– ஜெகதீசன்
கல்லணையை கரிகால் சோழன் கட்டவில்லை; மாறாக அவன் எதிரி மன்னன் எவனோ ஒருவன் கட்டினான் என்றொரு திரைப்படம் தமிழில் வந்தால் அதை எத்தனை தமிழர்கள் சகித்துக்கொள்வார்கள்? கற்பனைத் திரைப்படம், பொழுதுபோக்குப் படம் என்று எளிதில் அதை நாம் கடந்துபோவோமா? கடக்கத்தான் முடியுமா?
அப்படியிருக்கும்போது பென்னிகுவிக் என்கிற பிரிட்டிஷ்காரன், காலனியாதிக்கத்தின் பிரதிநிதியாக, சம்பளத்துக்கு வேலைசெய்யும் பிரிட்டிஷ் அரசின் வேலைக்கார வெள்ளைத்-துரையாக தமிழ்நாட்டுக்கு வந்தவன், வந்த இடத்தில் தான் கண்ட வறுமையைப் போக்க தன்னுடைய பிரிட்டிஷ் எஜமானர்களின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்களுடன் கடுமையாக மல்லுக்கட்டி பல்வேறுவிதமான தடைகளுக்கு மத்தியில் கட்டிய பெரியாறு அணையை, லிங்கேஸ்வரன் என்கிற இந்திய ராஜா (நன்கு கவனிக்கவும் அவன் தமிழ் ராஜாவல்ல, இந்திய ராஜா) தன் சொத்தை விற்றுக் கட்டினான், அதை வெள்ளைக்காரன் தடுத்தான் என்று ஒருவர் திரைப்படம் எடுப்பதும், அதில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிப்பதும், அந்த அசிங்கத்தை ஊரே கூடி சிலாகிப்-பதும் தனிப்பட்ட முறையில் என்னளவில் ஆபாசத்தின் அதிஉச்சம் என்றே படுகிறது.
லிங்கா திரைப்படம் நெடுக வரலாறு வல்லுறவு செய்யப்-பட்டிருக்கிறது. அதுவும் கூட்டாக. லிங்கா திரைப்படம் பார்ப்பது என்பது ஒரு அபலையைத் தேடிப்போய் சிறைப்பிடித்து வந்து நான்கைந்து பேர் கூட்டாக வன்கலவி செய்ததை திரையில் பார்ப்பதைப் போன்றதொரு அருவெறுப்பான அனுபவமாக உணர்ந்தேன்.
அந்த அளவுக்கு இதில் பெரியாறு அணையின் உண்மை வரலாறு வன்கலவி செய்யப்பட்டிருக்கிறது.
ஆபாசம் என்பது ஒருவரின் உடலில் இருக்கும் துணியின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. ஊரறியத் திருமணம் செய்து, உலகறிய குடும்பம் நடத்தி அந்தக் குடும்ப வாழ்வின் பயனாக ஒருவன் பெற்ற பிள்ளையை, அது அவனுக்குப் பிறந்த பிள்ளையே அல்ல, எனக்குப் பிறந்த குழந்தை என்று சம்பந்தமே இல்லாத ஒருவர் சொல்வது எவ்வளவு ஆபாசமானதோ, அதே அளவு ஆபாசமானது பெரியாறு அணை பற்றிய ரஜினியின் லிங்கா திரைப்படம். தயவு செய்து இதை கற்பனைத் திரைப்படம் என்று மட்டும் என்னைக் கடக்கச் சொல்லாதீர்கள். பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்தால் அதை கற்பனைதானே கடக்கலாம் என்பீர்களா?
வரலாற்றை மீளாய்வு செய்வது வேறு. வல்லுறவு செய்வது வேறு. லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வளித்த பெரியாறு அணையின் வரலாறு லிங்கா திரைப்படத்தில் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தான் அதை ஆபாசத்தின் அதி உச்சம் என்கிறேன்.