அழிக்கப்படாத விஞ்ஞான ஆராய்ச்சியால் உண்டான கற்பாங்கின் மேல்தான் நாஸ்திகன் தனது நாஸ்திக மாளிகையைக் கட்டுகின்றான். இந்த நாஸ்திகனுடைய மாளிகைக்கு முன் மதங்களின் கற்பனைகள் எம்மாத்திரம்!
விநோத திருஷ்டாந்தங்களால் பக்தனைப் போலவே கடவுளும் அமைக்கப்பட்டுள்ளாரே ஒழிய கடவுளும் இல்லை; கடவுளுக்குக் குணமும் இல்லை. எல்லாம் மனிதனுடைய கற்பனைகள்.
சிருஷ்டிக் கதைகளைக் கட்டி, அதற்கு வேண்டிய சொற்பொழிவுகளை அமைத்து வேதங்களெனவும், சுருதிகளெனவும், புராணங்களெனவும் பெயரிட்டு, பாமர உலகம் அவைகளை நம்பி நடக்கும்படிச் சூழ்ச்சிகள் செய்துள்ளனர்.
கற்பித வார்த்தைகளைக் கற்பித்துக் கொண்டு அவைகளுக்குக் கோயில் குளங்கள், பூசை நைவேத்தியங்கள், பிரார்த்தனை, தொழுதல் முதலிய மூடப்பழக்கங்களைச் செய்து கொண்டு இன்னும் உலகம் மூட நம்பிக்கையில் சூழ்ந்து கிடப்பதை நோக்கில், மனித உலகம் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் ஆழ்ந்து கிடக்கிறது. கவர்ச்சியால் சகல பொருள்களும் ஆளப்பட்டு வந்திருக்கின்றன. இதுதான் அனுபவ ஞானம். பிரபஞ்சம், கடவுள், சிருஷ்டி என்பதும் மனத்தினால் எண்ணித் தானே வந்ததென்பதும் ஈசுவரனுடைய அருளால் நடைபெறுகிறது என்பதும் கற்பிதங்கள்.
பிரமத்திலிருந்து உலகமும் உயிரும் பரிணமித்தன என்பார். பரிணமித்தல் என்றால் ஒன்றிலிருந்து இயற்கையாகவே மாறுதல். ஆதலின் இயற்கையாகவே மாறும் பொருள்களுக்குக் கடவுள் உதவி ஏன் வேண்டும். இந்தியாதி சிருஷ்டிக் கதைகளிலிருந்து கடவுளுடைய பக்தர்களுக்கே கடவுள் இன்ன வேலை செய்கிறார் என்று திட்டமாகச் சொல்ல முடியவில்லை என்றே ஏற்படுகிறது.
சமூகப் பழக்க வழக்கங்களே, கொலைக்கும், களவுக்கும் காரணம். அதே சமூகக் கட்டுப்பாட்டால் கொலையும் களவும் கட்டுப்படுகின்றனவேயொழிய, கடவுளாலுமல்ல; கோயில்களாலுமல்ல; பக்தியாலுமல்ல.
மனிதன் செய்யும் சட்டதிட்டங்களாலும், விதிவிலக்காலும், பழக்க வழக்கங்களாலும், சமூகத்தில் கொலை களவு தடைப்பட்டு வருகின்றனவே ஒழிய, கடவுள் பயத்தாலுமல்ல; நரக மோட்சத்தாலுமல்ல.
எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் பதிகிறதோ; உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தம் துக்கமும், கவலையும் கொண்டவனாகத் தான் இருப்பான் \ பேராசைக்காரனாகவேதான் இருப்பான்.
இல்லாத கடவுளுக்கு, இல்லாத குணங்களெல்லாம் உள்ளதாகக் கற்பித்து, கடவுள் இதைச் செய்வார் அதைச் செய்வாரென்று மூடநம்பிக்கையைக் கொண்டு பல பயனற்ற மந்திர தந்திரங்களில் பணத்தை வியர்த்தமாக்கி, அநியாயமாக மடியும் மக்களை என்னவென்று அழைப்பது? மதக் கற்பனையாகிய தெய்வங்களும், பேய், பிசுசுகளும், இருளன், வீரன், காட்டேரி முதலிய சொற்களும் மனிதரைச் சதா பயத்திலேயே வைத்து வருகின்றன.
உலகினின்று மதங்களும், ஜாதிகளும், தேசியவாதங்களும் ஒழிந்தாலொழிய, உண்மையில் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் நிலைக்காது.
பிரக்ஞையை ஏதோ மறைபொருளாகும் என்று திகைப்புக் கொண்டிருந்தீர். உண்மையாகவே மனமென்பதும், ஆன்மாவென்பதும், பிரக்ஞை என்பதும் கற்பனைச் சொற்களே. உண்மையாக உள்ளது திரேக அவையவங்களின் சலனங்களே. மதங்களின் ஆபாசங்களையும், புராணப் பித்தலாட்டங்களையும் தெள்ளத்தெளிய எடுத்துக்காட்டி வந்தும் உலகம் பொய் நம்பிக்கைகளிலும், மூடப் பக்திகளிலும் ஆழ்ந்திருப்பதற்கு நமது தொட்டில் பழக்கங்களே காரணமென்பதில் சிறிதும் அய்யம் இல்லை.
குளிர் தேசத்திலுள்ள கடவுளுக்கு, கம்பளியை ஆடையாகப் போர்த்துகின்றான். உஷ்ண பூமியில் நிர்வாணமாகவே கடவுளை அமைக்கின்றான். இன்னும் பற்பல விநோத திருஷ்டாந்தங்களால் பக்தனைப் போலவே கடவுளும் அமைக்கப்படுகின்றாரே ஒழிய, கடவுளுமில்லை; கடவுளுக்குக் குணமுமில்லை. எல்லாம் மனிதனுடைய கற்பனைகளே.
அவனின்றி ஓர் அணுவும் அசையா தென்னும் முதுமொழி, தொழிலாளி ஒருவனுக்கே பொருந்துமேயொழிய, ஈசன் உள்பட மற்ற யாருக்கும் பொருந்தாதென அறிக!
மனிதன் படும் துன்பங்களுக்கு முதற் காரணமாயுள்ள கடவுள் என்ற பெயர் ஒழிந்த மாத்திரத்தில், அவன் பலவித துன்பச் செயல்களிலிருந்து விடுபட்டுச் சுகமுறுவது நிச்சயம்.