அய்யாவின் அடிச்சுவட்டில்…. 133 ஆம் தொடர்

ஜூலை 01-15

வரலாற்றுச் சிறப்பை தனது மேல்முத்திரையாக்கிக் கொண்ட ஊர்வலம் பெரியார் திடலிலிருந்து தொடங்கியது என்றாலும், அதற்கான ஏற்பாடுகள் சென்னை நகர் முழுவதும் தொடங்கப்பட்டன.

ஊர்வல நேரம் நெருங்க நெருங்க கருப்புச் சட்டை நெடும் படை எங்கும் அலை மோத காணப்பட்டது. ஊர்வலத்தின் முகப்பாக, தந்தை பெரியார் அவர்களின் முக்கிய வாழ்க்கைக் கட்டங்கள், போராட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கும் வண்ண வண்ணப் படங்களுடன்  அலங்கார வண்டிகள் கண்டோர் கண்களில் நுழைந்து கருத்துகளில் தைத்தன!

ஊர்வலத்தின் ஆரம்பத்தில் கம்பீரமாக கழகக் கொடியைப் பறக்கவிட்டுச் சென்றனர். தோழர்கள் வெற்றிவீரன், வரதன், நாத்திகமணி, இளங்கோ, மாமல்லன் மற்றும் கருஞ்சட்டைத் தோழர்கள் மோட்டார் சைக்கிள்களில் பவனி சென்றனர்.

அடுத்து நான்கு குதிரைகளில் கழகத் தோழர்கள் ஆத்தூர் _ சென்னை வெங்கிடாசலம், பகுத்தறிவாளன் முதலியோர் கழகக் கொடி ஏந்தி கம்பீரமாகச் சென்றனர்!

அதற்கடுத்து அலங்கார வண்டிகள் _ அதன் பின்னே மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் முப்பது பெண்மணிகள் _ அவர்களின் கைகளிலே தீச்சட்டி _ முழக்கங்களோ, கடவுள் மறுப்பு வாசகங்கள்!

சென்னை வாழ் மக்கள் இருபுறமும் கூடி நின்று இக்காட்சியினைக் கண்டு மலைத்துப் போயினர்!

கழகத் தோழியர் மற்றும் தோழர்கள் மூன்று வரிசையாக நின்று, இராணுவ வீரர்கள் இவர்களிடம் அணிவகுப்பைக் கற்க வேண்டும் என்பது போல் கருஞ்சட்டை இளைஞர் அணி அணிவகுத்து வீரவலம் வந்த காட்சி இருக்கிறதே _ சில நாள்கள் வரை அதுபற்றி சென்னைவாழ் மக்கள் பேசிக்கொண்டே இருந்தனர். இவ்வளவு பெரிய இளைஞர் சந்ததி இவர்களிடம் இருக்கிறதே என்று அரசியல்வாதிகளிலிருந்து மதவாதிகள் வரை இடிந்து போயினர்!

அவ்வளவு பெரிய எண்ணிக்கை _ அவ்வளவு பெரிய கட்டுப்பாடு _அவ்வளவு பெரிய முழக்கங்கள்!

எல்லாவற்றையும்விட, இளைஞர்களை அடுத்து, தாய்மார்கள் இவ்வளவு நீளமான ஊர்வலப் பாதையைக் கொள்கை முழக்கமிட்டு, குழந்தை குட்டிகளுடன் வீரநடை போட்டு வந்த காட்சி இருக்கிறதே _ இது ஒரு புத்தம் புதிய பகுத்தறிவுப் புறநானூற்றுப் பதிப்பு என்றுதான் கூறவேண்டும்!

அடுத்து கருஞ்சட்டைத் தோழர்களின் அலை அலையான அணிவகுப்பு _ கொள்கை முழக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் பேருந்துகள், அவற்றிலும் ஒலிபெருக்கிகள் _ கொள்கை முழக்கங்கள் _ கலை நிகழ்ச்சிகள்!

வங்காள விரிகுடாவை நோக்கி இந்தக் கருஞ்சட்டைக் கடல் நெருங்க நெருங்க, கொள்கை உணர்ச்சிகளின் அலை மோதலை என்னென்று சொல்வது!

திருவல்லிக்கேணியில் உள்ள பைகிராப்ட்ஸ் சாலையை அப்பொழுது பார்க்க வேண்டுமே _ தரை தெரியவில்லை _ எங்கும் தலைதான் தெரிந்தது! சீரணி அரங்கம் வரை எத்திசை நோக்கினும் கருஞ்சட்டை! கருஞ்சட்டை!! கருஞ்சட்டை!!!
ஊர்வலத்திலே உடல் முழுவதும் எலுமிச்சம் பழங்களை அலகுகளால் குத்திக்கொண்டு, கையிலே கழகக் கொடியைத் தாங்கி, கால்களிலே கட்டைகளைக் கட்டிக்கொண்டு வேலூர் சத்துவாச்சாரி தோழர்கள் ஆடிவந்த காட்சி இருக்கிறதே _ சென்னை மக்களுக்கு மட்டுமல்ல _ பொதுவாக பெரும்பாலோருக்கு அது ஒரு புதிய காட்சிதான்!

கரூர் வட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் டி.டி.குமார் தலைமையில் கூர்மையான அரிவாள்மீது நின்று காட்டி, கடவுள் மறுப்பு வாசகத்தை ஓங்கி ஓங்கி ஒலித்தது. அதிர்ச்சியைத் தரும் மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சி அல்லவா? மண்ணச்சநல்லூர் கழகச் செயலாளர் அரங்கராசனின் வெற்றுடம்மை சவுக்கால் தோழர் ஒருவர் அடிப்பதும், அவர் அது கண்டு துவளாமல் கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழக்கமிடுவதும் பக்தர்களுக்குச் சரியான சாட்டை அடிகள்!

பேட்டைவாய்த்தலை மணிவண்ணன் வாயிலே மண்ணெண்ணையை ஊற்றி குபீர் என்று நெருப்பை பூமிக்கும் விண்ணுக்கும் கொப்பளிக்க விடுகின்ற காட்சி _ சாதாரணமானதா என்ன?

மற்றும் மயிலாட்டம், கரகம், பொய்க்கால் குதிரை, சிலம்ப விளையாட்டு, குத்துச்சண்டை இன்னோரன்ன சிறப்பு அம்சங்களும் ஊர்வலத்திற்குச் சிறப்பை ஊட்டின.

பிற்பகல் பெரியார் திடலிலிருந்து தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கருப்புச்சட்டை ஊர்வலம் பூந்தமல்லி நெடுஞ்சாலை(பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை), டாக்டர் டி.எம்.நாயர் பாலம், போலீஸ் கமிஷனர் ஆபிஸ் சாலை, சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பூங்கா, அய்யா சிலை, அண்ணா சிலை, கலைஞர் சிலை, ஆனந்த் தியேட்டர், உட்ஸ் ரோடு, ராயப்பேட்டை மணிக்கூண்டு, பைகிராப்ட்ஸ் சாலை வழியாக  கடற்கரை சீரணி அரங்கத்தை அடைந்தது!

ஊர்வலத்தின் இடையிடையே தி.மு.கழகத் தோழர்கள் தண்ணீர் வழங்க முன்வந்தும், தண்ணீர் குடிக்கத் தொடங்கினால் ஊர்வலத்தின் போக்குக்கு ஊறு விளையக்கூடும் என்று தண்ணீர்கூட அருந்த முனையாமல் கட்டுப்பாட்டோடு சென்ற அந்த நேர்த்தியை எந்த மொழியிலும் உள்ள எந்த வார்த்தைகளாலுமே வருணிக்க முடியாது.

கடற்கரை மணற்பரப்பா அது _ அல்லது கருஞ்சட்டையின் பாடிவீடா என்று கண்டோர் வியக்க கருஞ்சட்டைக் கடல் போட்டிக் கடலாக அங்கே பரந்து விரிந்து கிடந்தது.

ஒளி கொட்டும் விளக்குகள் ஒருபுறம் _ கம்பத்துக்குக் கம்பம் கழகக் கொடிகள் காற்றில் அசைந்தாடி வரவேற்கும் உணர்ச்சி மறுபுறம்.

இளைஞர் அணியினர் காவல் துறையினருக்கு வேலை இல்லாமல், அனைத்து அமைதிப் பணிகளையும் தாங்களே மேற்கொண்டு முறைப்படுத்தினர்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, மதுரை பி.எஸ்.செல்வா, கலைத்தூதன் இருவரும் மற்றும் மாயூரம் செல்வி அறிவுக்கொடி, ஆமூர் முனியாண்டி ஆகியோர் இயக்கப் பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தனர்.

ஜெகஜீவன் முழக்கம்!

பாபுஜி அவர்கள் என்னிடம் எப்பொழுதும் வற்றாத அன்பு காட்டுபவர். நம் அழைப்பை ஏற்று காலை அரசு விழா ஈரோட்டில், மாலை சென்னை விழா. கோவை சென்று விமானம் மூலம் வந்தார். உடல்நிலை பி.பி.அதிகம் என்றாலும் வந்தார். நானே மொழிபெயர்த்தேன்.

கடற்கரை நிகழ்ச்சிக்கு நான் தலைமை வகித்தேன். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிங்கமாகக் கர்ஜித்தார்! பெரியார் மறையவில்லை அவர் நம்மோடு வாழ்கிறார்! என்றார். அவர் விட்டுச் சென்ற பணிகளை, நாம் முடித்துக் காட்ட வேண்டியது நமது கடமை என்று அறைகூவலிட்டார்! பெரியார் ஒரு தலைசிறந்த சிந்தனையாளர்! என்று புகழாரம் சூட்டினார்.

இறுதியாக டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

பல்லவன் போக்குவரத்துக் கழகம் விசேஷமாகவிட்ட பெரியார் ஸ்பெஷல் பேருந்துகள் நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் திரும்ப வசதியாக இருந்தது!

அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட நீதிதேவன் மயக்கம் எனும் நாடகம் பெரியார் திடலில் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை குழுவினரால் நடத்தப்பட்டது. உத்திரமேரூர் கே.எம்.இராசகோபால் இராவணனாகத் தோன்றி நடித்தார். நாடகத்திற்கு அன்பில் தர்மலிங்கம் தலைமை வகித்தார்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் உரையாற்றுகையில், இளவயதில் சுதந்திர சிந்தனையாளராக பெரியார் வாழ்ந்தார். பெரியாரின் உயர்ந்த குணங்கள் எல்லாம் பின்பற்றத்தக்கவை; அவரது இலட்சியம் காங்கிரசில் நிறைவேறாது என்று அவர் நினைத்தபோது, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்று குறிப்பிட்டார்.

உ.பி.மாநிலம் சிங்சவுராஷ்யா எம்.பி. அவர்கள் தனது உரையில் (அய்யா அவர்களை உ.பி.மாநிலத்துக்கு அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியவர்) வட மாநிலத்திலும் பெரியார் வழியில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தொடங்குவோம் என்று குறிப்பிட்டார்.

இவரது ஆங்கில உரையை ஏ.எஸ்.வேணு தமிழில் மொழிபெயர்த்தார்.

கர்நாடக மாநில வருவாய் அமைச்சர் பசவலிங்கப்பா அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

பெரியாருக்குப் பின்னால் அவரது இயக்கம் செத்துப் போய்விடும் என்று நினைத்தவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். இவ்வளவு பெரிய மக்கள் சக்தி இந்த இயக்கத்திற்கு இருக்கிறது. அகில இந்தியாவிலேயே ஜாதி ஒழிப்பை வீட்டிலேயும் வெளியிலேயும் பின்பற்றுபவர்கள் பெரியார் இயக்கத்தினர்தான் என்று குறிப்பிட்டார். இவரது ஆங்கில உரையை பேராசிரியர் அ.இறையன் மொழிபெயர்த்தார்.

மேலும் கருத்தரங்கில் செட்டி நாட்டரசர் ராஜா சர்.முத்தையா செட்டியார், பேராசிரியர் மா.நன்னன், பொறியியல் அறிஞர் பி.குமாரசாமி, தா.பாண்டியன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி எம்.பி. ஆகியோர் உரையாற்றினர். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாத்திகக் கொள்கை கொண்ட கோவை செல்வி சந்திரலேகாவுக்கு பெரியார்_மணியம்மை கல்வி அறக்கட்டளை சார்பாக தங்கமெடலை கருநாடக அமைச்சர் பசவலிங்கப்பா வழங்கினார்.

விழாவில் கிழக்கு முகவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் இரா.சண்முகநாதன், செயலாளர் என்.ஆர்.சாமி, செங்கற்பட்டு மாவட்ட தி.க. தலைவர் சி.பிஇராசமாணிக்கம், செயலாளர் வி.கங்காதரன், மதுரை மாவட்ட தி.க. தலைவர் வாடிப்பட்டி சுப்பையா, செயலாளர் சுப்பிரமணியம், மேற்கு முகவை மாவட்ட தி.க. தலைவர் தே.சி.பி.சிதம்பரம், செயலாளர் ஒ.எம்.பாலன், கோவை மாவட்ட தி.க. தலைவர் இராமச்சந்திரன், தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர் எஸ்.பி.தெட்சிணாமூர்த்தி, செயலாளர் அ.குணசீலன், புதுக்கோட்டை மாவட்ட தி.க. தலைவர் அடைக்கலம், செயலாளர் பெ.இராவணன், தர்மபுரி மாவட்ட தி.க.தலைவர் எம்.என்.நஞ்சையா, செயலாளர் சு.தங்கவேலு, வடசென்னை மாவட்ட தி.க. செயலாளர் மு.போ.வீரன், நெல்லை மாவட்ட தி.க. செயலாளர் டி.ஏ.தியாகராசன், திருச்சி மாவட்ட தி.க.தலைவர் டி.டி.வீரப்பா, செயலாளர் கே.கே.பொன்னப்பா, தஞ்சை மாவட்ட தி.க.துணைத் தலைவர் காரை சி.மு.சிவம், தென்ஆற்காடு மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி நா.நடேசன், செயலாளர் இரா.கனகசபாபதி, பம்பாய் தி.க.தலைவர் ஆர்.ஏ.சுப்பையா, கருநாடக மாநில தி.க.தலைவர் அருச்சுனன், குடந்தை வட்ட தி.க. தலைவர் டி.மாரிமுத்து, சேலம் மாவட்ட தி.க.தலைவர் பொத்தனூர் க.சண்முகம், வடஆற்காடு மாவட்ட தி.க.செயலாளர் ஏ.டி.கோபால், காஞ்சிபுரம் ஜானகிராமன், திருப்பூர் அ.இறையன், கழக அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, இளைஞர் பிரிவுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், விவசாய_தொழிலாளர் பிரிவுச் செயலாளர் குடந்தை ஏ.எம்.ஜோசப், திராவிடர் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி, திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் திருச்சி என்.செல்வேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். அய்யா_அம்மா மறைவுக்குப் பின்னர் கழகப் பொதுச் செயலாளராகிய என்னுடைய தலைமையில் கட்டுப்பாட்டுடன் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம் என தோழர்கள் சூளுரைத்தனர்.

காப்போம் காப்போம் பெரியார் கொள்கை காப்போம்! அய்யாவின் பகுத்தறிவுக் கொள்கைகளை அகில முழுவதும் அஞ்சாது அயராது, அய்யா காட்டிய பாதையிலே நின்று ஆயிரம் இடர்வரினும் _ எத்தனை அடக்குமுறை வரினும் தொடர்வோம், செல்வோம், வெல்வோம், வெல்வோம், வெல்வோம் என்று சூளுரை எடுத்துக் கொண்டனர்!

இயக்க வரலாற்றில், இன எழுச்சி வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக, திருப்புமுனை தரத்தக்கதாக தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழா அமைந்திருந்தது என்றே குறிப்பிட வேண்டும்.

 

– கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *