காலையில் பட்டினியாக இருக்கக் கூடாது
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருக்கும் நம் வயிறு காலையில் காலியாக இருக்கும். அப்படியிருக்க உடனடியாகக் காலி வயிற்றுக்கு உணவு கொடுக்க வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் வழக்கமாகச் சுரக்கும் செரிமானச் சுரப்பு நீர்கள் இரைப்பையை அரித்துப் புண்ணாக்கிவிடும். இது குடல்புண் வர வழிவகுக்கும். மேலும், உடலும், உடல் உறுப்புகளும் சோர்வு அடையும். எனவே, காலை உணவைக் கட்டாயம் உண்ண வேண்டும்.
காலைச் சிற்றுண்டி என்பர். அது சரியல்ல. காலையில்தான் அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிறு காலியாகவுள்ளதால் மட்டுமல்ல, உழைக்கத் தொடங்கும் நேரம். எனவே, வேண்டிய அளவு சக்தியளிக்கும் உணவு தேவை. மதிய உணவு அதைவிடக் குறைத்து உண்ண வேண்டும். பலர், இரவில்தான் அதிக உணவு எடுப்பர். குறிப்பாக, இறைச்சி, மீன் உணவுகள் அதிகம் உண்பர். இது அறியாமை. இரவு ஓய்வெடுக்கப் போகும்போது அதிகம் உண்பது உடலில் கொழுப்பாகவும், சர்க்கரையாகவும் சேர்ந்து, பல நோய்களை உருவாக்கும்.
இரு முக்கோணங்கள்
உணவு சார்ந்தும் உடல் சார்ந்தும் இரண்டு முக்கோணங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவு முக்கோணம்
காலையில் அதிக உணவு, மதியம் அதைவிடக் குறைவு, இரவு மிகக் குறைவு.
உடல் முக்கோணம்
உடலின் தோள்பாகம் விரிந்து இருக்க வேண்டும். இடைப்பகுதி குறுகியிருக்க வேண்டும். கால் பகுதி மேலும் மெலிந்து இருக்க வேண்டும். மாறாக, வயிறு பெருத்துத் தோள் ஒடுங்கியிருப்பது நலக்குறைவின் அடையாளம்.
எனவே, இந்த இரண்டு முக்கோணங்களையும், உணவு, உடல்நலம் இவற்றின் அளவுகோலாகக் கொண்டு, அதற்கேற்ப உடலையும், உணவையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
வயிறு முழுக்க உணவு உண்ணக்கூடாது:
எப்போதும் வயிறு நிறைய உண்ணக்கூடாது. அவ்வாறு உண்பதுஇரைப்பைச் சுருங்கி விரிவதைப் பாதிக்கும். உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
அரைவயிறு உணவு, கால்வயிறு நீர், கால்வயிறு காலியாக இருக்குமாறு உண்ண வேண்டும்.
கடினமான உழைப்புச் செய்யக் கூடியவர்கள் இறைச்சி, கொழுப்பு, அரிசி உணவுகள் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுழைப்பு இல்லாத பணி செய்வோர், காய்கறி, கீரை உணவுகளை எடுத்துக் கொண்டு, கொழுப்பு உணவுகளை, அரிசி உணவுகளைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நேரம் கடந்து உண்ணக்கூடாது
பசிக்கும் முன்னும் உண்ணக்கூடாது
நேரங் கடந்து உண்பதால், குடற்புண்ணும், உடற்சோர்வும், மயக்கமும் ஏற்படும். பசிக்கும் முன்பே உண்பதால் முன்பு உண்ட உணவு செரிக்காத நிலையில், புதிய உணவு கலந்து செரிமானப் பாதிப்பையும் நோய்களையும் உருவாக்கும். எனவேதான், பசித்துப் புசி என்றனர். அதில் ஒரு சின்ன திருத்தம். பசித்துப் புசி என்பதை, பசித்ததும் புசி என்றால் மிகச் சரியாக இருக்கும். காரணம், பசித்த பின்னும் நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பது தவறு என்பதால் பசித்ததும் புசி என்பது சரியானது. இவ்வாறு சொல்லும்போது பசித்த பின் உண்ண வேண்டும் என்பதும் பசித்ததும் உண்டுவிட வேண்டும் என்பதும் அடங்கிவிடுகிறது.
பதற்றத்தோடும் விரைவாகவும் உண்ணக் கூடாது
மனஇறுக்கத்தோடும், பதற்றத்தோடும் உண்பது மிகவும் கேடு பயக்கும். உண்ணும்போது சுவைத்து மெல்ல, நிதானமாக, நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்போதுதான் உணவு நன்றாக அரைக்கப்படுவதுடன், அது செரிப்பதற்குத் தேவையான உமிழ்நீரும் உணவுடன் கலக்கும்.
இதைத்தான், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர். பதற்றத்தோடு, மன இறுக்கத்தோடு, உண்ணும் உணவைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் அள்ளி வாயில் போட்டு அவசர அவசரமாய் விழுங்கினால், அவ்வுணவு உள்ளுக்குச் சென்று கேடே விளைக்கும்.
காரணம், உணவு சரியாக மெல்லப்பட்டிருக்காது; உணவுடன் உமிழ்நீர் போதிய அளவு கலந்திருக்காது. உள்ளே சென்ற உணவு செரிக்க நேரம் ஆகும். இதனால் செரிப்பு உறுப்புகளுக்குக் கூடுதல் வேலை; மனஇறுக்கத்தாலும், பதற்றத்தாலும், இரத்த அழுத்தத்தாலும் உள்ளுக்குள் தேவையற்ற சுரப்புகள் சுரந்து உணவு நஞ்சு போல மாறும். எனவே, உண்ணும்போது நிமானமாக, மகிழ்வாக, நன்றாக மென்று உண்ண வேண்டும்.
உண்ணும்போது பேசக்கூடாது
உண்ணும்போது கவனம் முழுவதும் அதிலே இருக்க வேண்டும். சுவைத்து மென்று மகிழ்வோடு உண்டால் பேசத் தோன்றாது. மாறாகப் பேச்சு இடையூறாக இருக்கும்.
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு சாப்பிடுவதும் சரியல்ல. படித்துக் கொண்டு உண்பதும் உகந்ததல்ல. நடந்து கொண்டு, படுத்துக் கொண்டு, சாய்ந்து கொண்டு உண்பதும் ஏற்றதல்ல. நமது தமிழர் மரபுப்படி தரையில் கால்மடக்கி அமர்ந்து உண்பதே நன்று.
சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது
இரவு உணவிற்குப் பின் குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்தே தூங்க வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. பகல் உணவிற்குப் பின் அரைமணி நேரம் கழித்து ஒரு 10 நிமிடங்கள் படுத்து இளைப்பாறினால் புத்துணர்ச்சியுடன் மீண்டும் உழைக்க முடியும். பகலில் நீண்ட நேரம் உறங்கக் கூடாது.
இரவு 12 மணி வரை கண்விழிக்க வேண்டியவர்கள். பிற்பகல் இரண்டு மணி நேரம் தூங்கியெழுவது நல்லது. இரவில் பணியைச் சுறுசுறுப்புடன் பணியாற்ற அது பயன்படும். மாறாக, இரவில் 7 மணி நேரம் தூங்கியவர்கள் பகலிலும் 2 மணி நேரம் உறங்குவது கூடாது. அவ்வாறு உறங்கினால் உடல் பருக்கும்; நோய்க்கும் இடம் கொடுக்கும். இரவு 11 மணிக்கு மேல் விழிக்காமல் இருப்பதும் காலை 5 மணி வரை உறங்குவதும் கட்டாயம்.