பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்

ஜனவரி 16-31

நூற்றாண்டு

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்
(28.05.1914-09.06.1981)

பண்ணாராய்ச்சி வித்தகர் எனவும் ஏழிசைத் தலைமகன் எனவும் திருமுறைச் செல்வர் எனவும் போற்றப்பட்டவர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். தமிழிசை உலகின் மிகச் சிறந்த பணிகளைச் செய்துள்ள இவரை உலகத் தமிழர்கள் தங்கள் உள்ளங்களில் போற்றி மதிக்கும் பெருமைக்குரியவர்.

 

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் சீர்காழியில் 28.05.1914இல் பிறந்தவர். பெற்றோர் பஞ்சநாதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோர் ஆவர். இவர் குடந்தையில் நான்காம் வகுப்புவரை பயின்றவர். குடந்தை பேட்டை நாணயக்காரத் தெருவில் வாழ்ந்து வந்தவர்.

இவருடன் பிறந்த தங்கையின் பெயர் சர்வாங்கத்தம்மாள். ப.சுந்தரேசனாரின் தந்தையார் பர்மாவில்  கணக்கு எழுதிக் குடும்பத்தைக் காக்கும் நிலையில் இருந்தவர்.

ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை (சாரதா) மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து, இளமையிலேயே இறந்தன. அதில் ஒரு குழந்தையின் பெயர் விபுலானந்தன் (யாழ்நூல் ஆசிரியர் நினைவாக) என்று அமைந்தமை இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது.

ப.சுந்தரேசனார் முதன்முதலில் கும்பகோணம் தேவாரப் பாடசாலையில் (பிடில்) கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைப் பயின்றார். கண்ணாவய்யர் என்பவரிடமும் இசை பயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிர-மணியம் அவர்களிடம் சில காலம் இசை பயின்றார்.

அதன் பின்னர் 1935 முதல் ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் குருகுல மரபில் செவ்விசை பயின்றுள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனப்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் பயின்று தெளிந்த அறிவு பெற்றார்.
ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்(திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் ப.சுந்தரேசனார் இசைப் பாடல்களைப் பாடிக் காட்டியதும் அடிகளார் வியந்து பாராட்டினார்.

மறைந்து-போன நூல்களின் வரிசையில் இருந்த இசைத்தமிழ் நூலான பஞ்சமரபு நூலினை ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பித்து அந்த (1973, 1975) நூலுக்கு உரை வரைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடு கொண்ட அன்பர்களால் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டு தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன.

ஆடுதுறை திரு. வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார். நாகப்பட்டினத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்-பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார்.

குடந்தை ப. சுந்தரேசனார் முயற்சியால் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்-துறையில் (இலால்குடி) ப. சு. நாடுகாண் குழு செயல்படுகின்றது. புன்செய்ப் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்றம், கோவை நன்னெறிக்கழகம், பூவாளூர் சைவ சித்தாந்த சபை, வடுவூர் பாவாணர் மன்றம் (1975,76,77), குடந்தை காந்தி நகர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர் தொல்காப்பியர் கழகம், கீழப்பழுவூர், மேலப்பழுவூர், அரியலூர், புள்ளம்பாடி உள்ளிட்ட ஊர்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம், திருவிளையாடல் புராணச் சொற்பொழிவுகள் செய்துள்ளார்.

தமிழகத்தில் தெலுங்குமொழியில் இசைப்-பாடல்கள் செல்வாக்குப் பெற்றிருந்த சூழலில் தமிழர்களுக்குத் தமிழிசைமேல் ஈடுபாடு ஏற்படுவதற்கு முந்திய தமிழ் நூல்களில் இருந்த இசை நுட்பங்களை எடுத்துக்காட்டி விளக்கிய பெருமைக்குரியவர்.

அரைநூற்றாண்டுக்கும் மேலாக இப்பணியில் இப்பெருமகனார் ஈடுபட்டிருந்தார். இதனால்தான் இனத்தின் மீட்பர் தந்தை பெரியார்; மொழி மீட்பர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்; தமிழிசை மீட்பர் பண்ணாய்வான் ப.சு. குடந்தை ப.சுந்தரேசனார் என்று அறிஞர்கள் இவர் பணியை மதிப்பிடுவது உண்டு.

1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரி-யராகவும், ஆர்.  கே. சண்முகம் செட்டியார் அவர்களின் விருப்பின்படி 1952 சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்-கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

நீதியரசர் செங்கோட்டு வேலனார், அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், என். வரதராசலு நாயுடு முதலானவர்கள் ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் திளைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

டி.கே.நாராயணசாமி நாயுடு, இராம. திருநாவுக்கரசு, அன்பில் தருமலிங்கம், பூவாளூர் சண்முகம் செட்டியார், தாசரிபாளையம் நரசிம்ம நாயுடு, அருணாசல முதலியார், மேலையூர் இராசசேகரன், புலவர் நா. தியாகராசன், திருமுடி.

சேதுராமன் செட்டியார்(புதுச்சேரி) உள்ளிட்டவர்கள் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களை ஆதரித்தவர்களுள் குறிப்பிடத்தக்க-வர்கள். பிரான்சுநாட்டுத் தமிழறிஞர் பிரான்சுவா குரோ அவர்கள் பரிபாடல் ஆராய்ச்சி செய்தபொழுது சுந்தரேசனார் வழியாக அந்நூலின் இசைத்தமிழ்ப் பகுதிகளுக்கு விளக்கம் அறிந்துள்ளார்.

இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சராக விளங்கிய ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் பெரிதும் மகிழ்ந்தார். மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் ப.சு. அவர்கள் ஆற்றிய உரை அறிஞர் உலகால் பெரிதும் போற்றப்பட்டது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் ஓராண்டுக்குத் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்-பட்டவர்.

திருச்சிராப்பள்ளி வானொலியில் பல்லவி பற்றி இவர் ஆற்றிய உரை ஒலிபரப்பாகியுள்ளது. விபுலானந்தரை இவர் நேர்காணல் செய்ததும் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழ்க்கொடை:

1. இசைத்தமிழ்ப் பயிற்சி நூல் (1971) திருப்பத்தூர் (முகவை) தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு

2. முதல் அய்ந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,

3. முதல் அய்ந்திசை நிரல்,

4. முதல் ஆறிசை நிரல்,

5. முதல் ஏழிசை நிரல் முதலான நூல்களை எழுதியவர்.

மேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் அய்ந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமயக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க் குறிப்புகள், இசைத்தமிழ் _ தமிழிசைப்-பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.

குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் தமிழ்ப்-பொழில், தமிழ்நாடு, நித்திலம் உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். சென்னை, மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் பொழுது வெளியிடப்பெற்ற  மலர்களில் இவர்தம் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

குடந்தை ப.சுந்தரேசனார் மதுரைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, 09.06.1981 இல் இயற்கை எய்தினார்.

தமிழிசை குறித்த ப.சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள் :

1. தமிழ் மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.

2. முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவி-களையும் கண்டுபிடித்தனர்.

3. முதலில் குழல்கருவி அய்ந்து துளைகளைக் கொண்டிருந்தது. அதுபோல் அய்ந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.

4. அய்ந்து துளைகளின் வழியாக எழுந்த அய்ந்து இசைகளே ஆதி இசையாகும்.

5. குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.

6. இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.

7. முதல் அய்ந்திசைப் பண்ணின் இசைநிரல் முதலியன 1. தாரம், 2. குரல், 3. துத்தம், 4. உழை, 5. இளி என்பன.

8. முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.

9. இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.

10. மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.

11. நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.

12. அய்ந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.

13. தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.

14. பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.

குடந்தை ப.சுந்தரேசனாரின் நூற்றாண்டு விழா 2014 இல் தமிழகம், புதுச்சேரி, அமெரிக்காவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

இக்கட்டுரை-யாசிரியரால் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்வியல், பணிகளை விளக்கும் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *