பெரியாரின் புரட்சிப் பாரம்பரியத்தை மீண்டும் புதுப்பித்துத் தொடங்க வேண்டிய தேவை

ஜூலை 01-15

வட மாநிலங்களில் தடம் பதிக்கும் தந்தை பெரியார்

பெரியாரின் புரட்சிப் பாரம்பரியத்தை மீண்டும் புதுப்பித்துத் தொடங்க வேண்டிய தேவை

– சத்யசாகர்

வளர்ந்து வரும் இந்து தீவிரவாதம், மதவாதம் மற்றும் மதச்சிறுபான்மை மக்களின் அரசமைப்புச் சட்டப்படியான உரிமைகளின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிப்படையான தாக்குதல்கள் ஆகியவற்றைக் கண்டு பேரச்சம் அடைந்துள்ள மதசார்பின்மைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ள இந்திய மக்களும்,  பரந்த மனம் கொண்டோரும் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றோரையும்,  இடதுசாரி வட்டத்தினர் பகத்சிங்கைப் போன்றோரையும், நினைவு கூர்ந்து தங்களின் துணைக்கு அழைக்கின்றனர்.

இவர்கள் எல்லாம் நவீன இந்திய வரலாற்றில்,  மதசகிப்புத் தன்மை, அஹிம்சை,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும்   சமூகப் புரட்சியின் அடையாளங்களாக முன்வைக்கப்படுபவர்கள் ஆவர்.

ஆனால் பெரியார் என்று அனைவராலும் நன்கு அறியப்பட்டுள்ள, தென்னிந்தியாவில் திராவிட இயக்கத்தினைத் தோற்றுவித்தவரான ஈ.வெ. ராமசாமி நாயக்கரை வெகுசிலரே நினைவில் கொண்டிருப்பர். பெரியாரின் தத்துவம், செயல்பாடுகள், மக்களாதரவைத் திரட்டும் வழிமுறை ஆகியவற்றைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல், இந்துத்துவா என்ற கருத்தையோ, குழப்பம் மற்றும் சிக்கல் ஏற்படுத்துவதையோ, மதவெறி மற்றும் அவற்றைப்  பிரதிபலிக்கும் மேல்ஜாதி ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போராட முடியாது என்பதே எனது கருத்தாகும்.

ஜாதி நடைமுறையை உருவாக்கிக் கட்டிக் காக்கும் வர்ணாசிரம தர்மம் பெரியாரின்  மாபெரும் பங்களிப்பே, மனிதர்களின் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் அல்லாமல், அவர்களது பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிக்கும் இந்து மதத்தின் ஜாதி நடைமுறையை உருவாக்கிக் கட்டிக் காத்துவரும் வர்ணாசிரம தர்மத்தை முழுவதுமாகத் தோலுரித்துக் காட்டியதுதான் என்பதில் எவருக்கும் எந்த வித அய்யப்பாடும் இருக்கவே முடியாது.. இத்தகைய ஜாதி பாகுப்பாட்டினை முதன் முதலாகச் சுட்டிக் காட்டியவர் இவர்தான் என்று கூறமுடியாத போதிலும்,  இந்திய சமூகத்தினை உயர்ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று பிரித்து வைத்திருந்த இந்து மதத்தின் யதேச்சதிகாரத்தை மிகுந்த ஆற்றலுடன் எதிர்த்து, விமர்சித்து, கண்டித்தவர் பெரியார்தான்.

மற்றவர்களால் தான் எவ்வாறு மதிக்கப்படவேண்டும் என்று ஒருவர் விரும்புகிறாரோ, அது போலவே மற்றவர்களையும் மதிக்கவேண்டும். இந்துக்களைப் பொருத்தவரை இது ஒரு புரட்சிகரமான கொள்கையாகும். இத்தகைய மாற்றத்தை எந்த சீர்திருத்தத்தினாலும் ஏற்படுத்தமுடியாது; புரட்சியின் மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும். திருத்தவோ, மாற்றவோ முடியாமல் இருக்கும் சில விஷயங்கள் ஒழிக்கப்படத்தான் வேண்டும். பார்ப்பனீய இந்து மதமும் அவற்றில் ஒன்றாகும் என்று பெரியார் கூறியிருக்கிறார்.

பார்ப்பனர்களின் ஆதிக்கமும், இட ஒதுக்கீட்டு நடைமுறையும்

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய தமிழ்நாட்டின் அரசியல், நிர்வாகம் மற்றும் கல்வி முறை ஆகியவை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்ததைப் போன்றே, மிக அதிக அளவில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. எடுத்துக் காட்டாக பார்ப்பனர்கள் மொத்த மக்கள் தொகையில் 3.2 விழுக்காட்டினராக மட்டுமே இருந்த போதிலும், 1870 மற்றும் 1900 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பயின்ற  பல்கலைக் கழக பட்டதாரிகளில் பார்ப்பனர்கள் மட்டுமே 70 விழுக்காட்டினராக இருந்தனர். அது போலவே துணை ஆட்சியர் பணியிடங்களில் 55 விழுக்காட்டினராகவும்,  துணை நீதிபதி பணியிடங்களில் 82.3 விழுக்காட்டினராகவும்,  மாவட்ட முன்சீப்பு பணியிடங்களில் 72.6 விழுகாட்டினராகவும் பார்ப்பனர்கள் இடம் பெற்றிருந்தனர். இதற்கு நேர்மாறாக, மக்கள்

தொகையில் பெரும் அளவினராக இருந்த போதிலும்,  பார்ப்பனர் அல்லாத மக்கள் இப்பணியிடங்களில் முறையே 2.5 விழுக்காடு, 16.7 விழுக்காடு மற்றும் 19.5 விழுக்காடு பணியிடங்களை மட்டுமே பெற்றிருந்தனர். இத்தகைய பெரிய அளவுக்கு பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலவியதற்கான காரணமே,  ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்னர் பாரம்பரியமாக அவர்களுக்கு கிடைத்து வந்த சமூக ஆதாயத்துடன், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பெரும் எண்ணிக்கையில் மிக எளிதாகவும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகவும்,  ஆங்கிலக் கல்வியை ஊக்கத்துடன் கற்றுத் தேர்ந்ததுதான். அனைத்து அரசுப் பணியிடங்களிலும், கல்வி நிறுவன சேர்க்கையிலும் பார்ப்பனரல்லாத மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ற விகிதாசாரத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு கடுமையாக சவால் விடுத்த மற்ற அரசியல் குழுக்களுடன் பெரியார் கைகோர்த்துக் கொண்டார். இத்தகைய இட ஒதுக்கீட்டிற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து பார்ப்பனர்கள் அரசியல் செய்வதில் ஈடுபட்ட போதிலும்,  பின்னர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்ற சென்னை மாநிலமே இது போன்ற இட ஒதுக்கீட்டினை இந்தியாவிலேயே முதன் முதலாக 1928 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

பின்னர் 1950 ஆம் ஆண்டில் இத்தகைய இட ஒதுக்கீடுகள் அரசமைப்பு சட்டப்படி செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் காரணமாக, வலுவிழந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு போன்ற சிறப்பு சலுகைகள் அளிக்கத் தேவையான சட்டங்களை இயற்றும் உரிமையை அளிக்கும் முதல் அரசமைப்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசுக்கு ஏற்பட்டது.

வேத, புராண, சாஸ்திர, இதிகாசங்கள் ஜாதி நடைமுறையை நியாயப்படுத்துகின்றன.

பணியிட வாய்ப்புகளிலும், கல்வி கற்பதிலும் பார்ப்பனரல்லாத மக்களும் போட்டியிடுவதற்கு ஏற்றவாறு சமஅளவிலான போட்டி முறையை ஏற்படுத்துவதுடன், இந்த ஜாதி நடைமுறையை நியாயப்படுத்தி வரும்  வேதங்கள், புராணங்கள் போன்ற இந்து சாஸ்திரங்கள்,  இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் போன்ற  ஜாதி நடைமுறைக்கான கோட்பாட்டு அடித்தளங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று பெரியார் போராடினார். பெரியாரும், அவரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்தின் மற்ற அறிஞர்களும் இந்த வேதபுராண சாஸ்திர இதிகாசங்களில் பெரும் அளவில் நிலவும் முரண்பாடுகளையும், வேறுபாடுகளையும், ஒழுக்கக்கேடுகளையும் மிக விரிவாக எடுத்துக்காட்டி, ஜாதி நடை முறைக்கு இவை எவ்வாறு மத அங்கீகாரம் அளிக்கின்றன என்பதை நிலைநாட்டியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக,  இராமாயணத்தைப் பற்றிய ஒரு விரிவான விமர்சனத்தை திராவிடர் கழகம் வழங்கியதுடன், இந்திய பூர்வகுடிமக்களை மேற்படி அதாவது திராவிடர் எனப்படும் மக்களை -மத்திய ஆசியாவிலிருந்து வந்து குடியேறிய ஆரியர்கள் வெற்றி கொண்ட ஒரு கதையே இராமாயணம் என்று பெரியார் கூறுகிறார். கலாச்சாரப்படி ஆரிய இனத்தவரே மிக உயர்ந்தவர் என்ற மாக்ஸ் முல்லரின் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கொண்ட தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், தங்களது யதேச்சதிகாரத்தை நியாயப்படுத்துவதற்கான எதிர்ப்பை திராவிடர் இயக்கம் வெளிப்படுத்தியதுவே அதன் அரசியலில் ஒரு புதிய திருப்பு முனையாக அமைந்தது.

திராவிடர் இயக்கத்தினர் கூறும் ராமாயணக் கதையின்படி உண்மையில் ராமன் வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வந்த வில்லன்.  அவனது ஆக்கிரமிப்பால் அரக்கர்களின் அரசன் என்று அழைக்கப்பட்ட ராவணன் பாதிக்கப்பட்டான். திராவிடர் இயக்கத்தின் தோற்ற காலத்தில் எழுதப்பட்ட காவியமான ராவண காவியம் ராவணனின் சிறப்புகளையும், பெருமைகளையும் பாராட்டிக் கூறுகிறது. திராவிடர் கழகத் தீவிரத் தொண்டரும், திரைப்பட – நாடக நடிகருமான எம்.ஆர்.ராதா ராவணனை பெரும் கதாநாயகனாகக் காட்டும் கீமாயணம்  என்ற நாடகத்தை,  ராமாயணத்தைக் கிண்டல் செய்யும் வகையில் தயாரித்து நடத்தினார். திராவிடர்களை அரக்கர்களாகவும்,  ராமனின் கூட்டாளிகளை குரங்குகளாகவும், கரடிகளாகவும்   காட்டியதற்காக ராமாயணத்தின் நகல்களை எண்ணற்ற பொதுக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தொண்டர்கள் எரித்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இராவணனை இவ்வாறு உயர்வு படுத்தியது சமஸ்கிருத மொழி வழங்கப்படாத வட்டார கலாச்சாரத்தில் தமிழர்கள் தங்கள் பெருமையையும், கவுரவத்தையும் நிலை நாட்டிக் கொள்ளச் செய்ததுடன், பார்ப்பனீயத்திற்கு எதிரான ஒரு விமர்சனத்தையும் எதிர்ப்பையும் கட்டவிழ்த்துவிட்டது. இந்திய தேசியம் தன்னை ஆரியக் கலாச்சாரத்தினர் என்று பெருமைப்படுத்திக் கொண்டதால், அதனை மறுத்து தென்னிந்தியர் பதிலளிப்பது போல இந்த ராவண கதை அமைந்திருக்கிறது என்று திராவிடர் இயக்க அறிஞர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதுகிறார்.

மதம் மற்றும் கண் மூடித்தனமான மூட நம்பிக்கை, பழக்க வழக்கங்களை எதிர்த்த பெரியார் நவீன அறிவியல் ஆய்வு மற்றும் அறிவின் அடிப்படையிலான பகுத்தறிவு சிந்தனையை மக்களிடையே வளர்த்தார். குறிப்பாக கடின உழைப்பினால் மக்கள் ஈட்டிய பணத்தையும், பொருள்களையும் அர்த்தமற்ற சடங்குகளில் பாழாக்குவதையும்,  இந்து உயர் ஜாதியினரை மட்டுமே வளமாக்கும் வகையில் கோயில்களுக்காக நன்கொடைகள் அளிப்பதையும் பெரியார் கடுமையாகச் சாடினார்.

பொதுவாக பெரியார் மதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும்,  பார்ப்பனரல்லாத மக்கள் இந்து கோயில்களின் கருவறைக்குள் செல்வதற்காக அவர்களுக்கு இருக்கும் உரிமையை பெரியார் உறுதிபட ஆதரித்ததுடன், அவ்வாறு கருவறைக்குள் செல்லவிடாமல் அவர்களைத் தடுப்பது, மனித உயிர்கள் என்ற நிலையை அவர்களுக்கு அளிப்பதையே மறுப்பதாகும் என்று பெரியார் கூறுகிறார்.
சி.என். அண்ணாதுரையை முதல்வராகக் கொண்ட, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசினால்  அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த மக்கள் கோயில்களின் பூசாரிகளாக ஆகலாம் என்ற சட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக 1970 இல் கொண்டு வரப்பட்டது. தமிழ்மொழிப் பற்று, கலாச்சாரம், திறமை ஆகியவையே  திராவிட இயக்கத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று

திராவிட இயக்கத்தின் வெற்றிக்கான பல காரணங்களில் முக்கியமான ஒரு காரணம்,  தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் திறமையாகவும், நுண்ணறிவுடனும் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் இவ்வியக்கத் தலைவர்கள் மக்களை விழித்தெழச் செய்தனர் என்பதுதான். இவ்வியக்கத்தின் தலைவர்கள் திறமை வாய்ந்த பேச்சாளர்களாக இருந்தது மட்டுமல்லாமல், சிறந்த கவிஞர்களாகவும், இசைக் கலைஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும், நடிகர்களாகவும் கூட இருந்தனர். இந்திய அரசு தென்னக மாநிலங்களின் மீது இந்தி மொழியைத் திணித்ததை எதிர்ப்பதற்காக இவ்வியக்கத்துக்குக் கிடைத்த  வாய்ப்பு , இயல்பாகவே தமிழ் மொழியிலும் கலாச்சாரத்திலும் பெருமை கொள்ளுமாறு மக்களை எழுச்சி பெறச் செய்யப் பயன்பட்டது. இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்காக தனி திராவிட நாடு கோரியும் போராட்டம் நடத்துவேன் என்று பெரியார் அச்சுறுத்தினார்.

இந்தப் பிரச்சினையில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த மாபெரும் ஆதரவே, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை 1967 சட்டமன்றத் தேர்தலில்  மாநில ஆட்சியில் ஏற்றி வைத்தது. பிரிவினை கோரிக்கை பற்றிய அச்சம், இந்திக்கு எதிரான தீவிரமான போராட்டம் ஆகியவற்றின் காரணமாக திராவிடர் கழக இயக்கத்தின் கோரிக்கைகளைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, தமிழ்நாடு மாநிலத்திற்கு பொருளாதார நிலையிலும், அரசியல் நிலையிலும் பல சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு மத்திய அரசு உள்ளானது.

சமூக களத்தில், சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் பார்ப்பனர்கள் ஆற்றும் பங்கினைக் குறைப்பதற்காக பெரியார் சுயமரியாதைத் திருமண முறையை நடைமுறைப்படுத்தினார். இந்த நடைமுறையில் எந்த மதத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த ஜாதியைச் சேர்ந்தவரானாலும் பார்ப்பனர் மந்திரம் ஓதி எந்த வித மதச் சடங்குகளையும் செய்யாமல், கணவனும் மனைவியும் மாலை மாற்றிக் கொண்டு எளிய முறையில் திருமணம் செய்து கொள்ளலாம். இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் 1967 ஆம் ஆண்டில் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம் ஒன்றின் மூலம் சட்டப்படி செல்லுபடி ஆகும் என அறிவிக்கப்பட்டது.

பெரியாரின் பெண்ணியம்

உலகின் எந்தப் பகுதியிலும் அதுவரை பெண்ணியம் என்ற கருத்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே, தீவிர பெண்ணிய ஆதரவை முன் நிறுத்துவதாக  பெரியாரின் புரட்சி நிறைந்த கருத்துகள் அமைந்திருந்தன. எடுத்துக் காட்டாக,  பெண்களை இழிவுபடுத்தும் கற்பு என்னும் கருத்தைத் தாக்கி பெரியார், கற்பு என்பது பெண்களுக்கானது மட்டுமே என்று வலியுறுத்துவதும், அது ஆண்களுக்கு வலியுறுத்தப்படக்கூடாது என்று கூறுவதும் தனிப்பட்டவரின் சொத்துரிமை என்பதன் அடிப்படையில் உருவான கருத்தாகும். பெண்கள் ஆண்களின் உடைமை என்ற கண்ணோட்டமே, தற்போதைய பெண்ணின் நிலையை நிர்ணயிப்பதாகும் என்று கூறியுள்ளார்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கான உரிமையுடன் தாங்கள் விரும்பியவர்களை நேசித்து, தாங்கள் விரும்பியபடி வாழ்வதற்கான உரிமை பெற்றவர்கள் பெண்கள் என்ற கருத்துக்கு பெரியார் பெரும் ஆதரவு தருவது,  திராவிடர் கழக இயக்கத்தின் தீவிரத் தொண்டர்கள் பலருக்குக் கூட வியப்பளிப்பதாக இருப்பதாகும். இந்தப் பிரச்சினையைப் பற்றிய தனது கருத்தை விவரித்துக் கூறத் தவறிய பெரியார்,  அவரது சிந்தனைகளை வெளியிடாமல் தன்னுள்ளேயே வைத்துக் கொண்டார்.

ஒரு பெண்ணிய வாதியும், தீவிர பெரியார் பற்றாளரும் அறிஞருமான கீதா, அண்மையில்  நடைபெற்ற 19 ஆம் நூற்றாண்டு சமூக சீர்திருத்தவாதியான சாவித்ரிபா பூலே அவர்கள் நினைவு நாள் விழாவில் பேசும்போது,  இடஒதுக்கீட்டுக் கொள்கை, தீவிர நாத்திகம், தீவிர பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் ஆகியவற்றின் தீவிர ஆதரவாளராக பெரியார் மாற்றப்பட்டார். எனவே ஜாதி, நிலைவேறுபாடு, பாலினம், உடலின்பம் ஆகியவை பற்றிய கேள்விகள் அனைத்தும் மறந்து போன ஆவணக் காப்பகத்திற்குத் தள்ளப்பட்டு விட்டவையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் வளமாக வாழ்ந்த நாட்களுக்குப் பின்னர் காவேரியில் நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டுதான் இருந்தது. திராவிடர் இயக்கத்திலிருந்து தோன்றிய அரசியல் கட்சிகள் பல பிரச்சினைகளில் சமரசம் செய்து கொள்ளும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கெட்டுப் போயுள்ளன. இன்று  ஆளும் கட்சி அரசியல்வாதிகள் லஞ்ச, ஊழலுக்கும்,  ஜாதி வெறிக்கும்,  ஆணாதிக்க மனப்பான்மைக்கும்    புகழ் பெற்றவர்களாக ஆகியுள்ளனர். அண்மைக் காலங்களில்,  ஆரியர்களின் உயர்வு, இந்தி வெறி ஆகியவற்றின் மீதான வெறுப்பை வளர்க்கும் ஒருவர், பா.ஜ.க.யுடன் கூட்டணியும் அமைத்துள்ளார்.
பின்னர், இத்தகைய பல வழிகளிலும் பெரியாரின் பெருமை சிதைக்கப்பட்ட போதிலும்கூட,  ஜாதி, கல்வி, மொழிப் பற்று, பாலின உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் நவீன இந்திய வரலாற்றில், மாபெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது திராவிடர் இயக்கம்தான் என்பதை உறுதியாகக் கூற இயலும். இன்றும் சமூகத்திலும், அரசியலிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கும், எந்த வழியிலும் கலாச்சார உயர்வுக்குத் தங்களை முன்னோடிகளாக பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் நிலைக்கும் பெரியாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

தமிழ் மொழியைப் பற்றி பெருமை பாராட்டுவதன் விளைவாக தாய்மொழியில் பரவலாகக் கல்வி அறிவு பெருகியதுடன்,  திராவிட இயக்கத்தின் சமதர்மக் கோட்பாட்டு உணர்வுகள் காரணமாக இன்று நாட்டிலேயே மிகச் சிறந்த ஆரம்ப சுகாதார மய்யக் கட்டமைப்பைப் பெற்றிருக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைவதற்கு மாநிலத்திற்கு உதவியுள்ளன. பல கடுமையான முயற்சிகளுக்குப் பின்னும், இந்துத்துவ சக்திகள் எளிதாக வளர முடியாத நிலை தமிழ்நாட்டில் நிலவுவதால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மதக் கலவரங்கள் நடைபெறும் மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

இத்தகைய சாதனைகள் அனைத்தும் பெரிதும் எந்த வித வன்முறை சம்பவங்களும் அற்ற இயக்க செயல்பாடுகளினால் எட்டப்பட்டவையே.  அதற்கான ஆற்றல், பலம் நன்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட விவாதங்கள்,  படைப்புணர்வு மிக்க தகவல் தொடர்பு தொழில் நுட்பங்கள்,  பொதுமக்களின் ஆதரவு திரட்டல் ஆகியவற்றில் இருந்தே கிடைக்கிறது. இவ்வகையில், ஜாதி நடைமுறை என்னும் காட்டாண்டித்தனத்தை எதிர்த்துப் போரிடுவதற்கும், மிகச்சிறு எண்ணிக்கையிலான உயர்ஜாதி இந்துக்களின் ஆதிக்க உணர்வுகளையும் கடந்து நியாய உணர்வையும், ஜனநாயகத்தையும்  நிலைபெறச் செய்வதற்கும், திராவிடர் இயக்கம் இந்தியா முழுமைக்கும் ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

என்றாலும்,  திராவிடர் இயக்க பாரம்பரியத்தில் வகுப்பு பிரச்சினைகள் என்னும் ஒரு களமும் இடம் பெறவேண்டிய தேவை உள்ளது. 1930 ஆம் ஆண்டில் பெரியார் ருஷ்ய நாட்டுக்குச் சென்றுவிட்டு வந்த போது,  அவரை மிகமிகக் கவர்ந்த நாடாக அது விளங்கியதுடன்,  சமதர்மக் கொள்கைகள், கோட்பாடுகளை ஆதரித்து பிரச்சாரமும் செய்தார். சமூகத்தினரிடையே பொருளாதார நிலையிலும், வருமானத்திலும் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அதிகமாகப் பாராட்டாமல், ஜாதி ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியே பெரியார் அதிக அளவில் கவனம் செலுத்தினார்.

இந்த நேரத்தில்,  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதலாளிகளும்,  பாரம்பரியமான இந்து மதத்தின் உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் வெகுஜனமக்களுக்கு நன்மை சேர்க்க இயலாத ஒரு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு, இந்தியாவை பெரும்பான்மை மதத்தினரின் பாசிச ஆட்சிக்கு வழி நடத்திச் செல்வார்களேயானால், ஜாதி மற்றும் வர்க்கப் பிரிவினர் ஒன்று கூடி காட்டும் எதிர்ப்புதான் அதனைத் தடுத்து நிறுத்த இயன்றதாக இருக்கும்.

நன்றி: ஃபார்வர்ட் பிரஸ் ஜூன் 2015

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *