மாட்டிறைச்சி உண்பது தனி நபரின் உரிமை. அதை அரசே தடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. பொதுமக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு எப்படித் தீர்மானிக்க முடியும்?
– கிரீஷ் கர்னாட், கன்னட எழுத்தாளர்
சுதந்திர நாட்டில் ஒருவருக்கு விருப்பமான உணவை உண்பதற்கு முழு உரிமை உள்ளது. சைவம், அசைவம் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இதில் அரசு தலையிட முடியாது.
– சித்தராமையா, முதல் அமைச்சர், கருநாடகா.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை நான் மதிக்கிறேன். ஆனால் அவரை நம்பத் தயாராக இல்லை. வெனிசுலாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நடக்காது.
– நிக்கோலஸ் மதுரோ, வெனிசுலா அதிபர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிகள் என்று எதுவும் கிடையாது. இந்த ஜாதிகள் எல்லாம் அண்மைக் காலங்களில் வந்தது. இந்த ஜாதிப் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வியும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இவை இரண்டும் கிடைத்துவிட்டால் ஜாதி தானாகவே ஒழிந்துவிடும்.
– நீதிபதி எஸ்.தமிழ்வாணன், சென்னை உயர் நீதிமன்றம்.
ஜாதியிலிருந்துதான் இந்தியாவில் அனைவருக்கும் அடையாளம் வழங்கப்படுகிறது. ஜாதி என்கிற அடையாளம் இருக்கிறவரைக்கும் யாருக்கும் விடுதலை கிடையாது.
– வி.வசந்திதேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
பெண்கள் பொருளாதார ரீதியில் விடுதலை பெற வேண்டியது அவசியம். அதற்கு கல்வி அறிவு மிகமிக அவசியம். சட்டத்துறையில் பெண்கள் முன்னேறினால் அனைத்துப் பிரிவுப் பெண்களுக்கும் அது பயன்படும்.
பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு கேட்பதைவிட ஆண்கள் போலவே சம உரிமைகோரி அந்த நிலையை ஏற்படுத்துவதே சிறந்தது.
– எஸ்.கே.கவுல், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.
19ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தம் ஆகியன நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதன்பிறகே பொதுத்தேர்தல் நடத்தப்படும்.
-மைத்ரிபால சிறிசேனா, இலங்கை அதிபர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
– ஸ்வராஜ் பால், பிரிட்டிஷ் தொழிலதிபர்.