சாக்ரடீசுக்கொரு பிளாட்டோ….
பெரியாருக்கொரு வீரமணி!
சமூகநீதிக்கான கி.வீரமணி விருது பெற்ற ஒரிசா பேராசிரியர் பெருமிதம்
ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத் தலைவரும், தத்துவப் பேராசிரியருமான தானேஸ்வர் சாகு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் சமூக நீதிக்கான வீரமணி விருது மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் வழங்கினார். (ஒடிசா, புவனேசுவரம், 23.11.2014)
1951-52ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் வகுப்புவாரி உரிமைகள் குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டன. அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
அவரது அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.
அதனால் 1951இல் நேரு காலத்தில் ஏற்பட்டதுதான் இந்திய அரசமைப்பின் முதல் சட்டத் திருத்தம்.
இருந்தாலும் இன்னும் நிறைவேற வேண்டிய கோரிக்கைகள் பல இருந்தன. சமூகநீதி என்பது இடஒதுக்கீடு மட்டும் அல்ல. இன்னும் பல உரிமைகள் இந்தச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே.
அனைவரும் சம உரிமை பெறுவது _ ஆண்களும் பெண்களும் சமமான உரிமை பெறுவதுதான் சமூக நீதியாகும். அந்த நிலையை இன்னும் இந்தச் சமுதாயம் அடையவில்லை.
உழைக்கின்ற மக்களை ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கேவலப்படுத்தி அவர்களைக் கொடுமைப்படுத்தினர். இக்கொடுமைகளை ஒழிக்க தந்தை பெரியார், பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர், ஜோதிபாபூலே, சாகுமகராஜ், நாராயணகுரு போன்ற தலைவர்கள் சமூக சீர்திருத்தத்திற்காகப் போராடினார்கள்.
மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும் சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும்; உலகுயிர் அனைத்தும் ஒன்றென்னும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள், ஜாதிச் சண்டைகள் மறைய வேண்டும். (குடிஅரசு- 9.4.1933) சமூகநீதிக்கான இந்தப் போராட்டத்தின் ஒரு படி தான் இடஒதுக்கீடு. அந்தப் படியை அடைவதற்கே எத்தனைப் போராட்டங்கள்! தம் இறுதிக் காலம் வரை உழைத்த தலைவர் பெரியாருக்குப் பிறகு சமூகநீதிக்கான குரலை உரத்து எழுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி.
மண்டல் குழு பரிந்துரையை வெளிக் கொண்டுவர போராட்டங்கள், அதனை அமல்படுத்த பிரச்சாரம், போராட்டம், மாநாடு என தொடர்ந்து களம் கண்டவர். இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பொருளாதார அளவுகோலைக் கொண்டுவந்து குறுக்குசால் போட முனைந்தவர்களின் முதுகெலும்பை முறித்த மதி நுட்பம். தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவெங்கும் சிதறியிருந்த சமூக நீதி உணர்வாளர்களை பெரியார் என்னும் பெருங்குடையின் கீழ்க் கொணர்ந்து, நாடு தழுவிய சமூகநீதிப் போராட்டத்தைக் கட்டியெழுப்பிய வினைத்திட்பம். எந்த வகுப்புவாரி உரிமைக்காக பெரியார் காங்கிரசை விட்டு வெளியில் வந்தாரோ, அதே உரிமையை 69 விழுக்காடாக உயர்த்தி, அதே காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருந்த போதே, முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் என மூன்று பொறுப்புகளிலும் வீற்றிருந்த பார்ப்பனர்களைக் கொண்டே நிறைவேற்றிக் காட்டிய ஆற்றல். சமூகநீதிக்கு இவரே அத்தாட்சி என சட்டப் புத்தகம் படித்தவர் முதல் சட்டப் புத்தகம் சமைப்பவர் வரை தெளியும் வகையில் சமூகநீதிக்காக நுணுகிப் படர்ந்த அருமருந்து. பெரியார் காலத்திலிருந்த இடஒதுக்கீட்டு உரிமையை இரட்டிப்பாக்கிய இமாலயச் சாதனை. எங்கேனும் சமூகநீதிக்கு ஆபத்து வந்தால், சரியாய்க் கண்டறிந்து ஆபத்தகற்றிட உதவும் ஈரோட்டுக் கண்ணாடி.
இப்படி தந்தை பெரியார் தம் இயக்கத்தால், தமிழர் தலைவர் கி.வீரமணியின் உழைப்பால் பலன்பெற்ற கோடிக்கணக்கான மக்களில், நன்றிப்பெருக்குடைய பெருமக்களால், பெரியாரை உலகமயமாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பெரியார் பன்னாட்டமைப்பு. தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற நோக்கத்தால் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 13.11.1994இல் பெரியார் பன்னாட்டமைப்பு (Periyar International) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் பொறுப்பாளர்களாக அமெரிக்கா வாழ் தமிழர்களான டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் இலக்குவன் தமிழ் ஆகியோர் இருந்து பணிகளைச் செய்தனர்.
தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமூக நீதி மய்யத்தின் தலைவர் திரு.சந்திரஜித் யாதவ் மற்றும் அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரக அலுவலரான சின்காவும் விழாவில் கலந்துகொண்டனர்.-
இதன் முதன்மைப் பணிகளுள் ஒன்றாக, சமூகநீதிக்காக உழைப்பவர்களுக்கும், பெரியாரியலைப் பரப்புவோருக்கும் சிறப்பு செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு,
முதன்முதலில் பெரியார் பன்னாட்டமைப்-பினர் சமூகநீதியை நிலைநாட்ட தன் ஆட்சியை இழந்த மேனாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) அவர்களுக்கு வழங்க முடிவு செய்து 24.12.1996 அன்று சென்னை பெரியா திடலில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது அளிக்கும் விழா வை நடத்தினர். மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் உடல் நலிவு காரணமாக வர இயலாவிட்டாலும் அவரது கட்சியின் பிரதிநிதியான தமிழக ஜனதா தள முன்னணி வீரர் திரு.கா.ஜெகவீர பாண்டியன் அதனைப் பெற்றுக் கொண்டார்.
முதல் விருதைப் பெரும் மாமனிதரான மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள், மண்ணுக்குள் புதைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட மண்டல் குழுப் பரிந்துரையைச் சட்டரீதியாக அமல்-படுத்திக் காட்டியவர் திரு.வி.பி.சிங் அவர்கள். அதற்காக ஆட்சியையும் இழந்தவர்! சமூக நீதிக்காக எத்தனை நாற்காலிகளையும் இழக்கத் தயார் என்று குரல் கொடுத்த இலட்சிய வீரராக அவர் காட்சி அளித்தார்.
இரண்டாவதாக, விருதுபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு.சீதாராம் கேசரி அவர்கள் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்றுக்கொண்டு அவர்கள் வழங்கிய உரையில், இணையற்ற தலைவராகிய பெரியாரைப் பின்பற்றுவோரிடமிருந்து சமூக நீதிக்கான விருதினைப் பெற்றுள்ள இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் பெருமிதமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாகும். குறிப்பாக மகிழ்ச்சி அடைவது எதற்காக என்றால், பெரியாரின் மிகச் சிறந்த சீடரும் என்னுடைய நெடுநாளைய நண்பருமாகிய திரு.வீரமணி பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது என்பதற்காகத்தான் என்றார்.
இதே போன்று, பல்வேறு மாநிலத்திலும், பல்வேறு நாடுகளிலும் சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்ட விருது பெற்றவர்களின் பட்டியலைப் பாருங்கள்.
பெரியார் பன்னாட்டு அமைப்பு வழங்கிய சமூக நிதிக்கான கி.வீரமணி விருது பெற்றவர்கள் பட்டியல் :
1. வி.பி.சிங் – முன்னாள் பிரதமர் -_ இந்தியா- 1996
2. சீதாராம் கேசரி – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் – இந்தியா _- 1997
3. சந்திரஜித் – முன்னாள் மத்திய அமைச்சர் – இந்தியா -_ 1998
4. மாயாவதி – முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் -_ இந்தியா -_ 2000
5. எஸ்.டி.மூர்த்தி – பெரியார் பெருந்தொண்டர் -_ சிங்கப்பூர் -_ 2002
6. ஜி.கே.மூப்பனார் – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் _- இந்தியா _- 2003
7. பி.எஸ்.ஏ.சாமி – உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி – ஆந்திரப் பிரதேசம் _- இந்தியா _- 2005
8. வீரா.முனுசாமி – மியான்மர் _- யாங்கூன் -_ 2006
9. டாக்டர் கலைஞர் – தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர் – தமிழ்நாடு _- இந்தியா _- 2008
10. பேரா.ரவிவர்மகுமார் -_ அட்வகேட் ஜெனரல் கர்நாடகா – இந்தியா _- 2009
11. செல்லபெருமாள் _- சமூகத் தொண்டர் – குவைத் -_ 2010
12. கோ.கருணாநிதி -பொதுச் செயலாளர் – – (All India OBC) _- 2011
13. கலைச்செல்வம் _- தலைவர் -_ பெரியார் சமூகச் சேவை மன்ற -_ சிங்கப்பூர் -_ 2011
14. அனுமந்த்ராவ் எம்.பி _- அமைப்பாளர் பிற்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் அமைப்பு _- இந்தியா _- 2012
15. ஜகன் சி.புஜ்பால் – மராட்டிய மாநில முன்னாள அமைச்சர் – மகாராஷ்டிரா -_ இந்தியா _ 2013
2014ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசு வரத்தில் 23.11.2014 அன்று நடைபெற்றது. ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவரும், சமூகநீதியை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வருபவருமான தத்துவப் பேராசிரியர், தானேஸ்வர் சாகு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவிற்கு ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் துணைத் தலைவர் உளவியல் பேராசிரியர் முனைவர் பிரதாப் குமார் நாத் தலைமை வகித்தார். சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை பேராசிரியர் தானேஸ்வர் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ் வழங்கினார். விருது பட்டயமும், விருது தொகையான ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் விருது நாயகருக்கு வழங்கப்பட்டது விருது வழங்கும் நிகழ்வு தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது. விருது நாயகரைப் பாராட்டி, சிறப்புச் செய்து தமிழர் தலைவர் சமூக நீதி பற்றிய சிறப்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியின் நன்றியுரையினை ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் செயலாளர் தேவேந்திர சுதார் வழங்கினார்.
சமூகநீதி விருது நாயகர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு தமது ஏற்புரையில், சமூக நீதிக்கு அரும்பணி ஆற்றிய சமூக புரட்சியாளர் தந்தை பெரியாரின் பங்கு மகத்தானது. தந்தை பெரியா ரது கொள்கைச் சீடர் டாக்டர் கி.வீரமணியின் பெயரில் சமூக நீதி விருது பெற்றது எனக்குப் பெருமையாக உள் ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்து, தாழ்த்தப்பட்ட சமு தாயத்தை சார்ந்தவரை துணை வியாக ஏற்றுக் கொண்டதால் சமுதாயத்தில் உறவினர்களாலும், எனது சமுதாய மக்களாலும் புறக்கணிக்கப்-பட்டவன் நான். இருப்பினும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறேன். சாக்ரடீசின் கொள்கைகளுக்கு இறவாப் புகழைச் சேர்ந்தவர் பிளாட்டோ. அதுபோல பெரியாரின் பகுத்தறி வுக் கொள்கைகளை உலகளாவிய அளவில் பரப்புரை செய்து வருபவர் டாக்டர் கி.வீரமணி. அவர் அளித்த ஊக்கத்தில் தந்தை பெரியாரது கொள்கைகளை ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று வழங்கப்பட்ட விருதினைப் பெற்று எஞ்சிய வாழ்நாளையும் சமூக நீதிக் கொள்கைகள் நடைமுறை காண, பரந்துபட பாடுபடுவேன். என்று குறிப்பிட்டார்.
– தொகுப்பு: கோவிந்தன்