2011 நவம்பர் 28 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து 712 விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன. அன்றிரவு கச்சத்தீவு அருகே நூற்றுக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சன், அகஸ்டஸ், லாங்நைட் ஆகியோரைச் சிறைப் பிடித்துச் சென்றனர்.
பிடித்துச் சென்றபோது இலங்கைக் கடற்படை சார்பில் எல்லை கடந்ததாக உங்களைக் கைது செய்து இலங்கை காவல்துறையிடம் ஒப்படைப்பதாகத்தான் தெரிவிக்கப்பட்டது, இது குறித்து அகஸ்டிஸ் என்பவர் தமிழகத்தில் உள்ள தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறைப் பிடித்துச் சென்ற மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் 2 நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அவர்களிடம் சிங்கள மொழியில் உள்ள சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் இலங்கை ஊர்க்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை அடுத்து ஊர்க்காவல் படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவர் மீதும் போதைப் பொருள் கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்ததாகக் கூறினார்கள். மீன்பிடிப் படகில் ஹெராயின் போதைப் பொருள் கடத்திச் சென்று நடுக்கடலில் பைபர் கிளாஸ் படகில் காத்திருந்த இலங்கையைச் சேர்ந்த மூவரிடம் கொடுத்ததாகவும், 8 பேர்களும் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. அப்பட்டமான பொய் வழக்கு!
இது தொடர்பாக கியூ பிரிவு காவல் துறையினரும், தமிழக உளவுத்துறையினரும் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணை முடிவில் இது பொய் வழக்குதான் என்று அரசுக்குத் தெரிவித்தனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக இலங்கை மூத்த வழக்குரைஞர்கள் வாதாடினார்கள் என்றாலும் பயனில்லை.
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு வருவதற்கு முன் இப்பொழுது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அய்வரையும் அன்று விடுதலை செய்வதாக அறிவித்தாரே ராஜபக்சே – அது என்னாயிற்று? (26.5.2014) பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்கக் கூடாது – அவரை அழைக்கக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பைத் திசை மாற்ற ஏமாற்றிட அந்த அறிவிப்பா? இது ஒரு முக்கியமான விஷயம்! – மக்கள் மறந்திருந்தால் அதனை நினைவூட்டுவதுதான் எங்கள் முக்கிய வேலை. இது மிகப் பெரிய பிரச்சினை! இலங்கை அரசின் இந்த ஏமாற்று நயவஞ்சகச் செயலைக் கண்டிக்க உலக நாடுகள் எல்லாம் முன்வர வேண்டும்.
அய்வரையும் விடுதலை செய்யக் கோரி தமிழர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியே வந்துள்ளனர். இந்நிலையில் கொழும்பு உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் அய்வர், இலங்கை மீனவர் மூவர் உட்பட எட்டுப் பேருக்கும் 30.10.2014 அன்று தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியுள்ளது.
இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல – உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும் கடந்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அளவுக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசு தொடர்ந்து காட்டி வரும் அலட்சியப் போக்கு – எவ்வளவு பெரிய விபரீதமான விலையைக் கொடுக்க வைத்துள்ளது என்பதை நினைத்தால் வேதனையும், கோபமும் பீறிட்டுக் கிளம்புகின்றன.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்த்த இந்தியா இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். இதற்குப் பிறகாவது கச்சத் தீவு பிரச்சினையில் மறு பரிசீலனைக்கு ஆட்பட வேண்டும். மத்தியில் ஆட்சி மாறியிருக்கலாம்; அது பொருட்டல்ல; நம் நாட்டு மக்களுக்குத் தூக்குத் தண்டனை இன்னொரு நாட்டில் சட்ட விரோதமாக – நியாய விரோதமாக அளிக்கப்பட்டுள்ளது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கேரள மீனவர் இருவரைக் கொன்ற இத்தாலியர் விஷயத்தில் இந்திய அரசு எப்படி நடந்து கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே!
இந்தியப் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இதுவரை வாய் திறக்கவில்லை. மேல்முறையீடு செய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளதாம். இது போதுமானதல்ல.
எந்தளவுக்குக் கடுமையான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டுமோ, அந்த எல்லை வரைக்கும் செல்ல இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள நீதிமன்றங்கள் எல்லாம் அதிபரின் கைப்பாவைகள்தாம். இலங்கை உச்ச நீதிமன்றத் தலைமைப் பெண் நீதிபதியாகவிருந்த சிராணி பண்டார நாயகா – தனக்குத் தாளம் போடவில்லை என்பதற்காக அதிபர் ராஜபக்சே என்ன செய்தார்? அவர்மீது குற்றச்சாற்றுகள் சுமத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, தலைமை நீதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டாரே!
எனது 54 ஆண்டு வாழ்க்கையில் 32 ஆண்டுகள் என்னுடைய தாய்நாட்டுக்காக பல்வேறு வழிகளில் சேவை செய்துள்ளேன்; சட்டத்தின் ஆட்சியும் இயற்கை நீதியும் தூக்கி எறியப்பட்டதுடன் காட்டுமிராண்டித்தனமாக சின்னா பின்னம் செய்யப்பட்டுள்ளது! என்று அந்நீதிபதி கூறினார்.
முள்வேலியில் முடக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் ஏதிலிகளைப் பார்வையிட்ட அன்றைய தலைமை நீதிபதி சரத் என் சில்வா வெளிப்படையாகவே சொல்ல வில்லையா?
இலங்கைத் தீவில் ஒரே இனம்தான் உள்ளது என்றோ பெரும்பான்மை என்றும், சிறுபான்மை என்றும் ஏதுமில்லை என்று நாம் கூறுவோமேயானால் அது அப்பட்டமான பொய்யாகும். இந்த நாட்டின் சட்டங்களி லிருந்து தமிழர்களின் இன்னல்களும், துயரங்களும் நமது நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படுவதில்லை. இதை நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று கூறினாரே – 2005ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் ஒரு வழக்கில் மகிந்த ராஜபக்சேவை சிறையில் அடைக்கக் கூடிய ஒரு வாய்ப்பு நீதிபதி என்கிற முறையில் எனக்குக் கிடைத்தது; அப்படி சிறையில் அடைக்காமல் இருந்ததற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன் என்றும் அந்த நீதிபதியே சொன்னதுண்டு.
இப்பொழுது தூக்குத் தண்டனை வழங்கியுள்ள நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன என்பவர் அரசு வழக்குரைஞராக இருந்தவர் தானே! அதிபர் கோலெடுத்தால் ஆடுபவரே (His master’s Voice).
1987 ஜூலை 29ஆம் தேதி அன்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றார். மறுநாள் அங்கு இராணுவ அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிங்களக் கடற்படை வெறியன் விஜிதரோகன விஜய முனி துப்பாக்கியின் பின்பகுதியால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கினான். குனிந்து கொண்டதால் உயிர் தப்பினார்.
தோள் பட்டையில் பலத்த அடி விழுந்தது. இராணுவச் சட்டப்படி அவனுக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுக்குள்ளேயே அவனுக்கு விடுதலை வழங்கப்பட்டது. சிறையில் நான் நன்றாக நடத்தப்பட்டேன் என்றுகூடக் கூறினான்.
மரணத்தைக் கொடுக்கும் தாக்குதலைத்தான் தொடுத்தேன். ஆனால் உயிர் தப்பிவிட்டார் ராஜீவ் காந்தி. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நான் விரும்பவில்லை என்று கூறினான்.
இந்தியப் பிரதமர் ராஜீவைத் தாக்க முயன்றது – கொலை செய்வதற்கே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவருக்குச் சட்டப்படி கொலை முயற்சியின்கீழ் கடுந் தண்டனையைக் கொடுத்திருக்க வேண்டும். இலங்கை நீதிமன்றமோ கண் துடைப்புக்காக ஆறு ஆண்டுகள் தண்டனை என்று அளித்தது. ஆனால், இரண்டாண்டுக் குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டாரே!
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை என்பது இந்திய அரசை அச்சுறுத்தவே என்பதில் அய்யமில்லை.
மக்கள் எரிமலை வெடிக்கும்முன் மத்திய அரசு செயல்படட்டும்!
என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? தமிழ்நாடே கட்சிகளை மறந்து பொங்குமாக்கடலாக பொங்கி எழுந்து விட்டது – அரசு ரீதியாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
இன்னும் ராஜதந்திரம்தானா? வெளிநாட்டுப் பிரச்சினை என்ற நெளிவு சுளிவுக்குள் பதுங்கிக் கொள்ளப் போகிறதா?
மக்கள் எரிமலை வெடிக்குமுன் மத்திய அரசு விரைந்து செயல்படட்டும்! செயல்படவும் வேண்டும்.
கி.வீரமணி,
ஆசிரியர்