ஆசிரியர் பதில்கள்

மே 16-31

ஆசிரியர் பதில்கள்

முகமூடி விலகுகிறது

கேள்வி : தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதவர்கள் மக்களைத் திசை திருப்பும் நோக்கில் சுயமரியாதை இயக்கங்களைப் பழிவாங்க கங்கணம் கட்டிக்கொண்டு பிதற்ற ஆரம்பித்துள்ளதுபற்றி?

– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர்

பதில் : அதைவிட அவர்களது (பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ) முகமூடிகளை, திராவிடர் கழகம் மாநிலந் தழுவி (5-.5.2015 வரை) நடத்திய 200 திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளில் நமது மக்கள் கூடுவது, கேட்பது, அவற்றின் வெற்றி கண்டு சகிக்க முடியாமல், தமிழ்நாட்டுக் காவல் துறையை தனது ஏவல் துறையாக மாற்றித் தடுக்க முனைகிறது.

அதனால் திராவிடர் எழுச்சி பெரு உருவமாக (விஸ்வரூபமாக) எழுந்துள்ளது! கேள்வி : நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகளே விமர்சிக்கும் நிலை உருவாகி வருவது ஆரோக்கியமான சூழலாகத் தெரியவில்லையே?

– க.அன்பரசி, திருமங்கலம்

பதில் : ஆம், பார்ப்பன ஆதிக்க மிகுதி அத்துறையில் ஏற்பட்டதன் நேரடி _ மறைமுக தவிர்க்க முடியாத விளைவு இது!
உண்மையான தகுதி, திறமை, நாணயம், சமூகநோக்கு உள்ளவர்கள் நீதிபதிகளாக வந்தால் இந்நிலை களையப்படக் கூடும்.

கேள்வி : தமிழகத்தில் அண்மையில் புதிதாக முளைத்துள்ள நவீன இந்துத்துவ தலிபான்கள் பற்றி?

– தா.செல்லப்பாண்டியன், சாத்தூர்

பதில் : அதிகார மழை பெய்ததில் முளைத்த அவசரக் காளான்கள்! அவை நீடித்து நிலைக்காது.

கேள்வி : கடவுள், மூடநம்பிக்கை ஒழிப்பு, இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கை, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைக்கான போராட்டம்,

சமூக நீதியை நிலைநிறுத்துவது என ஒத்த கருத்தில் நாணயத்தின் இரு பக்கமாக இருந்தவர்கள் பெரியாரும், அம்பேத்கரும். ஆனால் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் அம்பேத்கரைத் தூக்கிப் பிடிப்பவர்கள் பெரியாருக்கு எதிராகவே பிரச்சாரம் செய்து வருவது ஏன்?

– மன்னை சித்து, மன்னார்குடி

பதில் : அவர்களில் சிலர் பெரியாரையும் அறியாதவர்கள், அம்பேத்கரையும் புரியாதவர்கள். வேறு சிலர் கூலிக்கு மாரடிக்கும் நபர்கள். அதுபற்றி கவனம்கூட செலுத்த வேண்டாம்.

கேள்வி : 20 தமிழர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு?

– வெங்கட. இராசா, ம.பொடையூர்

பதில் : செம்மரக்கடத்தல் மாஃபியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆந்திர போலீசும், ஆந்திர அரசும்தான்! அம்புகளைக் கொல்வதால் ஏவியவர்களுக்குப் பாதுகாப்பு!

கேள்வி : தாலி அகற்றும் நிகழ்விற்குப் பதிவு செய்தவர்கள் 21 பேர் மட்டுந்தானா? இல்லையேல் அதிகமாகப் பதிவு செய்து சூழ்நிலை காரணமாக வர இயலாமல் கலந்துகொள்ளவில்லையா?

– பொ.அம்பேத் பிரியன், கள்ளக்குறிச்சி

பதில் : இன்னும் ஏராளம் வந்தனர் கலந்துகொள்ள. முடிந்துவிட்டது என்று கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பினர். இது ஆங்காங்கே, பல ஊர்களில் முன்பிருந்தே விளம்பரம் தரப்படாத வியப்பாக இருந்தது. இப்போது எதிரிகளின் விளம்பரம் இதற்கு செம்மையாகக் கிடைத்தது!

கேள்வி : தாலி அகற்றும் நிகழ்ச்சியைக் கண்டு அதற்கு அறிவுப்பூர்வமாகப் பதில் தரமுடியாமல் இந்துமத வெறியர்கள் அளவுக்கு மீறி வெறி கொண்டு அநாகரிகமாகப் பேசி வருகிறார்களே?

– சு.தேனமுதன், திருவள்ளூர்

பதில் : அவர்களின் சரக்கு அவ்வளவுதான். அய்ந்தறிவு ஜீவன்களிடம் பகுத்தறிவை எதிர்பார்க்கலாமா?

கேள்வி : நமக்கென்று தொலைக்காட்சி இருந்தால்தான் பொய்ப் பிரச்சாரங்களை உடனுக்குடன் முறியடிக்க வாய்ப்பாக இருக்கும். ஆகையால், தாங்களின் ஆயிரக்கணக்கான அரும்பணிகளில் இதனை முக்கியப் பணியாகக் கொண்டு விரைவில் பெரியார் தொலைக்காட்சி தொடங்குவீர்களா? திராவிடர் சமுதாயம் பகுத்தறிவொளி பெறுமா?

– தி.கன்னியப்பன், திட்டக்குடி

பதில் : நினைத்தவுடன் எளிதில் செய்யக்கூடியதல்ல. வெற்றிகரமாக நடத்த பல முன் ஏற்பாடுகள் தேவை. மூலதனம் உட்பட அத்திட்டம். கொக்கொக்க கூம்பும் பருவத்து என்ற திட்டம் பிறகு செயலாக மலரும். நன்றி!

கேள்வி : தலைவர்கள் எனப்படுவோர் தரம் தாழ்ந்து பேசுவது பற்றி?

– கி.பொன்வண்ணன், திருச்சி

பதில் : தரம்தாழ்ந்த தலைவர்கள் என்ற வரிசையில் வைக்கப்பட வேண்டிய மக்களே போல்வர் கயவர் என்ற குறளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

கேள்வி : தமிழக சட்டமன்றத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஜனநாயகப் படுகொலைகளையும் கேலிக் கூத்துகளையும், தமிழகப் பத்திரிகைகளும் ஊடகங்களும் பயமின்றி விமர்சிக்கத் தவறுவதன் _ தயங்குவதன் உள்நோக்கம் என்ன?

– கோ.நளினி, பெரியார் நகர்

பதில் : ஒரு பக்கம் அடக்குமுறை அச்சம், இன்னொரு பக்கம் விளம்பரப் பிச்சை கிட்டாதே என்ற ஏக்கம். வயிறுக்காக வல்லாண்மை என்ற வழி தவறியவர்கள் இவர்கள்!
கேள்வி : காங்கிரஸ் இல்லாத பாரதம்தான் பி.ஜே.பி.யின் குறிக்கோள் என்ற அக்கட்சியின் கனவுத் திட்டம் நிறைவேறும் என நினைக்கிறீர்களா?

– ப.இன்பலாதன், திருவண்ணாமலை

பதில் : ஒருபோதும் நிறைவேறாது. இன்னமும் பல மாநிலங்களில் பா.ஜ.க. கிடையாது. ஆனால், காங்கிரஸ் கட்சி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கட்சியாக காட்சியளிக்கிறதே!

கேள்வி : நிலம் கையகப்படுத்தும் திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என மோடி மீண்டும் மீண்டும் தவறான தகவலை நாட்டு மக்களுக்கு அளித்து வருவதன் உள்நோக்கம் என்ன?

– பே.வரதராசன், செய்யாறு

பதில் : மக்களைத் திரும்பத் திரும்பக் கூறி ஏதேனும் திசை திருப்பும் முயற்சி.

கேள்வி : அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில நகராட்சித் தேர்தல்களில் பி.ஜே.பி. மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளது எதைக் காட்டுகிறது?

– செ.உமா, துறைமங்கலம்

பதில் : பா.ஜ.க. தேய்ந்து வருகிறது. முகமூடி விலகிவிட்டது என்பதைக் காட்டுகிறது!

கேள்வி : நீதிபதிகள் நியமனக் கமிஷன் அமைக்கும் பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து மறுப்பு தெரிவித்ததன் மூலம் என்ன சட்ட விளைவுகள் ஏற்படும் என நினைக்கிறீர்கள்?

– கா.அன்னக்கொடி, கோரிப்பாளையம்

பதில் : உச்ச நீதிமன்றம் அச்சட்டத்தை ஏற்பது இயலாது என்று தீர்ப்பு வந்தால் அதிசயமல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *