கேள்வி : சமீபத்தில் இறந்துபோன ஒசாமா பின்லேடன், புட்டபர்த்தி சாய்பாபா இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? வித்தியாசம் என்ன? – ஆ.சுஜாதன், முசிறி
பதில் : இரண்டு பேரும் மதத்தை மூலதனமாக்கியவர்கள் என்பது ஒற்றுமை; ஒருவர் தீவிரவாதி என்ற முத்திரையுடன் செயல்பட்டவர். மற்றவர் (பாபா) அப்படி ஏதும் இல்லாத பகவான் முத்திரையுடன் உலவியவர் என்பது வேற்றுமை!
கேள்வி : நாய்களுக்கு இருக்கும் நன்றியுணர்ச்சி கூடவா நம் தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டது? யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல் போட்டுக் கொண்டு விட்டார்களே? – காழி கு.நா. இராமண்ணா, ஆவடி
பதில் : நீதிக்கட்சிக் காலத்திலிருந்தே இப்படி பலமுறை மண்ணைவாரிப் போட்டுக் கொண்ட நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஏராளம் உண்டே!
கேள்வி : அரைப்பார்ப்பனர்கள் என்று அய்யா யாரைக் குறிப்பிட்டார்? ஆரிய வீரியமுள்ள ஆபத்தானவர்கள் _ அரைப்பார்ப்பனரா? பார்ப்பனரா? \ த. முத்துச் செல்வன், தூத்துக்குடி
பதில் : விஷத்தில் பாதி என்ன ? முழுமை என்ன? அய்யா குறிப்பிட்டது சிலரை ஒன்னரை பார்ப்பனர்கள் என்றே. குறிப்பிட்ட அர்த்தநாரீசுவர வீடுகளில் உள்ள தமிழர்கள் அரைப்பார்ப்பனர்கள்.
கேள்வி : தேசியம் என்ற பெயரால் மாநில உரிமைகளையும், வளங்களையும் காவு கொடுப்பதையே பாரம்பரிய குணமாய் கொண்டிருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் மாநிலங்களில் ஆட்சியமைக்கும் படியான சூழ்நிலை ஏற்படுவது ஆபத்தல்லவா? – சி.செழியன், அரியலூர்
பதில் : போகப் போக மக்கள் புரிந்துகொள்வர்! இதற்குப் பயந்து எதன் மீது குதிப்பது என்பதே மாநிலங்களில் மக்கள் கவலை.
கேள்வி : எடியூரப்பா, பரத்வாஜ் _ சண்டையும் சமாதானமும் எதைக் காட்டுகிறது? -அ. கண்மணி, தேனி
பதில் : பார்ப்பனர் மிஞ்சினால் கெஞ்சுவர்; கெஞ்சினால் மிஞ்சுவர் என்பதைக் காட்டுகிறது!
கேள்வி : மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சி வீழ்ந்ததற்குக் காரணம்? – வே. ஆரோக்கியராஜ், காரைக்கால்
பதில் : மக்களை விட்டு விலகிச் சென்றதுதான் காரணம்! சமூக நீதி இடஒதுக்கீடு சரியானபடி வழங்காததும் கூட ஒரு முக்கியக் காரணம்!
ஆட்சித் தலைமை மாறினாலும் உயர்ஜாதித் தலைமைதான் கடந்த காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி! இதுதான் மேற்கு வங்கம்!
கேள்வி : தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய ஆட்சிக்கு தாங்கள் கூறும் அறிவுரை….? – சு. முத்தரசி, பெருங்களத்தூர்
பதில் : பொறுத்திருந்து பார்ப்பதே நம் வேலை _ அறிவுரை அவசரப்பட்டுக் கூறவேண்டிய அவசியமில்லை.
கேள்வி : தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இது சட்டப்படியும் தேர்தல் விதிமுறைகளின்படியும் சரியா? இதற்கு முன்பிருந்த தேர்தல் ஆணையர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது போல் தெரியவில்லையே!? \ இரா. கயல்விழி, நாமக்கல்
பதில் : முழுக்க நனைந்தபிறகு முக்காடு ஏதுக்கடி _ குதம்பாய் என்ற பாட்டு வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
கேள்வி : அன்பே சிவம் என்கிறார் திருமூலர், அறிவே தெய்வம் என்கிறார் பாரதியார், எது சரி? – மா. சுந்தரமூர்த்தி, செய்யாறு
பதில் : கடவுள் ஒரு குழப்பம் என்றார் பெரியார்!
கேள்வி : ஒரு பக்கம் கூட்டணி, மறுபக்கம் 2 ஜி நெருக்கடி இதுதான் காங்கிரசா? \ தா. செல்வராஜ், கோயம்புத்தூர்
பதில் : 2 நி என்றால் இரண்டுவகை வேடிக்கை 2 நிவீனீனீவீநீளீ என்றும் கொள்ளலாமே!
கேள்வி : புதுச்சேரியில் ரங்கசாமியின் திடீர் வளர்ச்சிக்குக் காரணம் என்ன? – பெ. சுந்தரம், திருமங்கலம்
பதில் : காங்கிரஸ் கட்சியில் இடம்பெற முடியாதவர்களின் கட்சி அது!