விரும்பத் தகாத சுவரொட்டிகள், போராட்டங்கள், வன்முறைகள் மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்தும்!
அ.இ.அ.தி.மு.க. தலைமையே முன்வந்து கட்சியினருக்கு அறிவுரை கூறினால் தலைமைக்கும் – கட்சிக்கும் – ஆட்சிக்கும் பயன் ஏற்படும்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் உருக்கமான அறிக்கை
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருக்கும், அவருடன் மற்ற மூவருக்கும் பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 27.9.2014 அன்று நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்கியுள்ளதைக் கண்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், துயரமும் அடைவது இயற்கைதான்.
சட்டப்பூர்வமான ஆக்க ரீதியான மேல்முறையீடுகளைச் செய்யலாம்!
அதற்கென இனி உள்ள சட்டபூர்வ வாய்ப்புகள் – பிணை (ஜாமீன்) கோரி, தண்டனையை நிறுத்தி வைக்கவும் அல்லது ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் போன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பரிகாரம் தேடி, வெளியே வர முயற்சிப்பதும்தான் சரியான வழிமுறை.
நீதிபதியை மனம்போனபடி விமர்சிப்பது, கருநாடக அரசு, மத்திய அரசு போன்றவற்றில் பொறுப்பில் உள்ளவர்களை உணர்ச்சிவசப்பட்டு தாக்கிப் பேசிடுவது, பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இடையூறுகளைத் தானே உண்டாக்கும்? ஆங்காங்கே துண்டு துண்டாக நினைத்தபடி கிளர்ச்சிகளை, கடையடைப்புகளை, தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் களை – குறிப்பாக கலைஞர் போன்ற மூத்த தலைவர்களை வசைபாடுவதோ, பிரச்சினைக்குத் தீர்வை கொண்டு வந்து சேர்க்காது; மாறாக சட்டப்பூர்வமான ஆக்க ரீதியான மேல்முறையீடுகளைச் செய்யலாம்.
அனுதாப அலை என்றெல்லாம் காட்ட ஆவேசம், உணர்ச்சிவயப்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, மனம்போன போக்கில், பதிவாகவேண்டும் நம் எதிர்ப்பு – உரியவர்கள் கவனத்திற்குச் சேர வேண்டும், எதிர்கால பதவி அரசியலுக்கு இதுவே ஒரு அரிய வாய்ப்பு என்றும் நினைக்கலாமா? வன்முறை அல்லது பொது அமைதிக்குக் கேடு விளைவித்தல்மூலம், மக்களின் வெறுப்புதான் வளருமே தவிர, வேறு உருப்படியான பலன் கிடைக்காது.
அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்!
இப்போது இவர்கள் நீதிமன்றங்களைக் கடுமையாக விமர்சிப்பது, நீதிபதிகளைத் தரக்குறைவாக உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது, எழுதுவது, தீர்மானங்களை தாங்கள் வகிக்கும் பொறுப்பான மன்றங்களில் நிறைவேற்றுவது போன்றவை எந்த அளவுக்கு அம்மையார் ஜாமீனில் வெளியே வருவதற்குத் துணை புரியும் என்பதை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்.
எல்லாவற்றையும்விட, இக்கட்சியினர் தமிழகத்தில் ஆளுங்கட்சி என்ற பொறுப்பில் இருந்துகொண்டு ஆட்சி நடத்துகின்ற நிலையில், அவர்களுக்குச் சட்டம் – ஒழுங்கு, பிரச்சினையை ஏற்படுத்தலாமா? அன்றாட அரசியல் ஆளுமை, மின்வெட்டு முதலான பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதல்லவா அவசியம்!
இவ்வாட்சியை இவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதுபோல மத்திய அமைச் சர்கள் இங்கே விடுக்கும் எச்சரிக்கைகளை – எல்லாம் மனதிற்கொண்டு, தங்களது நடவடிக்கைகளை ஆளும் கட்சியினர், ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டியதே இப்போது அவசியமாகும்!
எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்!
மீறி நீதிமன்ற நடவடிக்கைகள், தாறுமாறான விமர் சனங்கள் – அவர்களது தலைவி வெளியே வருவதற்கு இத்தகு நடவடிக்கைகள் உதவுவதற்குப் பதிலாக, எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்; ஊடகங்கள்மூலம் நீதித் துறையும், உலகமும், பொதுவானவர்களும் பார்த்துக் கொண்டு, முகம் சுளிக்கவும் செய்கின்றனர்!
நாம் இப்படி எழுதுவது அக்கட்சியினருக்குக் கசப்பாகக் கூட இருக்கலாம். முதியவர்கள் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து பின்னே இனிக்கும் என்பது பழமொழி. அ.தி.மு.க.வினரின் நடவடிக்கை எதுவாயினும் – இந்த இக்கட்டான தருணத்தில் அவர்கள் தலைவிக்கு உதவுமா? கேடு செய்யுமா? என்றே யோசிக்கவேண்டுமே தவிர, ஆத்திரக்காரர்களுக்கு அறிவு மட்டு என்ற முறை யில் ஆவேசம், ஆர்ப்பாட்டம், தரமற்ற வசைமாரிகளால் கேடுகளும், எதிர்விளைவுகளும்தான் மிஞ்சும்.
யார் வழக்குப் போட்டது என்று ஆத்திரப்படுவதைவிட, ஏன் வழக்கு வந்தது? என்று சம்பந்தப்பட்டவர்கள் சுயபரிசோதனை செய்து, இனி எதிர்கால பொதுவாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று முடிவு எடுத்துச் செயல்பட்டால், அது பயனுறு விடையாக, தீர்வாக உண்மையிலே அமையும்!
அரசியல் பார்வை இல்லை!
இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் விரும்பத்தகாத செயல்கள் மேலும் மேலும் பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்பதை உணர்ந்து, அத்தலைமையே முன்வந்து இவர்களுக்கு அறிவுரை கூறினால், அது அவருக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பயன்படக் கூடும்.
அரசியல் பார்வை இதில் ஏதுமில்லை!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
5.10.2014