கருணையே உருவானோர் யார்? – 3

மே 01-15

கண்டுபிடித்தது… கடவுள் அல்ல!

கருணையே உருவானோர் யார்?

யார் வலிமை உள்ளவர்?

வெறிநாய்க்கடிபட்ட 9 வயது சிறுவனுக்கு லூயிபாஸ்டர் தன் கண்டுபிடிப்பான மருந்தை 14 நாள்களுக்குச் செலுத்தினார். பையன் பிழைத்துக் கொண்டான். இது நடந்தது 1885இல்.

10 ஆண்டுகளில் தொடர் ஆராய்ச்சி நடத்தி, கண்டுபிடித்த மருந்தினை 6 ஆயிரம் பேருக்குச் செலுத்தி மருத்துவம் பார்த்தார். மொத்தத்தில் 6 பேர் மட்டுமே இறந்தனர். மருந்து வெற்றி பெற்றது. இது நடந்தது 1915இல்.

ஆந்தராக்ஸ் என்பது விலங்குகளில் பற்றி மனிதர்களுக்கும் பரவும் கொடிய நோய். இந்தக் கிருமிகளை அஞ்சலில் அனுப்புவதும் அதனை வாங்கிப் பிரித்துப் பார்ப்பவர்கள் நோய்த் தாக்குதலுக்கு ஆளாவதும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கையாளப்பட்ட கொடூரப் பழி தீர்க்கும் முறை. குப்பை பொறுக்குபவரின் வியாதி என்றுகூட அழைக்கப்பட்டது உண்டு. லூயி பாஸ்டர் கண்டுபிடித்த மருந்து பலன் தந்தது என்றாலும் அதனை இருப்பு வைத்துப் பயன்படுத்திட முடியவில்லை. அப்படிப் பயன்படுத்தும்போது மருந்தின் வீர்யம் குறைகிறது என்பது குறைபாடு. எனவே, ஆஸ்திரேலிய அறிவியலாளர் ஜான் மெக் கார்வி ஸ்மித் மற்றும் ஜான் குண் ஆகிய இருவரும் ஆய்வு செய்து புதிய, பாதுகாப்பான மருந்தைக் கண்டுபிடித்தனர். என்றாலும், கூட்டாகக் கண்டுபிடித்தோம் என்று கூறத் தயாராக இல்லாத பொறாமை நிலை அவர்களுக்குள்! 1910இல் ஜான் குண் இறந்தார். ஸ்மித் மருந்து தயாரிப்பு முறையைக் கூறாமலே உற்பத்தி செய்து விற்கத் தொடங்கினார். ஆஸ்திரேலிய அரசு அவரை மிரட்டியது. 1918இல் ஒருவாறாக மருந்து தயாரிப்பு முறையை வெளிப்படுத்தினார். மக்கள் பலனடைகின்றனர்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இல்லாத ஒரு நோய் ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் பாதிக்கும் கொடிய நோய் போலியோ! இளம்பிள்ளை வாதம் என்றும் கூறுகிறார்கள். இதனைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்கத் தொடங்கியவர் ஜொனாஸ் சால்க்.

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் 1947இல் தொடங்கி இன்புளுயன்சா நோய்க்கான மருந்து கண்டுபிடித்து, போலியோ நோய்க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 1952இல் அவர் கண்டுபிடித்த மருந்தை குரங்குகளுக்குச் செலுத்திப் பின்னர் ஊனமுற்ற குழந்தைகளுக்குச் செலுத்தினார். பலன் ஏற்பட்டது கண்டு ஊக்கம் பெற்றவர், தனக்கும் தன் குடும்பத்தவர், தம் நண்பர்கள் முதலியோர்க்கும் செலுத்தினார். 1952இல் 57,628 பேர்களுக்கு போலியோ நோய் அமெரிக்காவில் இருந்ததாகப் புள்ளி விவரம். அவர்களுக்கு மருந்து கொடுத்ததில் இரண்டு ஆண்டுகளில் 90 சதவீதம் பேர்களுக்கு நோய்த் தன்மை அற்றுப் போய்விட்டது. 1961இல் ஊசிமூலம் மருந்து செலுத்துவதற்குப் பதில் இனிப்பான சொட்டுமருந்து வாய்மூலம் தருவது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தட்டம்மை சாதாரண நோய். 1814இல் இந்நோயை ஜெர்மன் தட்டம்மை என்றார்கள். கருவுற்ற பெண்களை இந்நோய் தாக்கினால் கருப்பையிலிருக்கும் குழந்தைக்குக் காதுகோட்-காமை, மனநிலை பாதிப்பு, கண்புரை, இதயக் குறைபாடு, ஈரல் நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு. 1963, 1964இல் அமெரிக்காவில் இந்நோய் பரவலாகப் பற்றியதன் விளைவாக 30 ஆயிரம் குழந்தைகள் நிரந்தரக் குறைபாடுகளுடன் பிறந்த கொடுமை நிகழ்ந்தது. ஹாரி மார்டின் மெயர் மற்றும் பால் பார்க்மன் என்ற இரு குழந்தை நல மருத்துவர்கள் ஆய்வு செய்து மருந்து கண்டுபிடித்தனர். ஆப்ரிக்க பச்சைக் குரங்குகளின் திசுக்களில் தயாரிக்கப்பட்ட மருந்தினை ரீசஸ் குரங்குகளுக்குச் செலுத்திப் பார்த்தனர். பின்னர் பெண்கள், குழந்தைகளுக்குக் கொடுத்துச் சோதனை செய்தனர். MMR எனும் தடுப்பு மருந்து தற்போது சின்னம்மை(Measles),, கழுத்து வீங்கி, (Mumps) தட்டம்மை போன்றவற்றிற்குத் தரப்படுகிறது.

அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்ட கொடிய நோய் – ஹெபடைடிஸ் பி _ 1960இல் கண்டறிந்தவர் பரூஷ் புளும்பெர்க் என்னும் அமெரிக்க விஞ்ஞானி. பூர்வகுடியினரின் ரத்தத்தை ஆய்வு செய்தபோது தனித்துவமான புரதம் ஒன்றைக் கண்டனர். அதனை ஆஸ்திரேலியன் ஆன்டிஜன் எனக் குறித்தனர். இது அமெரிக்கர்களின் குருதியில் இல்லை. ஆசிய, ஆப்ரிக்க, சில அய்ரோப்பியர்களின் குருதியில் உள்ளது. ரத்தப் புற்றுநோய் கண்டவர்களின் குருதியிலும் இது உள்ளது. இது ஹெபடைடிஸ் பி நோய்க்குக் காரணி. இந்நோய் ஈரலைத் தாக்கி ஈரல் புற்று நோய் ஏற்படச் செய்துவிடும். சில வகைகளில் ஈரலின் செயல்பாட்டையே நிறுத்தி இறப்புக்கு வழி செய்துவிடும். இந்நோய்ப் பாதிப்பு உள்ளவர்களின் குருதியில் உள்ள வைரஸின் வெளித்தோலைப் பிரித்தெடுத்து அதிலிருந்து தடுப்பு மருந்து கண்டு-பிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு 1976இல் வழங்கப்-பட்டது.

இவ்வளவு கொடிய நோய்களை மனித-குலத்திற்குக் கொடுத்து கொடுமைக்கு ஆளாக்குவது எப்படிக் கருணை உள்ள கடவுள்?

அன்பே கடவுள் என்பதை எப்படி ஏற்றுக்-கொள்ள முடியும்? என்று கேட்டார், பெரியார்! கடவுளால் தரப்படும் நோய்களைக் குணப்-படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடித்துத் தந்த மருத்துவர்கள், அறிவியலாளர்கள்தானே நியாயப்படி கருணையே உருவானவர்கள்? அன்பே உருவான மனிதநேயர்கள்?

தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கடவுளுக்கே சவால்விட்ட இவர்கள்தானே பாராட்டுக்கு உரியவர்கள்! ஆண்களின் முகத்தில் தாடியும் மீசையும் முளைக்கிறது. பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் முகத்தில் மண்டியிருந்த தாடி, மீசை எத்தனை அழகு? சிலருக்கோ மழமழவென மழித்தால்தான் முகப் பொலிவு! தாடியையும் மீசையையும் மழிப்பதுவே கடவுளுக்கு எதிரான செயல்தானே! பாதுகாப்பாக முகம் மழிக்க ரேசர் கண்டு-பிடித்தவர்கள் நன்றிக்குரியவர்கள் என்றாலும் கடவுளுக்கு எதிரானவர்கள்தானே!

போலியோ நோய்க்குச் சிகிச்சை அளிக்கும்-போது நோயர்கள் மூச்சுவிடச் சிரமப்படும் நிலை. மார்புத் தசைகள் இறுகிப் போவதால் நுரையீரல் சுருங்கி விரிய தசைகள் இடம் தருவதில்லை. சிகிச்சை முடியும்வரை நோயர் இலகுவாக மூச்சுவிடச் செய்ய வேண்டிய அவசியம் முன்பு ஏற்பட்டது. 1927இல் ஃபிலிப் டிரின்கர் என்பவரும் லூயி அகாசிஸ் ஷா என்பவரும் கண்டுபிடித்த ஒரு கருவியில் நோயரின் தலை காற்றடங்கிய பெட்டியின் ஒரு முனையில் வைக்கப்படும்.  பெட்டியிலிருந்து காற்று அழுத்தத்தால் வெளியேற்றப்பட்டு மார்பு விரிவதும் சுருங்குவதும் கட்டுப்படுத்தப்பட்டது. போலியோ பாதிப்புக்கு ஆளான 8 வயதுப் பெண் நோயரிடம்தான் இக்கருவி முதன்முதலில் பொருத்தப்பட்டது. ஒரே நிமிட சிகிச்சைக்குப் பின் சிறுமி அய்ஸ்கிரீம் கேட்கும் அளவுக்குக் குணம் தெரிந்தது. இக்கருவி ஜான் ஹேவன் எமர்சன் என்பாரின் முயற்சியால் மேம்பாடு செய்யப்பட்டு 1940 முதல் 1950 வரை ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சிகிச்சை தரப்பட்டது. அமெரிக்காவில் 1959இல் 1200 பேருக்கு இந்தக் கருவிமூலம் சிகிச்சை தரப்பட்டது. போலியோ சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டபின் இக்கருவியின் பயன்பாடு குறைந்துவிட்டது.

ஒரு நோயின் காரணமாக ஓர் உடல் உறுப்பு செயல்பாடு குறைவாகியபோது செயற்கை உறுப்பு அதனை ஈடுகட்டுகிறது என்றால், கடவுளின் படைப்பு பழுதாகிறது; அதை மனிதனின் கண்டுபிடிப்பு ஈடுகட்டுகிறது என்றால், கடவுளுக்குச் சமமாக அல்லது அதற்கும் மேலாகவே மனிதனின் செயல் அமைகிறதே! யார் வலிமை உள்ளவர்?

இயற்கை நுரையீரல் செயலிழக்கும்போது செயற்கையான இரும்பு நுரையீரல் (Iron Lung – இரும்பு நுரையீரல்) இழப்பை ஈடுசெய்து உயிர் காக்கிறதே!

மேம்படுத்தப்பட்ட இரும்பு நுரையீரலைச் செய்த ஜான் எமர்சன் அடுத்ததாக செயற்கை சுவாசக் கருவியை வடிவமைத்தார். நோயரின் நுரையீரல் சுவாசிக்கத் திணறும்போது இக்கருவி  (வென்டிலேட்டர் —- Ventilator) சுவாசத்தைச் சீராக்குகிறது. சுலபமாக மூச்சை இழுத்து வெளியே விடச் செய்கிறது. போலியோ பாதிக்கப்பட்டவர்களின் இறுகிப்போன தசையை இளகச் செய்யத் தரப்படும் மருந்துகள் மூச்சு இழுத்து விடுதலைத் தடைசெய்து விடுகின்றன. அந்நிலையில் வென்டிலேட்டர் நுரையீரலின் செயலைச் செய்கிறது. 1949இல் இது கண்டுபிடிக்கப்பட்டது. பறவை (Bird)  வென்டிலேட்டர் என்ற ஒன்று 1950இல் உருவாக்கப்பட்டது.

வேறுவகை பக்க விளைவுகள் இதனால் ஏற்பட்டன. 1952இல் மேன்லி வென்டிலேட்டர் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. 1980 முதல் புதிய மிகவும் மேம்படுத்தப்பட்ட வென்டிலேட்டர் உருவாக்கப்பட்டு மிகவும் பயனுள்ள வகையில் செயல்படுத்தப்படுகிறது.

1930இல் ஒரு பெண் நோயர் இரத்தக் குழாயில் கெட்டிப்பட்டுப் போன ரத்த உறைவால் (கிளாட்) மூச்சுவிடுவதற்குக் கஷ்டப்பட்டார். இம்மாதிரி நோயர்களுக்கு அமெரிக்காவில் செய்யப்பட்ட அறுவை வெற்றி தரவில்லை. ஜெர்மனியில் செய்யப்பட்ட அறுவை 100க்கு 6 மட்டுமே வெற்றியாக முடிந்தது. எனவே இந்த நோயருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவருக்குப் பயம். இந்த நிலை சுமார் 17 மணி நேரம் நீடித்தது. நோயர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் செய்து பார்ப்போமே என்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே நோயர் இறந்து போனார். ஆனால், அறுவை சிகிச்சை வெற்றி.

இதய நோய்க்கு மருத்துவம் செய்யும்போது, இதயம் இயங்காதபோதுகூட, உயிர்க் காற்றுடன் கூடிய ரத்தத்தைச் செலுத்தக்கூடிய கருவி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்கிற ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1935இல் சோதனை செய்யப்பட்ட பூனை ஒன்று 26 மணித்துளிகள் மட்டுமே உயிருடன் இருந்தது. 1951இல் குருதிக் குழாயில் அறுவை மருத்துவம் செய்யப்பட்ட நோயர் இறந்துபோனார். 1953 மே மாதம் 6ஆம் தேதி அறுவை மருத்துவம் செய்யப்பட்ட 18 வயதுப் பெண், 48 வயது வரை உயிருடன் வாழ்ந்தார். அறுவை சிகிச்சையின்போது அவளின் இதயம் நிறுத்தப்பட்டு கிப்பன் கண்டுபிடித்த இயந்திரம் இதயத்தின் பணியைச் செய்ய, அறுவை நிகழ்த்தப்பட்டது. டாக்டர் ஜான் ஹேஷாம் கிப்பன் என்பாரும், அவரின் துணைவியார் மேரியும் ஆராய்ச்சி செய்து இக்கருவியைக் கண்டுபிடித்தனர். டாக்டர் கிப்பனுக்குப் பின்னால் மேரி இருந்திருக்க-வில்லை. கிப்பனுக்குப் பக்கத்தில் இருந்தே கண்டுபிடிப்புக்கும் உதவினார்; வெற்றிக்கும் உதவினார். எனவே, வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் உண்டு என்பது சரியல்ல. வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப் பக்கத்திலும் ஒரு பெண் உண்டு!

டாக்டர் கிப்பன் தம் 73ஆம் வயதில் இதய நோயால், மாரடைப்பால் காலமானார் என்பது நகைமுரண்!

– மதிமன்னன்

– (தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *