்டு விழாவில் இதனையாவது செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நடைபாதைக் கோயில்களை அப்புறப்படுத்த தாம் கூறுவது சட்டப்படி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒன்றினை ஆதரமாக வைத்தேயாகும் என்றும் தெளிவுப்படுத்தினார்.

அர்ச்சகர் சட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த தீர்ப்பின்படி, ஆகம விதிப்படி அமைக்கப்பட்டவைகளே கோயில்கள் என்பதால், நடைபாதைக் கோயில்கள் அதன் கீழ் வராது. எனவே, அகற்றிட வேண்டும் என்றும் மிகவும் பொறுப்போடும் ஆதாரபூர்வமாகப் பேசினார்.

1973ஆம் ஆண்டு தமிழக அரசின் உள்ளாட்சித் துறை (ஸி.ஞி.லி.கி. ஞிமீஜீணீக்ஷீனீமீஸீ) வெளியிட்டுள்ள ஓர் ஆணையை, இன்றைய அரசு ஆணைப்படியே, நடைபாதைக் கோயில்கள் அகற்றப்பட வேண்டும். அரசு ஆணைகளைப் போட்டுவிட்டு சும்மா இருக்கக் கூடாது.

நடைபாதைக் கோயில்களை அகற்ற அரசு தயங்கி நின்றால், வெகுவிரைவில் அதற்குப் பக்கத்திலோ அல்லது எதிரிலோ தந்தை பெரியார் அவர்களது கடவுள் மறுப்பு வாசகங்களைக் கொண்ட கல்வெட்டுகளை நாம் அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்பதையும் அரசுக்கு உறுதியாகவும் அடக்கத்துடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். பெரியார் நூற்றாண்டில் இப்பணி தீவிரமாக நடைபெறும் என்று நாம் அன்றே அரசுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தோம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *