புதுமை இலக்கியப் பூங்கா :
டிரியோ… டிரியோ… டிரியோ… டிரியோ!
ஆடிக்கொண்டிருந்தாள் அவள். அஞ்சான் அதை ரசித்துக் கொண்டிருந்தான். ஆண்டையின் குரல் அவனை மாய உலகிலிருந்து களத்துமேட்டுக்கு இழுத்து வந்தது.
டேய்! பொழுது சாயுதடா. நெல்லைக் குவிங்க… என்று நீண்டதொரு கனைப்பைத் தந்துவிட்டு, அங்காடிக் கூடையைப் பார்த்தார்.
அவர் மகன் குமரன் அங்காடிக் கூடைக்கார அம்மாளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
குமரனைப் பார்த்தார் கோவிந்தப் பிள்ளை_ குறும்புத்தனம் செய்துவிடப் போகிறான் பிள்ளை என்கிற கவலையோடு. ஏனெனில் அங்காடிக் கடை அம்மாளுவின் பெண் அலமேலும் அங்குதானிருந்தாள்!
பெண் பஞ்சு; ஆண் நெருப்பு. இரண்டும் அருகே இருப்பது ஆபத்து
இது அவரது அனுபவ சித்தாந்தம்.
அதிலும் குமரன் காலேஜிலிருந்து வந்திருப்பவன். காளை! கனைத்தார். அதைக் கண்டு கொள்ளாதது போலிருந்தான் குமரன். இருந்தானா? ஓசையில்லாத பாஷைகள் பேசிக் கொண்டிருந்தான் ஒய்யாரமாக வைக்கோற் போரில் சாய்ந்து நின்ற அலமுவிடம்.
காட்டிலே மலர்ந்த ரோஜா என்று எண்ணியபடி, ஏம்மா! எல்லாம் வித்துதுங்களா? என்றான் அலமுவின் அம்மாவிடம்.
எங்கே தம்பி! தோசையும் வடையும் அப்படியே இருக்கே என்று சோகத்தோடு கூறிவிட்டுப் பக்கத்துக் களத்துமேட்டிலிருந்து யாராவது வருவார்களா என்று ஆசையோடு நோக்கினாள் அவள்.
இந்த நேரத்தில், அலமுவின் கை குமரனுக்கு சுண்டலை எடுத்துக் கொடுத்தது.
நல்லாருக்கே என்று ஒரே வார்த்தையில் அம்மாவுக்கும் மகளுக்கும் பதில் தந்தான் அவன்.
கோவிந்தப் பிள்ளை மீண்டும் திரும்பிப் பார்த்தார்; கனைத்தார்.
டிரியோ… டிரியோ… டிரியோ… டிரியாலோ…!
அஞ்சானின் இதயத்தில், பனித்துளிகள் போல இந்தக் குரல் விழுந்து கொண்டிருந்தது. தலையில் கட்டிய முண்டாசை எடுத்து உடம்பிலிருந்து ஓடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு மரக்காலை எடுத்து லாபம் என்று ஆரம்பித்தான்.
லாபம் என்பது விவசாயிகள் பாஷையில் ஒன்னு!
லாபம்… ரெண்டு… மூனு… மூட்டைக்குள் நெல்லை வீசிக் கொண்டிருந்தது மரக்கால். அவனது கண்களோ, அவள்மீது பார்வையை வீசிக்கொண்டிருந்தன. அந்தக் குறப்பெண் தனது பரம்பரைச் சொத்தான தகர டப்பாவைத் தட்டிய வண்ணம் சங்கீதச் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்.
எறும்புகள்போல் ஓடியாடிக் கொண்டிருந்த ஆதித் திராவிட விவசாயிகள் எவரையும் அந்தச் சத்தம் கவர்ந்ததாகத் தெரியவில்லை. வியர்வையைத் துடைப்பதும் சாக்கு மூட்டைகளை அடுக்குவதும், லாபம்… இரண்டு என்று நெல் அளப்பதும் வேகமாக நடந்து கொண்டிருந்தன. அவளோ, சத்தம் எழுப்பியவண்ணம், ஆடிக் கொண்டிருந்தாள்.
நெல் அளந்தாயிற்று.
மூட்டைகள் அடுக்கப்பட்டு விட்டன.
ஆட்களுக்குக் கூலியும் தரப்பட்டுவிட்டது.
பிள்ளை குடை வெற்றிலைப்பெட்டி சகிதம் புறப்பட்டும் விட்டார்.
குமரனோ விழிகளால் அலமேலுவிடமும், மொழிகளால் அவள் அம்மாவிடமும் பேசிக் கொண்டிருந்தான்.
தம்பீ! போகலாமா? என்ற பிள்ளையின் குரல், கனி சுவைக்கும்போது காவற்காரன் விரட்டியது போலிருந்தது. கடைசிப் பார்வையொன்றை வீசிவிட்டு அவனும் கிளம்பினான்.
டிரியோ… டிரியோ… டிரியோ…
இந்தச் சத்தம் குறைந்தது. தனக்கு எதுவும் கிடைக்காததால், ஏமாந்த அந்தக் குறத்தியின் ஆட்டமும் அடங்கிற்று. ஆனால் கண்ணாட்டம் மட்டும் ஓயவில்லை. அஞ்சான் இருக்கிறானே!
இந்தா பிள்ளெ, நீ போகமாட்டே? என்று அதட்டினான் அஞ்சான்.
போடு சாமி! என்று தகரக் குவளையை நீட்டிக் கொண்டே சிரித்தாள் அவள்.
ஈறெல்லாம் கறுத்து, அதன் மத்தியில் ஒளிவிட்ட அந்தப் பற்கள் குப்பை மேட்டிலே
கிடக்கும் கிளிஞ்சல்களைப் போலிருந்தன.
இப்போது அதட்டவில்லை அஞ்சான்.
ஏம்மே! உனக்கு தர்மம் பண்ணிட்டா என்ன ஆவறதாம் நான்?
குறத்தி ஒன்றும் பேசவில்லை. அவள் உதடுகள் சிறிது விரிந்தன. கண்கள் மீன்களைப் போலத் துள்ளின. பச்சைப் பாசி மணிகளைச் சரிப்படுத்திக் கொண்டாள். தகரக் குவளையை நீட்டினாள். தனக்குக் கிடைத்ததில் ஒரு பகுதி நெல் மணிகளைக் கொட்டினான் அஞ்சான். சிரித்தாள்; சிரித்தான். தேன் சிட்டுப்போல, அடுத்த களம் நோக்கிப் பறந்து சென்றாள் அந்தக் குறத்தி.
இந்தியாவில் ஏழு லட்சம் கிராமங்களிருக்கின்றனவாமே; அதில் ஒன்றுதான் மாவூர். இயற்கை அன்னையின் இதயம். இன்பத் தடாகமும் ஏழைகளின் அன்பும், அல்லிப் பூவும், ஆடும் மாடும்… ஆகா! கிராமத்தின் அழகு வருமோ? என்றெல்லாம் கல்லூரி மேடையில், கர்ஜனை எழுப்ப உபயோகமாயிருப்பதுதான் கிராமங்கள் என்ற எண்ணங் கொண்டிருந்த குமரனுக்கு, இப்போது கிராமத்திலும் உயிர் இருக்கிறது என்பது தெரிந்தது.
கவிதைக் கூடே! எழிற் சோலையே! கிள்ளை தாலாட்டும் கிளர்ச்சிக் குகையே! என்றெல்லாம் எழுதலானான். கிராமத்தைப் பற்றியா, அல்லது கிராம மோகினியைப் பற்றியா என்பதை அவனைத்தான் கேட்க வேண்டும்!
காலேஜ் லீவுக்கு ஊருக்கு வந்தால், புத்தகமும் கையுமாகவே காலங்கழிக்கும் அவன், இப்போது மாலையும் காலையும் களத்துக்குச் செல்லத் தவறவில்லை. காரணம் அந்தக் காட்டு ரோஜா என்பதைச் சொல்லவா வேண்டும்?
கோவிந்தப் பிள்ளை இதைப் புரிந்துகொண்டார். பிள்ளையிடம் இதுபற்றிப் பேசலாமா? சிறு பிள்ளை; வயது வந்த மனம் குரங்குதானே _இது அவரது எண்ணம். ஆகவே, கடிதங்களும், ஜோசியமும் வந்து குவியலாயின, அவரை நோக்கி. அவரது மனைவியும், அது இது என்று சேகரிக்கத் தொடங்கிவிட்டாள். ஆனால் குமரனோ, அங்காடிக்கடை அம்மா வீட்டுக்குப் போகத் தவறவில்லை.
தம்பி! நல்லால்லீங்க.. ஊரு ஒரு கோடி பேசும். வேண்டாங்க. பெரிய இடத்துப் பிள்ளை. வயிற்றிலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். அலமு சின்னஞ்சிறுசு. அடிக்கடி இப்படி வராதீங்க…
உள்ளத்தில் அலைமோதிய இந்த வார்த்தைகளை ஒரு நாள் உதிர்த்துவிட்டாள் அம்மாளு. கண்ணீரோடு கதவிடுக்கில் நின்று கொண்டிருந்தாள் அலமேலு. குமரன் திடுக்கிடவில்லை; அவன்தான் முன்னமே தீர்மானம் செய்துவிட்டானே!
தம்பி! கோவிச்சுக்காதீங்க; நேத்து உங்க அப்பா வந்து இங்க இரைஞ்சாருங்க. குப்பைமேடு கோபுரத்திலே வாழ ஆசைப்படலாங்களா?
சரி அம்மா!
வேகமாக எழுந்து சென்றான் குமரன். அலமுவின் கண்ணீர் அவன் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.
வீட்டுக்குள் நுழைந்தபோது கோவிந்தப்பிள்ளை கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார், எங்கே அந்தக் கழுதை? என்று.
இந்தாங்க! பிள்ளையைக் கழுதே கிழுதேன்னு பேசாதீங்க என்று மறுத்துக் கொண்டிருந்தாள், குமரனின் தாய்.
குமரன் வந்து கொண்டிருந்தான். கோவிந்தப் பிள்ளை சொன்னார்; பிள்ளையை யாரடி கேட்டா? அவனைக் கேட்டேன்டி அஞ்சானை! எங்கே போயிட்டான்? நெல் அரைக்கப் போகச் சொன்னேனே? மில்லுக்கு நேரமாயிட்டுதே!
வெள்ளைக்காரன் எவ்வளவோ கெடுதி செஞ்சிருந்தாலும் இந்த நன்மை செய்ததை மறக்க முடியாதுங்க! _ மாவூர் ரயில்வே ஸ்டேஷனைப்பற்றி, அந்த ஊரார் அடிக்கடி இவ்விதம் பேசிக் கொள்வதுண்டு. வெள்ளைக்காரன் தயவால் ஏற்பட்ட நன்மை எதுவோ நமக்குத் தெரியாது; ஆனால் அந்த ஸ்டேஷனைச் சுற்றியிருந்த ஆல மரங்கள், நரித்தொம்பர்களுக்கும், பூம், பூம் மாட்டுக்காரர்களுக்கும் பெரிய கோட்டையாக இருந்து வந்தது. அறுவடைக் காலம் வந்துவிட்டால் அந்த இடம் ஒரு சிற்றூராகிவிடும். நரித்தொம்பர்களின் சிறு குடிசைகள்! புரியாத பாஷையில் அவர்கள் போடும் சத்தம்! நரிப்பல், பாசிமணி, சாமியோ! ஊசி! ஊசி! என்கிற ஓலம்! அந்த இடம், அவ்வூர்ச் சிறுவர்களுக்கு ஓர் உல்லாச இடம். ஆலமரத்துப் பொந்துகளில் வசிக்கும் பட்சி ஜாதிகளும் அந்தத் தொம்பர்களும் ஒரு விதத்தில் ஒரே இனம் என்றே சொல்லலாம். காலையில் பொந்தைவிட்டுப் புறப்படும் பறவைகளைப் போலவே, அவர்களும் கிளம்புவார்கள். இருட்டுக்கு முன் வந்துவிடுவார்கள்! இருட்டிய பிறகும் வராத குறப் பெண்களை அவர்கள் ஜாதியிலிருந்தும் விலக்கி விடுவார்கள் என்று அந்த ஊர்ப் பெரியவர்கள் பேசிக் கொள்வதுண்டு. தை மாதம் வருவார்கள்; பங்குனிக்குள் போய்விடுவார்கள். எங்கிருந்தோ வந்து, எங்கேயோ போய்விடும் அந்த நாடோடிகளைப் பற்றி எவரும் அவ்வளவு அக்கறை காட்டமாட்டார்கள். ஆனால் அவர்கள் அடிக்கடி நடத்தும் ஒருவிழா மட்டும் ஊராருக்குக் கவனமாயிருக்கும் பலிவிழா! பெரிய எருமையை வெட்டி அதன் இரத்தத்தைக் குடிப்பார்களாம்! எண்ணெய்ச் சட்டியில் கைவிடுவார்களாம்! இதைப்பற்றிப் பல கதைகள்! ஊரார் எவரும் அன்று அந்தப் பக்கமே திரும்பமாட்டார்கள்.
பூரண நிலவு காய்ந்து கொண்டிருந்தது. கழுத்திலே போடப்பட்டிருந்த மாலையிலிருந்தே தழைகளைத் தின்று அசைபோட்டுக் கொண்டிருந்தது ஒரு எருமைமாடு.
எவருக்கும் புரியாத பாஷையில் எல்லோரும் கூடிக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இரைச்சலால் பயந்த பறவையினங்கள் வேறு ஓ, ஓ! என்று அலறிக்கொண்டு அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. பயங்கரம் நிரம்பிய அந்த இடத்தின் அமைதியைக் கிழித்த வண்ணம் ரயில் வந்து நின்றது. ஸ்டேஷனில் இரண்டே இரண்டு உருவங்களை ஏற்றிய வண்ணம் பெருமூச்சு விட்டுக் கொண்டு, சில வினாடிக்கெல்லாம் ரயில் புறப்பட்டுவிட்டது.
சிறுக்கி மயக்கிட்டா! என் பிள்ளைப் போயிட்டுது என்று அலறித் துடித்தாள் குமரனின் தாய். சீறினார் கோவிந்தப் பிள்ளை, அலமுவின் அம்மாவிடம். அய்யோ! எனக்கொன்னும் தெரியாதுங்க, என் மானத்திலே மண்ணைப் போட்டுட்டாளே என்று முகத்தில் அறைந்து கொண்டாள் அம்மாளு.
ஊராருக்கு அசைபோட ஒரு நியூஸ்!
படிச்ச பிள்ளையாம்; பார்த்தீங்கள்லே!
காலம் கெட்டுப் போச்சுங்க.
வேணும் கோவிந்தப் பிள்ளைக்கு
எல்லாம் அந்த அம்மாளுவின் தந்திரம்தான்.
வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினர். இந்தச் சம்பவத்தால்தான் குறவர் குடிசையில் எழுப்பிய கூச்சலும் ஆரவாரமும் அவர்கள் எவருக்கும் எட்டவில்லை.
சிங்கி பலி விழாவின்போது போய்விட்டாள். அஞ்சானுடன் அந்த அஞ்சுகம் பறந்துவிட்டது. விழா வெறியில் எவரும் அதைக் கவனிக்கவில்லை. விடிந்ததும் தேடினர்; விபரமறியாமல் துடித்தனர். கோவிந்தப்பிள்ளை கொதித்துக் கிடந்தார். அவர்தானே கிராமத்து மணியம். அவரிடம் வந்து முறையிட்டார்கள் அந்த நாடோடிகள். இடிமேல் இடிபோலிருந்தது இது! எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது போலிருந்தது இந்தப் புகார். என்ன செய்வது? விசாரிக்க வேண்டியவரானார். பலப் பலர் பலப்பல சொல்லினர். சேரியைச் சேர்ந்த ஒருவன் அஞ்சானும் அவளும் அடிக்கடி சந்தித்துப் பேசியதைத் தான் கண்டதாகச் சொன்னான். அஞ்சானுக்கு ஆள் அனுப்பப்பட்டது. அவன் அங்கே இருந்தால்தானே? அவனும் அவளும்தான் கொண்டு வந்த கட்டுச் சோற்று மூட்டையை வைத்துக்கொண்டு பத்து மைலுக்கப்பால் உட்கார்ந்திருந்தனரே!
அவன் இல்லை; ஓடிவிட்டான்.
– இந்தத் தகவலைக் கேட்ட பிள்ளை துடித்தார்.
என்ன அக்கிரமம்! என்று கர்ஜித்தார். போலீசில் தெரிவிக்கப் போகிறேன் என்றார். அஞ்சான் அவருடைய பண்ணையாள்! நூறு ரூபாய் சொத்தைப் பெற்றவன். அவன், தன்னை ஏமாற்றிச் செல்வதை அவரால் எப்படிச் சகிக்க முடியும்? பண்ணையாள் போய் விடுவதா? பணம்… அவர் கொடுத்த பணம்? போலீசில் புகார் செய்யப்பட்டது. பிள்ளையின் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு அந்த நாடோடிக் கும்பல் புரியாத பாஷையில், ஏதேதோ பேசிக் கொண்டு ஆலமரத்துக்குச் சென்றது. அன்று மாலையே எங்கோ புறப்பட்டுவிட்டது.
காட்டு ரோஜா! என் கண்ணே!
ஆமாம் போதும்; விடுங்கள்…
கொய்யாப்பழம் கொண்டு வருகிறேன்; நீ மாம்பழம் தருகிறாயா?
என்ன?… என்ன?
உச்… உச்
இப்படிப் பேசிக் கிடந்தார்கள் குமரனும் அலமுவும்.
தனி அறை; ஓட்டல் மாடி. இரண்டே புறாக்கள்! ஆனால் சிங்கியும், அஞ்சானும் இப்படியெல்லாம் பேசவில்லை. எப்படித் தெரியும் இப்படி உரையாட? என்றாலும், அவர்கள் கண்களும் சிரிப்பும் இதைவிட மேலான காதல் மொழிகளை உதிர்த்துக் கொண்டிருந்தன.
மர நிழல்தான் அவர்களது ஓட்டல். புதரும் மரத் தோப்பும்தான் அவர்களுக்கு ரூம். அவள் பாடுவாள்; அவன் ஏதாவது வேலை என்று அலைவான். இப்படி அலைந்து கொண்டிருந்தனர்.
ஆனால் இவர்களது ஜோடிப் பொருத்தம் பலரது கண்களில் சந்தேகத்தை வரவழைக்காமலில்லை. பறையன்_நரிக்குறத்தி – இவ்விதம் கேலி பேசவும் தவறவில்லை. இரண்டும் மனித உடல்தான்; ஆனால் உடையும் உருவமும்?
கிழிந்த பாவாடை; மேலே ஒரு கச்சை; கச்சைக்கும் பாவாடைக்குமிடையே தெரியும் வயிறு; பாசி மணி; மறையாத மார்பு; அதை மூடிக் கிடக்கும் சிறு மேல் துணி; காதுமணி! _ அவளை எவரும் புரிந்து கொண்டு விடுவார்களே!
அதனால்தான், இந்த ஜோடியைக் கண்ட அந்தப் போலீஸ்காரன் சந்தேகப்பட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றான். இன்ஸ்பெக்டர் அவனை மேலும் கீழும் பார்த்தார்.
இழுத்துக் கொண்டு போய்ப் பூட்டு என்றார்.
அவள் கதறினாள். அவளை வெளியே விரட்டினர். அவனை மட்டும் இழுத்துச் சென்றனர். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை! எப்படித் தெரியும் அஞ்சான் என் பண்ணையாள். வீட்டிலேயிருந்த மாடு ஒன்றைத் திருடிக் கொண்டு ஓடிவிட்டான் என்று கோவிந்தப் பிள்ளை செய்திருந்த புகார்?
அவன் கதறினான்; அவள் கூகூவெனக் கூச்சலிட்டாள். அவன் கம்பிகளுக்குள்; அவள் புழுதிபடிந்த வீதியில் புழுப்போல் துடித்தாள். அவளை நெருப்புக் குண்டத்தில போட்டு அவிப்பது போலிருந்தது. கதறினாள்! போலீஸ்காரர் வந்து ஓடு கழுதே என்று விரட்டியோட்டும் வரை கதறினாள்! ஏழை அஞ்சான் அலறினான்; துடித்தான்.
சாமி! அவளை ஒண்ணும் செய்யாதீங்க என்று கூக்குரல் போட்டான். பலன், பலமான அறை அவனுக்கு! அவள் நாயைப்போல் விரட்டப்பட்டாள். காதல் ஜோடிகள்; ஒன்று புறாக் கூண்டுக்குள்; மற்றொன்று புழுதியில்!
சப்_இன்ஸ்பெக்டர் இந்தக் காட்சியைப் பற்றி அவ்வளவு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் கண் அன்றைய பத்திரிகையில் வந்திருந்த திருமணப் படத்தையும், செய்தியையும் பார்த்துக் கொண்டிருந்தது.
காதல் மணம் என்ற தலைப்பிட்டு அலமுவும் குமரனும் ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துகொண்டதாக விளம்பரம் செய்திருந்த செய்தி, புகைப்படத்தோடு வந்திருந்தது. சிரித்துக் கொண்டிருந்தார்கள், அந்த இரு சிட்டுகளும். செய்திக்குக் கீழ் குமரனுடைய தீவிரப்போக்கு குறித்துச் சிறு குறிப்பும் தந்திருந்தார், பத்திரிகாசிரியர்.
ஆனால் ஏழை அஞ்சானைப் பற்றி? அவனது இதய ராணி நரிக்குறத்தியைப் பற்றி?
சப்_இன்ஸ்பெக்டர்தான் டைரி எழுதிக் கொண்டிருந்தார்!
– இராம.அரங்கண்ணல்
திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவர். முஸ்லிம், திராவிட நாடு இதழ்களில் பணியாற்றியவர். அறப்போர் என்ற இதழினை நடத்தியவர். இவர் எழுதிய சிறுகதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டபோது அவற்றுக்குத் திரைக்கரை, வசனம் எழுதியுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.