எல்லா இரத்தப் பிரிவுகளையும் ஒன்றாக்கிய நொதியம்
இரத்த தானம் செய்ய பலர் முன்வந்தாலும் நோயாளியின் இரத்தப் பிரிவுடன் ஒத்திருந்தால் மட்டுமே நோயாளிக்குச் செலுத்த முடியும் என்ற நிலை இதுவரை இருந்துவந்தது. இந்த நிலையினை மாற்றியமைக்கும் புதிய நொதியம் (என்சைம்) கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய நொதியமானது ஏ மற்றும் பி பிரிவு இரத்தத்தில் காணப்படும் உடற்காப்பு ஊக்கிகளை (ஆன்டிஜென்) பிரித்து எடுத்துவிடும். இதனால், அந்த ரத்தம் ஒ பிரிவு இரத்தத்தின் தன்மையைப் பெற்று விடும்.
ஏ, பி பிரிவு இரத்தங்களிலிருந்து ஏற்கெனவே உடற்காப்பு ஊக்கிகளைப் பிரித்தெடுக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், நொதியத்தை பரிணாம வளர்ச்சி இயக்கம் என்ற புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி யுள்ளனர்.
இந்த ஆய்வுக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆய்வாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்ந்து அழிந்தது மெசஞ்சர்
சூரியக் குடும்பத்திற்கு மிக அருகில் உள்ள புதன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 2004ஆம் ஆண்டு மெசஞ்சர் விண்கலம் செலுத்தப்பட்டது. 2011ஆம் ஆண்டு புதன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த மெசஞ்சர், மிக உயர்ந்த வெப்ப நிலையைக் கொண்ட புதனில் பனிப்பாறைகள் இருப்பதைக் கண்டறிந்தது.
4,104 முறை புதன் கிரகத்தைச் சுற்றி வந்துள்ளது. பொட்டாசியம், சல்பர் மற்றும் எளிதில் ஆவியாகக்கூடிய பிற தனிமங்கள் இருப்பதைக் கண்டறிந்ததுடன் எரிமலை இருந்ததற் கான சாத்தியக் கூறுகளையும் கண்டுபிடித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியுடன் மெசஞ்சரில் எரிபொருள் காலியானதால் மணிக்கு 14 ஆயிரம் கி.மீ. வேகத்தில் 485 கிலோ எடையுடைய மெசஞ்சர் புதன் கிரகத்தின் வடதுருவத்தில் மோதி நொறுங்கியதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால், புதன் கிரகத்தில் 16 மீட்டர் சுற்றளவுக்குப் பெரிய பள்ளம் உருவாகியிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
புதன் கிரகத்தின் அடுத்த கட்ட ஆய்வுப் பணிகளை அய்ரோப்பா மற்றும் ஜப்பான் சேர்ந்து மேற்கொள்ள உள்ளன. பீபிகொலம்போ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி 2 செயற்கைக்கோள்கள் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.