மாற்றம் என்ற ஏமாற்றம்- ஆசிரியர் பதில்கள்

மார்ச் 16-31

ஆசிரியர் பதில்கள்

மாற்றம் என்ற ஏமாற்றம்

கேள்வி : இன்றைய இளைய சமுதாயத்தினர் அவசியம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய இயக்க நூல்கள் இரண்டு கூறுங்களேன்?

– பா.ஆனந்தி, வியாசர்பாடி

பதில் : தமிழர் தலைவர் (தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு), 2. இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை _ தந்தை பெரியார்.

கேள்வி : உலக மகளிர் நாளையொட்டி மகளிருக்குத் தாங்கள் கூறும் அறிவுரை?

– பா.வெற்றிச்செல்வி, சென்னை

பதில் : மகளிர் உரிமை -_ உயர்வு அடையவேண்டிய இலக்கைப் பற்றிச் சிந்தித்துப் பேசும், எழுதும் சிந்தனையாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் எவரும் எட்டாத உயரத்திற்குச் சென்ற தந்தை பெரியார்தம் பெண்ணுரிமைச் சிந்தனைகளை மறக்காமல் குறிப்பிட்டு இளைய சமுதாயத்துப் பெண்களுக்குச் சொல்லுங்கள்.

கவிஞர் கனிமொழி அவர்கள் தி.மு.க. மகளிர் அணியினருக்கு பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை தொகுப்புகளைப்- பாடநூல்போல் படிக்க வழிகாட்டியுள்ளார். அதைப் பின்பற்றுக.

கேள்வி : கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறிப்பவனைத் தண்டிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால், பக்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறிப்பவனைத் தண்டிக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா?

– ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி

பதில் : கிரிமினல் (குற்றச்) சட்டத்தில் மோசடி, ஏமாற்றுதல் போன்ற பல குற்றப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது!
ஆனால், வாக்குக்காக ஏங்கும் ஆட்சியாளரின் மனதில்தான் நடவடிக்கை எடுக்கத் துணிவு இல்லை!

கேள்வி : மதத்தையே தங்கள் கட்சியின் குறிக்கோளாக வைத்துள்ள கட்சி மதச்சார்பற்ற ஒரு நாட்டில் தோன்ற இடமளித்தது முன்னைய ஆட்சியாளர்கள் செய்த பெரிய தவறு அல்லவா?

– இ.கிருபாகரன், சோளிங்கர்

பதில் : ஆம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறு + நம் இளைஞர்கள் விரும்பிய மாற்றம் என்ற ஏமாற்றம். என்றாலும், அவர்கள் வாங்கிய வாக்கு சதவிகிதம் 31.1 மட்டும், 69 பேர் எதிர்த்தே உள்ளனர் என்பது மகிழத்தக்கது!

கேள்வி : திருவரங்கத்தில் அ.தி.மு.க. பெற்ற வெற்றி அக்கட்சியினரால் உண்மையிலேயே கொண்டாடப்பட்ட அளவுக்குப் பொருத்தமானது என கூறமுடியுமா?

– செ.உமா, பெரம்பூர்

பதில் : மறைமுகமாக இதை அ.தி.மு.க.வே ஒப்புக்கொண்டதுபோல், எந்த நன்றி அறிவிப்புக் கூட்டமும் அவர்களால் திருவரங்கத்தில் நடத்தப்படவில்லையே!
எங்களிடம் காசு வாங்கித்தான் ஓட்டளித்தீர்கள் உங்களுக்கென்ன நன்றி என்று சொல்லாமல் சொல்லுகிறார்களோ என்னவோ!

கேள்வி : டெல்லி தேர்தல் முடிவுகள் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என நிதி அமைச்சர் கூறியுள்ளது பற்றி?

– அ.மணியரசன், ஊரப்பாக்கம்

பதில் : வீண் ஜம்பம் _ வீம்பு பதில். ஜனநாயகத்தை உண்மையிலேயே மதிப்பவர்களானால் இப்படி மமதை கலந்த பதிலைக் கூறியிருக்க மாட்டார்கள்!

கேள்வி : இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரக் கடவுள் வெங்கடாசலபதி கோவிலுக்குப் போகும் ஆன்மீகவாதிகளில் சிலர் அங்கு போன பிறகு தோற்கிறார்கள், சிலர் வெற்றிபெறுகிறார்கள். இவர்களில் யாருக்கு வெங்கடாசலபதி பட்டை நாமம் போடுகிறார்?-

– ம.கன்னியப்பன், திருவாரூர்

பதில் : அவர் பெயரைச் சொல்லிச் சுரண்டும் பார்ப்பனர்கள் இருசாராருக்கும் பட்டை நாமம் போடுகின்றனர்! கோவிந்தா! கோவிந்தா!!

கேள்வி : டெல்லியில் மதச்சார்பின்மை தொடர்பாகப் பேசிய பிரதமர் மோடியின் பேச்சு, அவரது ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து மனப்பூர்வமாக மாறுபட்ட நிலையை எடுத்துள்ளார் என நம்ப இயலுமா?

– கா.வெற்றிமாறன், மதுரை

பதில் : அப்படி முழுக்க நம்ப இயலாவிட்டாலும் பலகுரல் மன்னர்கள் நிறைந்த அந்த பா.ஜ.க. _ சங் பரிவார் கும்பல்களின் இப்படிப்பட்ட சிக்கலை உருவாக்கும் பேச்சுகள் _ செய்கைகளால் மோடியின் அரசுக்கு மிகப் பெரிய அவலம் உலக அளவில் ஏற்படுவதை அவர் உணரும் கட்டம் வந்துள்ளது என்பதை நம்பலாம்.

கேள்வி : நாளுக்கு நாள் மதச்சார்பற்ற தன்மைக்கு அச்சுறுத்தல் உண்டாகும்படி சங் பரிவாரங்கள் பேசுவதை, நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழு என்று பிரதமர் மோடி அனுமதித்திருக்கிறாரே?

– பெரியார் மாணாக்கன், பூவிருந்தவல்லி

பதில் : முந்தைய கேள்வியின் பதிலே இதற்கும் பொருந்தும்.!

கேள்வி : சட்டப்பிரிவு 370அய் விட்டுக் கொடுத்திருப்பது, ம.ஜ.க. அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கக் கேட்பது, முஃப்தி முகமது சய்யது பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பாராட்டியிருப்பது, என்று தொடரும் பிரச்சினைகளின் நடுவில் ம.ஜ.க. பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா?

– மு.பழனிகுமார், அமைந்தகரை

பதில் : நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது!

கேள்வி : ஆம் ஆத்மி கட்சி தன் மூலக் கொள்கையை விட்டு விலகிவிட்டது என்று அந்தக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் பூசன் சொல்லியிருப்பது எதைக் காட்டுகிறது?

– க.மணிவண்ணன், புதுவண்ணை

பதில் : அவரை அமைச்சராக்கவில்லையே என்ற அவரது உள் உணர்வைக் காட்டுகிறது. அவருக்கு முக்கியம் கொடுக்கப்படாததால் இப்படி ஒரு புகார்ப் படலம். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

கேள்வி : டில்லி நிர்பயா கொடூரக் கொலையில் குற்றவாளிகள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் எம்.எல்.சர்மா, இந்தியக் கலாச்சாரத்தில் பெண்களுக்கு இடமில்லை என்று கூறியிருக்கிறார். நிர்பயாவுக்கு ஆதரவாக எழுந்த எழுச்சி, இந்து மதத்துக்கு எதிராக எழாததேன்?

– வி.சங்கர், அதிரை.

பதில் : இந்துத்துவ போதையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தவறு செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போன்று சில விஷயங்களைக் கூறுகிறார்கள். அதைக் கடுமையாக பெண்கள் எதிர்த்து வீதிக்கு வந்திருக்க வேண்டுமே!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *