அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16
மிசா காலத்தில் எனது இணையரையும் (அ. இறையனார்) பிடிக்க உத்தரவு வந்துள்ள செய்தி காவல் நிலையத்தின் மூலமாக கிடைக்கப் பெற்றது. இவரோ அரசுப் பணியாளர்.
இவரின் பணிக்கு ஏதாவது தொல்லைகள் உண்டாகி விடும் என்ற எண்ணத்தில், இவரை வீட்டில் இருக்கவிடாமல் தெரிந்தவர் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, திருப்பூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு மூன்று மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையை அடைந்தேன்.
அன்னையாரைப் பார்த்தேன். முதலில் முகம் கழுவி சாப்பிட்டு வா என்று கூறி, பாலாவைக் கூப்பிட்டு சோறு போடு என்றார்கள். பதட்டத்தில் இருந்தாலும் பசி ருசியை அறிய வைத்தது. அருமையான வற்றல் குழம்பு அப்பளத்துடன் சாப்பிட்டு முடித்தவுடன் அம்மாவிடம் வந்தேன்.
அம்மா என் கழுத்தினைப் பார்த்து, இந்த கருகமணி மாலையைப் போட்டுக் கொண்டு வந்தாயே, உன்னை யாரும் பின்தொடரவில்லையா? என்று கேட்டுவிட்டு, உனக்குத் தைரியம் அதிகம் என்றார்கள். அந்த மாலையில் கருப்பு மணியுடன் அய்யாவின் படம் பொறித்த கல் இருக்கும்.
உட்கழுத்தில் அந்த மாலை இருக்கும். அன்றைய பெண்கள் சரசுவதி, இலட்சுமி போன்றவர்களின் உருவங்கள் பதித்த மாலையை அணிந்திருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என்னுடன் வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் பல வினாக்கள் தொடுத்தது உண்டு.
மானமிகு இறையனாரைப் பற்றிய செய்திகளை அம்மாவிடம் நான் கூற, பிடிபடாமல் இருப்பது நல்லது என்று சொன்னார்கள். தங்களைத் தேடி வருபவர்களின் முகபாவனை பார்த்து, நேரம் கெட்ட நேரத்தில் நுழைந்தால்கூட சாப்பிடச் சொல்ல வேண்டும் என்ற மனப் பக்குவத்தை அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
அவரின் உள்ளம் பாதிப்புக்கு ஆளாகும் போதெல்லாம், காண்டேகர் எழுதிய நாவல் வெறுங் கோயில் என்ற புத்தகத்தை பலமுறை படிப்பேன் என்றார்கள். அன்றைய காலப் பெண்களுக்கு (படித்த) அந்த நாவல் அருமருந்தாக பயன்பட்டிருக்கிறது.
கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, ஈரோட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் இல்லத்திற்கு வாருங்கள் என்றேன். அவர்கள், ஏன் உனக்கு அரசு வேலை பார்க்கப் பிடிக்கவில்லையா? என்றார்கள்.
அதற்குக் காரணம், மிசா காலம். அப்படிப் போனால் போகட்டும் என்று நான் கூற, உன் ஆசைக்கு அணை போட விரும்பவில்லை, வருகிறேன் என்று கூறினார்கள்.
அம்மாவைப் பார்க்க அக்கம் பக்கம் உள்ள மக்கள் கூடி திருப்பூரில் எங்கள் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தனர். அன்னை மணியம்மையாரோ எங்கள் வீட்டு சின்னஞ்சிறு அடுப்படியில் வந்து அடுப்புமேட்டில் உட்கார்ந்து கொண்டு எங்கள் பிள்ளைகள் பண்பொளி, இறைவி, மாட்சி, இசையின்பனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அன்று பகலில் என் மகன் இசையின்பன் எங்கேயோ விளையாடி கல்லால் அடிபட்டு மண்டை உடைந்து கட்டுப்போட்டிருந்தான். அவனிடம், எப்படி மண்டை உடைந்தது என்று கேட்க, அவனோ, கீழே விழுந்து அடிபட்டுவிட்டது என்று சொன்னான்.
உடனே அம்மா, பொய் சொல்லாதே! கீழே விழுந்தால் இப்படி அடிபடாது என்று சொல்லிவிட்டு, பசங்களை மட்டும் நம்பவே கூடாது. பெண் குழந்தைகள் நல்ல பிள்ளைகள் என்று சொன்னார்கள்.
பிறகு தேநீர் போட்டுத் தந்து வெளியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கச் சொன்னார்கள். தாயன்பையே உணர்ந்திராத எனக்கு உண்மையான தாயின் வாஞ்சையுடன் தன் மகளின் இல்லத்தில் வேலையைப் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டிய நிலையை,
இந்த வினாடிவரையிலும் கழகமும் நம் குடும்பம் என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டவர் அன்னை மணியம்மையார் என்பதை அம்மாவிடம் அன்று உணர்ந்தேன்.
அவர்கள் நினைவாக எங்கள் இல்லத்திற்கு மணியம்மையார் மனை என்று பெயர் சூட்டப்பெற்று காலத்தாலும் நீக்கமுடியாத உறவாக எங்களுடன் தொடர்ந்து வருகிறார்கள்.
– திருமகள் இறையன்