பெண்கள் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தால், அவர்கள் கருப்பைப் பாதிக்கப்படும் என்று படத்துடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பெண்களை இழிவானவர்களாக, அடிமைகளாக, உரிமையற்றவர்களாக வைத்திருக்க ஆணாதிக்கச் சமுதாயமும் ஆரிய சனாதனிகளும் பலவற்றைக் கற்பித்தனர்.
பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது; படிக்கக் கூடாது, வேகமாய் பேசக் கூடாது, ஆண்களுக்கு எதிரில் உட்காரக் கூடாது; கால்மேல் கால்போட்டு உட்காரக் கூடாது என்று பலக் கட்டுப்பாடுகள் விதித்தனர்.
இவற்றையெல்லாம் தந்தை பெரியாரின் பிரச்சாரத்தால் தகர்த்து, பெண்கள் ஆண்களுக்கு நிகராய் நடை, உடை, கல்வி, பணியென்று வந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னாளில் செய்த மோசடி, முட்டாள் செயல்களுக்கெல்லாம், தப்புத்தப்பாய் அறிவியல் காரணங்களைச் சொல்லி அர்த்தம் கற்பிக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். அந்த வகையில் ஒரு முயற்சிதான் மேற்படிச் செய்தியே ஒழிய அதில்உண்மை ஏதும் இல்லை!
பெண்கள் கருப்பை இருப்பது வயிற்றுப் பகுதியில் (இடுப்பிற்கு மேல்) கால்மேல் கால் போடும்போது, கருப்பை எவ்வகையிலும் அழுத்தப்படுவதில்லை. எனவே, காரணமேயில்லாத ஒரு காரணத்தைக் கூறுவது கண்டிக்கத்தக்கது.
இதுகுறித்து மருத்துவர் சிவ.மஞ்சுளா M.D., D.G.O., அவர்களைக் கேட்டோம்.
பெண்கள் கால்மேல் கால் போட்டால் கர்ப்பப்பை பாதிக்கப்படும் என்று படித்ததும் ஆச்சரியமாய் இருந்தது. கால்மேல் கால் போடுவதற்கும் கர்ப்பப்பை பாதிக்கப்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கால்மேல் கால் போடுவதால் கர்ப்பப்பை பாதிக்கப்படாது. பெண்கள் ஆண்களைப் போன்று வேண்டுமானால், வசதிப்படி கால்மேல் கால் போட்டு அமரலாம் என்று கூறியவர், கர்ப்பப்பை வேறு காரணங்களால்தான் பாதிக்கப்படும். அவற்றைத்தான் தவிர்க்க வேண்டும் என்று கூறி அக்காரணங்கள் சிலவற்றைக் கூறினார்.
1. சுகப்பிரவசத்தில் தாய் முக்கிமுக்கி குழந்தைப் பெறுவதால் கர்ப்பப்பை கீழிறங்க வாய்ப்புண்டு. 40 முதல் 45 வயதிற்குள் கர்ப்பப்பை கீழிறங்கலாம்.
2. ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் போதிய இடைவெளியின்றி அடிக்கடி பிள்ளை பெற்றால் கர்ப்பப்பை வலுவிழக்கும்.
3. பிரசவத்தின்போது ஆயுதங்களைப் பயன்படுத்தினால் கருப்பை வலுவிழக்கும்.
என்று விளக்கம் அளித்தவர், பெண்கள் கால்மேல் கால் போடக்கூடாது என்ற மூடக் கருத்தைப் பரப்புவது, பெண்ணடிமைத் தனத்தை மீண்டும் கொண்டுவரவே உதவும். எனவே, தவறான செய்திகள் பரப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
இதுபோன்றவற்றில் மருத்துவர்களைத் தவிர மற்றவர்கள் கருத்துக் கூறுவது கூடாது. பொதுமக்களும் மற்றவர்கள் கருத்தை நம்பக் கூடாது என்றார்.