டிச.2 : தமிழர் தலைவர் பிறந்த நாள் சிந்தனை :
“பெரியார் உலகம்” படைக்கும் பகுத்தறிவுச் சிற்பியே!
அய்யாவின் கொள்கைகளை
அடுத்த தலைமுறைக்கும்
அப்படியே கொண்டுசெல்லும்
அய்யாவின் தத்துப் பிள்ளை அல்ல;
அவரது தத்துவப் பிள்ளை நீ!
உன் கையளவு இதயத்தில்
உலகளவு விரியும்;
வழியும் சிந்தனையால்
விழிமூட மறக்கின்றோம்!
தத்துவம் முகிழ்க்கும்
புத்தாக்கப் புதுஉலகில்…
அறிவியல் கண்காட்சி
ஆய்வரங்கம்
கோளரங்கம்
மெழுகுச் சிலையரங்கம்
மாநாட்டு மண்டபம்
மழலையர் பூங்கா
மண்ணில் மனிதம் தழைக்க
தன்னையழித்துக் கொண்ட
தலைவனின் இணையில்லாப் புகழை
இளைய தலைமுறையும்
இன்புற்றுக் காணவேண்டி
உலகமகா புருஷரின்
உன்னத வாழ்க்கையை
ஒலி-ஒளி காட்சியாய்
அகலத்திரையில் விரியும் மாட்சி!
சிந்துச் சமவெளியின்
சிம்மாசனமாயிருந்த
திராவிடத் தமிழினத்தை
பெரியாருக்கு முன் –
பெரியாருக்குப் பின் என
வகைப்படுத்தும்
வண்ணமிகு
எண்ணக் குவியல்கள்!
வேடந்தாங்கல் பறவையாய்
வந்து குவியும்
வெளிநாட்டுப் பயணியரின்
சிந்தையைக் குளிர்விக்கும்
சங்கதிகள் நிறைந்திருக்கும்!
நிறைகுடமாய் உந்தனுழைப்பும்
உறைந்திருக்கும்; கலந்திருக்கும்!
விழிமலரின் பாவைகளை
விரியவைக்கும் பிரமிப்பு!
குருதியின் உயிரணுக்களை
உசுப்பிவிடும் பரவசம்!
இப்படியொரு அதிசயமா?
இதுவும் சாத்தியமா!
எப்படி முடியும் – இது
யாரால் நடக்கும்!
வெண்மேகங்கள் விளையாடும்
வானத்தைத் தொட்டுவிடும்
பிரமாண்டத்தின் எல்லையாய்
புத்தருக்கும், ஏசுவுக்கும்
பேருருவச் சிலைகளைப் படைத்து
புகழேணியின் உச்சியில்
அரச குடும்பத்தினரும்; ஆட்சியாளர்களும்
அயல்நாட்டில்!
மரபுவழி ஆட்சிகளே – இந்த
மண்ணை ஆண்டுவந்தும் – தமிழ்
மண்ணை மணந்த
மணாளரின் மாப்புகழை
விண்ணும் மண்ணுமாய்
நீடித்து நிலைத்திருக்க;
நிலையான நினைவுபோற்ற
மனமில்லையோ மார்க்கம் தேட!
சாமானியன் உன் கரம்பட்டே
சாசுவதமாகப் போவுது
பெரியார் புது உலகம்
உருபெற்று; மாசுமருவற்று!
சாதனைச் சரிதம் காணும்
வரலாறாய் மாறினாய்!
மாரிக்காலத்து
மழைமேகமாய் நீ ஆனாய்!
அய்யாவின் மண்டைச் சுரப்பை
அகிலம் தொழச் செய்யும்
உந்தன் மண்டைச் சுரப்பால்
உலகத் தமிழரெல்லாம்
உன்னிடம் புகலிடம்!
எண்ணியதை எண்ணியாங்கு
திண்ணியமாய் செய்துமுடிக்கும்
தேனீயொத்த தொண்டர்களைத்
தன்னகத்தே கொண்டவரே!
செவ்வாயில் கால்பதித்தாலும்
அய்யாவைப் பரப்பத்தான்
செல்வாய் நீ!
நாளைய உலகின்
வரலாறு சொல்லும்
பொன்னேட்டில்
உன் பெயரும்
வைரமாய் மின்னும்!
இப்புவியில் பெரியார் புகழ்
இருக்கும் மட்டும்
இணைந்து நீயும்
இறவாமல் இருந்திடுவாய்!
– சீர்காழி கு.நா.இராமண்ணா