லண்டனில் அண்மையில் சில கடை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாசலில் திடீரென்று சில உலோகக் கம்பிகள் தரையில் முளைத்தன. ஏன் இரும்புக் கம்பிகள்? வேறொன்றுமில்லை _- வீடற்றோர் யாரும் அந்த இடத்தில் வந்துபடுத்து உறங்கவோ உபயோகப்படுத்தவோ கூடாது என்பதற்காக விதைக்கப்பட்ட உலோக அம்புகளே அவை. கடைகளில் அல்லது வீடுகளில், நீண்ட ஈட்டி போன்ற கம்பிகளை நட்டுவைத்து இருப்பார்கள்; ஏன் என்றால், புறாக்கள் வந்து அமரக் கூடாது, வந்து அமர்ந்தால் அசுத்தம் செய்துவிடும் என்பதற்காக. புறாவின் இடத்தை மனிதர்களும் பிடிக்கிறார்கள் போலும்!
மனிதர்களும் வந்து உட்கார்ந்து விடக் கூடாது என்பதற்காக உள்ளத்தில் உள்ள முட்கள்தான் தன் கோர முகத்தை வெளிக்காட்டி வெளியே உலோகக் கம்பிகளாக நட்டுவைக்கபட்டுவிட்டன. இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள், இதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்து, அந்த உலோகக் கம்பிகளை அகற்ற வலியுறுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
உலோகக் கம்பிகளைத் தரையில் பதித்தல் போன்றவை, சமூகப் பிரச்சினையை அடுக்குமாடி வாசலில் இருந்தோ, கடை வாசலில் இருந்தோ வீதிக்குத்தான் கொண்டு வருகிறதே ஒழிய, அதை முழுமையாகத் தீர்க்காது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
வீடு அற்றோர் என்பது சமூகப் பிரச்சினையின் ஒரு வெளிப்பாடுதானே ஒழிய, அதுதான் நோயின் மூல காரணம் என்று கூற முடியாது. நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும் என்றால்,
வீடற்றோர் ஏன் வீடு அற்றோராக இருக்கிறார்கள்? அல்லது ஆக்கப் படுகிறார்கள்? என்பதன் காரணத்தை அலசி ஆராய்ந்து அதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
– லண்டனிலிருந்து ஹரிஷ்