அய்யாவின் அடிச்சுவட்டில்…. 132 ஆம் தொடர்

ஜூன் 16-30

தமிழின மக்களை மனித இனத்தின் பட்டியலிலே இடம் பெறும் தகுதியை உண்டாக்கிய தமிழர்களின் இரட்சகர், உலக மானிடத்தின் ஒரு பெரும் வழிகாட்டி, தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை, திராவிடர் கழகம் சரியான அளவில் திட்டமிட்டு, பெரும் அளவில் செப்டம்பர் 16, 17, 18 (1978ஆம் ஆண்டு) நாட்களில் சென்னை மாநகரில் எடுத்து சரித்திரப் பெருமையைத் தேடிக் கொண்டுவிட்டது என்று சொல்லக்கூடிய நிலையில் சரித்திரத்தைப் படைத்தது. சென்னை, பெரியார் திடலில் பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டு இருந்தது.

பந்தலா _ திராவிடர் கழகக்கொடி மண்டவிட்ட கறுப்புக் காடா என்று மலைக்கும் வண்ணம் கழகக் கொடிகளின் அடர்த்தி! நகரெங்கும் கழகக் கொடி தோரணங்கள் விழாவிற்குக் கட்டியம் கூறின. பூந்தமல்லி நெடுஞ்சாலையும் (தற்பொழுது பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை) ரண்டால்ஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் நிறுவப்பட்ட மிகப் பிரம்மாண்டமான எழில் குலுங்கும் வளைவும், அதில் கழகக் கொடிகள் பறந்த பாங்கும், பார்ப்போர் யாவரது நரம்புகளையும் முறுக்கேற்றின! விழாவிற்காக திருவாரூரிலிருந்து தனி இரயில் ஒன்று (பெரியார் ஸ்பெஷல்) செப்டம்பர் 15ஆம் தேதி இரவு 8.15 மணிக்குப் புறப்பட்டு 16ஆம் தேதி காலை 9.35 மணிக்கு சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தை வந்தடைந்தது. 3000 கழகத் தோழர்களும், தாய்மார்களும் குடும்பம் குடும்பமாக வழி நெடுகக் கொள்கை முழக்கமிட்டு வந்தனர். நான் எழும்பூர் இரயில் நிலையம் சென்று இரயிலில் வந்த தோழர்களை அன்புடன் வரவேற்று அழைத்து வந்தேன்.

தோழர்கள் பெற்ற உணர்ச்சியை வார்த்தைக் கட்டுக்குள் அடக்க முடியாது! நான் முன்செல்ல, தோழர்கள், தாய்மார்கள் அணிவகுப்பு ரயில் நிலையத்திலிருந்து காந்தி இர்வின் பாலம் வழியாகப் பெரியார் திடலை வந்தடைந்தது. விழாவைத் தொடங்கும் தருணத்திலேயே திடல் முழுவதும் மக்கள் வெள்ளம் _ கருஞ்சட்டைக் கடல் பிரவாகம் எழுந்திருந்தது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக முழுக்க பெண்களே பங்குகொள்ளும் பட்டிமன்றம் தொடங்கியது. தந்தை பெரியார் தொண்டில் மிகுந்து நிற்பது ஜாதி ஒழிப்பா _பெண்ணடிமை ஒழிப்பா? என்பது பட்டிமன்றத்தின் தலைப்பு.

நடுவராக பேராசிரியர் திருமதி சக்குபாய் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். ஜாதி ஒழிப்பே என்ற அணியில் புலவர் சிவகாமி, க.சுசீலா எம்.ஏ., பார்வதி கணேசன் ஆகியோரும், பெண்ணடிமை ஒழிப்பே என்ற அணியில் புலவர் கண்மணி தமிழரசன், இராசம் துரைபாண்டியன், சுப்புலக்குமி பதி ஆகியோரும் உரையாற்றினர். இறுதியாக நடுவர் தீர்ப்பளிக்கையில் தந்தை பெரியாரின் தொண்டில் மிகுந்து நிற்பது ஜாதி ஒழிப்பே என்று தீர்ப்பு வழங்கினார். அடுத்து தந்தை பெரியார் வரலாறு _ நான்கு காலகட்டங்கள் என்ற தலைப்பின் கீழ் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்கள் நாட்டு மக்களின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் என்று தவத்திரு அடிகளார் கேட்டுக் கொண்டார். 1916_1925 வரை உள்ள தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வுக் காலக்கட்டத்தைப்பற்றி பேராசிரியர் சி.டி.இராஜேஸ்வரன் அவர்களும், 1925 முதல் 1933 வரை என்.டி.சுந்தரவடிவேலு அவர்களும், 1933 முதல் 1948 வரை மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வி.சி.குழந்தைசாமி அவர்களும், 1948 முதல் 1973 வரை பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களும் விரிவுரை ஆற்றினர். பிற்பகல் நிகழ்ச்சியில் புதுமை உலகம் என்ற தலைப்பின் கீழ் கவிஞர் முடியரசன் அவர்களது தலைமையில் கவியரங்கம் தொடங்கியது. விண் என்ற தலைப்பில் கவிஞர் இரா.கண்ணிமை, அணு என்ற தலைப்பில் பெரியார்தாசன், நீர் என்ற தலைப்பில் கவிஞர் தஞ்சை வாணன், நெருப்பு என்ற தலைப்பில் கவிஞர் கலி.பூங்குன்றன், காற்று என்ற தலைப்பில் கவிஞர் குடிஅரசு ஆகியோர் கவிதை பாடினர். கவியரங்கம் முடிந்தவுடனே டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி தனது ஆங்கில உரையை நிகழ்த்தினார். திருப்பூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெரியார் பேருரையாளர் அ.இறையன் அவ்வுரையை அன்று தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார். சமத்துவம் என்பது வெறும் மரியாதை _ பெருமைகளில் மட்டும் இருக்கக் கூடாது; உரிமையில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று சொன்ன உலகத் தலைவர் பெரியார் என்று டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் தனது உரையில் மிக முக்கியமாகக் குறிப்பிட்டார். தந்தை பெரியார் அவர்களால் நாதசுர இசைச் சக்கரவர்த்தி என்று பாராட்டப்பெற்ற நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களது குழுவினரால் நாதசுர இசை மழை தொடங்கியது. புரட்சிக்கவிஞரின் பாடலை அவர் நாதத்தில் இசைத்துத் தந்தபோது, அதை கைதட்டி வரவேற்று ரசிக்காத எவருமே அன்று இல்லை. நாதசுர இசைச் சக்கரவர்த்திக்கும் அவரது குழுவினருக்கும் பொன்னாடை போர்த்திப் பெருமைப்படுத்தினேன்.

இரவு திருச்சி பெரியார் மாளிகையைச் சேர்ந்த பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பிலும், மற்றும் பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளை சார்பிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பாகவும், குழந்தைகளும் மாணவிகளும் பங்கு பெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழா கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பெற்றன. நாகம்மை குழந்தைகள் இல்லம், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம், நாகம்மை ஆசிரியைப் பயிற்சிப் பள்ளி, பெரியார் நடுநிலைப் பள்ளி, பெரியார் _ மணியம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த குழந்தைகளும் மாணவிகளும் அய்யா புகழ் பாடும் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி, கூடி இருந்த மக்கள் வெள்ளத்தின் கண்களை எல்லாம் உணர்ச்சி நதியாக்கி விட்டனர்! அய்யா_அம்மா ஆகியோரால் ஆளாக்கப்பட்ட அக்குழந்தைகள், அய்யா_அம்மா ஆகியோரைப்பற்றி நினைவுகூர்ந்து பாடிய பாடல்களும், நடனங்களும் கண்டோரின் இதயங்களை நெகிழ்ந்து போகச் செய்தன! கடைசிக் கருஞ்சட்டைத் தொண்டன்வரை அய்யா_அம்மா ஆகியோரால் பாராட்டப்பெற்ற, சீராட்டப் பெற்ற இக்குழந்தைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறினேன்.

இரவு இசை மாமணி டி.ஆர்.பாப்பா குழுவினரின் தந்தை பெரியார் புகழ்பாடும் இசை அரங்கம் தொடங்கியது. கோவை சவுந்தரராசன், சீர்காழி கோவிந்தராசன் அவர்களது செல்வன் சிவசிதம்பரம், எம்.எல்.ஸ்ரீகாந்த், டி.கே.கலா, சசிரேகா ஆகியோர் தந்தை புகழ் பாடினர். இசைக் குழுவினர்க்கு அன்று கழகப் பொருளாளராக இருந்த தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள், இயக்க நூல்களை அன்பளிப்பாக வழங்கியும் திரு.டி.ஆர்.பாப்பா அவர்கட்கு சால்வை போர்த்திப் பாராட்டுதல்களைத் தெரிவித்தார். தொடர்ந்து வைக்கம் போராட்டம் பற்றி சிலைடு திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உதகை அன்னை மணியம்மையார் நாடக மன்றத்தினரின் கறுப்புச் சூரியன் உதயமாகிறது என்ற நாடகம் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களது தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. உதகை பகுத்தறிவாளர் கழகத் தோழர் மு.தமிழரசன் இந்நாடகத்தில் முக்கிய பாகம் ஏற்று சிறப்பாக நடித்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 17, தந்தை பெரியார் அவர்கள் பிறந்த நாளல்லவா? என்னுடைய தலைமையில் சென்னையில் உள்ள அய்யா சிலைகளுக்கு எல்லாம் மலர் மாலை சூட்டினோம். மூன்று நாள் நிகழ்ச்சிகளிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி மத்திய அரசு தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்டுள்ள சிறப்பு அஞ்சல் தபால் தலை வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தின் முகப்பு வாயிலிலேயே அந்நிகழ்ச்சி மிக இயற்கையான சூழலிலே ஏற்பாடு செய்யப்பட்டது.

விழாவில் நான் வரவேற்புரை ஆற்றினேன். நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் மோகன் தலைமை ஏற்றார். விழாவில் பங்கேற்று _ அவர் செய்த பகுத்தறிவு முழக்கம் தமிழகத்தின் வீதிகளிலே என்றென்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும். தந்தை பெரியார் அவர்களின் தொண்டால்தான் தாங்கள் எல்லாம் நீதிபதிகளாக வர முடிந்தது என்று நீதிபதி ஜஸ்டிஸ் மோகன் அவர்களும், நீதிபதி ஜஸ்டிஸ் வரதராஜன் அவர்களும் நெஞ்சுருகும் நன்றி உணர்வுடன் வெளியிட்டனர். தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, நடைபாதைக் கோவில்களை அப்புறப்படுத்துமாறு நீதிபதி மோகன் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டார். அஞ்சல் தலையை வெளியிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வரதராசன் அவர்கள் தனது உரையில், காலமெல்லாம் ஒடுக்கப்பட்டுக்கிடந்த மக்களின் மீட்சிக்காகப் பாடுபட்ட தலைவரின் அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப்பற்றி ஒரு தொண்டாக _ பேறாக நான் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

நீதிபதி ஜஸ்டிஸ் மோகன் நடைபாதைக் கோவில்களை அகற்றிட வேண்டும் என்று சொன்னதால் பார்ப்பனர்களால், துக்ளக் போன்ற ஏடுகள் தலையிட்டதால் கண்டனம் தெரிவித்து நாம் பதில் எழுதினோம். சென்னை அண்ணா சாலை தபால் நிலைய அதிகாரி டி.டி.நாயர், தந்தை பெரியார் தபால்தலை ஆல்பத்தை நீதிபதி அவர்களிடம் வழங்கினார். அன்று தலைமை நிலையச் செயலாளராக இருந்த வழக்குரைஞர் எஸ்.துரைசாமி நன்றிகூற அதனைத் தொடர்ந்து வானொளி (டெலிவிஷன்)யில் காட்டப்பெற்ற தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்று ஓவியமும், என்னுடைய உரையும், அதற்கென பந்தலில் வானொளிப் பெட்டிகள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்குக் காட்டப்பட்டன! வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்பற்றி மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திருமதி சுந்தரி வெள்ளையன் பின்குரல் கொடுத்து விளக்கமளித்தார். தந்தை பெரியாரின் சிறப்பு அஞ்சல்தலை, முதல் நாள் வெளியிடப்படும் கவர், தபால் துறையினரே வெளியிட்டுள்ள அய்யாவின் வாழ்க்கைக் குறிப்புகள், விற்பனைக்காக, பெரியார் திடலிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் அவற்றை வாங்கிய வண்ணமாகவே இருந்தனர்.

தந்தை பெரியார் அவர்களின் டாக்டர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்ச்சி முற்பகல் தொடங்கியது. விடுதலை நிர்வாகி என்.எஸ்.சம்பந்தம் அவர்கள் டாக்டர் சுந்தரவதனம் அவர்களுக்கும், மதுரை மாவட்ட தி.க. தலைவர் வாடிப்பட்டி எஸ்.சுப்பையா அவர்கள் டாக்டர் இரத்தினவேல் _ சுப்பிரமணியம் அவர்களுக்கும், சேலம் மாவட்ட தி.க. தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் டாக்டர் செந்தில்நாதன் அவர்களுக்கும் சால்வை போர்த்திச் சிறப்பித்தனர். செங்கற்பட்டு மாவட்ட தி.க. தலைவர் காஞ்சி சி.பி.இராசமாணிக்கம் அவர்கள் டாக்டர் இராமச்சந்திரன் அவர்களுக்குரிய சால்வையையும், தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எம்.என்.நஞ்சையா அவர்கள் டாக்டர் பட் அவர்களுக்குரிய சால்வையையும் என்னிடத்தில் வழங்கினார்கள்.

டாக்டர்கள் இரத்தினவேல் சுப்ரமணியம், சுந்தரவதனம், செந்தில்நாதன் ஆகியோர் அய்யா அவர்களின் அரும்பெரும் பண்புகள் பற்றியும், அய்யா அவர்களின் செயற்கரும் தொண்டுகள் குறித்தும் அகமகிழ்ந்து பாராட்டி உரைத்தார்கள். அன்னை நாகம்மையார் படத்தை பழம்பெரும் சுயமரியாதை வீரர் நாகை எஸ்.பி.காளியப்பன் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களது படத்தை பட்டுக்கோட்டை இரெ.இளவரி அவர்களும் திறந்து வைத்து உரையாற்றினர். அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, பகுத்தறிவுக் கண்காட்சியை தென்ஆற்காடு மாவட்ட தி.க. தலைவர் பண்ருட்டி நா.நடேசன் அவர்களது தலைமையில், தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எம்.என்.நஞ்சையா திறந்து வைத்தார். ஓவியர் கிருஷ்ணன் அவர்கள் வரைந்த தந்தை பெரியார் அவர்களின் பலவண்ண வாழ்க்கை வரலாற்று ஓவியங்களும், ஓவியர்கள் குமார், ஆரூர் தெட்சிணாமூர்த்தி, குகன் ஆகியோர் வரைந்திருந்த பகுத்தறிவு விளக்கப் படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. நுழைவுக் கட்டணமாக 25 காசுகள் செலுத்தி ஏராளமானோர் பார்க்கத் தொடங்கினர்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *