காக்கைக்குக் கொண்டாட்டம்

மே 16-31

சிறுகதை

காக்கைக்குக் கொண்டாட்டம்

-கடலூர் இள.புகழேந்தி

அந்த ஊர் காவல்நிலையம். மேலிடத்து தொலைப்பேசியால் காலையிலேயே பரபரப்பானது. துணை ஆய்வாளர் சாம்ராஜ் காவலர்களுடன் சந்தேகத்தின் பேரில் சிறைப்பறவை சிங்காரத்தைப் பிடித்துவரப் போய்விட்டார்.

ஆய்வாளர் தொலைப்பேசியில் அரைமணி நேரத்தில் வந்து விடுவதாகச் சொல்லிவிட்டார். இன்னும் ஆறு மாதத்தில் ஓய்வுபெறவுள்ள ஏட்டு எல்லப்பன் காவல்நிலையத்தில் அந்த நேரத்தில் பொறுப்பில் இருந்தாலும் புலம்பிக் கொண்டிருந்தார்.

ஏம்பா, இன்னைக்கு கோர்ட் டியூட்டி யாரு?

அய்யா, நான்தாங்க போறேன். அந்த மாஜிஸ்டிரேட் ரொம்ப மோசமாகப் பேசுறாருங்க. பத்து வாரண்ட் பென்டிங்கிலேயிருக்கு. 304_ஏ கேசில மட்டும் மகசர் சாட்சி வரானுங்க.

ஏன்யா, முதலமைச்சர் வரதா பத்துநாளா பந்தோபஸ்து போட்டுடறாங்க. எப்படி வாரண்டில் பிடிக்கறதுன்னு சொல்ல வேண்டியதுதானே.

முதலமைச்சர்தான் வரலையே, பந்தோபஸ்துன்னு பொய் சொல்றியான்னு எரிஞ்சி விழறாரு.

வந்தாலும் வந்திருவாங்கன்னு நிக்கறோமுன்னு யார்கிட்ட சொல்றது. என்னமோ போய்யா, நமக்கு இரண்டு பக்கமும் இடிதான். போலீஸ்காரன் மத்தளம் ஆயிட்டான். வுடு, வேலையைப் பாத்துத்தானே ஆகணும்.

அப்போது சிறைப்பறவையுடன் துணை ஆய்வாளர் சாம்ராஜ் காவல் நிலையத்தினுள் நுழைந்தார். சிறைப்பறவை என்று காவலர்களாலும் பத்திரிகையாளர்களாலும் பட்டம் சூட்டப்பட்ட சிங்காரம் வழக்கமாகக் கட்டும் கைலியுடன் இல்லாமல் பேண்ட் சட்டையுடன் சற்று மிடுக்காகத்தான் இருந்தான். அவனை சாம்ராஜ் விசாரிக்கத் தொடங்கினார்.

டேய்…. சிங்காரம் நீ திருந்தவே மாட்டியாடா?

அய்யா, நான் திருடறதை விட்டு வருஷம் ஒன்னாச்சுங்க. அத்தை மவ வள்ளியைக் கட்டிக்கிட்டு ஒழுங்கா செட்டிலாயிட்டேங்க. தண்ணி அடிக்கிறதையே வுட்டுட்டங்க. வேண்ணா, ஏட்டய்யாவைக் கேட்டுப் பாருங்க. கல்யாணத்துக்கு வந்தாருங்க. என்ன சார் அய்யாகிட்ட சொல்லு சார்.

முதல்ல நீ சொல்லு, எந்த கேஸ் பென்டிங்குல இருக்கு?

ஒன்னும் கெடையாதய்யா. காலைல மார்க்கெட்ல மூட்டை தூக்கறேன். சாந்திரமா டிபன் கடை போடறேன். உழைச்சிச் சம்பாதிக்கிறது சந்தோஷமாயிருக்குங்க. என் பொண்டாட்டி இன்னைக்கோ நாளைக்கோன்னு புள்ள பெத்துக்க ஆஸ்பத்திரியிலே கிடக்கறா. அய்யா என்னை வுட்டிங்கன்னா அவள ஒரு தடவை பாத்துட்டு வேலைக்குப் போயிடுவேன்.

சாம்ராஜ், ஏட்டு எல்லப்பனைப் பார்த்தார். சார், அவன் சொல்றது உண்மைதான். இப்ப கேஸ் எதுவுமில்லை. தப்பு ஒன்னும் செஞ்சதா தகவல் இல்லீங்க.

யோவ், இன்ஸ்பெக்டர் வேகமாயிருக்காரு, நாம இவனை விடமுடியாது. அவர் வரட்டும் பார்க்கலாம்.
சிங்காரத்துக்கு ஒரே ஆவல். எதுக்குக் கூப்பிட்டுக்கிட்டு வந்தாங்கன்னு அவனுக்குத் தெரியலை. ஏட்டப் பார்த்துப் பொறுமையா கேட்டான்.

ஏட்டய்யா, நான்தான் ஒன்னும் செய்யலையே, எதுக்கு இன்ஸ்பெக்டர் என்னைக் கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னார்?

ஒரு திருட்டு கேஸ்ல விசாரிக்கன்னு நினைக்கிறேன்.

திருட்டா…. எதைத் திருடினேன்? எங்க திருடினேன்?

சும்மாயிருடா, நம்மூர்ல இருக்கிற மடத்துப்பக்கம் போனியா?

மடத்துப் பக்கம்தான் தெனமும் எல்லாரும் போவணும். நான் மட்டுமா போறேன்?

அப்ப நீ போனதை ஒத்துக்கற. தோ… பாருடா ஒழுங்கா ஒத்துக்கிட்டுப் போ… வேலை முடிஞ்சிடும்.

அதெப்படிங்க. இதுவரை அம்பது தடவைக்கு மேல உள்ள போயிருக்கேன். அதான் சிறைப்பறவை டைட்டிலு. ஆனா இப்ப நான் ஒழுங்காயிட்டேன். உள்ள போறது சரிப்பட்டு வராது. வேற ஆளைப் பாத்துக்குங்க.

துணை ஆய்வாளர் சாம்ராஜ்க்குக் கோபம் வந்திடுச்சி.

பெரிய மயிரு இவுரு, திருட்டு ராஸ்கல். முட்டி பேந்திடும். ஒழுங்கா திருடுனதை ஒத்துக்கிட்டீனா நல்லது சொல்லிட்டேன், இந்தாயா 320 இவன் சட்டை பேண்டை கழட்டிவிட்டு உள்ள லாக்கப்பில போடுயா_ன்னு வேகமா சொல்லிட்டு வெளியே போயிட்டார்.

சிங்காரம் கொஞ்சம் கலங்கிட்டான், கெஞ்சற குரல்ல.

ஏட்டய்யா, கொஞ்சம் சொல்லக்கூடாதா? இருபது வருஷத்து முந்தி முதன்முதல்ல செய்யாத குத்தத்துக்கு உள்ளே அனுப்பிதான்யா நான் திருடனாகவே போனேன். இப்ப நல்லாயிருக்கும்போது மறுபடியும் போட்டா என்ன நியாயம்யா? என்று சிங்காரம் சொல்லும்போதே காவலர்கள் அவனைச் சூழ பேண்ட் சட்டையைக் கழட்டிட்டு உள்ள போய் உட்கார்ந்துக்கிட்டான்.

அவனுக்குத் தெரியும். போலீஸ் உதையைப் பத்தி. ஆனா, ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துட்டான் சிங்காரம். இனி திருட மாட்டேன்னு வள்ளிக்கு சத்தியம் செய்து கொடுத்ததை நினைச்சிக்கிட்டான். எது வந்தாலும் வரட்டும் என்று தைரியமாகத்தான் இருந்தான். அவன் மனசெல்லாம் ஆஸ்பத்திரியிலேதான் இருந்தது. ஏட்டு எல்லப்பன் லாக்கப்கிட்ட வந்து,

டேய் சிங்காரம் இன்ஸ்பெக்டர் பொல்லாதவன்டா ஒத்துக்கிட்டுப் போடா. பைன் நான் கட்டிடறேன். பெரிசா ஒன்னும் இல்லடா, மடத்தில இருந்த ஒரு நெய்ஜாடி திருடு போயிடுச்சின்னு புகார் வந்திச்சி, அதோடு மேலிடத்திலேயிருந்து போன் மேலே போன். நாங்க என்னடா செய்ய முடியும்?னு வருத்தத்தோடு சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அந்த இக்கட்டான நேரத்திலேயும் சிங்காரத்துக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கிலோ கணக்கில் நகைங்களைத் திருடிய எனக்கு அப்பல்லாம் ராஜ மரியாதை. இப்ப திருடாத நெய் ஜாடிக்கு லாக்கப்பான்னு நினைச்சிப் பார்த்தான். ரொம்ப விவரமான உலகம்னு முணுமுணுத்தபடியே கம்முன்னு உட்கார்ந்திருந்தான்.

ஆய்வாளர் மாடசாமி உள்ள வந்தபோதே கடுப்பிலே இருந்தது தெரிந்தது. சிங்காரம் பயந்து போயிட்டான். வந்ததும் வராததுமா மாடசாமி தொப்பியைக் கழட்டிப் போட்டுட்டு லத்தியைக் கையிலெடுத்தார். இவனைப் பார்த்தபடியே, இந்தாயா ஏட்டு ஒத்துக்கிட்டானா இல்லையா?

மாட்டேன்றான்

சாருக்கு இன்னும் என்னைப்பத்தித் தெரியலை போலயிருக்கு. லாக்கப்பைத் திறந்து உள்ள வந்தார். ஒத்துக்கிட்டுப் போடா. நியாயமா சொல்றேன்.

அய்யா, நான் மூட்டைத்தூக்கி பொழைக்கறன்யா. என் பொண்டாட்டி ஆஸ்பத்திரியில கிடக்குதய்யா, என்னை வுட்டுடுங்கய்யா என்று சிங்காரம் கெஞ்சினான்.

மாடசாமியின் கால் முழுவேகத்துடன் வயிற்றில் பளிச்சென்று பாய்ந்தது.

அய்யோ என்ற அலறலுடன் சிங்காரம் வயிற்றைப் பிடிச்சிட்டு உட்கார்ந்தான். இப்ப மூஞ்சிமேல ஒரு உதை, மூக்கிலேயிருந்து இரத்தம் கொட்டத் தொடங்கிடுச்சி. ஆவேசத்தில் இருந்த மாடசாமி, டேய், திருட்டு நாயே இன்னும் ஒரு மணி நேரத்தில கோர்ட்டுக்குப் போவணும்.

மவனே ஒழுங்கா ஒத்துக்கிட்டுப் போயிரு. பெண்ட எடுத்துடுவேன். புரியுதாடா புறம்போக்கு என்றான். முக்கி முனகி எழுந்த சிங்காரம் திக்கித் திணறி அய்யா புள்ளத்தாச்சிப் பொண்டாட்டிய பார்க்கப் போவணும் விட்டுடுங்கய்யா என்று மறுபடியும் கெஞ்சினான். மாடசாமியின் கோபம் மேலும் அதிகமாச்சி.

என்னடா சொன்ன என்று அடிக்கக் கையை ஓங்கியபோது தொலைப்பேசி டிரிங்… டிரிங் என எரிச்சல்படுத்தவே, ஓங்கிய கையால் ஒரு குத்துவிட்டு சிங்காரத்தின் முகத்தை இரத்தச் சகதியாக்கிவிட்டு எவனாவது எடுங்களன்டா, எழவு போன். மடத்துக்காரனுக்கு நெய்தான் முக்கியமாப் போச்சு என்று கத்த, ஏட்டு போனை எடுத்தார்.

அய்யா இருக்காருங்க கொடுக்கறேங்க என்று ஆய்வாளர் மாடசாமியைப் பார்க்க. மாடசாமி ஏட்டை கோபக்கனல் தெறிக்க முறைத்தார். ஏட்டு எல்லப்பனின் உடம்பெல்லாம் அச்சத்தால் நடுங்கியது போல போன் வாயை அடைத்துக்கொண்டு பொறுமையாக, அய்யா, மேலிடம் மேலிடம் என்று கூற ஆய்வாளர் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து போனை வாங்கினார்.

இன்ஸ்பெக்டர் மாடசாமி பேசறங்க வணக்கம். முகம் மாறியது, வியர்க்க ஆரம்பித்தது. பேசியவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை மாடசாமியின் பதிலின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. மாடசாமி குழைந்து நெளிந்து, பயந்து பணிந்து ஏதேதோ சொல்லி கடைசியாக,

உத்தரவுங்க, புடிச்சாச்சிங்க, ஆகட்டுங்க. அய்யய்யோ! நெய் ஜாடிதானேன்னு நான் பேசலீங்க. கடவுள் நெய்னு சொல்லித் திருடுனவன் கையைக்கூடத் தொட்டுக் கும்பிட்டேங்க. சரிங்க உத்தரவு. என் பேரு மடசாமி இல்லீங்க, மாடசாமிங்க. நீங்க எப்படி வேணா கூப்பிடலாம்.

வந்துங்க… ஹலோ… ஹலோ சே… கட்டாயிடுச்சி தன்னைச் சுற்றி நின்ற ஏட்டும் பிற காவலர்களும் தன்னை ஒரு மாதிரி பார்த்ததைப் பத்தி உள்ளூர வெட்கப்பட்டாலும் வெளியில காட்டிக்காம என்னய்யா பாக்கறீங்க எனக்குத் தொல்லைன்னா உங்க எல்லோருக்கும் சிரிப்பா! சரி அந்தப் பயல கோர்ட்டுக்குக் கொண்டு போங்க. நானும் அங்க வந்திடறேன்.

லாக்கப் ரூமிலேயிருந்து வெளியே வந்த ஒரு காவலர் கொஞ்சம் பதட்டமா அய்யா, சிங்காரம் பேச்சு மூச்சு இல்லாம இரத்தம் வழியக் கிடக்கிறாங்க என்றார்.

எல்லோரும் பேயறைஞ்ச மாதிரி அவனைப் பாத்தாங்க. மாடசாமிக்குப் பயம் வந்திட்டாலும் அடுத்தகட்ட நடவடிக்கையை யோசிக்க ஆரம்பித்தார்.

ஏட்டு, எல்லோரும் கேட்டுக்குங்க எது நடந்தாலும் நம்ம எல்லோருக்கும் ஆபத்துதான் வரும் என்று சொல்லி முடிப்பதற்குள் ஏட்டு எல்லப்பன் அதெப்படிங்க அடிச்சது நீங்க என்றார். மாடசாமி பலபடி கீழிறங்கி வந்து,

இப்ப நான் இல்லைன்னா சொன்னேன். நாமெல்லாம் ஒரு குடும்பமாயிருந்து செயல்படணும். எஸ்.அய். சாம்ராஜ் தப்பிச்சிட்டான், ஆளக் காணோம். ஜாக்கிரதை, ஜி.ஹெச்சுக்கு அவனைக் கொண்டு போயிடுவோம். எதனாச்சும் ஆச்சுன்னா திடீர் மாரடைப்புன்னு சொல்லிடலாம். மேலிடம் மூலமா சர்டிபிகேட் வாங்கிடலாம். வேற வழியில்லைய்யா. தயவுசெய்து காப்பாத்-துங்கய்யா என்றவுடன் மளமளவென்று காரியங்கள் நடந்தன.

சிங்காரத்தைக் கொண்டுபோய் ஜீப்புல வைச்சி ரெண்டுபேர் பிடிச்சிக்கிட்டாங்க. இன்ஸ்பெக்டர் மாடசாமி நாற்காலியில் இருந்து எழும்போது போன் மணி. வேண்டா வெறுப்பா மாடசாமியே எடுத்தார்.

அப்படியா! மடத்திலிருந்து மேனேஜரா, சார் வணக்கம், திருடனைப் பிடிச்சி விசாரிச்சிட்டு இருக்கேன்.

வேணாம் சார், அவனை விட்டுடுங்க. எங்க சமையல்கார அம்பி நெய் ஜாடிகளை எண்ணும்போது ஒரு ஜாடியை விட்டுட்டு எண்ணிட்டான். அபிஷ்டுப் பய. நான் கண்டுபிடிச்சிட்டேன். பரமாத்மகுரு, ஆளுங்-களை எண்ணின கதைமாதிரியில்ல என்று சொல்லிச் சிரிக்க, மாடசாமிக்கு எரிச்சல் எகிறிடுச்சு.

போனை படார்னு வைச்சிட்டு அடப்பாவிங்களா இந்தக் கூத்துக்கு மேலிடம் வேற, சிங்காரத்தை எப்படிக் காப்பாத்துறது_ன்னு தனக்குள்ளாகவே பேசிக் கொண்டு வேகமாகப் புறப்பட்டார்.

ஏட்டு எல்லப்பன் வருத்தம் நிறைந்த தொனியில், அய்யா சிங்காரம் பய அவன் பொண்டாட்டியப் பாக்க ஜி.எச்சுக்குத்தான் போவணும்னு சொல்லிக்கிட்டேயிருந்தான். நாம் ஜீப்பிலேயே கொண்டு போறோம். நீங்க இன்ஸ்பெக்டர், நான் ஏட்டுதான், தப்பா எடுத்துக்காதீங்க. என் அனுபவத்தில் சொல்றேன்.

எந்த மேலிடமும் மடமும் இப்பத் துணைக்கு வராது. நாமதான் வரம்பு மீறாம நடந்துக்கணும். மன்னிச்சிடுங்கய்யா.

ஆய்வாளர் மாடசாமி வழக்கத்துக்கு மாறா ஏட்டய்யா, நீங்க சொன்னதுதான் சரி. எவர் விருப்பத்துக்கும் நாம ஆடக் கூடாதுன்னு இப்பப் புரியுது. எப்படியும் சிங்காரத்தைக் காப்பாத்திடலாம்னு நம்பிக்கையிருக்கு. நீங்க ஸ்டேசனில் இருங்க.

சாம்ராஜை உடனே வரச் சொல்லுங்க. சொல்லிட்டு ஜீப்பில் ஏறி உட்கார்ந்தார். சிறைப்பறவை சிங்காரத்தைச் சுமந்துகொண்டு மருத்துவமனை நோக்கி ஜீப் பறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *