சர்க்கரை நோய்க்கு மருந்து தேவை இல்லை

பிப்ரவரி 16-28

மரபு வழி – மரண வழியா?

சர்க்கரை நோய்க்கு மருந்து தேவை இல்லை

– ஜானகிராமன்

மூடநம்பிக்கைக் கருத்து 3

அண்மையில் ஒரு நாள் அய்.சி.யூ_வில் பணியில் இருந்த போது 53 வயதுப் பெண் நோயாளி ஒருவரைத் தூக்கி வந்தனர்.

அவர் முழுமையாக நினைவு இழந்த நிலையில் இருந்தார் (unconscious).

அந்த நோயாளி ஏற்கெனவே எனக்குத் தெரிந்தவர்தான்.

சில ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்தார். மற்றபடி அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்பதை நான் அறிவேன்.

ஆனால் இவ்வாறு திடீரென சுயநினைவு இல்லாமல் அவரை அழைத்து வந்திருந்தது எனக்குக் குழப்பத்தைக் கொடுத்தது.

அவரின் ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதித்துப் பார்த்தபோது அது 500க்கு மேல் என்று காட்டியது. இரத்தத்தில் கீட்டோன் அளவும் அதிகரித்து இருந்தது.

பரிந்துரைக்கப்பட்ட அளவில் சர்க்கரை அளவினை வைத்திருந்தால் இந்நிலை ஏற்பட வாய்ப்பு இல்லை. உடலில் சர்க்கரை அளவு அதிகமானதால் DKA எனப்படும் உயிருக்கு ஆபத்தான பாதிப்பு அவருக்கு ஏற்பட்டிருந்தது.

எனவே நோயாளி மாத்திரைகள் ஒழுங்காகச் சாப்பிட்டு வருகின்றாரா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரின் கணவர், ஆம் ஒழுங்காகத்தான் மருந்து சாப்பிட்டு வருவதாக சொல்லிக் கொண்டு இருந்தார்.

இரண்டு நாள்களில் நோயாளி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி இருந்தார். மூன்றாம் நாள் அவரது கணவர் ‘டாக்டர் உங்களிடம் நான் ஒன்றை மறைத்துவிட்டேன்! என்று கூறினார்.
மேற்கொண்டு வினவிய போது, அவரின் சோகக் கதையை என்னிடம் சொல்லத் தொடங்கினார்.

அதாவது, அவரது நன்பர் ஒருவர் அவரிடம் சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஒரு இடத்தை நான் அறிவேன் என்று கூறி இருக்கின்றார்.

அந்த இடம்  சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள துர்க் (durg) என்ற இடத்தில் உள்ள ஓர் இடமாகும். அங்கே மூன்று நாள்கள் மருந்து வாங்கி அருந்தினால் சர்க்கரை நோய் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று கூறி இருக்கின்றார். மேலும், பல மாநிலங்களிலிருந்து பெரும் கூட்டம் அங்கே வருவதாகவும் சொல்லி இருக்கின்றார்.

இதனை உண்மை என நம்பி அந்தத் தம்பதியினர் சத்தீசுகர் மாநிலத்திற்குச் சென்று உள்ளனர். மூன்று நாள்கள் அங்கே தங்கி அந்த மருந்தை உட்கொண்டிருக்கின்றனர். அந்த போலி மருத்துவர்களின் அறிவுரைகளின்படி அலோபதி மருந்துகளை நிறுத்தியும் விட்டனர். மொத்த செலவு ரூ.20,000க்கு மேல் ஆகி இருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து சர்க்கரைக்கான மருந்துகள் உட்கொள்ளாததினால் இந்நிலைக்கு ஆளாகி இப்போது முழுமையாக மயக்கம் அடைந்து இங்கு அழைத்து வரப்பட்டிருக்-கின்றார். மேற்கண்ட ஆதாரமற்ற ஏமாற்று முறை போலவே நூற்றுக்கணக்கான மாற்று வழி சர்க்கரை நோய் சிகிச்சைகள் இந்தியாவில் உள்ளன.

தொலைக்காட்சி, அச்சு ஊடகம், சமூக ஊடகங்களில் பல்வேறு நோய்களை நிரந்தரமாக தங்களால் தீர்க்க முடியும் என்பது போன்ற பல்வேறு விளம்பரங்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். பொதுவாகவே விஞ்ஞானத்தைவிட மெய்ஞானத்தின் மீது அதிக நம்பிக்கை வைக்கும் இந்திய மனப்பான்மைதான் இதற்கு அடிப்படையாக விளங்குகின்றது.

மேலும் மருத்துவ மூடநம்பிக்கையில் ஏமாந்தவர்கள் அதனை வெளியில் சொல்ல மாட்டார்கள். இது இந்த ஏமாற்றுக் கும்பலுக்கு மேலும் கூடுதல் பலம் சேர்க்கின்றது. வரலாற்றில் உலகம் முழுவதும் சர்க்கரை நோய் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பண்டைய கால மருத்துவர்கள் சிறுநீரின் வழியே அதிகப்படியான சர்க்கரை வெளியேறுவதை நோயாளிகளின் சிறுநீர்ப் பாதை அருகே அடிக்கடி ‘எறும்புகள்’ வருவதன் மூலமும் அவை கடிப்பதால் ஏற்படும் தடிப்புகள் மூலமும் அறிந்து வைத்து இருந்தனர். மேலும் அதிக அளவு சிறுநீர் வெளியேறுவதால் இந்நோய் நீரிழிவு நோய் என்று பெயர் பெற்றது.

அக்கு மருத்துவர்களின் பொய்ப் பிரச்சாரம் போல் இது உருவாக்கப்பட்ட புதிய நோய் அல்ல.

சிகிச்சைகளே இல்லாத நிலை மாறி நவீன விஞ்ஞான மருத்துவம் தொடர்ந்து ஆய்வு செய்து தற்போது வெற்றிகரமாக இந்நோயைக் கட்டுபடுத்துமளவு முன்னேறி உள்ளது. இந்நோயில் பல்வேறு வகைகள் உள்ளன.

அந்த பல்வேறு வகைகளில் நோய் ஏற்பட  காரணங்களும் வேறு வேறு.

Type 1. சர்க்கரை நோய் குழந்தைகளைத் தாக்குவது, இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்கள் செயல்படாததால் வருவது, இது மரபணுக் கோளாறாகும்.

Type 2. என்பது பொதுவாக வயதானவர்களுக்கு வருவது, இது ‘இன்சுலின்’ செல்கள் செயல்பட இயலாததால் (insulin resistance) ஏற்படுகின்றது.

மேலும் கர்ப்ப காலங்களில் தற்காலிகமாக வரும் சக்கரை நோய் (gestational diabetes) போன்று  MODY, LADA என்று இன்னும் சில வகைகளும் உள்ளன.

மேலே சொன்னவாறு இந்த வேறு வேறு வகைகளில், நோய்க்கான காரணம்  வேறு வேறாக இருப்பினும் எல்லாவற்றிலும் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகின்றது என்ற அடிப்படையில் இவை ஒன்றுபடுகின்றன. ஆகவே எந்த வகை சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்துள்ளது என்று கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.

‘சரியான ரத்த சர்க்கரை அளவு’ எதை வைத்து முடிவு செய்யப்படுகின்றது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகின்றது.

இது சர்க்கரை மனித உடலில் எந்த அளவு வரை (range) இருக்கும்போது உடல் பாதிப்பில்லாமல், இயங்குகின்றது என்ற அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. எடுத்துக்-காட்டாக, ரத்த சர்க்கரை அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவான 90 முதல் 140 வரையில் இருக்கும்போது அவரின் சிறுநீரகம் சர்க்கரையை வெளியேற்றாது. ஒரு வேளை 200க்கும் அதிகமாக சர்க்கரை மிகுமானால் சிறுநீரகம் சர்க்கரையை வெளியேற்றத் தொடங்கும்.

மேலும் அதிக அளவு சர்க்கரை பல்வேறு செல்களில் படிந்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கும்.

ஆகவே எந்த அளவு வரை சர்க்கரை இருக்கும்போது உடல் செயலியலில் (physiological) பாதிப்பு ஏதும் இருக்காதோ அதுவே ‘நார்மல்’ அளவு என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதிப்புடன் உள்ள நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவினைத் தொடர்ந்து பரிசோதித்ததின் மூலமும் பிணகூராய்வு சோதனைகள் மூலமும் இது முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை அளிக்கப்படாத சர்க்கரை நோய் அல்லது தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது சிறுநீரகம், இதயம், ரத்த நாளங்கள், கண்கள், நரம்பு மண்டலம் முதலியவற்றைப் பாதிக்கக்கூடியது. மிக அதிகமான அளவு ரத்த சர்க்கரை உயிருக்கு ஆபத்தை உடனடியாக ஏற்படுத்தக்கூடியது.

30% சிறுநீரக செயலிழப்புக்கான காரணம் சர்க்கரை நோயாகும். சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை http://en.wikipedia.org/wiki/Complications_of_diabetes_mellitus  என்ற இணைப்பில் சுருக்கமாகக் காணலாம்.

ஆகவே நிலை இப்படி இருக்கும்போது, இதைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் மரபு மருத்துவர்கள் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். சர்க்கரை நோய் ஒரு நோயே இல்லை என்று ஒரு நாள் சொல்கின்றனர் மறுநாள் மரபு மருத்துவத்தில் மட்டுமே இதனை முழுமையாகத் தீர்க்க முடியும் என்கின்றனர்.

இது நோயே இல்லை என்று முதலில் கூறிவிட்டு, பின்பு அதனைத் தங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று இவர்கள் கூறுவது வேடிக்கையானது மட்டுமல்லாமல் மக்களின் உயிருக்கு நேரடியாக உலை வைக்கக்கூடியது.

மேலும் மனித குலத்தையே சூறையாடி வந்த கொள்ளை நோய்களான ‘பெரியம்மை, காலரா, கக்குவான், மலேரியா, தொழுநோய்’ போன்ற பல நோய்களை வரலாற்றில் தீர்க்க முடியாத மரபு மருத்துவர்கள், தற்போது விஞ்ஞானம் அவற்றுக்குத் தீர்வு கண்ட பிறகு திடீரென ‘அலோபதியை விரட்டுவோம்’ என்று கிளம்பி இருப்பது கண்டிக்கத்தக்கது.

மேலும் இந்திய மருந்துச் சட்டம் 1945 குறித்தும் இவர்கள் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்.

இந்திய மருந்துச் சட்டம் 1945இன் j பிரிவு அலோபதியில் இன்னும் ‘மருந்துகள் மூலம் தீர்வு எட்டப்படாத’ 54 வகை நோய்களை எங்களால் தீர்க்க முடியும் என்று ‘மரபு மருத்துவர்கள்’ மக்களை ஏமாற்றக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 1955இல் இந்தச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.

அது சர்க்கரை வியாதி உள்ளிட்ட அறிவியல் மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வு காணமுடியாத 54 வகை வியாதிகளை சித்து வேலைகள் (magical remedy ) மூலம் அல்லது மாற்று மருத்துவம் மூலம் எங்களால் முழுமையாகத் தீர்க்க முடியும் என்று விளம்பரம் செய்வதைத் தடை செய்கின்றது.

அதற்குரிய தண்டனைகளையும் வரையறுக்-கின்றது.

எடுத்துக்காட்டாக, அந்த லிஸ்டில் உள்ள கேட்ராக்ட் எனப்படும் கண்புரை நோயை எடுத்துக் கொள்வோம்.

கேட்ராக்ட் என்னும் பார்வையை மறைக்கும் நோய்க்கு மருந்துகள் ஏதும் இல்லை.
ஆனால் அறுவை சிகிச்சை முறையில் அதற்கு 100% தீர்வு உள்ளது.

பழுதான லென்சை அகற்றி செயற்கை லென்சு பொருத்தினால் பார்வை மீண்டும் துல்லியமாகக் கிட்டும்.

(இந்த அறுவை சிகிச்சைகள் ஓர் ஆண்டில் லட்சக்கணக்காக நடக்கிறது)

இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் முழுமையாகத் தீர்க்க முடிந்த ஒரு நோய் ஏன் j பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதுதான்.

அது ஏனெனில், மருந்துகளால் குணப்படுத்த முடியாத cataractஅய்மக்களுக்கு அறுவை சிகிச்சையின் மேல் உள்ள பயத்தைப் பயன்படுத்தி மாற்று மருத்துவர்கள் தங்கள் மருந்துகள் மூலம் குணப்படுத்துகிறேன் என்று ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் அது j பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதே போலவே சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை முழுமையாக நீக்குகிறோம் என்று யாரும் மக்களை ஏமாற்றக் கூடாது என்றே அவை j பிரிவில் உள்ளன. ஆனால் இங்கு மருத்துவ விஞ்ஞானம் சர்க்கரை, பிரஷர் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுப்பதை அந்தச் சட்டம் தடை செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

எனவே நோயாளிகள் இந்த வெவ்வேறு வடிவில் வரும் மூடநம்பிக்கை முறைகளையோ, ஏமாற்று முறைகளையோ நம்பி தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். ஒரு மணி நேரத்திற்குக் குறைவான மணித்துளிகள் காத்திருப்பில் எந்த அரசு மருத்துவமனையிலும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை இலவசமாக வாங்கிவிட முடியும்.

பெரும்பாலான சர்க்கரை நோய் மருந்துகள் அரசின் விலை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் உள்ளன. மேலும் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளையும் ‘மருத்துவ முறைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

தனியார் மருத்துவக் கொள்ளைக்கு மாற்றாக மூடநம்பிக்கை மருத்துவ முறைகளை வைக்க முடியாது. மாறாக, அரசை மக்களுக்கு முழுமையான இலவச தரமான மருத்துவ சேவை வழங்கக் கோர வேண்டும். மக்கள் விரோத பா.ஜ.க. அரசு சுகாதாரத்திற்கான அரசின் நிதியைக் குறைத்துவிட்ட சூழலில் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *