கடவுள் நம்பிக்கை, பக்தி இவைதான் மூடநம்பிக்கைகளிலேயே தாய் மூடநம்பிக்கை! காரணம், அறிவுக்குச் சிறிதேனும் இடந்தராது கண்ணை மூடிக்கொண்டு நம்பி, மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும் என்பதுபோல மீளமுடியாத பழக்கம், பிறகு வழக்கமாகியதன் விளைவுதான் இந்த நம்பிக்கை.
மனிதனைவிட கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று காட்டி, பக்தியின் பேரால் சுரண்டிக் கொழுப்பதில் மதங்களுக்குள் போட்டி ஏராளம்!
இதற்கு விதிவிலக்கு சிராவணம் (சமணம்), பவுத்தம் _ இரண்டும் கடவுளை நம்பாத நெறிகள். (பிற்காலத்தில் இவற்றையும் மதமாக்கி புத்தரை அவதாரமாக்கி, ஜாதகக் கதைகளை தம் இஷ்டம்போல் புனைந்து புழக்கத்தில்விட்டுள்ளனர்.
மனிதனைவிட கடவுளே உயர்ந்தவர். இயற்கையை மீறிய சக்தி என்றெல்லாம் புளுகப்பட்டது!
முப்பெரும் தன்மைகள் எல்லா மதக் கடவுள்களுக்கும் இட்டுக்கட்டப்பட்டன!
எல்லாம் கடவுள் செயலா? சிந்தியுங்கள்!
1. கடவுள் சர்வசக்தி வாய்ந்தவர். (Omnipotence)
2. கடவுள் சர்வவியாபி (Omnipresence)
3. கடவுள் கருணையே வடிவானவர் (Omniscience)
இந்த மூன்றும் எந்தக் கடவுளுக்கு இருந்தது _ இருக்கிறது என்று இதுவரை உலக நடப்புகள் தொன்றுதொட்டு இன்றுவரை நிரூபித்து உள்ளனவா?
கடவுள் சர்வசக்தி உடையவன் என்றால், அவனால் சிருஷ்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் அவனது பிள்ளைகளுக்குள் சண்டை _ போர் _ நடந்து ஒருவரை மற்றவர் அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை முன்கூட்டியே அவன் தடுத்து இருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை?
கடவுளைத் தொழ _ வணங்கச் செல்லும் பக்தர்கள் உயிர் பறிபோகிறது விபத்து மூலம். அதை அங்கிங்கெனாதபடி எங்கும் உள்ள கருணையே வடிவான கடவுள் தடுத்து இருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?
தூங்கிய காவல்காரனைக்கூட தண்டிக்கிறோம்; காரணம், அவன் கடமை தவறி தூங்கியதால் பொருள் களவு போனது என்று. இத்தனைக்கும் அவன் சராசரி மனிதன்; ஆனால், அதைவிட மேலான அற்புத சக்தி படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள்கள் ஏன் 10 ஆயிரம் மக்களைப் பலிகொண்ட ஈவிரக்கம் அற்ற நேபாள பூகம்பத்தைத் தடுத்து நிறுத்தவில்லை?
எவ்வளவு அறியாமை!
ஒரு சில உயிர் பிழைத்தவர்கள் நாங்கள் தெய்வாதீனமாக _ கடவுள் அருளால் உயிர் பிழைத்து மீண்டோம் என்று கூறுகின்றனரே!
இத்தனை ஆயிரம் பேர் செத்தார்களே! அது எந்த ஆதினம்? என்று பகுத்தறிவு உள்ளவர் கேட்க வேண்டாமா?
பஞ்சாபில், ஒரு மத்திய அமைச்சருக்குச் சொந்தமான ஓடும் பேருந்தில் ஓர் இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையோடு, அப்பெண்ணை ஓடும் பேருந்திலிருந்து கீழே, ஈவிரக்கம் சிறிதும் இன்றி தள்ளிவிட்டனர்; அவர் மாண்டார்.
இந்தக் கொடுமையான காட்டுமிராண்டிச் செயலைக் கண்டித்து நாடே குமுறிய நிலையில் (சில வாரங்களுக்கு முன்) பஞ்சாப் அமைச்சரவையில் அமைச்சராக உள்ள ஒருவர் (பா.ஜ.க. கூட்டணி அமைச்சர்) இதுபற்றி சிறிதும் கூச்சநாச்சம், மனிதாபிமானம் இன்றி, இது ஆண்டவன் செயல் என்று வெகு சாதாரணமாகக் கூறி, இன்னமும் அமைச்சராக நீடிக்கும் அவலம் இந்த ஞானபூமியில் உள்ளது!
நம் கடவுள்கள் எவ்வளவு கேவலமான, கொடூரமான உணர்வாளர்களாக இருக்க வேண்டும்? மகா வெட்கக்கேடு! இது நம் நாட்டில் மட்டுமா? கடவுள் நம்பிக்கை என்ற மூடத்தனம் உலகளாவிய நிலையிலும்கூட மக்களை எப்படி ஏமாற்றப் பயன்படுகிறது என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு:
முன்பு அமெரிக்காவில் அதிபராக (குடியரசுக் கட்சி) இருந்து, ஈராக் மீது போர் நடத்தி அந்நாட்டை அழிக்க முயன்ற (ஜுனியர்) ஜார்ஜ் புஷ் அவர்கள், ஈராக் மீது போர் தொடுக்குமாறு கடவுள்தான் எனக்குக் கட்டளை இட்டார் என்று புருடா விடவில்லையா?
கடவுள் என்பது எப்படிப்பட்ட ஏமாற்றுக் கருவியாகப் பலருக்கும் பயன்படுகிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் தேவையா?
சில நாள்களுக்கு முன் வேலூர் அருகில் ஒரு கோவில் தேரோட்டத்திற்காக _ தேர் இழுத்து, பொம்மை விளையாட்டு விளையாடிய பெரியவர்களில், மின்சாரம் தாக்கி (தேரின் கம்பி மின்சாரக் கம்பியுடன் உரசி) ஆறு பேர் உயிர் இழந்த கொடுமை கண்டு, நாம் துன்பமும் துயரமும் கொள்ளுகிறோம்.
பக்தர்கள் பக்திப் பரவசம் அடைந்து தேர் இழுத்தனர். கருணையே வடிவான கடவுள் காப்பாற்றவில்லையே!
கடவுளைவிட மனிதன் கண்டுபிடித்த மின்சாரம் சக்தி வாய்ந்தது என்பது புலனாகவில்லையா?
இம்மாதிரி பக்தர்களின் மரண ஓலம் நாளும் இடையறாது கேட்டுக் கொண்டேதானே இருக்கிறது!
இதெல்லாம் தலைவிதி _ தலையெழுத்து என்று சமாதானம் கூறப்படுமானால், கடவுள் சக்தியற்றவராக, கருணையற்றவராக அதற்குமுன் காட்சியளிக்கிறார் என்றுதானே அர்த்தம்? அதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா?
பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் மொழி எத்தகைய பொய்யாமொழி!
சிந்தியுங்கள் பக்தர்களே, சிந்தியுங்கள்!
நாம் வாழுவது 21ஆம் நூற்றாண்டில்!
– கி.வீரமணி,
ஆசிரியர்