உற்சாக சுற்றுலாத் தொடர் – 4
ஆஸ்திரேலியாவின் அற்புதம்
மிகப் பெரிய பவளப் பாறை
சமோவா தீவிலிருந்து சுமார் 6மணி நேரம் விமானப்பயணம் செய்து ஆஸ்திரேலியா நாட்டைச் சென்று அடைந்தோம். எப்போதும் போல பேராசிரியர்கள், கடலின் எரிமலைகள் பற்றியும்’ அவை எங்கெங்கே எப்படி உண்டாயின’ கடல் எப்படி மாற்றங்களுடன் வாழும் உலகமாக உள்ளது, பவளப் பாறைகள் எப்படி ஓராண்டிற்கு இரண்டு மில்லிமீட்டர் மட்டுமே வளரும் உயிருள்ள வாழும் உயிரினம் என்பதைப் படங்களுடன் விளக்கிச் சொன்னார்கள். பல அரிய தகவல்கள் புதிதான செய்திகளாக இருந்தன.
கற்றது கைம்மண்ணளவு என்பதை, பல படங்களைப் பார்த்திருந்த நாங்களே புதிது புதிதாக அறிந்து கொண்டோம். ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை நகரம் கேன்ஸில் உள்ள குயின்ஸ்லேண்ட் விமான நிலையத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து புல்மேன் ரிசார்ட் என்ற விடுதியில் 2 நாள்கள் தங்கினோம். அங்கிருந்து ‘Great Barrier Reef’ என்று அழைக்கப்-படும் பவளப்பாறை இடத்திற்கு மூன்றடுக்குப் படகில் நடுக்கடலுக்குச் சென்றோம். உலகின் மிகப் பெரிய பவளப் பாறைகள் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் உள்ளன.
பல மைல் கணக்கில் பல்வேறு விதமான பாறைகள். உயிருள்ளவை என்பதைக் கேட்க வியப்பாக இருக்கும். இவற்றைப் பற்றி நாள்கணக்காகச் சொல்லலாம். சுருக்கமாகப் பார்ப்போம்.
வசதிகள் நிறைந்த படகுகளில் முதலில் சென்று, பின்னர் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போன்ற படகில் இருபுறமும் கண்ணாடி வழியே கண்டு இன்புறும்படி ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது. பல மைல் தூரம் வரை இவை உள்ளன என்பதால் வரும் பயணிகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்-படுகின்றனர். நேசனல் ஜியோகிராபி-யின் ஏற்பாடு என்பதால் எங்களுக்கு நல்ல இடம் காண்பிக்கப்பட்டது.
பல நூறு வகை பவளப் பிராணிகள் பல நிறங்களில் கண்களைப் பறித்தன. அவை பல்வகைத் தாவரங்களை ஒத்திருந்தன (Sea Cucumber, Lettuce, Cauliflower தண்டுக்கீரை போன்றவை). இந்தப் பவளப் பாறைகளை வைரத்தைக் காப்பது போல காப்பாற்றுகின்றனர் என்பது மிகையான செய்தியே அல்ல. நம் கைகளால் அவற்றைத் தொடக்கூட அனுமதி-யில்லை. அவை அவ்வளவு மென்மையான உயிர்கள்.
பல்வேறு வண்ணங்கள், பல்வேறு வடிவங்கள், நடுவே பல்வகைக் கண்கவர் மீன் இனங்கள், ஆமைகள் என்று வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
பின்னர் ஒரு நல்ல இடத்திலே கடலிலே சிறப்புக் கண்ணாடி, மூச்சுவிடுங் குழாய், கால்களில் பதிந்த முறம் போன்ற கால் துடுப்பு இவற்றை அவரவர் அளவிற்கேற்பப் பொருத்திக்-கொண்டு, நெஞ்சிலே மிதக்கும் உடுப்பை மாட்டிக் கொண்டு கடலில் குதித்தோம். ஒரு சிறப்பான அங்குள்ள வழிகாட்டி முன்செல்ல அவரைத் தொடர்ந்து பின்சென்றோம். அழகழகான பவளப் பாறைகள், மீன்கள் அந்தக் கண்ணாடி வழியே பார்க்கும் போது நம் அருகிலே, மெதுவாக நீந்திச் சென்று மகிழ்ந்தோம்.
நாங்கள் இதுவரையில் பார்த்த பவளப் பாறைகளில் இதற்குத்தான் முதலிடம். நன்கு பழக்கமானவர்கள் காற்றுக் குழாய்களை முதுகில் மாட்டிக்கொண்டு உடலில் இரும்புக் குண்டுகளை ஆழமாகச் செல்வதற்காக மாட்டிக்கொண்டு 50, 60 அடி ஆழம் சென்று ஒரு மணி, இரண்டு மணி நேரம் மீன்களாகவே வாழ்ந்து, பின்னர் காற்றழுத்தம் மாறுவதற்காகக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தனர்.
அவர்களின் முகத்தில் நிறைந்திருந்த மகிழ்ச்சியைப் பார்த்தபோது நாமும் கற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இளமை திரும்பினால் கட்டாயம் செய்துவிட வேண்டியதுதான்.
பயணம் அலுப்படையாமல் இருந்ததற்கு இன்னொரு முக்கியக் காரணம், தங்கிய இடம் அய்ந்து நட்சத்திர விடுதிகள். இவையெல்லாம் பெரும் செல்வந்தர்களும், அடுத்தவர் பணத்தில் வாழும் அரசு அதிகாரிகள், தொழில்துறை மேலாளர்கள் போன்றோர் மட்டுமே தங்கக்கூடியது. ஆனால் எங்கள் குழுவில் பெரும்-பாலானோர் தாங்களே உழைத்துச் சேமித்து வைத்தவர்களும், ஓய்வு பெற்ற மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் சிறுதொழில் செய்பவர்களுமாக இருந்தனர். அனைவருக்கும் இது வாழ்வில் ஒரு முறை என்ற பயணமாகவே இருந்தது. சிலர் செல்வந்தர்களாக இருந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
ஒருவர் சொன்னார்: “எங்கள் குழந்தைகளைக் கேட்டோம். இந்தப் பணம் உங்களுக்கு விட்டுச் செல்லவா அல்லது நாங்கள் இந்தப் பயணத்தில் செலவு செய்யவா? என்று. நீங்கள் கடினமாக உழைத்தீர்கள். இப்போது அனுபவித்து மகிழுங்கள். நாங்கள் பொருள் ஈட்டிக் கொள்கின்றோம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்” என்றார். இதை நமது தமிழகப் பிள்ளைகளும் செய்தால் பல பெற்றோர் மனம் மகிழ்வர்.
இந்த விடுதிகளில் படுக்கை, தலையணை, துண்டு, உள்ளே அணிய சிறப்புத் துணிக் காலணி, பயன்படுத்தும் சோப்பு, சீப்பு என்று அனைத்துமே மிகவும் தரமானவை. முக்கியமாக உணவு. நாம் வேண்டியதை எடுத்துக் கொண்டு உண்ணுமாறு பல வகைகள் இருந்தன. முதலில் எதை விடுவது, எதை உண்பது என்று, “காய்ந்த மாடு கம்பில் புகுந்த” கதையாக இருந்தாலும் பின்னர் நமக்கு வேண்டிய நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுப்பது எளிதாகிவிட்டது. விடுதிகளின் சுற்றுப்புறமும் மிகவும் அருமை. பணமும் முதலிலேயே கட்டிவிட்டதால் இங்கே ஏதோ செலவில்லாமல் விருந்துண்பது போன்று தோன்றியதால் மனக்கவலை இல்லை.
இரண்டாவது நாள் காட்டு விலங்குகள் காப்பிடம் சென்றோம். அங்கு பல வகை ஆஸ்திரேலியப் பறவைகள் கூட்டில் அடைக்கப்-படாமல் எங்களைச் சுற்றிப் பறந்து சுதந்திரமாய் அலைந்தன. அதேபோல் கங்காருகளும் அதன் குட்டிகளும் அவற்றின் தாய்ப் பைகளில் உட்கார்ந்த வண்ணம் பால் குடித்துக் கொண்டே எங்களை எட்டிப் பார்த்தன. சில கங்காருகள் நம் கைகளிலிருந்து உணவை வாங்கி உண்டன. நேரமின்மையால் ஆஸ்திரேலியாவின் மழைக் காடுகளையும் ஆதிவாசிகளையும் பார்க்க முடியவில்லை.
விலங்குகள் காப்பகத்திலிருந்து நேராக விமான நிலையம் வந்தடைந்தோம். வரும் வழியில் கடற்கரையை ஒட்டிய அழகிய இயற்கைக் காட்சிகளும், திறந்த வெளியில் திரியும் கங்காருக் கூட்டங்களும் கண்களுக்கு விருந்தளித்தன.
கங்காரு என்பதன் பொருள் கேட்டு மகிழ்ந்தோம். முதலில் வந்த வெள்ளையர்கள் இதைப்பார்த்து அங்குள்ள பழங்குடியினரிடம் இது என்ன என்று கேட்டார்களாம். பழங்குடியினர் அவர்கள் பேசுவது புரியாமல் “கங்காரு” என்றனராம். கங்காரு என்பதற்கு அவர்களது மொழியில் தெரியாது என்பது பொருளாம். பழங்குடியினர் கூறிய கங்காரு என்பதே இப்போது இந்த அழகிய விலங்கின் பெயராகிவிட்டது!
ஆஸ்திரேலியாவின் ஒரு துளியைத்தான் பார்த்தோம், அது சிறு துளியானாலும் சிறப்பான மனதைக் கவர்ந்த நினைவாகி-விட்டது.
நினைப்போம், அடுத்த அற்புதம் காணும் வரை…