அய்யாவின் அடிச்சுவட்டில் … – 123 ஆம் தொடர் – 5 ஆம் பாகம்
நுழைவுத் தேர்வு நுழைவதா?
மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வா? என்ற தலைப்பில் நுழைவுத் தேர்வினை எதிர்த்து, 17.05.1978 அன்று விடுதலையில் தலையங்கம் எழுதினோம்.
அதில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தகுதிக்கும் திறமைக்கும் அடையாளம் என்பதே ஒரு சூழ்ச்சி ஏற்பாடு; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு கதவடைக்கும் ஓர் தடுப்பு முயற்சி என்பதைச் சுட்டிக்காட்டி பரிகாரம் தேடவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எழுதப்பட்ட தலையங்கம்தான் இது. அதனை அப்படியே தருகிறேன்.
மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வா?
வரும் கல்வி ஆண்டில் (எம்.பி.பி.எஸ்.) மருத்துவக் கல்வி பட்டப்படிப்பிற்கான மாணவர்களைத் தேர்வு செய்ய நுழைவுத்தேர்வு (Entrance Examination) என்பதை நடத்த தமிழக அரசு யோசனை செய்து வருவதாக தமிழக சுகாதார அமைச்சர் திரு.சௌந்திரராஜன் அவர்கள் திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக பார்ப்பனரல்லாத மக்களுக்கும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பேரிடி போன்ற அதிர்ச்சி தரும் செய்தியாகும் இந்தச் செய்தி!
தந்தை பெரியார் அவர்களது 60 ஆண்டு கால இடையறாத தொண்டு, நீதிக்கட்சி ஆட்சி, காமராஜர் ஆட்சி, தி.மு.க. ஆட்சி _ இவை காரண மாக படிப்பு வாசனை அறியாத நம் மக்கள் ஓரளவு படித்ததைப் போன்றே, மெடிக்கல், எஞ்சினியரிங் முதலிய பட்டப் படிப்புகளையும் படித்து நம்மவர்கள் டாக்டர்களாகவும் எஞ்சினியர்களா கவும் கடந்த சுமார் 20 ஆண்டுகாலமாக ஓரளவு முன்னேறி வருகின்றனர்.
பார்ப்பனரல்லாதாரை, படிக்கக்கூடாத ஜாதியாக்கி, பிறகு படிப்பு வராத ஜாதியாக்கி பார்ப்பன முதலைகள் நம்மவர்களை கல்வி நீரோடையில் இறங்கவிடாமல் செய்த கொடுமை கள் தந்தை பெரியார் அவர்களது உறுதியான பல போராட்டங்களாலும் அவர்களது இயக்கத் தின் இடையறாத பணியின் காரணமாகவும்தான் ஓரளவு கணிசமாகக் குறைந்துள்ளன.
ஆபத்தான ஏற்பாடு
இந்நிலையில் மருத்துவக் கல்லூரித் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு முன்னோடி ஏற்பாடு என்பது மீண்டும் நம் மக்களை பழைய நிலைக்கே கொண்டு செல்லும் ஆபத்தான ஏற்பாடாக முடியும். தமிழக அரசு இது குறித்து ஆழமாகச் சிந்தித்து, ஆபத்தான இந்த யோசனையைக் கைவிட வேண்டும் என்பதை நாம் 4 கோடி தமிழ்ப் பெருமக்களின் நலனையும் நல்வாழ்வையும் பாதுகாக்கும் பணியை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றுபவர் கள் என்பதால் தமிழக முதல்வர் அவர்களுக்கு நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
திறந்த மனதோடு, விருப்பு வெறுப்பு இன்றி, பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, தமிழக முதல் அமைச்சரும் ஏனைய அமைச்சர் பெரு மக்களும் இது குறித்து கவலையோடு ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்ளு கிறோம்.
தற்போதுள்ள ஏற்பாட்டின்படி, எம்.பி.பி.எஸ்.க்கு மனுபோட பி.யூ.சி. மூன்றாம் பிரிவில் 60% (முதல் வகுப்பு மார்க்) வாங்கியுள்ளவர்களுக்கு மட்டுமே மனுபோட முடியும்.
ஆனால் தேர்வு செய்யப்படுபவர்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் 75 சதவிகிதம் வாங்கியவர்கள் மட்டும்தான் அதிலும் நேர்முகப் போட்டிக்கான 75 மார்க்கில் அதிகபட்சம் வாங்குவதையும் சேர்த்துக் கூட்டி இடம் பெறுகிறார்கள்!
இந்த ஏற்பாட்டில் உள்ள குறைகளையே _ இப்போது அல்ல தி.மு.க. ஆட்சிக் காலத்திலி ருந்தே _ நாம் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை.
சூழ்ச்சி ஏற்பாடு
அதிக மார்க்தான் தகுதிக்கும் திறமைக்கும் அடையாளம் என்பதே ஒரு சூழ்ச்சி ஏற்பாடு; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கதவடைக்கும் ஓர் தடுப்பு முயற்சி என்பதைச் சுட்டிக்காட்டிப் பரிகாரம் தேட வேண்டும் என்று விரும்பும் வேளையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இந்த விபரீத யோசனைச் செய்தியும் வந்து சேருகிறது!
நுழைவுத் தேர்வு யோசனை மிகவும் ஆபத்தான யோசனை என்பதை நாம் ஏன் கூறுகிறோம் என்பதை, தமிழக அரசு குறிப்பாக நமது முதலமைச்சர் அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
1. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 49 சதவிகிதம் இடம் ஒதுக்கப்படுமே! அப்படி இருக்கையில் அவர்கள் நலன் எப்படிப் பாதிக்கப்படும் என்று மேலெழுந்தவாரியாக எதையும் பார்க்கும் சிலர் கேட்கக்கூடும்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படும் (31+18) 49 என்பது அவர்களுக்குத் தரப்பட வேண்டிய குறைந்தபட்ச இடம் (It is a Minimum and not Maximum; it is not a ceiling) அதிகபட்சம் அல்ல, நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு அல்ல என்பதை முதலில் அவர்கள் புரிந்துகொள்வது அவசியம்.
நுழைவுத் தேர்வில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு ஒரு தேர்வும், மற்றவர்களுக்கு ஒரு தேர்வும் ஆக இரண்டு வகையான தேர்வுகள் நடத்துவது சாத்தியமானதா? முறையானதா? விவகாரத்திற்கு வழிவகுப்பதாக ஆகாதா? என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
49 போக எஞ்சியுள்ள 51 சதவிகித திறந்த போட்டி இடங்களில் எவ்வளவு இடங்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்குக் கிடைக்கின்றன என்பதைப் பொருத்தே ஓர் ஆட்சி பிற்படுத்தப்பட்ட மக்கள்நலன் காக்கும் ஆட்சியா இல்லையா என்பது நிர்ணயிக்கப்படும் நிலை உள்ளது.
நுழைவுத் தேர்வில் இதற்கு வாய்ப்பே கிடையாது என்பதால் இது அம்மக்கள் பெற்று வரும் வளர்ச்சியைத் திசை திருப்பிவிடும்!
2. தேர்வுக்குழுவினர் வெறும் பரீட்சை மார்க்கை மட்டும் அடிப்படையாகக் கொள் ளாமல், படிப்புக்கு மேற்பட்ட சாதனைகள், (Extra Curricular Activities) உடற்கட்டு, பொது அறிவு, நுண்ணறிவு _ இவைகளையெல்லாம் நேர்முகப் போட்டியில் கண்டு அறிய முடியும்.
இது நுழைவுத் தேர்வில் எப்படிச் சாத்திய மாகும்? ஒரு மாணவன் அய்.ஏ.எஸ். அதிகாரி மகனா? பியூன் மகனா? பரம்பரை டாக்டர் குடும் பமா? அல்லது தற்குறியான விவசாயியின் குடும்பமா? என்று நேரில் அறிந்து அதற்கேற்பத் தேர்வு செய்து சமூக நீதி இதுவரை மறுக்கப் பட்ட அடித்தளத்து மக்களுக்குப் புதிய வாய்ப்பு கள் கொடுப்பதற்குத்தானே அவ்வேற்பாடு? அதை அறவே நாசமாக்கிவிடும், இந்த நுழைவுத் தேர்வு என்ற அபாயகரமான திட்டம்.
3. மெடிக்கல் காலேஜுக்குச் சேர திட்டமிடு பவர்களில் பணச் செல்வாக்கு, பதவிச் செல்வாக்கு இன்னும் ஏனைய செல்வாக்குகள் உள்ள பலர் பி.யூ.சி. வகுப்பில் மூன்றாவது பிரிவு பாடத்தில் தங்கள் பிள்ளைகளுக்காக மார்க் வேட்டையாடு கிறார்கள்! அதில் வெற்றியும் பெறுகிறார்கள்!!
மார்க் வித்தை தெரியாதவர்கள் ஏழை, எளிய மக்கள், கிராமாந்திர மக்கள், பாமரக் குடும்பத்தினர். இவற்றிலிருந்து வரும் பிள்ளைகளுக்கு இந்த மார்க் வாங்கும் வித்தை தெரியாது; தெரிந்தாலும், செய்யத் துணிவும் வசதியும் கிடையாது!
அப்படி மார்க் வாங்குகிறவர்களுக்கு மற்றொரு நுழைவுத் தேர்விலும் மார்க் வாங்கு வது என்பது அவ்வளவு கஷ்டமல்ல. அவர் களுக்கு இது தண்ணீர் பட்டபாடு ஆகிவிட்ட தால் கவலை இல்லை. எனவே, வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்கு அது வியாபாரம் நடத்துவது மாதிரி ஆகிவிடும். உண்மையாகப் படிக்கும் மாணவர்கள் பயனடைய முடியாமல் ஆக்கப்பட்டுவிடுவார்கள். அவர்களால் கூடுதல் மார்க்கைப் பெற முடியாது!
4. வசதியற்ற வீட்டுப் பிள்ளைகளும், கிராமப்புறத்துப் பிள்ளைகளும் பி.யூ.சி.தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்குப் போய் மறுபடி ஒருமாத அவகாசத்திற்குள் மீண்டும் அதே பாடத்தில் தேர்வு எழுத 100, 150 மைல் வரவேண்டும்; செலவழிக்க வேண்டும் என்றால் அது பெற்றோர்களுக்குச் சுமையும் தொல்லையுமான ஏற்பாடும் ஆகாதா?
இதற்குப் பணம் செலவழிக்கக்கூட சக்தியற்ற ஏழை எளிய கிராமாந்திர மக்கள் ஏராளம் பேர் உள்ளனரே! அவர்களை ஒதுக்கித் தள்ளும் ஏற்பாடாகவே இவ்வேற்பாடு ஆகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று ஆகும்!
5. பி.யூ.சி. தேர்வு எழுதுவதற்கு முன்பு ஒரு மாணவனுக்கு முறைப்படி இவ்வேற்பாடு தெரியாது என்றால், சட்டப்படி இதனை நிறுத்த கோர்ட்டுக்குப் போகும் உரிமை அந்த மாணவருக்கு உண்டு என்ற உண்மையையும் அரசினர் தெரிந்து கொள்ளுவது அவசியம்; அது தேவையற்ற வழக்குகளுக்கும்கூட இடம் தரக்கூடியதாகி விடும்!
6. மேலும் நுழைவுத் தேர்வுதான் தகுதி திறமைக்கு அடையாளம் என்றால் பாண்டிச் சேரி (ஜிப்மெர்) மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் இந்த அடிப்படையில் நடைபெறுகிறது; அதில் பாண்டிச்சேரி மக்களோ, பிற்படுத்தப்பட்ட மக்களோ வருவதில்லை. பெரிதும் இடம் பிற மாநிலத்தவர்களே ஆக்கிரமிப்பு செய்தநிலை ஏற்படுகிறது!
ரிசல்ட் தேர்வு முடிவுகள் திருப்தியானவையா என்றால் மற்ற நமது மெடிக்கல் காலேஜ் களைவிட குறைவான சதவிகித பாஸ்தான் என்பது நிபுணர்களுக்குத் தெரியுமே! அதனால் என்ன லாபம்?
கடைசியாக ஒன்றைச் சுட்டிக் காட்டு கிறோம். ஆரியம் இதுபற்றி வெகு நீண்டகால மாய் வற்புறுத்தி வந்தது என்றாலும் அது பெற்றதா?
7. ஆச்சாரியார் முதலமைச்சராக இருந்த போது அவர் செய்யத் துணியவில்லை. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவர் இப்படிப்பட்ட திட்டத்தை யோசிக்க வில்லை. பக்தவத்சலனார் காலத்திலும் எதுவும் செய்யவில்லை.
சமூக நீதியை ஒழிக்கலாமா?
பேரறிஞர் அண்ணா முதல்வரானவுடன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது எப்படி என்பதற்கு தந்தை பெரியார், விடுதலை கருத்துகளையே பெரிதும் மதித்துச் செயல்பட்டார்கள்!
கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தி லும் இப்படி ஒரு விபரீத யோசனைக்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
இதையெல்லாம்விட முக்கியப் பச்சைப் பார்ப்பன நாயகமாக நடந்த இந்திராகாந்தியின் ஏஜெண்டுகளான ஆர்.வி.சுப்ரமணியம், தவே பார்ப்பனர்கள் காலத்திலும் இந்த யோசனை கருச்சிதைவுக்கு ஆளாகிக் கைவிடப்பட்டது.
ஆனால் அண்ணா வழி அரசு என்று கூறிக் கொள்ளும் ஒரு ஆட்சியில் சமூக நீதித் தத்து வத்தை ஒழிக்க ஒரு ஏற்பாடு நுழையலாமா? அதுபற்றி யோசிக்கிறோம் என்பதே அய்யா _ அண்ணாவுக்கு இழைக்கும் துரோகம் ஆயிற்றே!
புதைகுழிக்குப்போன குழிப்பிணத்தை மீண்டும் தோண்டுமாறு யார்தான் இந்த அரசுக்கு யோசனை சொன்னார்களோ தெரியவில்லை.
ஆரியம் விரிக்கும் இந்த அபாய வலையில் தமிழக அரசு வீழ்ந்துவிட வேண்டாம் என்று மிகுந்த வணக்கத்தோடு தெரிவிக்கிறோம்.
இல்லை, அதுதான் எங்கள் முடிவு என்றால் சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுத்த கதையாக முடியும்.
தமிழக அரசின் நிலையை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்று விரைவில் எதிர்பார்க் கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன். அடுத்த பதினேழு நாட்களில் வந்த பதிலைப் பாருங்கள்.
* * *
தமிழக அரசின் நல்ல முடிவு
இந்தக் கல்வி ஆண்டிற்கான மருத்துவக் கல்விக்கு (எம்.பி.பி.எஸ்.) மாணவர்களைச் சேர்ப்பதற்கு, நுழைவுத் தேர்வு (Entrance Examination) நடத்தலாமா என்று அரசு யோசித்து வருவதாக தமிழக சுகாதார அமைச்சர் திரு.சவுந்தரராஜன் அவர்கள் கடந்த 16_5_1978 அன்று திருச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
நமது தமிழக அரசு அதனை அமல்படுத்தி னால் அது மிகவும் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பேரிடி போன்ற செய்தியாகும் என்றும், தகுதி, திறமை என்ற பார்ப்பனச் சூழ்ச்சிக்கு நமது அரசின் மருத்துவக் கல்வித் துறை பலியாகி விட்டதாக அது ஆகிவிடும் என்றும், அந்தப்படி செய்வதனால் பார்ப்பனரல் லாத மாணவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்றும், இம்மாதிரி ஒரு அபத்தமான யோசனையை முன்பு ஆர்.வி.சுப்பிரமணிய அய்யர் ஆட்சிக் காலத்திலும் அறிவிக்கப்பட்டதை யொட்டி, நாம் எழுப்பிய மறுப்பு, கண்டனம் காரணமாக அது கைவிடப்பட்டது என்றும், ஆர்.வி.எஸ்.
அய்யர்கள் அமல்படுத்த அஞ்சிய ஒரு திட்டத்தை அண்ணா வழி அரசு நடை முறைப்படுத்துவதா என்றும் கேட்டு நமது முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து நல்ல முடிவு எடுத்து இந்த விபரீத யோசனையைக் கைவிட வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை நமது மக்கள் சார்பாக விடுத்திருந்தோம்.
கண்ணை இமை காப்பதுபோல் தமிழர்களின் கல்வி, உத்தியோகம் என்னும் இரு கண்களுக்கும் இமை தந்தை பெரியார் கண்ட நமது இயக்கம்தானே!
இன்று வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் திருச்சியில் அதன் நிருபருக்குப் பேட்டி கொடுத்த சுகாதார அமைச்சர் அவர்கள், நுழைவுத்தேர்வு யோசனை கைவிடப்பட்டு விட்டது. இவ்வாண்டு அந்தப்படி ஏதும் இல்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அறிவித்திருப்பதை நாம் மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம்.
தமிழக அரசின் இந்த முடிவு நல்ல முடிவு. மீண்டும் மீண்டும் புற்றுக்குள் இருக்கும் பாம்பு போல இது தலைநீட்டுவதும், உள் போவதுமாக இருப்பது நிரந்தரக் கூத்து ஆனபடியால் இனி எப்போதுமே அது தலைநீட்டாதபடி ஆக்கி விடுவதே (அதாவது தகுதி, திறமை நச்சரவம் படமெடுத்தாடாமல் அடித்திடுவதே) மிகவும் நன்று.
இந்த முடிவுக்காக, பொதுவாக தமிழக அரசினையும் குறிப்பாக முதல்வர் அவர் களையும், சுகாதார அமைச்சர் அவர்களையும் பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்தோம்.
நினைவுகள் நீளும்…
– கி.வீரமணி