புதுப்பாக்கள்

நவம்பர் 16-30

”டொக் டொக்”

புருஷன் வீடுதான்
இனி உனக்கு எல்லாமே
பல்லிழந்த வாயிலிருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது
கிழவியின் வார்த்தைகள்.
எல்லோரையும்
அனுசரிச்சு நடந்துக்கணும்
உடைந்த குரலை
சரிசெய்து சொன்னார் அப்பா.
சரிசரி நேரமாச்சி…
வேகப்படுத்தினான்
அண்ணன்.
குளமான கண்கள்
நெஞ்சத்தில் பதற்றம்
மகளைக் கட்டியணைத்த
அம்மாவுக்கு
அழுகையே வார்த்தையானது.
ஆழ அகலமாய்
வேர் பரப்பிய மரமொன்றை
கோடாரி கொண்டு
அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்
பக்கத்து வீட்டில்.
டொக்… டொக்…
டொக்… டொக்…
டொக்.. டொக்…
– பா.சு.ஓவியச்செல்வன்

————————

இந்து மதம்

நீதியற்ற ஜாதியைப்
பாதுகாக்கும் வேலையை
வாளெடுத்த மன்னர்களின்
மூளைகளில் நட்டுவைத்த
வேதியரின் சூதுதான்
இந்துமதம் என்பது.
* * *
கூடி வாழ்ந்த மக்களை
கூறு போட்ட ஜாதியை
உயர்வு தாழ்வுப் பிரிவினை
உயர்ந்த தென்ற சதியினை
நம்ப வைத்த ஆரியத்தின்
நால்வருண சூழ்ச்சிதான்
வேதங்களில் வேர்பிடித்த
சனாதனம் என்பது

– அ. அருள்மொழி

————————

இறக்கும் சாமிகளும் இருக்கும் ஆசாமிகளும்…

மோதிப் பார்த்தாலும்
மூன்றடிக்கு மேலே கொட்டி
அமுக்கியுள்ள மண்ணைப்
பொத்துக்கொண்டு
இனிமேல் தலைகாட்ட
முடியாது இந்த
எல்லைக்கல்
முனியாண்டி சாமியால்…

தளக் கல்லை
எல்லாம் பெயர்த்து
வீட்டு வரண்டாவாக
அறங்காவலர்
பதித்துக் கொண்டபின்
கரையான் புற்று வளர
உள்ளே கருப்பண்ணசாமி
கண்தெரியாமல் கிடக்கிறது!

ரோட்டோரம் குடியிருந்த
மஞ்சத்தா அம்மனுக்கும்
அதே கதைதான்!
தேசிய நெடுஞ்சாலை
அகலமாக அகலமாக
இவள்
தேய்ந்து தேய்ந்து
கரைந்தே போய்விட்டாள்!

தூர் வாரப்படாத
ஆத்தோரம் குடியிருந்த
பிள்ளையார் சாமியும்
மண்டி வளரும்
நாணலுக்குள் குடிபோய்விட
பிள்ளை எங்கே
என்று தேட
யாருமே இல்லை
அய்யோ பாவம்!

எந்த நாமத்தைப்
போடுவது _ என
வடகலையும் தென்கலையும்
எதிர் எதிர்
வடம் பிடித்ததில்
ஊர்நாறி கோர்ட்டுக்குப் போக
உள்ளூரிலேயே
அடைபட்டுக் கிடக்கிறார்
உலகளந்த பெருமாள்.

மூன்று பெண்டாட்டிச்
சண்டை போட்டுப் பெரிசாமி
முறைக்காரர் (பூசை நடத்துபவர்)
ஜெயிலுக்குப் போய்விட
இரண்டு பெண்டாட்டி சாமிக்கு
பூசை நடத்த ஆளில்லை.

சுப்பனுக்குப் பூசை
அப்படி நின்று போயிற்றென்றால்
அவன் அப்பனுக்கு
இப்படி ஒரு தொல்லை.

சிவன் சொத்து
குலநாசம் என்று
பிறரைப்
பயமுறுத்திக் கொண்டே
குண்டுமணிகூட விடாது
சுரண்டிக்கொண்டே
இருக்கிறான் குருக்கள்.
சிவனுக்கு
மூனு கண்ணும்
போச்சோ!

சாமியெல்லாம் இப்படிச்
செத்துக்கொண்டே இருக்க
ஆசாமிகள் நாமெல்லாம்
அழகாய்
வாழ்ந்துகொண்டே
இருப்பதுதான்
மறையாத உண்மை!

– தஞ்சை என்.ஜே.கந்தமாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *