கடவுள் இல்லாத சமுதாயத்தை உண்டாக்க வேண்டும் என்று இங்கு சொல்லவில்லை; ஆனால் அறிவுள்ள சமுதாயம் உண்டாக வேண்டும் என்பதை வற்புறுத்துகிறேன் என்று 15.5.1957ல் நடைபெற்ற புத்தர் விழாவில் பேசியவர் பெரியார். அதன் பரிணாமங்கள் தான் கடவுள் மறுப்பு, வைதீக மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணியம், சுயமரியாதை என பெரியாரின் அத்தனை கருத்தியலுக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது. ஒரு நவீன அறிவியல் ரீதியான சமூகச் சிந்தனையை வார்த்தெடுப்பதன் மூலம் ஜாதியால், வர்ணத்தால் பிளவுபட்டுக் கிடந்த சுரண்டல் சமுதாயத்தை சமதர்ம சமூகமாக மாற்ற இயலும் என்று நம்பினார் பெரியார்.
பொருளாதார அடிப்படையில் வெளிப்படையான கருதுகோள்களை பெரியாரியம் வைக்கவில்லை எனினும் அனைவருக்குமான சமூக நீதி என்ற அடிப்படையில் பொருளாதார சமநிலைக்கான அடித்தளமாக ஜாதியற்ற சமூகம் இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது.
பெரியாரியம், மார்க்சியத்தின் கூறுகளை பொருள்சார் அடிப்படையில் இல்லாமல் சமுதாயப் பண்பாட்டுக் கூறுகளாகப் பார்த்தது. ஜாதிக் குழுக்களாக வாழும் இந்தியச் சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் வர்க்கங்களை ஒருங்கிணைப்பது இன்று வரை சாத்தியமில்லாததற்குக் காரணம், அதை விட தகுதியின் பாற்பட்ட (Status Group) பிளவுபட்ட ஜாதியக் குழுக்களைக் கொண்ட சமூகமாக (Stratified Society), 2000 ஆண்டுகளாக வேரூன்றி இருந்து வருகிறது. ஜாதியக் குழு மனப்பான்மை என்பது வர்க்க மனப்பான்மை ஏற்பட வழியில்லாமல் தடையாக இருந்தது. ஜாதிய சமூகத்தில், பொருளாதாரச் சுரண்டலை ஜாதிய ஆதிக்கமாக நிறுவியிருந்தது மனுதர்மம்.
இத்தகைய நிலையில் வர்ணத்தின், ஜாதியின் கட்டுமானங்களை உடைக்காமல் பொருளாதார மாற்றங்கள், எளிய மக்களின் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இந்த அடிப்படையில், திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் ஏற்படுத்திய மாற்றங்கள் _ இன்றைய நிலையில், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் கூறுகளில் தமிழகத்தை மாற்ற மாநிலங்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன.
பெரியாரின் சிந்தனைகளால் தமிழகத்தின் மலர்ந்த சமூக விழிப்புணர்வு – இன்றைய நிலையில் மதவாத சிந்தனைகளால் பின்னடைந்துள்ளது. ஜாதியக் கட்சிகளின் அரசியல் நோக்கங்களுக்காக, பெரியாரின் கருத்தியல் பார்ப்பன எதிர்ப்பாக சிறுமைப் படுத்தப்பட்டு, உழைக்கும் மக்களை _ சாமானியனை இந்துத்துவ நம்பிக்கைகளில் மீண்டும் சிக்க வைக்க பரவலான முயற்சிகள், தற்போது அதி தீவிரமான நிலையில் நடந்து வருகின்றன. அன்று நாட்டிற்கு விடுதலை கிடைத்தால் போதாது; சமூகத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற பெரியாரின் சிந்தனை தேசத் துரோகமாக முத்திரை குத்தப்பட்டது.
மதத்தின் பெயரால் மூளைச் சலவை செய்யப்பட்ட மக்களை விழிக்கச் செய்ய பெரியார் போராடிய தீவிரம் கற்பனை செய்ய முடியாத ஒன்று.
இன்று பெரியாரியல் அமைத்துத் தந்த சமத்துவச் சிந்தனையில் ஜாதியக் கட்டுகளில் இருந்து பொருளாதாரத்தில் வளர்ந்த இடைநிலை ஜாதியக் குழுக்கள் மீண்டும் இந்துத்துவ மனுதர்மக் கொடியைத் தூக்கக் காரணம், அரசியல் ஆதாயம் என்ற குறுகலான நோக்கம் அன்றி வேறெதுவும் இல்லை.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக் காலத்திலும் கடவுளின் பெயரில் உலகளாவிய போர்களும் உள்ளூர் ஜாதி மதச் சண்டைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க…. ஊர் ஊராகச் சென்று… கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற கூவலுடன்… அத்தனை எதிர்ப்பையும் மீறி பகுத்தறிவினைத் தூண்ட அசாத்தியத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும்.
பெரியாரின் கொள்கைகள்தான் இன்று தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளது. இதில் ஆட்சியாளர்களது பங்களிப்பு என்பது ஒரு செப்பனிடப்பட்ட நிலத்தில் பயிர் செய்வதைப் போல! பெரியாரின் கொள்கை வீச்சு, தமிழகத்தில் ஓரளவு மதத்தின் கட்டுமானங்களைத் தகர்த்தது. பெரியார் மட்டும் இல்லையென்றால் குலக்கல்வி புகுத்தப்பட்டிருக்கும்: சில ஆண்டுகள் ஜாதியத்தில் சுழன்று, சிக்கி மதத்தின், வருணாசிரமத்தின் வரையறைக்குள் ஒரு சிலரது ஆதிக்கத்தில் தமிழகம் பின்னடைந்திருக்கும்.
நாடு முழுமையிலும் பெரியாரின் காலத்தில் சமூகச் சிந்தனையாளர்கள் இருந்தனர். பெரியாருக்கு முன்பே ராஜாராம் மோகன் ராய், ஜோதி பா பூலே என முன்னோடிகள் இருந்தனர். ஆனால் பெரியாரின் பங்களிப்பு அவர்களை மிஞ்சியதற்குக் காரணம், பெரியார் தான் சமூக விடுதலைக்கான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றினார். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஈடு கொடுக்கும் அளவு, தமிழகத்திலும் கேரளாவிலும் சமூக விடுதலைப் போராட்டம் எழுச்சியோடு மக்களால் நடத்தப்பட்டது.
இத்தகைய விழிப்புணர்வு இன்னும் வட மாநிலங்களில் இல்லை. தமிழகத்தையும் வட இந்திய மாநிலங்களையும் ஒப்பு நோக்கினால் அது புரியும். மதத்தின் கட்டுமானங்களில் உழன்று வரும் சமூகம் என்பதால் மிக எளிதாக ஒரு மசூதியை இடிக்க முடிந்தது. பெரியாரின் தாக்கம், நம்மைப் பண்பட்ட மனிதனாக மாற்றியுள்ளது. இது வரை, தமிழகத்தில் மதவாத சக்திகள் தங்கள் கடையை விரிக்க எத்தனைப் பிரயத்தனம் பட்டும் முடியாததற்குக் காரணம், திராவிடக் கொள்கைகள் வேரூன்றி இருப்பதுதான். இந்தியா முழுமைக்குமான பெரியாரின் தேவையை உணரும் காலகட்டம் இது. தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் சீர்திருத்தவாதிகள் இருந்திருக்கலாம்; ஆனால் பெரியார் போன்று பகுத்தறிவை நிறுவனப் படுத்திய முயற்சி இல்லை. அதுவும்… திராவிட இயக்கம், ஒரு சமூக நிறுவனமாக இல்லாமல் அரசியல் நிறுவனமாகவும் நீட்சி கண்டது.
பல தலைமுறைகளைத் தன் வசப்படுத்தியது; மாணவர்களை எழுச்சி மிக்க பகுத்தறிவுப் பரப்புரையாளர்களாக வைத்திருந்தது. அந்த திராவிடப் பாரம்பரியத்தில் வந்த குடும்பங்கள், கடவுள் மறுப்பாளர்களாக மாறியதுடன், ஜாதியத்தின் மறுப்பாளர்களாக மாறத் தலைப்பட்டனர். கடவுள் மறுப்பு, ஆழமாய் வேரூன்றியிருந்த மனு தர்மங்களை அம்பலப்படுத்தியது. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது சுரண்டல் சமுதாயத்திற்கு எதிரானது. மதத்தினால் மழுங்கிய மூளையை சாட்டையடிப் பேச்சால் விழிக்க வைக்க பெரியாரால் முடிந்தது.
இந்து மதத்தினை _ அதன் கட்டமைப்பை, கட்டுக் கதைகளை, கேவலமான புராணப் புளுகுகளை இந்தியாவில் வேறெந்த சீர்திருத்தவாதியும் பெரியார் அளவுக்குச் சாடியதில்லை. பெரியாருக்கு ஈடாக ஒரு தலைமை, இந்து மதத்தின் முகத்திரையைக் கிழித்தார் என்றால் அது அம்பேத்கர் மட்டுமே.
ஆனால் அம்பேத்கரை _ அவரது கருத்துகளை ஒடுக்கப்பட்ட தலைவராக ஒடுக்கியது வரலாறு. அம்பேத்கரியம் ஒரு அறிவுசார் நிலையில் பெரியாரைவிட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும், பெரியாரின் இயக்கம் தனது பரவலை வெகுசன இயக்கமாக மாநிலம் முழுமைக்கும் கொண்டு சென்றது. பெரியாரின் கருத்துகளை எதிர்த்து நிற்க முடியாத பார்ப்பனியக் கட்டுக்கதைகளால் பின்னப்பட்ட சப்பைக் கட்டு விவாதங்கள் முன் பெரியாரியம் வேகமாகப் பலம் பொருந்தி மோதியது.
மாநிலத்தின் அரசியல் கட்சிகள், பெரியாரின் வழித்தோன்றலாக திராவிடக் கொள்கைகளை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்த அளவுக்கு அடித்தட்டு மக்களின் மனதிற்குள் பகுத்தறிவினை இயக்கமாக மாற்றியதால் தமிழகத்தில் புரையோடிக் கிடந்த பார்ப்பனியத்திற்குப் பெரிய அச்சுறுத்தலாக பெரியாரால் இயங்க முடிந்தது.
பெரியாரியம் சமூக விடுதலையை முன்னிறுத்தியது; ஜாதியத்தைச் சாடியது; பெண்ணியம் பேசியது. ஒட்டுமொத்த சமூகத்தின் சீர்திருத்தத்திற்கான அஸ்திவாரமாக விதைக்கப்பட்டது. அரசியல் விடுதலை அடைந்த பின் மிக மிக அத்தியாவசியமான மாற்றமான சமூக விடுதலைக்கான இயக்கமாக திராவிட இயக்கம் நீண்ட நெடுங்காலம் தமிழகத்தில் வேரூன்றியதால் தமிழக மக்களின் சமூக வாழ்க்கை மேம்பட்டது.
இந்து வருணாசிரமத்தினை எதிர்க்கும் நிறுவனமாக பார்ப்பனியத்தை எதிர்த்ததன் விளைவு, மதத்தின் வீரியத்தில் வீழ்ந்து கிடந்த சாமனிய மக்களை கல்வியின் திசையில் பகுத்தறிவின் பாற்பட்டு சிந்திக்க வைக்க முடிந்தது. இது, சாமானிய மக்களைச் சுயமரியாதையுடன் வாழத் தூண்டியது. பார்ப்பன ஜாதி அடுக்கில் அல்லாத அனைத்து மக்களையும் பெரியாரியம் சென்றடைந்தது. இந்த ஒருங்கிணைப்பு, மற்ற மாநிலங்களில் அரசியல் சக்தியாகத் திரண்டது. அதுவும் இடைநிலை ஜாதிகளின் அரசியல் ஆதிக்கத்திற்கான ஒன்றாக இருக்கையில், பெரியாரின் கொள்கைகள் அரசியலைக் கடந்த சமூக விழிப்புணர்வாக இருந்தது.
அதனால்தான் வட இந்தியாவிலும் தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களிலும் ஜாதி இன்னும் வலுவாக அசைக்க முடியாது உள்ளது. அவ்விடங்களில் பகுத்தறிவின் பாற்பட்ட ஒருங்கிணைப்பாக இல்லாது, அரசியல் சக்திக்கான ஒருங்கிணைப்பாக இடைநிலை ஜாதிக் கட்சிகளாக இருந்ததால், இன்றும் ஜாதியமும் மதமும் அரசியலைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. அதனால்தான் உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பார்பனியத்திற்கு மாற்றாக இடைநிலை ஜாதிகளின் கூட்டமைப்பு வலுவாக உள்ளதுடன், அவை சமதர்ம சமூக நீதிக்காக தெளிவான சிந்தனையின்றி அதிகாரத்தைக் கைக்கொள்ளும் அமைப்புகளாக உள்ளன.
இம்மாநிலங்களில் பெண்ணியச் சிந்தனைகளோ பெண்களின் விழிப்புணர்வோ தமிழகத்தில் இருக்கும் அளவு பரவலாக இல்லை. பெண்களுக்கான சமூகநிலை தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் மிக மோசமான நிலையில் உள்ளது. கல்வி கற்ற பெண்கள் வேண்டுமானால் ஓரளவு உரிமைகளுடன் வாழ வழி இருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஆணாதிக்கத்தின் கீழ் சமூகத்தில் இரண்டாம் தர நிலையிலேயே சாமானியப் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் அடிப்படை தமிழகம் தவிர்த்த பகுதிகளில் மதம் அதன் ஆதிக்கத்தை இன்னும் இறுக்கமாக வைத்திருக்கிறது. மதத்தை மீறிய சிந்தனை என்பது சாத்தியமின்றிப் போனது. இதனால்தான் அரசியல் சுதந்திரமடைந்தாலும் சமூக விடுதலை என்பது சாத்தியமற்ற ஒன்றாக இன்னும் இருந்து வருகிறது. சுதந்திரத்திற்குப் பின்னால் தமிழகத்தில் இருக்கும் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இருக்கும் விழிப்புணர்வும் அவர்களது உரிமைகள் குறித்த சிந்தனையும் பெரியாரின் கருத்தால் நிகழ்ந்த மாற்றம்.
இன்றைய நிலையில் நாம் தெளிவடைந்த ஒன்றின் மீது இந்துத்துவப் போர்வை சூழ்ந்து மயக்கத்தை ஏற்படுத்த முயல்கிறது. அதிலிருந்து மீள பெரியாரின் கருத்தியல் மீண்டும் முழு மூச்சுடன் மக்களுக்குச் சென்றடைவதும், பெரியாரை இந்திய அளவிற்கு எடுத்துச் செல்வதும்தான் சமதர்ம சமுதாயத்தை வென்றெடுப்பதற்கான வழி.
வெறும் கருத்தியலாக மட்டுமன்றி செயலாக்க வடிவத்தில் பெரியாரின் ஜாதிமறுப்பு, பார்ப்பனிய எதிர்ப்பாக இல்லாமல் ஒட்டுமொத்த ஜாதிய மனநிலையின் எதிர்ப்பாக மீண்டும் வலுப்பெற வேண்டும்.
பெண்களின் மீதான வன்கொடுமைகளுக்கான மாற்றத்தை பெரியாரின் கருத்தியல் மூலமாகவே வென்றெடுக்க இயலும். அதை இந்துமதத்தின் வர்ணாசிரமத்தின் மீதான, ஆணாதிக்கத்தின் மீதான தாக்குதலாக இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வதே அதற்கான வழி.
– மீனா சோமு