அழுதுகொண்டிருந்தான் அவன்.
யாரும் கவனிக்கவில்லை!
பரட்டைத் தலை
அழுக்கான முகம்
வருவார் போவோரெல்லாம்
அடித்த வாசனைத் திரவியம்
ஆறியும் ஆறாமலும்
உடல் முழுவதும் தீப்புண்கள்
சிகரெட்டால் சுட்ட வடுக்கள்
அங்கங்கே வெட்டுக் காயங்கள்
சில சமயம்
புதுச் சட்டையோடு அரண்மனையிலிருப்பான்
பல சமயம்
கிழிந்த சட்டையோடு தெருவிலிருந்தான்
பிச்சைக்காரனுக்குப் பிச்சையிட்டான்
அதே தெருவில் அவனே பிச்சையெடுத்தான்
அவன் ஊமையென்று சந்தேகித்தார்கள்
அவன் வாய் தைக்கப்பட்டிருந்தது
கையை யாரோ முறித்திருந்தார்கள்
பரிதாபப்பட்டவர்கள் கூட்டிச் செல்வார்கள் வீட்டிற்கு
அடுத்த நாள்
தெருவில் தென்படுவான்.
அவனோடு புகைப்படம்
எடுத்துக்கொண்டார்கள்
பெயரைக் கேட்டேன்
சிரித்துக்கொண்டே நின்றான்
சர்வாதிகாரம் தன்னை
ஜனநாயகமென்பதால்
அடக்கு முறை பாசிசம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொண்டு திரிவதால்
மத வன்முறை அடிப்படைவாதம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொள்வதால்
தன் நிஜப்பெயரை தலைமறைவு வாழ்வுக்குக் கொடுத்துவிட்டு
புனைப்பெயரில் திரிகின்றான் ஜனநாயகம்.
– கோசின்ரா