டெங்கு விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்- மரபு வழி?- மரண வழியா?

மார்ச் 16-31

 

‘டெங்கு’ காய்ச்சல் எதனால் ஏற்படுகின்றது?

‘டெங்கு காய்ச்சல்’ என்று தமிழகத்தில் அனைவராலும் அறியப்படும் இந்த பிரபலமான நோய் டெங்கு வைரசினால் மனிதருக்கு ஏற்படுகின்றது, இந்த வைரசில் பல உட்பிரிவுகள் இருந்தாலும் அதன் நான்கு உட்பிரிவுகள் இந்தியாவில் பொதுவாக நோய்க்குக் காரணமாக உள்ளன.

உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் மட்டும் அய்ந்து கோடிப் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் இதில் அய்ந்து லட்சம் பேர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை அடைந்து 12,000 பேர் உயிர் இழக்கின்றனர்.

டெங்கு நோய் எவ்வாறு பரவுகின்றது?

இந்த வைரசானது ‘ஏடிஸ்’ எனப்படும் ஒரு வகை கொசு கடிப்பதால் மனிதருக்குப் பரவுகின்றது. இந்த ஏடிஸ் இன கொசுக்களைக் கண்டறிவது மிகவும் எளிதாகும். இந்த வகைக் கொசுக்களின் உடலில் கருப்பு வெள்ளைக் கோடுகள் மாறி மாறி இருக்கும்.
இதனால் இதனை ‘டைகர் கொசு’ என்றும் அழைக்கின்றனர்.

இந்தக் கொசுக்கள் மற்ற கொசுக்களைவிட வித்தியாசமானவை ஆகும். இவை மனிதனைப் பெரும்பாலும் பகலில் மட்டுமே கடிக்கக் கூடியதாகும். மேலும் மற்ற வகை கொசுக்களைப் போல் அல்லாமல் இவை முட்டையிடும் இடமும் வித்தியாசமானதாகும்.

அதாவது இவை நீர்நிலைகளில் முட்டையிடாமல் செயற்கையாக தண்ணீர் தேங்கியுள்ள டயர்கள், தேங்காய் கொட்டைகள், உடைந்த பாட்டில்கள், மரங்களின் இலைகளில் நீர் தேங்கும் இடங்கள், பூந்தொட்டிகள், தீ அணைக்க தேக்கி வைக்கப்பட்டிருக்கும் வாளிகள் முதலியவற்றில் முட்டையிடும்.

இந்த முட்டையிலிருந்து வரும் ஏடிஸ் கொசுக்கள் ‘டெங்கு வைரசினால்’ தாக்கப்பட்டுள்ள ஒரு நபரைக் கடித்து அந்த வைரசை மற்ற மனிதருக்குப் பரப்புகிறது.
அறிவியல் மருத்துவம் இந்த நோயை எப்படி அணுகுகின்றது?

விஞ்ஞான மருத்துவ முறைகளில் இந்த நோய் அதன் தீவிரத் தன்மையைப் பொருத்து

1.    டெங்கு சுரம்

2.    சுரத்துடன் கூடிய ரத்தப் போக்கு

3.    சுரம் மற்றும் ரத்தப் போக்குடன் கூடிய உடல் ரத்த சுழற்சி சீர்குலைவு (shock)
என்று மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றது.

ஏமாற்று மரபு மருத்துவர்களைப் போல் எங்களிடம் அனைத்துக்கும் மருந்து உள்ளது என்று கூறாமல், டெங்கு வைரசை அழிக்கும் மருந்தோ அல்லது தடுப்பூசிகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று மருத்துவ உலகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது, ஆனால் இந்த வைரசை உடல் சில வாரங்களில் தானே எதிர்கொள்கின்றது.

அந்த சில வாரங்களில் ஒரு மனிதர் நோயிலிருந்து விடுபடலாம் அல்லது கடுமையாகத் தாக்கப்பட்டு ரத்தப் போக்கு ஏற்பட்டோ அல்லது உடல் ரத்த சுழற்சி சீர்பட்டோ உயிர் இழக்கலாம்.

விஞ்ஞான மருத்துவம் வைரசினால் உடலுக்கு என்ன என்ன பாதிப்புகள் வரலாமென ஆராய்ந்து வைத்துள்ளதால், அதனைக் கூர்ந்து கவனித்து அந்தப் பாதிப்புகளால் மரணம் ஏற்படாமல் அல்லது உடல் உறுப்புகள் பாதிப்பு ஏற்படாமல் காக்கின்றது.

எடுத்துக்காட்டாக மருத்துவ கவனிப்பில் உள்ள ஒருவருக்கு ரத்தப் போக்கு ஏற்படுமாயின் அவர் அதிக ரத்தப் போக்கினால் உயிர் இழக்காமல் அல்லது சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிப்படையாமல் காக்க முயற்சிக்க இயலும்.

டெங்கு – அரசின் பங்கு என்ன?

டெங்கு நோய் போன்ற பல நோய்களில் மருத்துவ கவனிப்பைவிட நோய் வராமல் தடுக்கும் அரசின் சுகாதார அமைப்புகள் மிக மிக முக்கியமானதாகும்.

கொசு ஒழிப்பு, ஏடிஸ் கொசுக்கள் முட்டை இடும் இடங்களைத் தடுப்பது, செயற்கை நீர் தேங்கும் இடங்களைத் தடுப்பது, ஒருவருக்கு நோய் தாக்கினால் அவரின் வசிப்பிடத்தைச் சுற்றி உள்ள கொசு முட்டையிடும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பது, மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை பல்வேறு வகைகளில் அளிப்பது,

பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு, கொசு வலைகள், கொசு விரட்டிகள் போன்றவற்றை வழங்குவது, திட்டமிட்ட நகர அமைப்புகள், திட்டமிட்ட வடிகால் முறைகள்,

மக்கள் தொகையைக் குறைப்பது என்று பல்வேறு கூறுகளை இந்த நோயைத் தடுக்க கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் மருத்துவ மனைகளை அனைத்து வகைகளிலும் மேம்படுத்துவது, துணை சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்று மேலும் பல அம்சங்களும் உள்ளன.

டெங்குவும் ஏமாற்று மெய்ஞ்ஞான மருத்துவமும்: விஞ்ஞான மருத்துவம் டெங்கு நோயை மேற்கண்டவாறு பகுத்தறிவுப் பூர்வமாக அணுகுகிறது. உலகம் முழுவதும் இவ்வாறே இந்த நோய் அணுகப்படுகிறது,

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பப்பாளி இலைச்சாறு, நில வேம்பு நீர் என்று சில மாற்று முறைகளை அரசே பரிந்துரைப்பதைக் காண முடிகின்றது. அரசு இதற்காக ஊடகங்களின் வழியே பல  கோடி ரூபாய்களைச் செலவு செய்கிறது.

இந்த பப்பாளி இலைச்சாறு உள்ளிட்ட மருத்துவ முறைகள் டெங்கு நோயைக் குணப்படுத்திவிடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை,

2011ஆம் ஆண்டு விலங்குகளின் மேல் மட்டுமே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் நிலவேம்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எத்தனலிக் வேதிவினைப்   (ethanolic extract) பொருட்கள் சிக்குன்-குனியாவினால் ஏற்படும் சுரத்தின் அளவை சிறிது குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், சுரத்தைக் குறைக்க ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள மற்ற மருந்துகளைவிட இது சிறந்தது என்பதற்கான ஆதாரம் ஏதும் அந்த ஆய்வில் கிடைக்கப் பெறவில்லை.

மேலும், மனிதர்களுக்கு ஏற்படும் டெங்கு சுரத்திற்கு இந்த எத்தனலிக் வேதிப் பொருட்களோ, பப்பாளி இலைச் சாறோ  பயன்படும் என்பதற்கோ, அது எவ்வாறு வேலை செய்கின்றது (Mechanism of action) என்பதற்கான ஆதாரமோ இந்த மருந்தின் திறனுக்கான ஆதாரமோ (efficacy)இது வரை ஏதும் நிரூபிக்கப்படவில்லை,

மற்றும் இதனை யார் கண்டுபிடித்தார்கள், எப்படிக் கண்டுபிடித்தார்கள் (Mode of study) என்ற கேள்விகளுக்கும் பதில் இல்லை.

சுருக்கமாகக் கூறுவோமேயானால் இவை ஆதாரமற்ற ‘மெய்ஞ்ஞான’ நம்பிக்கைகளாகும்.

இவ்வாறு உலக நாடுகள் அனைத்தும் டெங்குவுக்கு மருந்து தேடிக்கொண்டு இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் நில வேம்புக் குடிநீர் மக்களைக் குணப்படுத்தும் என்பது வேடிக்கையானதாகும்.

இது நம் நாட்டில் மட்டும் பிள்ளையார் பால் குடித்த கதையோடு ஒப்பிடத்தக்கது. மேலும் இந்த மருந்துகள் விளம்பரப்படுத்தப்பட்ட பிறகு நூற்றுக்-கணக்கான டெங்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதே இது ஓர் ‘ஆறுதல் மருந்து’ (placebo) என்பதை உறுதிப்படுத்துகின்றது.

சரியாகச் சொல்வோமேயானால் இது ‘தீராத நோய்களை’த் தீர்க்கும் மற்றொரு மாற்று மருத்துவ பார்முலா என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. மேலும் இந்த பப்பாளி இலைச்சாறு வகை மருந்துகள் மக்களை உண்மையான மருத்துவச் சிகிச்சைக்கு வராமல் திசை திருப்பி விட்டுவிடும் அபாயம் கொண்டவை.

அரசே சொல்லி விட்டதால் ரத்தப்போக்கு ஏற்பட்ட ஒரு டெங்கு நோயாளி அரசு மருத்துவமனைக்கு வராமல் பப்பாளி இலைச் சாறு அருந்திவிட்டு வீட்டிலே இருப்பா-ரேயானால் அது அவர் உயிருக்கு ஆபத்தாய் முடிந்துவிடலாம்.

மேலும் குழந்தைகள், முதியவர்கள், வேறு பல நோய்களால் தாக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் போன்றவர்களை டெங்கு தாக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கக் கூடும்.

ஆகவே டெங்கு நோயைக் கட்டுபடுத்த மெய்ஞ்ஞான வழிமுறைகளை நம்பாமல் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் மேற்கண்ட பல்வேறு விஞ்ஞானப்பூர்வ வழிமுறைகளைப் பயன்படுத்துவதே பகுத்தறிவாகும்.

அலோபதி பல்வேறு மருந்துகளைத் தாவரங்களிலிருந்து பிரித்து பயன்படுத்துகின்றது. விஞ்ஞான மருத்துவம் இது இங்கிருந்து வந்தது அங்கிருந்து வந்தது என்று பிரித்துப் பார்ப்பதில்லை.

விஞ்ஞானத்தின் ஒரே அடிப்படை அது நிரூபிக்கப்பட வேண்டும் என்பதே ஆகும், நிரூபிக்கப்பட்ட எந்த மருத்துவ முறையும் தானாகவே விஞ்ஞான மருத்துவத்தில் சேர்ந்து விடும். பப்பாளி இலை உள்ளிட்ட மருந்துகள் நிரூபிக்கப்படாத மெய்ஞ்ஞான முறைகள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *