– மஞ்சை வசந்தன்
மத்திய அமைச்சரவை 13.05.2015 அன்று கூடி சிறார் தொழிலாளர் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தச் செய்தி வெளிவந்த அன்றே பி.ஜே.பி ஆட்சியை அணுஅணுவாய் கூர்ந்து நோக்கிவரும், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததோடு, கிளர்ச்சி வெடிக்கும்! விளைவு விபரீதமாய் இருக்கும் என்று திட்டவட்டமாய் தெரிவித்து விட்டார்கள்.
சிறார் தொழிலாளர் சட்டப்படி 14 வயதுவரை சிறுவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அவர்களை வேறு வேலைக்குப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றம்.
இச்சட்டத்தில்தான் பி.ஜே.பி. அமைச்சரவை சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளதாம்!
அவை என்ன?
குடும்பப் பாரம்பரியத் தொழில்கள் (குலத்தொழில்கள்) திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் என்பது போன்ற பொழுதுபோக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்கு உட்பட்டவர்களை ஈடுபடுத்தவும், வேறு எந்தப் பணிகளிலும் அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகையிலும் சிறார் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
சட்டத்திருத்தம் எப்படியிருக்க வேண்டும்?
எந்தவொரு சட்டத்திருத்தமாயினும் அது நடப்பில் உள்ள சட்டத்தின் இலக்கை (நோக்கை) மேலும் சரியாக, சிந்தாமல், சிதறாமல், முழுமையாய் எட்டக்கூடியதாகச் செய்யும் வகையில்தான் இருக்க வேண்டும். அதன்படி சிறார் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் திருத்தம், சிறார் ஒருவர்கூட கல்வியைத் தவிர வேறு பணியில் ஈடுபடுவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும்.
நடப்பில் சிறார் தொழிலாளர் தடுப்புச் சட்டம் இருக்கும் நிலையிலே நாடு முழுமையும் 1,26,00,000 (ஒரு கோடியே இருபத்தாறு இலட்சம்) சிறார் தொழிலாளர் பணியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிறார்களின் தொகையில் இது ஒரு கணிசமான சதவீதம். இதற்கு வேதனைப்பட வேண்டும், தீர்வு காண முயல வேண்டும், நெஞ்சு பதைக்க வேண்டும்.
இருக்கும் சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும். 14 வயது என்பதை 18 என்று உயர்த்த வேண்டும். இருக்கும் தண்டனையை இன்னும் உயர்த்த வேண்டும். (கடுமையாக்க வேண்டும்) ஓட்டைகளை அடைக்க வேண்டும், விதிவிலக்குகளை விலக்க வேண்டும்; கண்காணிப்பைத் தீவிரமாக்க வேண்டும். இலவசக் கல்வியை, கல்வி உதவித் தொகையை இன்னும் சிறப்பாக விரிவாகச் செயல்படுத்த வேண்டும். இதுதான் சட்டத்தின் இலக்கை எட்ட செய்யப்பட வேண்டிய திருத்தத்திற்கான இலக்கணம்; வரையறை, நெறிமுறை!
திருத்தம் என்ற பெயரில் ஒரு கருவியையோ, வாகனத்தையோ, வீட்டையோ செம்மை செய்தல், மேம்படுத்துதல், திருத்தம் செய்தல் என்றால் என்ன பொருள்? அதைத் தற்போதுள்ள நிலையினும் வசதி, நுட்பம், நேர்த்தி, பாதுகாப்பு இவற்றை மேம்படுத்துவதாகும்; மாறாக ஆங்காங்கே ஓட்டைபோடுவதா மேம்பாடு, திருத்தம், செப்பம்?
ஆனால், திருத்தம் என்ற பெயரில் விதிவிலக்குகளை உருவாக்கி, சட்டத்தின் நோக்கத்தையே அழித்து, பாதுகாக்கப்பட வேண்டியவர்களுக்கு பாதிப்பை உருவாக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது என்பது சூது, சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம், கீழறுப்பு அல்லவா?
முதலாளிகளும், கார்ப்பரேட் கம்பெனிகளும் மிக எளிதில் சிறார் தொழிலாளர்களை, சட்ட மீறல் இன்றி வேலைக்கு அமர்த்திக்கொள்ளும் வகையில் திருத்தங்களைச் செய்துவிட்டு, சட்டத்தை மீறுவோருக்கு தண்டனை 20,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்திவிட்டோம் என்பது ஊரை ஏமாற்றும் மோசடியல்லவா?
இச்சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்ன?
(அ) கொல்லைப்புற வழியே குலக்கல்வியைக் கொண்டு வருவது:-
இராஜாஜி முதலமைச்சராய் இருந்தபோது குலக்கல்வியைக் கொண்டு வந்தார். பள்ளிப் படிப்போடு, ஒவ்வொரு நாளும் குலத்தொழிலையும் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்றார்.
தந்தை பெரியாரின் எதிர்ப்பு, போராட்டம், கிளர்ச்சி, எச்சரிக்கையால் அது திரும்பப் பெறப்பட்டதோடு, இராஜாஜியும் பதவி இழந்தார்.
சிருங்கேரி சங்கராச்சாரி உட்பட மதவாதிகள் குலக்கல்வியை அண்மையில்கூட ஆதரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
குலவழி தொழில் கற்பிக்கப்படும்போது, அவர்கள் மிகவும் திறமையோடும், நுட்பத்தோடும் செய்வர் என்று வாதத்தையும் வைத்துள்ளனர்.
1. அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், சிறார் சட்டத்திருத்தம் என்ற போர்வையில், கொல்லைப்புற வழியே மீண்டும் கொண்டுவர ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். _ பி.ஜே.பி. அரசு முயற்சி செய்கிறது.
2. உயர்ஜாதியினர் தங்கள் பிள்ளைகளைத் தொலைக்காட்சித் தொடர், கலைத்துறை போன்றவற்றில் ஈடுபடுத்தி வருவாய் ஈட்ட இந்த வழியில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முயலுகின்றனர்.
3. முதலாளிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் சிறார் தொழிலாளர்களின் உழைப்பை குறைந்த கூலிக்கு (அதிக உழைப்பைச் சுரண்ட இதன்மூலம் வழிசெய்து கொள்ளத் துடிக்கின்றனர்.
இதன் கேடு யாருக்கு?
உயர் ஜாதிக்காரர்களுக்கும், முதலாளிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இது பெரும்பயன் அளிக்கும். ஆனால், இதன் கொடும் பாதிப்பு ஏழை எளிய, சூத்திர, பஞ்சம மக்களுக்கு அல்லவா? அதாவது பயன் 3% மக்களுக்கு, பாதிப்பு 97%. 3% மக்களின் நன்மைக்காக, 97% மக்களுக்கு எதிரான ஆட்சியே பி.ஜே.பி. ஆட்சி என்பதன் வெளிப்படையான நிரூபணம் அல்லவா இச்சட்டத் திருத்தம்?
ஆதரவுக் குரல் எழுப்பும் அரைவேக்காடுகளின் சிந்தனைக்கு:
இச்சட்டத் திருத்தத்திற்கு மனிதநேயம் கொண்ட சிந்தனையாளர்கள், இயக்கங்கள், கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பெரியாரின் தொண்டர்கள் என்று பலதரப்பாரும் எதிர்ப்பும், கண்டனமும், எச்சரிக்கையும் செய்துவரும் நிலையில், சில சுயநல ஆதிக்கப் பேர்வழிகள் மக்களைக் குழப்பும் வகையில் சில விளக்கங்களை _ வாதங்களை முன்வைக்கின்றனர். எனவே, அவர்கள் கூறுபவை அனைத்தும் அற்பத்தனமானவை, அரைவேக்காட்டுத்தனமானவை, ஆழ்ந்த சிந்தனையில்லாதவை என்பதை இங்குச் சுட்டவேண்டியது கட்டாயமாகிறது.
ஆதரவு வாதங்கள் எவை?
(அ) குலத்தொழிலைக் கற்பதற்குச் செலவு இல்லை. பெற்றோரிடம் இலவசமாகக் கற்கலாம்.
(ஆ) குலத்தொழிலைக் கற்பது எளிது, திறமையாகச் செய்ய இயலும்.
(இ) கல்வியைத் தாண்டி ஒரு கூடுதல் தொழிலைக் கற்பதில் என்ன தவறு?
இவையே இவர்கள் முன்வைக்கும் வாதம். மேலோட்டமாகப் பார்க்கும் எவரும் இவை சரிதானே! என்று எண்ணுவர். ஆனால், ஆழமான அறிவோடும், அனுபவத்தோடும், சமூகநீதிக் கண்ணோட்டத்தோடும், மனித நேயத்தோடும், சிறார்களின் உளநிலை நோக்கிலும் சிந்தித்தால் இவை சூழ்ச்சியான வாதங்கள் என்பது தெற்றென தெளிவாய்ப் புரியும்!
வீட்டில் குலத்தொழில் பயில செலவு இல்லை; கற்பது எளிது, திறமையாய் செய்ய இயலும் என்பதில் எந்த உண்மையும் இல்லை. இது திசை திருப்பி ஏமாற்றும் வாதம். காரணம், இது அடிப்படையிலே தவறான வாதம்.
ஒரு படிக்கும் மாணவன் காலையில் 5 மணிக்கு எழுந்து படிக்க வேண்டும். பின் காலைக்கடன் முடித்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து 1 மணி நேரமாவது விளையாட வேண்டும். அதன்பின் படிக்க வேண்டும். இரவு 11 மணிவரை படிப்பு, வீட்டுப்பாடம் முடித்தல் எல்லாம். இதிலே உணவு, குடும்பத்தாருடன் பழகுதல், தொலைக்காட்சி பார்த்தல் என்று இடையிடையே கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகள். அப்படியிருக்க, பரம்பரைத் தொழிலைப் பயில ஓய்வு எங்கேயிருக்கிறது?
கற்பதும் கற்பிப்பதும் இருதரப்புப் பணி. பிள்ளைகளுக்கு ஓய்வு இருந்தால் பெற்றோருக்கு ஓய்வு இருக்காது; பெற்றோருக்கு ஓய்வு இருந்தால் பிள்ளைகளுக்கு ஓய்வு இருக்காது. உண்மை நிலை என்னவென்றால் படிக்கும் பிள்ளை பாரம்பரியத் தொழில் பயில இருதரப்பிற்கும் ஓய்வு அறவே கிடைக்காது என்பதேயாகும்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கற்கலாமே என்று எதிர் தரப்பினர் கேட்கலாம். படிக்கும் பிள்ளைகளுக்கு சனி, ஞாயிறு விடுப்பு என்பது நடைமுறையில் உண்மை இல்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிப் படிப்பு சார்ந்த பாடங்களுக்குச் சிறப்பு வகுப்புகள். ஒவ்வொரு ஆசிரியர் நடத்தும் வகுப்பிற்கும் மாறிமாறிச் செல்ல வேண்டும். அதன்பின் வீட்டுப்பாடம், பதிவேடு, படம் வரைதல் படித்தல் வகுப்புத் தேர்வுக்குத் தயார் செய்தல் எனறு பல. இத்தனைக்கும் இடையே பிள்ளைகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள விளையாட வேண்டும். நண்பர்களோடு களிக்க வேண்டும்.
உண்மைநிலை இப்படியிருக்க இதில் பகுதிநேரமாகப் பாரம்பரியத் தொழில் பயில நேரம் ஏது? இந்த வாதம் செய்கிறவர்கள், ஆதரித்துப் பேசுகிறவர்கள் யார்? மதவெறி பிடித்த, உயர்ஜாதி வழக்குரைஞர்கள். அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தத் தெரியும். பள்ளி மாணவர்களைப் பற்றிப் பேச அவர்களுக்கென்ன தகுதியுள்ளது?
கட்சிக்காரர்கள் என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் அழைப்பதைத் தவிர்த்து, துறை வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பெற்றோர், மாணவர் என்று கருத்துக் கேட்க வேண்டும். அதைவிட்டு, வாய்கிழியக் கத்துகின்ற வறட்டு, முரட்டு ஆட்களை அழைத்துப் பேசுவது ஆக்கபூர்வமானதல்ல. அடுத்து அவர்கள் வாதம், தொழில் ஒன்றைக் கூடுதலாய்க் கற்பதில் தவறென்ன? எந்தத் தொழிலும் இழிவல்லவே என்பது!
கல்வியோடு கூடுதலாய் ஒரு தொழிலைக் கற்பதைத் தவறு என்று யாரும் சொல்லவில்லை; எந்தத் தொழிலும் இழிவு என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், கற்பதற்கு ஏதுநேரம் என்பதே முதல் கேள்வி. இல்லை என்று விளக்கிவிட்டோம்.
அடுத்து கூடுதலாக தொழில் கற்பது என்பது பரம்பரைத் தொழில் என்பது அயோக்கியத்தனம் அல்லவா?
கூடுதலாய் ஒரு தொழில் கற்க வேண்டுமானாலும், மாணவர் விரும்பும் தொழிலைத்தானே கற்க வேண்டும்? பரம்பரைத் தொழிலைத் திணிப்பது மனித உரிமை மீறல்; குற்றம் அல்லவா?
தொழில் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு, கல்விப் பாடத்திட்டத்திலே, மேல்நிலை வகுப்பு, மற்றும் கல்லூரிகளில் வாய்ப்புண்டு.
சமையல், பீங்கான் தொழில், பிட்டர், வெல்டர், மோட்டார் ரீவைண்டிங், ரேடியோ, டி.வி., மோட்டார் மெக்கானிக், கணினி, கட்டடக் கலை, நெசவு, நுண்கலை, வேளாண்மை, பொறியியல் என்று பல தொழிற்பிரிவுகள் உள்ளன. அதில் சேர்ந்து விருப்பம் உள்ளவர்கள், விருப்பம் உள்ள தொழிலைப் பயிலலாம். அதை விட்டுவிட்டு பரம்பரைத் தொழிலைப் பயிலச் சொல்வது வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டி, சூத்திரனாக்கி, கல்லாதவனாக்கி, நல்ல அடிமைகளைத் தங்களுக்கு உருவாக்கிக் கொள்ள முயலும் மோசடியான முயற்சியல்லவா இது!
மேலும் கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரானது அல்லவா இது!
இளம் வயதில் பஞ்சாலையில் வேலை செய்யும் பெண்களுக்கு கருப்பைப் பாதிப்பு, இருபாலருக்கும் நுரையீரல் பாதிப்பு, வெடிமருந்து, பீடி போன்றவற்றில் உடல் நலம், உயிர் பாதிப்பு.
இப்படி ஆபத்து, விபத்து நிறைந்தவற்றில் நேரும் விபத்துகள், கேடுகள், பாதிப்புகள் சிறார்களை வாழ்நாள் முழுக்க பாதிப்புக்குள்ளாக்கி, பாழாக்கும் கொடுமைகள் அல்லவா?
இப்போதுதான் முதல்தலைமுறை படிக்கத் தொடங்கியிருக்கிறது. வாய்ப்புக் கொடுக்கப்பட்டதும் வியப்பை உண்டாக்கும் வகையில் பெண்களும், அடித்தட்டு சமுதாய மாணவர்களும் உயர் ஜாதியினரை ஓரம்கட்டி சாதித்து வருகின்றனர்.
இதைப் பொறுக்க முடியாத ஆதிக்க ஜாதியினர், அரசியல், ஆட்சித் துணையோடு குலக்கல்வியைக் கொல்லைப்புறமாகக் கொண்டுவர முயற்சித்தால், பெரியாரின் தொண்டர்களும், மனிதநேய இயக்கங்களும், 97% மக்களும் வெகுண்டு வேகங்கொண்டு எழுந்தால், விளைவு விபரீதமாய் இருக்கும்! ஆதிக்க ஜாதியினருக்கும், அரசுக்கும் எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!